Oct 29, 2014

அங்க என்ன சத்தம்?

கணவன் மனைவிக்கிடையில் என்னவோ சண்டை.  கணவன் சந்தேகக்காரன். சண்டை நடந்த இரவில் அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போது குரல்வளை மீது காலை வைத்து மிதித்தே கொன்றுவிட்டான். சென்னையில்தான் நடந்திருக்கிறது. பேசிக் கொண்டிருக்கும் போதே அடித்துக் கொன்றிருந்தால் கூட கோபத்தில் செய்துவிட்டான் என்று சொல்லலாம். சண்டையெல்லாம் முடிந்து அவள் தூங்கிய பிறகு கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்திருக்கிறான். குடும்ப வாழ்க்கையின் அடிப்படையே தெரியாதவனாக இருந்திருக்கிறான்.

சோலி முடிந்தது. 

சண்டையும் பூசலும் இருக்க வேண்டியதுதான். கணவன் மனைவிக்கு இடையில் சண்டை இல்லையென்றால் என்ன சுவாரஸியமிருக்கிறது? ‘எங்களுக்குள்ள சண்டையே வராது’ என்று யாராவது சொன்னால் ஒன்று கதை விடுகிறார்கள் என்று அர்த்தம் இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையை வாழவே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். அதெப்படி சாத்தியம்? துளி உரசல் கூடவா வராது? 

கணவன் மனைவி சண்டை என்பது காலங்காலமாகத்தான் இருக்கிறது. அடித்துக் கொள்வோம். பிறகு சமாதானம் ஆகிக் கொள்வோம். சங்ககால இலக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம். கூடலை விடவும் ஊடலுக்குத்தான் மவுசு அதிகம். இப்பொழுதுதான் சண்டை வந்த மூன்றாவது நாளே ‘இவ ஒத்து வரமாட்டா...டைவேர்ஸ் வாங்கிக்கிறேன்’ என்று முடிவெடுத்துவிடுகிறார்கள். ஈகோ. யார் பெரியவர் என்ற அகங்காரம். நானும் அடங்கமாட்டேன் நீயும் அடங்க வேண்டாம் என்கிற திமிர்.

இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசினால் அது வேறொரு இடத்துக்கு இழுத்துச் சென்றுவிடும். அதனால் வேண்டாம்.

சண்டையின் போதும் சில நுட்பங்கள் இருக்கின்றன அல்லவா? திருப்தியாக வாழ்ந்து முடித்தவர்களிடம் கேட்டால் தெரியும். இருவருமே அடங்கிப் போவதிலும் சரி. இருவருமே நாயும் பூனையுமாக நிற்பதிலும் சரி. த்ரில்லே இல்லை. ஒருவர் அடங்கும் இடத்தில் இன்னொருவர் எகிற வேண்டும். இன்னொருவர் எகிறும் போது மற்றவர் அடங்கிக் கொள்ள வேண்டும். எந்த இடத்தில் அடங்கிப் போனால் விழும் அடியின் வீச்சு குறைவாக இருக்கும் என்பதைப் புரிந்து வைத்துக் கொண்டு அடங்க வேண்டிய இடத்தில் அடங்குவதில்தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றி சூட்சமமே இருக்கிறது.

சண்டையின் போதும் சண்டை முடிந்த பிறகும் வாயைத் திறக்காமல் மனதுக்குள்ளேயே திட்டுவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. எதிராளியின் மனதுக்குள் நம்மை எப்படி எல்லாம் திட்டிக் கொண்டிருப்பார் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். “கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருப்பாளோ? ச்சே..ச்சே இத்துனூண்டு சண்டைக்கு கெட்டவார்த்தையிலா திட்டுவாள்? இவளை நம்ப முடியாது. கண்டிப்பாக கெட்டவார்த்தையாகத்தான் இருக்கும். திட்டினால் திட்டட்டுமே. நமக்கா தெரியாது? நாமும் திட்டலாம்” என்று அந்த வசைக்கு சரியான எதிர் வசையை நம் மனதுக்குள்ளேயே சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இதெல்லாம்தான் த்ரில். இதெல்லாம்தான் சுவாரஸியம்.

மீறிப்போனால் இருவரும் இழுத்துக் கொண்டு ஒரு நாள் கிடக்க வேண்டியிருக்கும். பிறகு சமாதானம். அவ்வளவுதான். 

கணவனும் மனைவியும் வாயைவிட்டு வார்த்தையை விடாமல் திட்டிக் கொள்வதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதையை வாசியுங்கள். கடலை மனைவியாகவும், பூனையைக் கணவனாகவும் நினைத்துக் கொள்ளலாம். கவிதையை வாசிக்கும் போதே சிரிப்பு வந்துவிடும். 

யாருமற்ற கடற்கரையில்
ஈரத்தடத்தில் கால்பதிய
நடந்து கொண்டிருக்கிறது பூனை

பூனை மிகவும் சோகமாக இருக்கிறது
ஆனால் கம்பீரமாக நடந்து செல்கிறது
கடலுக்கு முன் அப்படித்தானே இருக்கமுடியும்

கடலைப்போல மோசமான வாயாடி
இந்த உலகத்தில் வேறு இல்லை என்று
பூனை நினைக்கிறது

நினைத்துக் கொள்ளட்டுமே

கடலைப்போல கேவலமான வேசி
இந்த உலகத்தில் வேறு இல்லை என்று
பூனை நினைக்கிறது

தன் நினைப்பு அதற்குத் தெரியாதா என்ன 
என்று உள்ளுக்குள் நகைத்துக் கொள்கிறது

இருந்தாலும் பூனை சோகமாக இருப்பது கண்டு
தன் ஆர்ப்பாட்டங்களைக் குறைத்துக் கொண்ட கடல்
மிக நளினமாக நெளிந்தபடி
பூனையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

பாவம் பூனை
தன் உலகத்தில் அதற்கு இடமில்லையே என்று
உள்ளுக்குள் தானும் நகைத்துக் கொள்கிறது கடல்
சோகப்படுவது போன்ற குறும்புத்தனத்தோடு முகத்தை வைத்தபடி

ரமேஷ்-பிரேமின் கவிதை இது. அவர்கள் கணவன் மனைவியை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதையை எழுதியிருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் எங்கேயோ தினத்தந்தி செய்தியை வாசிக்கிறோம். கணவன் மனைவி சண்டையில் வெற்றியடையும் நுட்பங்களைப் பற்றி யோசிக்கிறோம். அதே சமயம் கவிதையை வாசிக்கிறோம். இந்த மூன்றையும் சேர்த்துக் கொள்ளும் போது நமது மனம் பரபரப்படைகிறது. சந்தோசமாகவோ அல்லது கனமாகவோ உணர்கிறோம் அல்லவா? இது கவிதையைப் புரிந்து கொள்ளுதலின் அடிப்படை.