Oct 21, 2014

படுக்கையில் ஒரு பிணமா?

எதுகை மோனையாக எழுதினாலே கவிதைதானே? என ஒருவர் கேட்டிருந்தார். இப்படியெல்லாம் அப்பாவியாக நம்பிக் கொண்டிருப்பதால்தான் தமிழில் கவிஞர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டது. எதுகை மோனை இருந்தால் கவிதை, வார்த்தை ஜாலம் காட்டினால் கவிதை என்று யாரோ புரளியைக் கிளப்பிவிட்டார்கள். அதை அப்படியே நம்பும் தினத்தந்தியும் வாரமலரும் கர்மசிரத்தையாக பக்கங்களை ஒதுக்குகிறார்கள்.  அதில் பிரசுரமாகி வருவதையெல்லாம் நம்மவர்கள் கவிதை என்று நம்பிக் கொள்கிறார்கள். ஒரு கவிதையை அச்சில் பார்த்துவிட்டால் ‘கவிஞர்’ என்ற அடைமொழியை அழுந்தப் பற்றிக் கொள்கிறார்கள். அப்புறம் கவிதைத் தொகுப்பு வெளியிட்டு, விமர்சனக் கூட்டம் நடத்தி, விரைவில் முதலமைச்சராகிவிடலாம் என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.

அப்படி எழுதி கவிஞர்களாக ஃபார்ம் ஆகிவிட்டவர்களிடம் பேசிப் பார்க்க வேண்டும். ‘புரியாம எழுதறதெல்லாம் கவிதைங்களா? நவீனத்துவம், பின் நவீனத்துவம், சைடு நவீனத்துவம் என்று கொல்கிறார்கள்’ என்பார்கள். பின் நவீனத்துவத்தை நக்கலடித்தால் சைடு நவீனத்துவம் என்ற வார்த்தையை default ஆக சேர்த்துக் கொள்வார்கள். அதற்குமேல் அதை கலாய்க்கத் தெரியாது. அவர்கள்தான் அப்படி கலாய்க்கிறார்கள் என்றால் உருப்படியாக எழுதும் நம் கவிஞர்கள் அதற்கு மேல் இருப்பார்கள். ‘எழுதுவதோடு என் வேலை முடிந்துவிட்டது. அதைப் பற்றியெல்லாம் நான் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்’ என்று உச்சாணிக்கு ஏறிவிடுவார்கள். நல்ல கவிதைக்கு தமிழில் மொத்தமே நூற்றி பதின்மூன்று வாசகர்கள்தான். அவர்களிடம் கெத்துக் காட்டுகிறார்களாம்.

அவர்கள் பேசாவிட்டால் என்ன? நாம் பேசலாம்.

கவிதையில் புரியவில்லை என்கிற வார்த்தைக்கே இடமில்லை. புரியவில்லை என்றால் அதை skip செய்துவிட வேண்டும். யாராவது கேட்டால் ‘அதை நான் வாசிக்கவே இல்லை’ என்று கப்ஸா அடித்துவிட வேண்டும். அவ்வளவுதான். பிறகு ஓரளவுக்கு கவிதையின் நுட்பங்களை மோப்பம் பிடித்துவிட்டால் போதும். விட்டதையும் பிடித்துவிடலாம். 

முதல் பத்தியின் கேள்விக்கே வந்துவிடலாம். எதுகை மோனையாக எழுதினாலே கவிதைதானே? இல்லை. கவிதைக்கும் மொழியியல் அழகுக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு நிழற்படத்தை poetic என்கிறோம். ஒரு ஓவியத்தைப் பார்த்துவிட்டு ‘கவிதை கவிதை’ என்கிறோம். எப்படி? அதிலெல்லாம் எதுகை மோனை இருக்கிறதா என்ன? அப்படித்தான் கவிதையும். வாசித்தவுடன் நமக்குள் ஏதோ ஒரு ரஸவாதத்தை செய்கிறது. ‘அட ஆமாம்ல’ என்று சொல்ல வைக்கிறது. ‘இப்படிக் கூட இருக்குமோ?’ என்று யோசிக்க வைக்கிறது. அதுதான் கவிதை.

கவிஞன் பயன்படுத்தியிருக்கும் நுட்பமான மொழியை விடவும், கவர்ச்சியான வார்த்தைகளைவிடவும்,  அந்தக் கவிதை சொல்ல வருகிற விஷயம்தான் முக்கியம். அது பேசுகிற பொருள் முக்கியம். 

உதாரணத்திற்காக இந்தக் கவிதையைப் பார்க்கலாம்-

மீண்டும் ஒரு இரவு வந்தது

நாம் காதலிக்கிறோம் என்று 
சொல்லிக் கொள்வதை நிறுத்தி 
வெகுநாட்களானது
வழக்கம்போல்
நினைவுக்கு வந்தது

சோரம் போயிருந்த 
கனவு காலங்கள்
இருளை நீலமாக்கின

படிப்படியாய் 
பழக்கம் மறந்த
உடல்கள் சாதிக்கும்
கோர மவுனத்தை
அகந்தைகள்
தின்று கொறித்திருந்தன

உறங்கி எழும்
ஒவ்வொரு காலையிலும்
நம்மிடையே ஒரு பிரேதம் கிடக்கிறது
வெளியில் யாரும் அறியாமல்
அதை அப்புறப்படுத்துவதில்
அக்கறை செலுத்துகிறோம்

பகல்கள் பெரும்பாலும்
சிரமம் கொடுப்பதில்லை

இந்தக் கவிதையில் இடம் பிடித்திருக்கும் பாத்திரங்களை கணவன் மனைவி என்றே வைத்துக் கொள்ளலாம். காதலன் - காதலியாகக் கூட இருக்கலாம்தான். ஆனால் நம் சூழலுக்கு பொருந்தி வராது. திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம் அல்லவா?  

இரவு வருகிறது. இருவருக்குமிடையில் ‘ஐ லவ் யூ’ ‘ஐ மிஸ் யூ’வெல்லாம் எதுவும் இல்லை. இரண்டு பேரும் பேசிக் கொள்வதே இல்லை. இரவில் மெளனமாகக் கிடக்கிறார்கள். இரண்டு பேருக்குமே ஈகோ. அந்த அகந்தையினால் விளைந்த மெளனம் அது.  இரவு முழுவதும் இப்படியே விறகுக்கட்டை மாதிரி கிடக்கிறார்கள். கிட்டத்தட்ட பிணம் மாதிரிதான். அடுத்த நாள் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுவதற்குள் தங்களுக்கிடையேயான அந்த மெளனத்தை- அதைப் பிரேதம் என்கிறார்- தங்களிடையே இருந்து நீக்க முயற்சிக்கிறார்கள். அதாவது மற்றவர்களின் முன்பாக இயல்பாக நடிக்கிறார்களாம்.

இரவில்தான் இந்தப் பிரச்சினை. எதிரியுடன் அல்லது நமக்கு பிடிக்காதவருடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வதுதான் சங்கடம். ஆனால் பகலில் இந்தப் பிரச்சினை இருப்பதில்லை. சுற்றிலும் நிறையப் பேர் இருக்கிறார்கள். மற்றவர்களின் முன்பாக இயல்பாக நடித்துவிட முடிகிறது.

இதுதான் கவிதை. மிக எளிமையான கவிதை.

சலித்துப் போன கணவன் மனைவி உறவை மிக இயல்பாகச் சொல்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதையில் என்ன எதுகை மோனை இருக்கிறது? என்ன ஜிகினா வேலை இருக்கிறது? எதுவுமே இல்லை. ‘சோரம் போயிருந்த கனவு காலங்கள் இரவை நீலமாக்கின’ என்ற வரி கொஞ்சம் யோசிக்கச் செய்கிறது. ஏன் நீலமாகியது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ‘கோர மவுனத்தை அகந்தைகள் தின்று கொறித்தன’ என்பது ஒரு சிறு மொழி விளையாட்டு. அதே போல ‘பழக்கம் மறந்த உடல்கள்’ என்று எந்தப் பழக்கத்தைச் சொல்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. 

சிறிய கவிதைதான். அதில் ஒரு இயல்புத் தன்மை இருக்கிறது. அதில் வாசகனை யோசிக்கச் செய்யும் சில வரிகள் இடம்பெறுகின்றன. கவிதைக்குள் உயிர் இருக்கிறது. அவ்வளவுதான். மனதுக்குள் பதிந்துவிடுகிறது. 

லீனா மணிமேகலையின் கவிதை இது. 

தமிழில் நிறைய பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள். எழுதினார்கள். பெரும்பாலானவர்கள் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அமைதியாகிவிடுகிறார்கள். இது பெண் கவிஞர்களுக்கான பிரச்சினையில்லை. ஆண் கவிஞர்களுமே அப்படித்தான். ஆனால் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சில பெண் கவிஞர்களின் பெயர்களைச் சொல்லச் சொன்னால் லீனா மணிமேகலையின் பெயர்தான் முதலில் ஞாபகத்திற்கு வருகிறது. சரியோ தவறோ தனக்கு தோன்றுவதை எந்தத் தயக்கமும் இல்லாமல் நெற்றியில் அடிப்பது போலச் சொல்வதாலேயே லீனாவுக்கு நண்பர்களும் அதிகம் எதிரிகளும் அதிகம். லீனாவின் எல்லாக் கருத்துக்களுமே எனக்கு உவப்பானவை அல்ல. மிகச் சமீபத்தில் கூட பெண்களின் ஜீன்ஸ் பற்றி யேசுதாஸ் கருத்துச் சொன்னதற்காக Fuck Yesudass என்றார். லீனா சொன்னது தவறு என்பேன். ஆனால் தவறாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதைச் சொல்வதற்கு லீனாவினால் மட்டும்தான் முடியும் என நினைக்கிறேன்.