Oct 28, 2014

பிரம்மஹத்தி தோஷம்

பத்து வருடங்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருந்தது. திடீர் திடீரென்று எங்கள் வீட்டிற்குள் ஓடி வரும். நுழைந்ததும் முதல் வேலையாக மடியில் ஏறிக் கொள்ளும். குழந்தைதான். ஏழெட்டு வயது இருக்கும். எப்படியும் இருபது கிலோவாவது இருக்கும். தொடையே வலித்தாலும் அதை இறக்கிவிட முடியாது. வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டால் அழத் தொடங்கிவிடும். அது அழுது கொண்டே போனால் அந்த வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசனையாக இருக்கும்.  ‘குழந்தையை மடியில் வைத்திருக்க முடியாதா? படுபாவி’ என்று திட்டமாட்டார்களா?

அலுவலகத்தில் ஒரு பையன் இருக்கிறான். ஜூனியர். தெலுங்குக்காரன். விடவே மாட்டான். மதியம் கூடவே வருவான். டீ குடிக்கச் சென்றால் ஒட்டிக் கொள்வான். அலுவலக வேலையின் போது அவ்வப்பொழுது வந்து நச்சரிப்பான். ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் வந்து நின்று கொள்வான். ‘போடா’ என ஜாடை காட்டினாலும் புரிந்து கொள்ள மாட்டான். ஓங்கி மண்டையிலேயே சாத்த வேண்டும் போலிருக்கும். சாத்தினாலும் சிரிப்பான் என நினைக்கிறேன்.

ஆயா உயிரோடு இருந்த காலத்தில் அவரது சொந்தக்காரப் பையன் ஒருவன் திரிந்து கொண்டிருந்தான். வேலை வெட்டியெல்லாம் எதுவும் இல்லை. சொந்தக்காரர்கள் வீடுகளாகத் தேடிச் சென்று உண்டுவிட்டு வருவான். அவன் வந்தால் ஆயாவுக்கு பற்றிக் கொண்டு வரும். ஒருவேளை சோறுதான். போட்டுவிடலாம். ஆனால் வீட்டில் ஒரு விஷயம் பேச முடியாது. மணிக்கணக்கில் அமர்ந்திருப்பான். தெரியாத்தனமாக ஏதாவது பேசினால் ஊர் முழுக்க தண்டோரா போட்டுவிடுவான். ஒரு அம்மிணியைப் பற்றி ஆயா ஏதோ உளறி வைக்க பற்ற வைத்துவிட்டான். அவ்வளவுதான். ஆயாவும் அந்த அம்மிணியும் வருடக்கணக்கில் காதில் புகைவிட்டுக் கொண்டு திரிந்தார்கள். இத்தனைக்கு பிறகும் வீட்டுக்கு வந்து கொண்டுதான் இருந்தான்.

சொல்லிக் கொண்டே போகலாம்.

நம் ஒவ்வொருவருக்கும் இப்படி ஏதாவது பத்து விஷயங்களையாவது நினைவுக்கு கொண்டு வந்துவிட முடியும். வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் அந்தரங்கமான ஒன்றாக இருக்கக் கூடும். ‘இந்தப் பழக்கத்தை எப்படியாவது விட்டுடலாம்ன்னு நினைக்கிறேன்’ என்கிற மாதிரியான விவகாரங்கள். பெங்களூர் நண்பர் ஒருவர் இருக்கிறார். முப்பத்தைந்து வயதாகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. கஞ்சா பழக்கம் உண்டு. ஒவ்வொரு சனிக்கிழமை மட்டும் உறிஞ்சுவார். அடுத்த நாள் முழுவதும் தூக்கத்திலேயே கிடப்பார். ‘விட முடியலையே’ என்பார்.

பிரம்மஹத்தி தோஷம் மாதிரி. பிடித்துக் கொண்டால் விடாது. நாம் தவிர்க்க விரும்பினாலும் விட்டுவிடாமல் நாய்க்குட்டிகளைப் போலத் தொடரும் இவற்றை என்ன செய்வது? அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அடுத்த மனிதராக இருக்கலாம். நம் பழக்கவழக்கமாக இருக்கலாம். ஏதாவதொன்று. தவிர்க்க விரும்புகிறோம். ஆனால் தவிர்க்க முடிவதில்லை.

இதற்கான தீர்வு எதுவும் என்னிடமில்லை. ஆனால் ஒரு கவிதை இருக்கிறது.

நரன் எழுதிய கவிதை. 

அவனுக்கு இந்த நாய்க்குட்டியை பிடிக்கவில்லை
அதன் உடலிலிருந்து
உண்ணிகளும் முடிகளும் உதிர்கின்றன
வாயிலிருந்து உமிழ்நீர் வடிகிறது
அதனால் வெளியே தள்ளிக் கதவைச் சாத்துகிறான்
வெளியே என்றால்
அந்த வீட்டின் வெளியே
அந்தக் கதவுக்கு அப்பால்
அல்லது
அவன் பார்வையின் குருட்டுப் பகுதிக்கு
அவனால் இந்த நாயை
உலகத்தின் வெளியே தள்ளி
கதவைச் சாத்த இயலவில்லை
உள்ளே அழைத்து உருட்டுக்கட்டையால்
நடுமண்டையில் அடிக்கிறான்
இப்போது வேகமாக ஓடுகிறது அது
உலகத்தின் கதவுகளை நோக்கி.

இந்தக் கவிதையைப் புரிந்து கொள்வதில் சிக்கல் எதுவும் இல்லை. அந்த நாயை அவனுக்கு பிடிக்கவேயில்லை. அடித்துத் துரத்த விரும்புகிறான். அப்படியே துரத்தினாலும் அந்த வீட்டுக்கு வெளியேவோ அல்லது கதவுக்கு அப்பால்தான் தள்ள முடிகிறது. உலகத்தை விட்டு தள்ள முடியுமா? முடியாமல் என்ன? உள்ளே இழுத்து உருட்டுக்கட்டையால் நடுமண்டையை பார்த்து அடிக்கிறான். இப்பொழுது ஓடுகிறது பாருங்கள்- உலகத்தின் கதவுகளை நோக்கி- சாகிறது.

இந்தக் கவிதையில் வரும் நாய் என்பது நாய்தானா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நாம் தவிர்க்க விரும்பும் என்னவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம் அல்லவா? தம் அடிப்பதை நிறுத்த வேண்டும். சரக்கடிப்பதை நிறுத்த வேண்டும். பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். இப்படி ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் அந்த பக்கத்து வீட்டுக் குழந்தையையும், ஆயாவின் சொந்தக்காரப்பையனையும் எப்படி நாயாக நினைக்க முடியும்? அவர்களை வீட்டிற்குள் விட்டு நடுமண்டையில் சாத்தினால் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் போலீஸ்காரர்கள் நம்மை ஜட்டியோடு அமர வைத்துவிடுவார்கள். 

ஆக, இந்தக் கவிதையில் வரும் நாயை வெறும் நாயாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. இன்னொரு மனிதனோடும் ஒப்பிட வேண்டியதில்லை. ஆனால் நம் அந்தரங்கமான சிக்கலாக எடுத்துக் கொள்ளலாம். அந்தச் சிக்கலை நம்மை விட்டுத் துரத்த விரும்புகிறோம். அதைச் சும்மா சும்மா வெளியே அனுப்பி கதவைச் சாத்தி பிரயோஜனமில்லை. திரும்பத் திரும்ப உமிழ்நீரை ஒழுக்கியபடி நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்ளும். வீட்டிற்குள் விட்டு ஓங்கி நடுமண்டையிலேயே சாத்த வேண்டும். ஒரே அடி. அவ்வளவுதான்.