Apr 21, 2017

தையல் ஊசி விற்பவன்

நான்கு வழிச் சாலைகள் வந்த பிறகு இந்தியர்களின் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது. கிபி இரண்டாயிரம் வரைக்கும் கூட சாலை வழியாக இருநூறு கிலோமீட்டர் என்பதும் பெரும் தொலைவு. விடிய விடிய பயணிக்க வேண்டும். இரு வழிச் சாலைகளில் நமக்கு எதிரில் வாகனங்கள் வரும் போது சற்று வேகத்தைக் குறைத்து ஒதுங்கி வழி விட வேண்டும். ஊர்களைக் கடக்கும் போது யாராவது குறுக்கே வருவார்கள். கால்நடைகள் சாலையைக் கடக்கும். நாய்கள் குறுக்குமறுக்குமாக ஓடும். வேகத்தைக் குறைக்க வேண்டும். 

இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. கிட்டத்தட்ட வேகம் குறையாமலே ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊரை அடைந்துவிட முடிகிறது. வழுக்கும் சாலைகளில் தொலைவுகள் சுருங்கிவிட்டன. எங்கள் தேசத்தின் வளர்ச்சி என்று நாம் சொல்லிக் கொள்வதற்கு சாலைகள் அடையாளக் குறிகளாக மாறியிருக்கின்றன.

இது ஒரு கோணம். 

இந்த வளர்ச்சியை அடைவதற்குத்தானே இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் நிலங்களை இழந்திருக்கிறார்கள்? பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது? பல நூறு ஊர்களுக்கு நடுவில் கறுப்பு எல்லைக் கோடுகளாக சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளும் முதியவர்களும் கால்நடைகளும் கடக்கவே முடியாத பெரும் பாம்புகளாக அவை ஊர்களுக்கு நடுவில் படுத்திருக்கின்றன. தினசரி தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் நாய்களின் எண்ணிக்கை மட்டுமே பல்லாயிரக்கணக்கில் இருக்கும். இவையெல்லாம் வலி இல்லையா? பதிவு செய்யப்படாத வலிகள்.

வளர்ச்சி என்று ஒரு பக்கம் இருந்தால் அதற்கான இழப்புகள் இன்னொரு பக்கம் இருக்கும். யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் அந்த இழப்புகளைச் சுட்டிக்காட்டக் கூடியவை. நம்மைச் சுற்றிலும் பின்னப்படும் நுண்ணரசியலைப் பேசக் கூடியவை. உலகமயமாதலும் வணிகமயமாதலும் சாமானியர்கள் வாழ்வில் நிகழ்த்துகின்ற பகடையாட்டங்களை தனது கவிதை மொழியின் வழியாக தொடர்ந்து பதிவு செய்யும் கவிஞர் யவனிகாவின் இந்தக் கவிதையும் அத்தகைய நுட்பம் மிக்கது.


பழைய, செப்பனிடப்பட்ட பேருந்து ஒன்று காட்சிப்படுத்தப்படும் கவிதையை ஒரு முறை வாசிக்கலாம்-

பலமுறை செப்பனிடப்பட்ட பழைய பேருந்தினுள்
அதன் கண்ணாடி சன்னல்கள் தகரங்கள்
மற்றும் இருக்கைகளும் நடுங்க
எளிய மக்களுடன் குறைந்த கட்டணத்தில் பயணிப்பது
ஒரு நான்குவழிச் சாலையின் அழகிற்கு
சற்றுப் பொருத்தமில்லாததுதான்
தனது நிறுத்தத்தில் இறங்க அக்கிழவர்
கால்களில் வலுவற்று இருந்தார்
அவரின் நிலம் கைமாறி இருக்கலாம்
இரண்டு ரூபாய்க்கு ஏழு தையல் ஊசிகளை
விற்பவன் உற்சாகமாக இறங்கிப் போயிருந்தான்
இன்னுமிருக்கிறதா கிழிந்த துணிகள்
பழக்கூடைகள் பள்ளிச் சிறார்கள்
தலை வறண்ட பெண்கள் இடையே
ஏதோ நடத்துனர் தன் கால்களால் பேருந்தை
உந்தி ஓட்டுபவர் போல சிரமமாகத் தெரிகிறார்
எத்தனைமுறை செப்பனிடப்பட்டாலும் அப்பேருந்து
நான்குவழிச் சாலையின் மேம்பாலத்தில்
தோன்றும்போது இருபுறமும்
தொலைந்துபோன தன் கிராமத்தையேதான்
திடுக்கிட்டுத் தேடிச் செல்லும் போல
சாலையின் நடுவே நீளமாக வைத்த அரளிகள்
இளம்சிவப்பில் பூத்திருக்கின்றன.

அதுவொரு பழைய பேருந்து. பலமுறை செப்பனிட்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் செப்பனிட்டாலும் கருகருவென நீண்டிருக்கும் அழகிய நான்கு வழிச்சாலைக்கும் அந்தப் பேருந்துக்கும் துளி கூட பொருத்தமில்லாமல் இருக்கிறது. அந்தப் பேருந்திலிருந்து வலுவில்லாமல் இறங்கிச் செல்கிறார் ஒரு முதியவர். ஒருவேளை தமது நிலத்தை விற்ற துக்கத்தில் அவர் இருக்கக் கூடும். அதே பேருந்திலிருந்துதான் ஊசி விற்கிறவன் ஒருவன் உற்சாகமாக இறங்கிச் செல்கிறான் - இடையில் ‘ஏம்ப்பா நாமதான் வளர்ந்த நாடாச்சே....இங்கே இன்னமும் பழைய துணிகள் இருக்கின்றனவா?’ என்று கவிஞனின் நக்கல். அந்தப் பேருந்தின் கூட்டத்தில் நடத்துனர் வெகு சிரமப்படுகிறார். ஆனால் பாருங்கள்! எவ்வளவுதான் செப்பனிட்டு நான்கு வழிச்சாலைக்கு ஏற்ற பேருந்தாக மாற்ற முயன்றாலும் தனது பழைய பாதையையும் தொலைந்து போன கிராமத்தையுமேதான் இந்தப் பேருந்து தேடிக் கொண்டிருக்கிறது.

கவிதையின் அரசியலை எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். 

நான்கு வழிச்சாலைகளை அமைத்து கார்போரேட் நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், அவர்களின் சொகுசுக் கார்களுக்கும், சரக்கு வண்டிகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தாலும் கூட இந்த தேசத்தில் நிலத்தை விற்றுக் கொண்டிருக்கும் முதியவர்களும், இரண்டு ரூபாய்க்கு ஏழு ஊசிகளை விற்றுக் கொண்டிருப்பவர்களும், தலை வறண்ட பெண்களும், பழக்கூடையைச் சுமந்து திரிகிறவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். பகட்டான வளர்ச்சி மேக்கப் வெளிச்சத்தில் சாமானியர்கள் மறைக்கப்பட்டுவிடுகிறார்கள். எளிய மனிதர்களின் அவலங்கள் வளர்ச்சி பிம்பத்தின் நிழலில் ஒளிந்து கொண்டாலும் கூட அவர்கள்தான் இந்த தேசத்தின் நிதர்சனம். இல்லையா? இன்னமும் சாமானிய மக்கள் வறுமையில் சிக்குண்டுதான் கிடக்கிறார்கள். சாலைகள், மால்கள், ஒளி கூசும் சோடியம் விளக்குகள், கணினி நிறுவனங்கள், ஜீன்ஸ், டீஷர்ட் என எல்லாவற்றையும் தாண்டி இந்த மண்ணின் மனிதர்களைச் சுட்டிக் காட்டுவதாக இக்கவிதையை எடுத்துக் கொள்ளலாம். அவர்களைப் பார்க்கச் சொல்லி வாசகனைக் கோருகிறது யவனிகாவின் இந்தக் கவிதை.

எல்லாவற்றையும் மறைத்துவிட்டு சாலையின் நடுவில் இளஞ்சிவப்பில் பூத்திருக்கும் அரளியைப் பார்த்து பூரித்துக் கொண்டிருக்கிறோம்.

7 எதிர் சப்தங்கள்:

Elavarasi said...

பகட்டான வளர்ச்சி மேக்கப் வெளிச்சத்தில் சாமானியர்கள் மறைக்கப்பட்டுவிடுகிறார்கள்.

In a big bright stage show, the people on stage won't be able to see anything around them. That's what is happening in our country too.

ADMIN said...

கவிதை - கவிதைப் பற்றிய புரிதல் அருமை. !

goldenking said...

அருமை. !

சேக்காளி said...

உங்கள் நாட்டில் தொழில் துவங்குவதற்கு ஏற்ற கட்டமைப்புகள் இல்லை. குறிப்பாக சாலைகள் இல்லை என்றார்கள். தங்க நாற்கர சாலை அமைத்து தந்தோம். தொழிற்சாலை அமைத்து இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வீட்டுக்கு வீடு வாங்க வைத்தார்கள்.வாங்கினோம். அவை ஓடுவதற்கு தேவையான கல்லெண்ணெய், கல்நெய் வியாபாரம் தானாகவே அதிகரித்தது. அந்த எரிபொருட்களை அதிகமாக உற்பத்தி செய்பவை வளைகுடா நாடுகள். ஆனால் விலையை நிர்ணயிப்பது டாலர் தேசம். டாலரை விட்டு விட்டு வேறு ஒரு பொதுவான பணத்திற்கு மாறுவோம் என்ற சிந்தனையை விதைத்த லிபியாவின் கடாபி இனி யாருமே அதைப் பற்றி பேசக்கூடாது என்பதற்காக(வும்) கொல்லப் படுகிறார்.ஆனால் அது பற்றிய சிந்தனையே இல்லாமல் விவசாயப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் உரிமை விவசாயிக்கு வேண்டும் என நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒருவன் நாங்கள் கருப்பர்களோடு இணைந்து வாழவில்லையா என்று எக்காளமிடுகிறான்.அடிக்கும் வெயிலின் வெம்மைக்கு கொஞ்சமும் குறைவின்றி பொழுதொரு பிரச்னையும், நாளொரு போராட்டமுமாக (நெடுவாசல், டெல்லி விவசாயிகள்,மதுக்கடை மூடல்) தமிழகம் தகிக்கிறது.ஆனால் அது பற்றிய பிரக்ஞையேயின்றி சொப்பன சுந்தரியை யார் வைத்துக் கொள்வது என்ற அரசியல் போட்டி தொலைக்காட்டி தொடர்களின் விறுவிறுப்பை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளது.
லோல்ல்லோவ்!!!!!!!!!!!! 108 ஆ.
சீக்கிரம் வாங்க.சேக்காளி பைத்தியமாயிட்டாரு.

சேக்காளி said...
This comment has been removed by the author.
www.rasanai.blogspot.com said...

அரளி நுட்பமான அங்கதம் கவர்ச்சியான விஷம் / போலி பகட்டிற்காக சாமானிய ஏழைகளின் வாழ்வின் வலியான இழப்புகள் என கொள்கிறேன். சுந்தர் சென்னை

sairamakoti said...

கவிதைக்கு நீங்கள் எழுதிய விளக்கம் அருமை,
அவரது ஒவ்வொரு கவிதைக்கும் பக்கத்திலேயே உங்கள் பொழிப்புரையும் சேர்ந்து புத்தகமாக வந்தால் நாங்கள் நன்கு ரசிக்க முடியும், Yavanika please note.