Feb 12, 2020

இந்த கோட்டைத் தாண்டி...

கோயமுத்தூருக்கு அருகில் மதுக்கரை என்று ஊர் உண்டு. அங்கிருக்கும் நண்பரொருவரைச் சந்திக்கச் சென்றிருந்த போது ‘இதுதான் மதிற்கரையா’ என்றேன். மதில்+கரை என்பது மருவி மதுக்கரை ஆனது என்று எங்கேயோ படித்த ஞாபகம் இருக்கிறது. பொன்னர் சங்கர் கதையிலும் மதுக்கரை என்ற குறிப்பு வரும். 

பொன்னர் சங்கர் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். கொங்கு வேளாளர்களின் புனிதப்படுத்தப்பட்ட கதை. முன்பெல்லாம் கொங்குப்பகுதியில் பல இடங்களில் இந்தக் கதை கூத்தாக நடக்கும். கதையாகவும் சொல்வார்கள். விடிய விடிய கேட்டுவிட்டு ‘வெட்ட வெட்டத் தழையுமாம் வேட்டுவன் கூட்டம்’ என்று அடுத்த நாள் பழமொழி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் கதையானது கி.பி.1500களின் வாக்கில் நடந்திருக்கக் கூடிய கதை என்று பல தரப்பினரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

குன்றுடையாக்கவுண்டன் ஒரு மசையன். வெள்ளைச் சோளம். அப்படியென்றால் அப்பிராணி என்று அர்த்தம். விவரமில்லாத மனிதர். அவரை பங்காளிகள் (அவர்களும் கொங்கு வேளாளர்கள்தான்) வெகுவாகக் கொடுமைப்படுத்துகிறார்கள். மரத்தில் கட்டி வைத்து அடிக்கிறார்கள். அவருடைய முறைப்பெண்ணான தாமரை தன் அப்பன் சொல் பேச்சைக் கேட்காமல் குன்றுடையானையே திருமணம் செய்து கொள்கிறாள். அவள் கருவுறவும் செய்கிறாள். ஆனாலும் கொடுமைகள் தொடர்கின்றன. தாமரைக்கு ஆண் குழந்தை பிறந்தால் கொன்றுவிடும்படி பங்காளிகள் உள்ளூர் மருத்துவச்சியிடம் சொல்லி அனுப்புகிறார்கள். பொன்னரும் சங்கரும் பிறந்து- அதில் யாரோ ஒருத்தர் மருத்துவச்சியை எட்டி உதைக்க, மருத்துவச்சி மயங்கி விழுந்த போது இருவரும் காணாமல் போய்விடுகிறார்கள். பிறகு இருவரும் நிலத்துக்கு அடியில் இருக்கும் நிலவறையில் வாழ்ந்து, வளர்ந்து வருகிறார்கள். தாமரை இன்னொரு கருவுற்று மகளை பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தைதான் அருக்காணி. 

தாமரைக்கு திருமணத்திலிருந்தே துன்பம்தான். திருமணத்துக்குப் பிறகும் துன்பம்தான். மகன்களைக் காணவில்லை என்று மகள் தங்கத்திடம் சொல்லிச் சொல்லி அழுகிறாள். சில வருடங்கள் கழித்து மகன்கள் வந்து பெற்றோரிடம் சேர்கிறார்கள். அம்மா தமக்கு நேர்ந்த துன்பத்தையெல்லாம் சொல்லி அழுகிறாள். அம்மாவின் துன்பத்துக்குக் காரணமானவர்களைப் பழி வாங்கப் போவதாக அண்ணனும் தம்பியும் அம்மாவிடம் சத்தியம் செய்தும் கொடுக்கிறார்கள். பழி வாங்கவும் தயாராகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் குன்றுடையானும், தாமரையும் மறைந்துவிட தங்கையை தாங்கித் தாங்கி வளர்க்கிறார்கள். பங்காளி வம்பு பெரிதாக, பங்காளிகள் வேட்டுவக்கவுண்டர்களின் தலைவரான காளியை அணுக கடைசியில் இது போராக மாறுகிறது. அப்படித்தான் பொன்னரும் சங்கரும் வேட்டுவர்களை வெட்ட, அவர்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கிறார்கள்- ‘வெட்ட வெட்டத் தழையுமாம் வேட்டுவன் கூட்டம்’ என்ற பழமொழி. இன்றைக்கும் கொங்கு வெள்ளாளருக்கும், வேட்டுவக் கவுண்டர்களுக்கும் பல கிராமங்களில் உள்ளூர வன்மம் உண்டு.

சண்டையில் சங்கர் உயிர் துறக்கிறார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பொன்னரும் படுகளத்திலேயே உயிரை விடுகிறார். நல்லதங்காள் நீர் நிலைக்குள் விழுந்து உயிரை விடுகிறாள்.

இரண்டே கால் பத்தியில் சுருக்கிவிட்டேன். இதில் அழகியல் அம்சங்களைச் சேர்த்து, கிளைக்கதைகளோடு விடிய விடியச் சொல்வார்கள். பொன்னரும் சங்கரும் தங்களது மாமன் மகள்களையே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் தமது அம்மாவுக்கு மாமன் வீடு செய்த நினைத்த கொடுமைகளுக்காக மனைவிமார்களை தனியறையில் அடைத்து காலம் முழுக்கவும் பிரம்மச்சரிகளாகவே இருந்தார்கள் மாதிரியான லாஜிக்கே இல்லாத பகுதிகளும் உண்டு. பங்காளிச் சண்டையாக மட்டுமே இருந்திருக்க வேண்டிய கதையில் வேட்டுவர்களை பெரிய வில்லனாக்கி கொங்கு வேளாளருக்கும் வேட்டுவக்கவுண்டர்களுக்கும் ஏன் தீராப்பகைமையை விதைத்தார்கள் என்றும் புரியவில்லை. சுவாரசியமான கதைதான். இந்தக் காலத்தில் விடிய விடியக் கதை கேட்கத்தான் யாருக்கும் பொறுமையில்லை. 

பொன்னிவளநாட்டுக்கு வருடம்தோறும் செல்லும் குழுக்களின் எண்ணிக்கை கூட குறைந்துவிட்டது. எங்கள் ஊரிலிருந்து யாராவது அரிதாகவே இந்தப் பெயரை உச்சரிக்கிறார்கள். இன்னமும் திருமணச் சடங்குகளின் போதும், இறப்பு வீடுகளிலும் பொன்னர்-சங்கர்-அருக்காணி உறவை மையப்படுத்தி பாடல்கள் உண்டு. இழவு வீடுகளில் பாடல்களில் குறிப்புகள் உண்டு. சீர்கள் குறைந்து, பாடல் சொல்லி அழுவதற்கான ஆட்களும் குறைந்து போனதால் இந்தத் தலைமுறை ஆட்களுக்கு பெரிய அளவில் பரிச்சயமில்லை. அதே போலத்தான் பெரியண்ணன், பெரியசாமி, பொன்னுசாமி, பொன்னான், தங்கம்மாள், தங்காயி, அருக்காணி போன்ற பெயர்கள் கடந்த தலைமுறை வரைக்கும் மிகச் சாதாரணமாக புழங்கி வந்தன. இப்பொழுது அருகிவிட்டன.

பெரியண்ணன் சின்னண்ணன் கதையில் மதுக்கரை செல்லாண்டியம்மனைக் கேள்விப்பட்டு, பிறகு புத்தகமொன்றில் மதுக்கரை என்ற பெயர்க்காரணத்தைப் படித்து வைத்திருந்ததால் நண்பரிடம் கேட்டேன். ‘இது அந்த மதுக்கரை இல்லைங்க..அது கரூர் பக்கம் இருக்கிறது’ என்றார். ஒரு நாள் அந்தப் பக்கமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். இந்த வாரம் வாய்த்தது.  கரூர் நண்பர் ஒருவரிடம் பைக் வாங்கிக் கொண்டு வாங்கல் தொடங்கி- கரூர் பக்கத்தில் இருக்கும் ஊர் இது- உப்பிடமங்கலம், காணியாளம்பட்டி, வீரப்பூர், தோகைமலை, அய்யர் மலை, திருக்காம்புலியூர் பாதை வழியாக செல்லாண்டியம்மன் கோயில் வந்து சேர்ந்தேன். இடுப்புதான் கழன்றுவிட்டது. 


இப்பொழுதெல்லாம் எந்த ஊரிலும் வரலாறு என்று எதுவுமில்லை அல்லது என்னால் கண்டுபிடிக்க முடிவதில்லை. கரட்டடிபாளையம் போலவே, வள்ளியாம்பாளையம் இருக்கிறது வள்ளியாம்பாளையம் போலவே உப்பிடமங்கலமும் இருக்கிறது. ஒரு புரோட்டா கடை இருக்கிறது, அய்யங்கார் பேக்கரி இருக்கிறது, மலையாளி டீ போட்டுத் தருகிறான். ‘இங்க எதாச்சும் கோயில் இருக்காங்க?’ என்று கேட்டால் ‘செல்லாண்டியம்மன் கோயில்தான் பக்கத்துல பெரிய கோயில்’ என்கிறார்கள். யாருமே சிறு கோவில்களைக் கண்டு கொள்வதில்லை அல்லது அதன் பின்புலம் தெரிந்தவர்கள் உயிரோடிருப்பதில்லை.

நம் பழங்காலத்து வரலாறுகள், நம் மண்ணின் கதைகள் போன்றவற்றை களத்தில் கண்டு மறு ஆவணப்படுத்துதல் வேண்டும். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பான வரலாற்றாசிரியர்களின் சமூக புரிதலும் நம் காலத்தில் நமக்கிருக்கும் புரிதல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இன்றைய நம் புரிதலோடு அணுகினால் வேறொரு கோணம் கிடைக்கும். ஆனால் தரவுகள் என்று பெரிதாக எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. 

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. கடந்த தலைமுறை ஆட்கள் ஆவணப்படுத்தியிருக்கும் வரலாறுகளைவிட்டால் நமக்கென்று எதுவும் இருக்காது. பழங்காலத்து வீடுகள், கோவில்கள் என எல்லாவற்றையும் மிகச் சாதாரணமாக புனரமைத்துவிடுகிறோம். கொஞ்சம் காசு சேர்ந்தால் ஓட்டு வீடுகளை இடித்து புதிய வீடுகள் கட்டிவிடுகிறோம். ஊரில் வருமானம் மிக்கவர்கள் பழைய கோவில்களை இடித்து புதுக்கோவில் அமைத்து தம் பெயரில் கல்வெட்டும் வைத்துவிடுகிறார்கள். கல்வெட்டு, சுவடிகள் தொடங்கி பழைய பண்டங்கள் யாவும் காணாமல் போய்விடுகின்றன.  போய்விட்டன. அத்தோடு சேர்த்து வரலாறுகளும்தான். வெகு சில ஊர்களில் மட்டுமே வாய்மொழிக் கதையாக வரலாறுகளை கொஞ்சம் நஞ்சம் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் வயது மூத்து இறப்பின் வரவை பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலேயே அடுத்த தலைமுறை ஆட்கள் ‘அதெல்லாம் அவருக்குத்தாங்க தெரியும்’ என்பதோடு முடித்துக் கொள்கிறார்கள்.

செல்லாண்டியம்மன் கோவிலில் ஒரு ப்ளக்ஸில் ப்ரிண்ட் அடித்து ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கான எல்லைப் பிரச்சினை வந்த போது செல்லாண்டியம்மன் தீர்த்து வைத்து அருள் பாலிக்கிறார்’ என்று சுவரில் மாட்டியிருக்கிறார்கள். மதுக்கரை- மதில்+கரை, மதுரை, திண்டுக்கல் வரை நீண்ட பாண்டிய நாடு, திருச்சியைக் கொண்ட சோழ நாடு, கரூரைக் கொண்ட சேர நாடு ஆகிய மூன்று தேசங்களும் சங்கமிக்கும் புள்ளி, காவிரி தம் திசையிலிருந்து சற்று வளையும் இடம் என இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் யாராவது வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்து, பதிவு செய்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. வேறு யாராவது சில குறுநில மன்னர்களுக்கான மதில் கரையாக கூட இருந்திருக்கலாம். காலப்போக்கில் அதை சேர, சோழ, பாண்டியனுக்கான எல்லை என்று வரலாற்றில் மாற்றியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அம்மன் பெயர்தான் மதுக்கரை செல்லாண்டியம்மன். கோவில் இருக்கும் இடம் மாயனூர். மதுக்கரை என்ற ஊர் கோவிலிலிருந்து ஏழெட்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கிறது. ‘அங்கதான மதுக்கரை இருக்கு...இந்தக் கோவிலுக்கு ஏன் மதுக்கரை செல்லாண்டியம்மன் என்று பெயர்’ என்று கேட்டேன். அங்கேயிருந்த பூசாரிகளுக்குத் தெரியவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் எங்கே பிடிப்பது என்றுதான் தெரியவில்லை. 

பொழுது போகாத நேரத்தில் இப்படித் தேடிச் செல்வதும் அர்த்தமானதாகத்தான் இருக்கிறது. மேலே இருக்கும் வினாக்களுக்கு பதில் தெரிந்தால் சுவராசியமான புலி வால் ஒன்றைப் பிடித்துவிடலாம்.

8 எதிர் சப்தங்கள்:

Unknown said...

எங்கள் ஊரிலும் ஒரு அண்ணமார் கோவில் உள்ளது, வரலாறுதான் தெரியாது!!!

- Murugesh K

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

மணி, ஈரோடு புலவர். செ.இராசு அவர்களைப் பற்றி அறிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன். அவரை தொடர்பு கொண்டால் வரலாற்று குறிப்புகள் தெரிய வாய்ப்பு உள்ளது. வாழ்க வளமுடன்

சேக்காளி said...

//பங்காளிகள் வேட்டுவக்கவுண்டர்களின் தலைவரான காளியை அணுக கடைசியில் இது போராக மாறுகிறது.//
இங்க தான் இது சாதி ப்ரச்னையா மாறியிருக்கும்

Ramesh said...

மதுக்கரை மாயனூரிலிருந்தே துவங்குகிறது.அப்பாதை ஆக்கிரமிப்புக்கு கற்கும் ஆளாகி இன்றும் உயிரோடுதான் இருக்கிறது. அப்பாதை சில இடங்களில் கற்கள் முறையாக அடுக்கி சுவர் அமைப்பில் காணலாம்.

தேமொழி said...

மதில்கரை என்பது சோழ நாட்டின் எல்லைப்பகுதி என்று அறியப்படுவது... சோழமண்டல சதகம் குறிப்பிடுவது ஆகவே இது மக்கள் வாய்மொழி வழியாக இன்னொரு வகை தரவாக இருக்கலாம். அடுத்து என்நூலின் சுட்டி ஒன்று தருகிறேன்... படித்துப் பாருங்கள் ...15 ஆம் அத்தியாயம். நூலையும் கூகுளில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். தனிப்பாடல்களின் குறிப்பில் இருந்து தமிழக அரசுகளின் எல்லை குறித்த மீள்பார்வை...
https://books.google.com/books?id=uSdNDwAAQBAJ&lpg=PR2&ots=FeudVz-5Ii&dq=Engal%20Vazhvum%20Engal%20Valamum&pg=PA92#v=onepage&q=Engal%20Vazhvum%20Engal%20Valamum&f=false 👈 பார்க்க இக்கட்டுரையில் 96 ஆம் பக்கம்

Surya said...

http://sripudhuvangalamman.net/vangalamman-temple.html

வாங்கல் அம்மனை பாத்தீங்களா மணி

Surya said...

நீங்க அப்பிடியே நாமக்கல் கொண்டுசெட்டிபட்டி காளியம்மனையும் பார்த்திருக்கலாம்.... பொன்னர் சங்கர் கதையை குங்குமத்துல எழுதுனப்போ கலைஞர் அங்க போயிருந்தார்

செல்வன் said...

பொன்னர் சங்கர் இருவரும் பிறந்த ஊராக கரூருக்கு அருகே அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் செட்டிபாளையத்தைச் சொல்வர். பொன்னருக்கும் சங்கருக்கும் போர்க்கலையினை கற்பித்தவர் ராக்கியண்ணன்(மாயவன்) என்று கூத்துப்பாட்டில் வரும், செட்டிபாளையத்துக்கு மிக அருகிலேயே ராக்கியாக்கவுண்டன் புதூர் என்றொரு ஊர் உள்ளது. மேலும் தொல் சான்றாக செட்டிபாளையத்தில் கல்வட்டங்களும் குத்துகற்களும் உண்டு.