Feb 15, 2020

அரசுப்பணி என்னும் பெருங்கனவு

இலஞ்சம் வாங்கிய மின் வாரியப் பொறியாளர்களைக் கையும் களவுமாகக் கைது செய்த மின் வாரியத்துறை என்றொரு செய்தி. இப்படியான செய்திகளை நாம் தினசரி கடந்து செல்கிறோம். கிராம நிர்வாக அலுவலர்கள் கைது, தாசில்தார் கைது வரைக்கும் கேள்விப்படுவோம். ஆனால் அதற்கு மேல் எந்த அதிகாரியும் சிக்க மாட்டார்கள். கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஊழலில் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தி வெளியில் வருவதுண்டா? சட்டமும் நியாயமும் எப்பொழுதுமே வலு குறைந்தவர்கள் மீதுதான் தம் கைகளைப் போடுகிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் இப்படித்தான். 

அரசுத்துறைகளில் ஏதேனும் ஒரு வேலையை காசு கொடுக்காமல் வாங்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நடத்துநர், ஓட்டுநர் தொடங்கி கல்லூரி பேராசிரியர் வரைக்கும் எல்லாவற்றுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஜூனியர் அஸிஸ்டெண்ட் வேலைக்கு ஐந்து லட்ச ரூபாய் என்றால் உதவிப்பேராசிரியர் வேலைக்கு நாற்பத்தைந்து லட்ச ரூபாய். யார் வாங்குகிறார்கள் எங்கே போகிறது என்றே தெரியாது. துறை சார்ந்தவர்கள் ‘உள்ளூர் அமைச்சருக்கு கொடுத்துவிடுவோம்’ என்பார்கள். உள்ளூர் அமைச்சர்கள் தரப்பில் ‘அந்தத் துறையில் நாங்கள் தலையிடுவதே இல்லை’ என்று மழுப்பிவிடுவார்கள். சத்துணவு ஊழியர் வேலையை வாங்கக் கூட நான்கு லட்ச ரூபாய் கொடுத்த கதை தெரியும். உள்ளூர் அரசியல்வாதி வாங்கி ‘மேலே கொடுத்துவிட்டேன்’ என்பார்.  ஆனால் ‘இதெல்லாம் கட்சிக்காரர்களுக்கான வளர்ச்சி நிதி; நாங்கள் வாங்கிக் கொள்வதில்லை’ என்று மேலேயிருப்பவர்கள் சொல்வார்கள். எங்கேயாவது யாராவது சிக்கியிருக்கிறார்களா? 

பணி நியமனங்களை விடுங்கள்; இடமாற்றங்களுக்கும் கூட இங்கே பணம் புழங்குகிறது. ஓரிடத்திலிருந்து நமக்கு வாகான இடத்துக்கு பணி மாற்றம் கோரினால் அதற்கென ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும். அங்கேயும் இதே கதைதான். யாருக்கான பணம் என்றே தெரியாது. அங்கே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகையைக் வெட்டினால் அவர்கள் பணி மாற்ற உத்தரவை வாங்கித் தருவார்கள். கடந்த பல ஆண்டுகளாக ‘அரசு வேலை வாங்கிவிடலாம்’ என்ற நம்பிக்கையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் தெரியும்; இதெல்லாம் நமக்கு சாத்தியமில்லைங்கண்ணா என்று சொல்லிவிட்டு தனியார் நிறுவனங்களில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் எம்.பிஃல் பட்டதாரிகளையும் தெரியும்.

சில வருடங்களுக்கு- ஏழெட்டு வருடங்கள் இருக்கும்- முன்பாக நடத்துநர் பணி வாங்குவதற்காக ஒருவர் முயற்சித்துக் கொண்டிருந்தார். அவரிடம் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. எங்கள் அப்பாவிடம் வந்து ‘வைத்துக் கொள்கிறீர்களா? ஐந்து லட்சம் கொடுங்க’ என்றார். அப்பொழுது அப்பாவிடம் பணமில்லை. வேறொருவரிடம் விற்று நடத்துநர் வேலையை வாங்கிவிட்டார். இன்றைக்கு அந்த இடத்தின் மதிப்பு பல லட்சங்களைத் தொடும். ஆனாலும் அந்த நபருக்கு பல லட்சங்களைவிடவும் தம்முடைய வேலை நிரந்தரமானது; வாழ்க்கை முழுமைக்குமான ஓர் உத்தரவாதம் கொண்டது என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லையா? அரசுப்பணியை எதிர்பார்க்கும் பெரும்பாலானவர்களின் மனநிலைதான் அது.

நாற்பத்தைந்து லட்ச ரூபாயைக் கொடுத்து வாங்கினாலும் கூட அரசுக் கல்லூரி பேராசிரியர் பதவி என்பது வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருகிறது என்று நம்புகிறார்கள். அதனால்தான் அவ்வளவு பெரும் தொகையை புரட்டிக் கொடுக்கிறார்கள். அந்த நம்பிக்கையைத்தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முதலீடாக்கிக் கொள்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சிதான் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தால் அங்கே அதைவிட அயோக்கியத்தனங்களை நடத்தியிருக்கிறார்கள். அரசுப்பணி என்பது எத்தனை லட்சம் இளையவர்களின் கனவு? காசு படைத்தவர்கள், தொடர்புகளைக் கொண்டவர்களால் மட்டுமே வேலையை வாங்க முடியும் என்ற சூழல் உருவாவது மிகப்பெரிய பின் விளைவுகளை உருவாக்கும்.

டி.என்.பி.எஸ்.சி  வழக்கை அப்படியும் இப்படியும்  அசைத்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மறக்கடித்துவிடுவார்கள். அதுவரைக்கும் டிரைவர், க்ளர்க், அலுவலகப் பணியாளர் போன்ற துருத்திகளை மட்டும் கைது செய்வார்கள்.  அவர்களால்தான் பெரும் நெட்வொர்க் இயங்கியதாகக் காட்டுவார்கள். மொத்தப் பணத்தையும் அவர்கள் மட்டுமே சுருட்டியது போலவும் அரசும், அமைச்சர்களும், உயர்நிலை அதிகாரிகளும் இதைப்பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் வெகு நேர்த்தியாக தம் பணிகளைச் செய்து கொண்டிருப்பது போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள்.

கட்சி அரசியல் தாண்டி இத்தகைய விவகாரங்களில் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லையென்றால் இதெல்லாம் தொடர்கதையாகத்தான் தொடரும். 

ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியின் மகனோ மகளோ படித்து பி.ஹெச்டி கூட முடித்துவிடுகிறார்கள். நிசப்தம் சார்பில் படிக்கும் ராஜேந்திரனை உதாரணமாகச் சொல்வேன். மீன் வளம் குறித்தான படிப்பை படிக்கும் அரவிந்த் கூட. அவர்களுக்கெல்லாம் அரசுப்பணிகள் என்பதும் பெருங்கனவு. ‘சார் பவானிசாகர்கல ஏ.டி. சொல்லியிருக்காரு சார்’என்பான். அவனுக்கு அவர்கள் அடுத்து கேட்கவிருக்கும் தொகை குறித்து எதுவும் தெரியவில்லை. அதைச் சொன்ன பிறகு அப்படியே வாடிவிட்டான். இப்படி எத்தனை லட்சம் மாணவர்கள்? இவர்களுக்கெல்லாம் எந்தக் காலத்திலும் அரசுப்பணி என்பது சாத்தியமே இல்லை. அப்படித்தானே?

அரசுப்பணி நியமனங்கள், டி.என்.பி.எஸ்.சி, டெட், டி.ஆர்.பி போன்ற பணி நியமனங்களில் நடைபெறும் ஊழல்களைப் பற்றி பொதுவெளியில் எந்த விவாதங்களும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணமும் இருக்கிறது. நம் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது அரசுப்பணியை அடைந்துவிட முடியுமா என்கிற கனவில் இருக்கிறார்கள். ‘என்ன வழின்னு பாருங்க...சொத்து ஒண்ணு இருக்கு..விற்று வாங்கிவிடலாம்’ என்கிற மனநிலை இங்கே பலருக்கும் இருக்கிறது. அதனால் பேசத் துணிவதில்லை. விரும்புவதுமில்லை. இப்படி வேலை வாங்குகிற ஒவ்வொருவரும் ராஜேந்திரனை போன்றவர்களையும், அரவிந்த் போன்றவர்களையும் ஏதோவொருவகையில் வஞ்சிக்கிறோம் என்பதுதான் உண்மை.

எந்த வழியுமே இல்லாமல் படிப்பையும் உழைப்பையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவைக் கருக்கிவிட்டுத்தான் அரசுப் பணி நியமனங்கள் நடைபெறும் என்பது வேதனைக்குரியது. ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டு பணக்காரர்கள் உணவு உண்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் பெரிய அளவில் இச்சமூகம் வருத்தப்படாது. ‘சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்ட சமூகம் இது. ‘எவன் எப்படி போனால் என்ன, நான் நல்லா இருந்தா போதும்’ என்கிற பெரும் கூட்டம் இங்கே உருவாகியிருக்கிறது.  எப்படியாவது நாமும் நம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நீக்கமற நிறைந்திருக்கிறது. அறம் சார்ந்து யோசித்தால் இது தவறு என்று தெரியும். லெளகீக வாழ்வு சார்ந்து யோசித்தால் இதில் என்ன தவறு என்று தோன்றும். அறமும் லெளகீக வாழ்க்கையும் பெரும்பாலும் முரண்பட்டுத்தான் நிற்கும்.

தினசரி வாழ்க்கையில் அறம் பெரும்பாலும் தோற்றுப் போகும். 

8 எதிர் சப்தங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அரசுப் பணியைப் பொருத்தவரை கள அலுவலர்கள்தான் பலியாடுகள். அடுத்த நிலை அதிகாரிகளை உயர் அதிகாரிகள் காப்பாறி விடுவார்கள். கணக்கில் வராத செலவினங்கள் இவர்கள் தலையில்தான் கட்டப்படும்.

சேக்காளி said...

// ‘எவன் எப்படி போனால் என்ன, நான் நல்லா இருந்தா போதும்’ என்கிற பெரும் கூட்டம் இங்கே உருவாகியிருக்கிறது.//
100 ரூபாய் கொள்ளையடிச்சி 50ரூபாய் தப்பிப்பதற்கு செலவழித்தால் போதும் (வருமான வரின்னு நினைச்சிக்கணும்) 50ரூபாயை அனுபவிக்கலாம்.

சேக்காளி said...

//எப்படியாவது நாமும் நம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நீக்கமற நிறைந்திருக்கிறது.//
மாறும்
கொரோனா மாதிரி ஏதாவது வந்து மாற்றும்.

சேக்காளி said...

எங்க ஊரு பக்கம்
"உப்பு போட்டு தான திங்க" ன்னு கேப்பாங்க. ஆயுசுக்கும் அப்புறம் பேச்சு வார்த்தை இருக்காது.
ஆனா இப்பல்லாம்
உப்பு குறைக்கணும்ன்னு டாக்டர் சொன்ன பிறகு
உசுரு பயம் வந்துருது.

bullsstreet said...

இதுவூம் டின்பிஎஸ்சி (TNPSC) வேலை வாங்குவது பற்றிய சிறிய தனிநபர் குறும்படம்தான்.நேரமிருப்பின் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=LQvnEgjAOug

கண்ணன் முத்து said...

எனக்கு வெகு நாட்களாகவே இந்த சந்தேகம் உள்ளது.
மத்திய அரசுப்பணிகளுக்கு பணம் தேவையில்லை.
பிற மாநில் அரசுப்பணிகளுக்கும் இப்படி பணம் வழியாகத்தான் செல்லமுடியும?

பணம் கொடுப்பவர்களுக்கு எப்படியாவது, "போட்டதை எடுக்கனும்" என்று லஞ்ச-ஊழல் செய்வார்கள். அடுத்து அதுவே பழக்கம் ஆகிவிடும். பின்னர், போட்டதுக்கு பத்து மடங்கு எடுத்துவிடுவார்கள். பொதுமக்கள் கூட, லஞ்சம் இயல்பான ஒன்றுதான் என்று முடிவுக்கு வந்து விட்டார்கள்.

இதன் காரணமாகவே அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள், போராட்டங்களுக்கு கூட ஜனங்களிடம் ஈரம் சுரப்பதில்லை.

M.Selvaraj said...

பணி நியமனத்தில் ஊழல் என்ற செய்தி வந்தவுடனே இது குறித்து நீங்கள் முன்பு டி.என்.பி.எஸ்.சி தான் சமானிய மக்களின் அரசுப் பணிக்கான கடைசி நம்பிக்கை அதை சிதைத்து விடாதீர்கள் என்று முன்பு உங்கள் ஒரு கட்டுரையில் எழுதியதுதான் நினைவிற்கு வந்தது. நியாயமாக இந்த தேர்வையே இரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அதை செய்ய மாட்டார்கள். உயர் மட்டத்தின் தார்மீக ஆதரவு இல்லாமல் இதைச் செய்வது மிகக் கடினம். கடினம் என்ன கடினம் செய்ய முடியாது அதுதான் உண்மை.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது சமீபத்தில் வெளிவந்தது.நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளின் துணியை கிழித்து, தலை முடியை பிரித்து போட்டு தேர்வு நேர்மையாகத்தான் நடைபெறுகிறது என்று தேர்வு எழுதும் மாணவர்களை நம்ப வைக்க என்னவெல்லாம் செய்தார்கள் கடைசியில் என்னவானது? இந்தியா முழுவதும் இப்படி எத்தனை ஆள்மாறாட்டங்கள் நடைபெற்றன என்று நேர்மையாக விசாரணை நடைபெற்றிருக்குமா? நிச்சயம் இருக்காது. ஆள்மாறாட்ட செய்தியை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடித்தார்கள்.நீட் தேர்வின் நம்பகத்தன்மை என்ன? நல்ல பண வசதியும் சரியான தொடர்புகளும் இருந்தால் எந்த அரசு பணியையும் வாங்கலாம் என்ற நிலைதான் நம் நாட்டிலும், மாநிலத்திலும். டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைக்கேட்டை மறக்கடிக்க இந்த முறை விஜய் கிடைத்தார் அடுத்த அரசுக்கெதிரான குற்றச்சாட்டு வரும்போது அஜித் வீட்டிற்கு ஒரு ரெய்டு நடத்தினால் நமக்கு எல்லாமே மறந்து போகும்.

அன்பே சிவம் said...

"ஆக' ஆதர்ஷ புருஷராய்க் கனவில் கண்டோரெல்லாம் நம் முதுகில் குதிரை
யேறிப் பறந்திடுவதை கண் இருந்தும் காண மறக்கும், காதிருந்தும் கேட்க மறுக்கும் புதுமை மிக தலைமுறை தவறுகளைத் தொடர தயாராகிவிட்டது."ஆக" வாழ்க.