Jun 4, 2014

பாலியல் அத்து மீறல்கள்

மிகச் சமீபத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்று பட்டியல் எடுத்தால் பயங்கரமாக இருக்கிறது. வன்புணர்ந்து பிறகு தலையில் அடித்துக் கொல்வது, அடையாளம் தெரியாதபடிக்கு பாதி உடலை எரித்துவிட்டு போவது, தூக்கில் தொங்கவிடுவது என்று ஒவ்வொன்றும் குரூரமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வெறும் செய்தியாகப் படித்தால் பெரிதாக பாதிப்பு தெரிவதில்லை. நம் உறவுப் பெண் யாரையாவது அந்த இடத்தில் ஒரு வினாடிக்கு பொருத்திப் பார்த்தால் நெஞ்சுக்குள் மிகப்பெரிய உருண்டை ஒன்று அடைத்துக் கொள்கிறது. 

இவையெல்லாம் உத்தரப்பிரதேசத்திலும் டெல்லியிலும்தான் நடக்கின்றன என்றில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பெருந்துறையில் பெண் போலீஸ் ஒருவருக்கு லிப்ட் கொடுப்பதாகச் அழைத்துச் சென்று நடுக்காட்டில் கற்பழித்துவிட்டு பாதி உடலை எரித்துவிட்டுப் போயிருந்தான் ஒருவன். இன்னொரு சமயத்தில் சத்தியமங்கலத்தில் ஒரு நடுத்தர வயது பெண்ணை வன்புணர்ந்துவிட்டு தலையில் கல்லைப் போட்டு நசுக்கிவிட்டுச் சென்றிருந்தான் இன்னொருவன். இந்தச் சம்பவங்களில் வயதும் தடையாக இருப்பதில்லை. ஐந்து வயது சிறுமி, பதினைந்து வயது பள்ளிப்பருவப் பெண், முப்பது வயதுப் பெண், எழுபது வயது மூதாட்டி என்று யாருமே தப்பிப்பதில்லை. பெண். அவ்வளவுதான். அது சிறுமியாக இருந்தாலும் சரி. கிழவியாக இருந்தாலும் சரி. வடநாட்டில் இருந்தாலும் சரி. தென்னாட்டில் வாழ்ந்தாலும் சரி. இவற்றில் வட இந்திய ஊடகங்கள் கையில் எடுக்கும் செய்திகள் மட்டும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனம் பெறுகின்றன. மற்றவையெல்லாம் ஊடகங்களில் இருந்து தப்பித்துவிடுகின்றன. 

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பெண்களை தூக்கில் தொங்கவிட்டது பற்றிய செய்தி ஆறுவதற்குள் மேகாலயாவில் நடந்த இன்னொரு செய்தி வந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் குழந்தைகளையும் அவளது கணவனையும் வீட்டுக்குள் பூட்டிவிட்டு இவளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்திருக்கிறார்கள். அவள் ஒத்துழைக்க மறுத்திருக்கிறாள். தலையிலேயே சுட்டுவிட்டார்கள். இந்த சம்பவம் முழுவதையும் அந்தக் குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள். சாகும் வரைக்கும் மறக்குமா என்ன?

இவையெல்லாம் சாம்பிள் செய்திகள். ஏகப்பட்ட நிகழ்வுகளை பாதிக்கப்பட்டவர்களே மறைத்துவிடுகிறார்கள். குற்றவாளியைக் காட்டிக் கொடுப்பதைவிடவும் இந்தக் கறையை மறைப்பதுதான் முக்கியம் என நினைக்கிறார்கள். அதைத்தானே நம் சமூகம் சொல்லிக் கொடுத்திருக்கிறது? ‘சீரழிஞ்சு வந்து நிக்கிறாளே..இவளுக்கு இனி யார் வாழ்வு கொடுப்பார்கள்?’ என்கிற மனநிலை. இதையும் மீறி பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்தாலும் காவல் துறையும் அதிகார வர்க்கமும் செய்தியை அமுக்கிவிடுவதிலேயே குறியாக இருக்கின்றன. 

நேற்று பெங்களூரில் வசிக்கும் ஈரான் தேசத்துப் பெண்ணின் வீட்டை யாரோ தட்டியிருக்கிறார்கள். அவள் திறந்து விசாரித்த போது வெளியில் நின்றிருந்தவன் ‘கூரியர் வந்திருக்கு’ என்றிருக்கிறான். ‘வாய்ப்பில்லையே’ என்று அவள் சொல்ல முயற்சிப்பதற்குள் கீழே தள்ளி கத்தியைக் கழுத்துக்கு நேராக வைத்திருக்கிறான். கத்தியைக் காட்டியபடியே அவன் பேண்ட் ஜிப்பைக் கழட்டியிருக்கிறான். சுதாரித்தவள் அவனது தொடைகளுக்கு இடையில் உதைத்துவிட்டு வெளியே ஓடி வந்து கத்தியிருக்கிறாள். அக்கம்பக்கத்தவர்கள் துரத்தியபோது கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டானாம். அவனைப் பிடித்து போலீஸில் ஒப்ப்படைத்தால் ‘திருட்டு கேஸ்’ பதிவு செய்திருக்கிறார்கள். ‘கற்பழிப்பு முயற்சி’ என்று பதிவு செய்தால் - அதுவும் வெளிநாட்டு பெண் என்றால் போலீஸுக்கு நிறைய கேள்விகள் வரும் அல்லவா? அதனால் திருட்டு முயற்சி கேஸ்.

பெங்களூரை விடுவோம். சில நாட்களுக்கு முன்பாக பரபரப்பாக பேசப்பட்ட காரைக்கால் கற்பழிப்பு வழக்கு என்ன ஆனது? இப்போதைக்கு இந்தச் செய்திதான் உடனடியாக ஞாபகத்துக்கு வருகிறது. யோசித்துப் பார்த்தால் இன்னும் பத்து வழக்குகளையாவது நினைவுக்கு கொண்டு வர முடியும். இப்படியே ஆளாளுக்கு ஒரு கற்பழிப்பு செய்தி ஞாபகத்து வரக் கூடும். இப்பொழுது அவற்றைத் தேடிச் சென்றால் என்ன ஆனது என்றே கண்டுபிடிக்க முடியாது. இப்படி நமக்குத் தெரியும் பாலியல் பலாத்காரச் செய்திகள் எல்லாம் அதிகாரம், பணபலம் ஆகியவற்றின் கொடூர கரங்களில் இருந்து அதிசயமாக தப்பித்து ஊடகங்களில் வெளியான செய்திகள்தான். ஆனால் இப்படி வெளியான செய்திகளையும் கூட அடுத்த பதினைந்து நாட்களில் எப்படி மறக்கடிக்கச் செய்வது என்று நம்மவர்களுக்குத் தெரியும். அமுக்கிவிடுவார்கள்.

ஊடகங்களில் வெளியாகும் சொற்பமான நிகழ்வுகளே கடும் அதிர்ச்சியைக் கொடுக்கின்றன என்றால் ஊடக வெளிச்சத்திற்கே வராத பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருக்கும். அவையெல்லாம் எந்தவித சத்தமும் இல்லாமல் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எந்த ஊடகத்திலும் பேருந்தில் உரசுவதைப் பற்றியும் பொது இடங்களில் கைகள் நீள்வதைப் பற்றியும் கட்டுரைகள் வருவதில்லை. பெண்குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்களைப் பற்றிய பெரிய அளவிலான விவாதங்கள் நடப்பதில்லை. ‘நம் வீட்டில் நடக்காத வரைக்கும் சரிதான்’ என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் பெண் குழந்தைகள் ஏதாவதொரு விதத்தில் பாலியல் அத்து மீறல்களால் பாதிக்கபட்டிருக்கிறார்கள் என்பதுதான். அது தொடுதல், உரசுதலிலிருந்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

கர்நாடகாவில் இன்று வெளியான செய்தி- பதினைந்து வயது மகளை அப்பன் கற்பழித்திருகிறான். எட்டாவது படிக்கும் மாணவி அவள். ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக அந்தப் பெண் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறாள். பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற போது அவள் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். விசாரித்தால் ‘உன்னையும் உங்க அம்மாவையும் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டி கந்தரகோலம் ஆக்கியிருக்கிறான். 

எங்கு சிக்கல்? எதனால் இத்தனை அத்து மீறல்கள் நடக்கின்றன? இதையெல்லாம் நாம் ஏன் வெளிப்படையாக பேசுவதில்லை?  இருபது வருடங்களுக்கு முன்பாகவும் இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்தன-வெகு அரிதாக. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. சர்வசாதாரணமாகிவிட்டது. 

என்னதான் பிரச்சினை? பாலியல் வறட்சிதான் அடிப்படையான காரணம் என்கிறார்கள். ஒரு பக்கம் பண்பாடு விழுமியங்கள் என்று பாலியல் சுதந்திரங்களை கட்டுக்குள் வைக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் ஊடகங்கள் வழியாகவும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் வழியாகவும் உணர்ச்சிகளை சுண்டி விடுகிறார்கள். மற்றொரு பக்கம் மது இன்னபிற போதை வஸ்துகளை பரப்பி வைத்திருக்கிறார்கள்.

பிறரின் மீதான மோகம், அதை வெளிப்படுத்துவதற்கு வழியில்லாத சமூகக் கட்டமைப்புகள், பாலியல் தேவைகளை வெளிப்படையாக பேச முடியாத பண்பாட்டு கட்டுபாடுகள் என ஏகப்பட்ட சிக்கல்களைக் கை நீட்டலாம். 

இருபது வருடங்களுக்கு முன்பாக பெண்ணின் சதையைப் பார்க்க வேண்டுமானால் இப்பொழுது இருக்கும் அளவிற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. இப்பொழுது அப்படியில்லை. ஃப்ளக்ஸ் பேனரிலிருந்து கையில் இருக்கும் செல்போன் வரையில் எங்கு வேண்டுமானாலும் பார்க்க முடிகிறது. வாழ்க்கை முறையைப் புரட்டிப் போட்டிருக்கிறோம். ஆனால் பண்பாடு என்ற பெயரில் முக்கியமான பல விஷயங்களை வெளிப்படையாக பேச வழியில்லாத சமூகத்தையே தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். Sexual dryness என்பதன் அடிப்படையே இங்குதான் தொடங்குகிறது. இங்கு ஒரு ஆணின் பாலியல் கிளர்ச்சிகள் பத்து வயதிற்கும் முன்பாகவே தூண்டப்பட்டுவிடுகின்றன. ஆனால் அவன் ஒரு பெண்ணை அடைவதற்கு முப்பத்தைந்து வயது வரைக்கும் கூட காத்திருக்க வேண்டியிருக்கிறது. வெளிப்படுத்த வழியில்லாத அவனது இச்சைகள் வெவ்வேறு வடிவங்களில் அத்துமீறல்களாகிக் கொண்டிருக்கின்றன. கிடைக்கும் அப்பாவிப்பெண்களின் மீது தனது குரூரங்களை இறக்கிக் கொண்டிருக்கிறான். அந்தப் பெண்கள் தங்களின் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

உரசுவது, பிறரின் அந்தரங்க உறுப்புகளை தொட முயற்சிப்பது, தனது உடல் பாகங்களை எதிர்பாலினரிடம் காட்டுவதற்கான முயற்சிகளைச் செய்வது என அத்தனையுமே ஒருவித மனநோய்தான். இங்கு யாருக்குத்தான் மனநோய் இல்லை? கிட்டத்தட்ட ஒவ்வொருவருமே ஏதாவதொரு imbalanceனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நம்மால் பெரும்பாலானவற்றை மறைத்துக் கொள்ள முடிகிறது. அதனால் இயல்பாக நடந்து கொள்வதைப் போன்ற தோற்றத்தை வெளியில் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் மனநோயின் விளைவுகள் பரவலாக எல்லை மீறும் போதுதான் மிகப்பெரிய சமூகப்பிரச்சினையாக உருவெடுக்கிறது. 

முன்பெல்லாம் ஒரு ஊரில் தவறு நடக்கிறது என்றால் அவனைக் கட்டம் கட்டிவிடுவார்கள். அவனை அடையாளம் கண்டுபிடிப்பது மிக எளிது. இப்பொழுது ஆயிரம் பேர் வசிக்கும் கிராமங்களில் கூட புதிய முகங்கள் நூறாவது தேறிவிடுகின்றன. எங்கள் ஊரில் இறங்கினால் ஐந்து சதவீதம் பேரைக் கூட என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடிவதில்லை. அத்தனை புதுமுகங்கள். நகரங்களில் என்றால் கேட்கவே தேவையில்லை. அத்தனையும் புதுமுகங்கள்தான். இந்த அடையாளமின்மையே அத்து மீறுவதற்கான மிகப்பெரிய சுதந்திரத்தைத் தருகிறது. ‘நம்மைக் கண்டுபிடிக்க முடியாது’ என்கிற பயமின்மையால் கையை நீட்டுகிறார்கள். இது ஒருவிதத்தில் தனது பாலியல் இச்சையை வடிகட்டிக் கொள்ளும் முறை.

நமது சமூக அமைப்பில் பிரச்சினையா? நமது பிள்ளை வளர்ப்பு முறையில் இருக்கும் பிரச்சினைகளா? கல்விமுறையில் இருக்கும் போதாமைகளா? தண்டனைச் சட்டங்களில் இருக்கும் கடுமையின்மையா? எதிர்பாலினரை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்களா என்றெல்லாம் தெளிவான வரையறையைச் செய்ய முடிவதில்லை. எல்லாவற்றிலுமே பிரச்சினைகள் இருக்கின்றன. 

கிராமங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. நகரங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்து அரசாங்கங்களும் அதிகார வர்க்கங்களும் செயல்படுவதாகத் தெரியவில்லை. எந்த ஆட்சியாளரும் இதைப் பற்றி பேசுவதாகவே தெரியவில்லை. அப்படியே பேசினாலும் அகிலேஷ் யாதவ் ‘கூகிளில் தேடினால் இங்கு நடப்பதைவிடவும் அதிகமான நிகழ்வுகள் வெளியில் நடப்பது தெரியும்’ என்கிறார். ‘நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று முலாயம் சிங் யாதவ் சொல்கிறார். 

கடந்த இருபதாண்டுகளில் தொழில்நுட்பம் எவ்வளவோ மாறுதல்களைக் கொண்டு வந்துவிட்டது. நம் மக்களின் அடி மனதில் ஏகப்பட்ட கசடுகள் சேர்ந்துவிட்டன. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் வெறும் தண்டனைகளாலும், அறிக்கைகளாலும் மட்டும் எந்த மாறுதலையும் உருவாக்கிவிட முடியாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்தான் ஆனால் அதே சமயமும் அரசாங்கமும் அதிகாரவர்க்கமும் பிரச்சினையின் அடிப்படையான காரணங்களை உணர்ந்து உடனடியாக செயல்படத் துவங்கினால் மட்டுமே இன்னமும் இருபதாண்டுகளில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இப்பொழுதே காட்டுமிராண்டித்தனத்தின் பல்வேறு வடிவங்களை நேரடியாகப் பார்க்கத் துவங்கிவிட்டோம். இதை கண்டுகொள்ளாமல் விட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். 

18 எதிர் சப்தங்கள்:

marees said...

Good Article

ராஜி said...

இதை கண்டுகொள்ளாமல் விட்டால் நிலைமை விபரீதமாகிவிடும்.
>>
நிஜம்தான். இப்ப பெ பிள்ளைகளை வெளியில் அனுப்ப யோசிக்கின்றோம். இன்னும் சிறிது நாளில் ஆண் பிள்ளைகளை கூட வெளியில் அனுப்ப யோசிக்க வேண்டிய சூழல் உண்டாகிடும்.

Nandanan said...

When Delhi rape happened everybody protested now again all the things happen. Analysing the issue is not happening and understand the problem is seldom not done here.
There are crime committed by women too against teenage and young boys nobody talks about that.

நிழலி said...
This comment has been removed by the author.
கரந்தை ஜெயக்குமார் said...

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிழவுகிறது.
விஞ்ஞான்த்தில் முன்னேறி என்ன பயன்
மனதளவில் மனிதன் இன்னும் மிருகமாகத்தானே இருக்கிறான்

Aruna said...

நம் நாட்டில் செக்ஸ் பற்றி பேசுவது கூட தவறாக பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் விபசாரத்தை அனுமதிக்கலாம்(கட்டுப்பாடுகளோடு) என்று சொன்னால் கலாச்சார காவலர்கள் நம்மை கொன்றே விடுவார்கள்.

ஒரு விஷயத்திற்கான தேவை(demand) அதிகமாக இருக்கும்போது, சப்ளை கொஞ்சம் கூட இல்லை என்றால் என்னவாகும்?

Beg, Borrow or Steal. அதனால் தான் ஒருதலைக்காதல், கள்ளக்காதல், வன்புணர்வு போன்றவை அதிகமாக நடக்கின்றன.

Unknown said...

i appreciate this comment.. Further i will use பாலியல் வன்புணர்வு word.

Unknown said...

Yes, i appreciate this comment. And why we should not call பாலியல் வல்லுறவு, பாலியல் வன்புணர்வு... we will

Unknown said...

Very good article... But how to solve it... Pennirkku istamillatha nerathile husband thodurathukoda avvalavu kastama irukkumpothu, ippadiellam nadukkaratha nenachale bayama irukku... Control panna mudiyathathai nokki poivittatho entru thondrukirathu... Vettukkulle varra TV ads. nammala onnum panna mudiyala.. Kuttieskaloda pakkura IPL matchla koda intha mathiri ads varuthu.. Bothai, Cinemas,net, tv ellathilayeyum indent pannurathu ithuthan.. Ellathuleyum alatchiyam... Onnum puriyala.. Thappu pannakoodathu entru thonathu veru... Thappu pannuna mattikka koodathu entru ninaikirathu veru... Ellarum appadithan yosikkirangalonnu thonuthu..

சேக்காளி said...

வன்புணர வரும் ஒருவனை (கும்பல் அல்ல) பெண் ஒருத்தி(சிறுமிகள் அல்ல) தாக்கி தன்னை பாதுகாத்து கொள்ள முடியாமல் போவது ஏன்.நான் ஒரு ஆண் என்பதால் பெண்ணின் சங்கடங்களை நூறு சதவீதம் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் இன்று பெண்களும் செய்கிறார்கள். குறிப்பாக விவசாய வேலை, கட்டுமான வேலைகளில் ஆணுக்கு நிகரான உடலுழைப்பை பெண்களும் அளித்து வருவதை கண்கூடாக காண்கிறோம்.எனவே உடல் பலம் நூறு சதவீதம் ஆணுக்கு சமமானதாய் இல்லாவிட்டாலும் போதிய அளவு சமமானதாகவே இருக்குமென்று நான் கருதுகிறேன்.அடுத்து மனநிலை. வன்புணர நினைப்பவனின் குறிக்கோள் அதை சார்ந்ததாகவே (ஜிப்பை கழட்டுதல், ஜாக்கெட்டை கிழித்தல்) இருக்குமென்பதால் அதனை எதிர்க்கும் பெண்ணின் மனநிலை நூறு சதவீதம் அவனை நிலைகுலைய செய்வதிலே இருக்கும். இந்த சூழ்நிலையில் அவளுக்கு ஒரே குறிக்கோள். ஆனால் அவனுக்கு இரு குறிக்கோள். ஒன்று வன்புணர்வை நிறைவேற்றுவது.இரண்டு அவளது தாக்குதலை முறியடிப்பது.எனவே அவனது கவனம் நிச்சயமாக சிதறும். அப்போது அவனிடமிருந்து தப்பிப்பது (ஈரானிய பெண் தப்பித்ததை போன்று)சாத்தியம் தானே. ஆனால் பெண் அவனை தாக்கி தப்பிக்க நினைக்காமல்,சமுகத்தை நினைத்து,எதிகாலத்தை நினைத்து பயத்தில் நிலை குலைந்து விடுவதாலேயே காமுகர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள் என நினைக்கிறேன்.90சதவீத பெண்கள் ஏதொவொரு காலகட்டத்தில் இதற்கு ஆட்படுகிறார்கள் எனும் பட்சத்தில் இது போன்ற வன்முறைகளை எதிர்கொள்ள பள்ளி,கல்லூரிகளில் மனதளவில் ஆயத்தப்படுத்தினால் என்ன?

நிழலி said...

வணக்கம்,

கட்டுரை நன்று.

ஆனால் நீங்களும் 'கற்பழிப்பு' என்ற வார்த்தையை பயன்படுத்துவை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது. காமுகர்களின் குரூரத்தால் சிதைக்கப்பட்ட ஒரு பெண்ணை மேலும் கற்பு இழந்தவள் என்று குறிப்பது முறையாகுமா?

பாலியல் வல்லுறவு, பாலியல் வன்புணர்வு போன்ற பதங்களை பயன்படுத்தலாமே நண்பரே?

sivakumarcoimbatore said...

yes mani sir...பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிழவுகிறது.

Rekha said...

90% of children are facing this... Its true... But as for girls... Parents are still not ready to bring out this issue to the society to punish... Instead they restrict the freedom of their daughters... Where there raises a situatn to hide frm her parents which becomes an added advantage for these culprits.... Parents has to think,in a broader way to stop this nonsense...

Yarlpavanan said...

நடப்பு நிலைமைகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.
தங்களது ஆய்வுப் பதிவை வரவேற்கிறேன்.

தங்கள் பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்துள்ளேன்.
தலைப்பு: எதனால் பாலியல் அத்து மீறல்கள் நிகழுகின்றன?
இணைப்பு: http://wp.me/p3oy0k-4C

நாம் நண்பர்கள் said...

விபசாரம் எப்படி ஆதரிக்க பட முடியும் .
அதிலும் பெண் உடல் தானே சந்தை படுத்த படுகிறது
பெண்ணின் சுயம் அழிக்க படுகிறது அல்லவா .

நாம் நண்பர்கள் said...

இன்று வரை பேசியும் எழுதியும் கிழித்ததை விட பெரிதாக ஒன்றும் செய்யவில்லை நாம் என்பது சுடும் நிஜம் .பிரச்சனை வரும் பொது பொங்குவதும் தீர்வு ஏற்படுவதற்கு முன் அமைதி ஆக சொந்த வாழ்கை அனுப்விப்தும் தானே நான் (நாம் ) இன்று வரை செய்து கொண்டு இருப்பது. இப்படியே பேசியும் எழுதியும் கொண்டு மட்டும் இருப்போம் .

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மிக அக்கறை தன்மையுடன் எழுதப்பட்ட ஒரு பதிவு. “ வெறும் தண்டனைகளாலும், அறிக்கைகளாலும் மட்டும் எந்த மாறுதலையும் உருவாக்கிவிட முடியாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்தான் ஆனால் அதே சமயமும் அரசாங்கமும் அதிகாரவர்க்கமும் பிரச்சினையின் அடிப்படையான காரணங்களை உணர்ந்து உடனடியாக செயல்படத் துவங்கினால் மட்டுமே இன்னமும் இருபதாண்டுகளில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்”என்ற தீர்வும் சொல்லி விட்டீர்கள் .ஆழ்ந்த பார்வை .

நெல்லைத் தமிழன் said...

20 ஆண்டுகளுக்கு முன்பு, நமக்குத் தூண்டுகிற காரணிகள் மிகவும் குறைவு. இருக்கும் இடத்தைச் சுற்றி நம்மைத் தெரிந்தவர்கள் அதிகம். நல்லபேர் எடுக்க வேஷம் போட்டுத்தான் ஆகவேண்டும்.

இப்போது, இன்டர்னெட், மனதைக் கிளர்ச்சியுறச் செய்யும் உடையணிந்த பெண்கள், போதை, திரைப்படம் என்று நிறைய காரணிகள்.

‘நம்மைக் கண்டுபிடிக்க முடியாது’ என்கிற பயமின்மையால் - இது, 'நம்மைக் கண்டுபிடிக்க முடியும்' என்'கிற பயம் இன்மையால் அல்லது 'நம்மைக் கண்டுபிடிக்க முடியாது' என்று நினைப்பதால் என்று இருக்க வேண்டும்.