Apr 17, 2017

தற்கொலையைப் பரிசளிக்கும் விஞ்ஞானிகள்

புளூட்டோ கோள் கண்டுபிடிக்கப்பட்ட தினத்திலிருந்து ‘அது கோளே கிடையாது’ என்று அறிவிக்கப்பட்ட தினம் வரைக்கும் ஒரு முறை கூட அது சூரியனை சுற்றி முடிக்கவில்லை என்ற குறிப்பு கண்ணில்பட்டது. புளூட்டோ சூரியனைச் சுற்றி வர 248 ஆண்டுகள் ஆகும். 1930 ஆண்டு கண்டுபிடித்து 2006 இல் ‘உன்னை கோள்ன்னு சொல்ல முடியாதுப்பா’ என்று அறிவித்துவிட்டார்கள். அமைச்சர் பதவி கொடுப்பதாகச் சொல்லிவிட்டு பதவியேற்பதற்கு முன்பாகவே திருப்பி அனுப்புவது போலத்தான். ஆனால் புளூட்டோ இதையெல்லாம் கண்டுகொள்ளவா போகிறது? ‘நீங்க என்னவோ சொல்லிட்டு போங்க...நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று அதுவாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரே செய்திதான். ஆனால் இந்தச் செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்க்கக் கூடும்.  

வீட்டுப்பாடத்தை
பாதியில் கைவிட்டு
போட்டது போட்டபடி
உறங்கிக் கொண்டிருக்கிறாள் சிறுமகள்

அவள் விரித்துவைத்த பக்கத்தில்
படபடக்கிறது சூரியக்குடும்பம்

யா.....ருப்பா அத வெலக்குனது
பா....வம்பா புளூட்டோ

அவளது தழுதழுப்பின் வார்த்தைகள்
இந்த அறையில்தான் உறைந்திருக்கின்றன

தனது கடைக்குட்டியை இழந்த சோகத்தில்
தனக்குத்தானே தீ வைத்துக்கொள்ள
திகுதிகுவென வளர்கிறது தீ.

தனது தாயைக் காப்பாற்றச் சொல்லிக்
கதறியபடியே சுற்றிச் சுற்றி வருகின்றன
மீதி எட்டுப்பிள்ளைகளும்.

- லிபி ஆரண்யாவின் உபரி வடைகளின் நகரம் தொகுப்பிலிருந்து

வீட்டுப்பாடத்தை எழுதிக் கொண்டிருக்கும் போதே உறங்கிப் போன சிறுமகள் புளூட்டோவின் மீது பரிதாபப்படுகிறாள். ‘அதை ஏன் கோள் இல்லைன்னு சொன்னாங்க’ என்று தூக்கத்திலேயே தனது வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள். அது குழந்தையின் மனம். அப்படித்தான் இருக்கும்.

இதே செய்தியைக் கவிஞனின் மனம் Fantasy கவிதையாக்குகிறது. அதைத் துருத்தல் இல்லாமல் செய்வதுதான் தனிச்சிறப்பு.

சூரியனுக்கு ஒன்பது குழந்தைகள். அவற்றில் ஒன்றை இழந்துவிடுகிறது. தனது கடைக்குட்டியை இழந்துவிட்ட சோகத்தில் சூரியன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு எரிகிறது. ‘அய்யோ எங்க அம்மாவைக் காப்பாத்துங்க’ என்று மீதமுள்ள எட்டுக் குழந்தைகளும் கதறிச் சுற்றி வருகிறார்கள்.

புரிந்து கொள்ள எளிது என்றாலும் மனதில் சித்திரமாக்கி ரசிப்பதற்கு ஏற்ற சுவாரஸியமான கவிதை இது.


கவிதை நேரடியானதாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. அது தனது வாசகனை யோசிக்கச் செய்யலாம். பெரும்பாலும் Fantasy கவிதைகளிலிருந்து அவன் தனக்கான சித்திரம் ஒன்றை உருவாக்குகிறான். அவன் சுயமாக உருவாக்கிக் கொள்ளும் அந்த உலகிற்குள் சில கணங்கள் பயணித்து வெளியேறுகிறான். லிபி ஆரண்யாவின் இக்கவிதை அந்தப் பயணத்தை மிக இயல்பாக சாத்தியப்படுத்துகிறது. சூரிய உலகிற்குள் வாசகனை உள்ளிழுத்து வெளியே அனுப்புகிறது.  

நேர்த்தியாக இத்தகைய கண்ணாமூச்சி விளையாட்டுக்களை நிகழ்த்தும் கவிதைகள் ஒரு புதுவெளியை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அப்படியான வெளிகளை உண்டாக்குவதில் லிபி வித்தகர்.
                              
                                                                    ***

கல்லூரியொன்றில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவீன கவிதையை அறிமுகம் செய்யும்படியாக சிறு தொகுப்பை உருவாக்கித் தரும் பணியைத் தந்திருக்கிறார்கள். கவிதை, கவிதை குறித்தான சிறு அறிமுகம், கவிஞர் பற்றிய குறிப்பு என்றிருக்க வேண்டும் என்றார்கள். தமிழில் பல நூறு கவிஞர்கள் இருக்கிறார்கள். பதினைந்து பேர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது சிரமமான காரியம். அதனாலேயே தாமதப்படுத்திக் கொண்டிருந்தேன். நேற்று பயணத்தின் போது திடீரென்று தோன்றியது-  எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் வெகு அமைதியாக கவிதையுலகில் அற்புதமாக இயங்கிக் கொண்டிருக்கிற கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். கண்டராதித்தன், லிபி ஆரண்யா, ஸ்ரீ நேசன் உள்ளிட்ட கவிஞர்களை மனதில் மனதில் வைத்திருக்கிறேன். அவர்களின் எளிமையான கவிதைகளைத் தொகுத்து மாணவர்களுக்குக் கொடுத்துவிடலாம்.

1 எதிர் சப்தங்கள்:

Kasthuri Rengan said...

உங்கள் தொகுப்பை இங்கேயும் பகிரலாமே