Feb 7, 2020

16 வயதினிலே

நிசப்தம்- ‘பேசலாம்’ என்கிற பெயரில் வலைப்பதிவு எழுதத் தொடங்கி இன்றோடு பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாம் ஆண்டு தொடங்குகிறது. வழக்கம் போலவே திருப்பதி மகேஷின் வாழ்த்துகளோடு நாள் ஆரம்பித்திருக்கிறது. 

கடந்த சில மாதங்களாக போதும் என்கிற அளவுக்கு ஓய்வு எடுத்தாகிவிட்டது. யாராவது ‘ஏன் ரொம்ப நாள் இடைவெளி’ என்று கேட்டால் ‘எழுதுவது என்பது தினசரி ப்ரஷர் என ஆகிடக் கூடாது’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முன் ‘இப்படியே சால்ஜாப்பு சொல்லிட்டு இருந்தா அதுவே சோம்பேறித்தனம் ஆகிடும்’எனத் தோன்றியது. சரி, ஒரு நல்ல நாளில் நாளில் ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று பஞ்ச் வசனம் பேசலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன். 

மூன்றாம் வகுப்பு வரைக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்து விட்டிருந்தார்கள். மூன்றாம் வகுப்பில் வைரவிழா பள்ளியில் சேர்த்தார்கள். அதுவரையிலும் ஆசிரியர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரிந்ததில்லை. மதிய உணவு இடைவேளையில் விளையாடிக் கொண்டிருப்போம். ஒரு நாள் மதியவேளையில் ஆசிரியைகள் சில பேர் குழுவாக அமர்ந்து உண்டுவிட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான் உட்பட நான்கைந்து மாணவர்களை அழைத்து உணவு உண்ட இடத்தைச் சுத்தம் செய்து எச்சில் தட்டுகளைக் கழுவி வந்து வைக்கச் சொன்னார்கள். அப்பொழுது எனக்கு அது பெரிய உறுத்தலாகத் தெரிந்தது. மாலையில் அப்பாவிடம் சொன்ன போது அவருக்கும் பயங்கர கோபம் வந்துவிட்டது. மறுநாள் தலைமையாசிரியரிடம் வந்துவிட்டார். தலைமையாசிரியர் என்ன சொல்லி சமாதானம் செய்தார் என்று தெரியவில்லை. ‘இனிமேல் உன்னைக் கூப்பிட மாட்டாங்க’ என்று வீட்டில் என்னிடம் அப்பா சொன்னார். 

நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பு விவகாரத்தைப் பார்த்துவிட்டு அம்மா, ‘அந்த ஆளு பாவம்...வயசானவரு...இதுல என்ன தப்பு’என்றார். ‘மூணாவது படிக்கும் போது எச்சில் தட்டு கழுவச் சொன்னதுக்கு ஏன் சண்டைக்கு போனீங்க’ என்றேன். அது அம்மாவுக்கு மறந்து போய்விட்டது போலிருக்கிறது.  ‘சரி...அதே சீனிவாசன் உங்க பேரன் மகியை அழைத்து செருப்பைக் கழற்றச் சொன்னால் இப்படித்தான் கேட்பீங்களா' என்றேன். பதில் இல்லை. 

நமக்கு என்று பிரச்சினை வராதவரைக்கும் நம்மை மிஞ்சிய நீதிபதிகள் யாருமில்லை. அடுத்தவர்களின் பிரச்சினைகள், நமக்கு பாதிப்பில்லாத இடங்களில்தான் சகட்டுமேனிக்கு தீர்ப்பு எழுதிவிடுகிறோம். 

எங்கள் ஊரில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்பாக பழைய கோவிலில் ஒரு பெரிய மரம் இருந்தது.  அந்த மரத்தில் நிறையக் கிளிகள் இருக்கும். மாலை நேரத்தில் மரம் முழுக்கவும் கிளிகள்தான். மழைக்காலமொன்றில் மரம் அடியோடு வீழ கோவிலும் இடிந்து போனது. கிளிக்குஞ்சுகள் சில சாலையில் நசுங்கிக் கிடந்தன. இடிபாடுகளை அப்புறப்படுத்திவிட்டு கோவில் வரி கட்டுகிறவர்களிடம் வசூல் செய்து புதிதாகக் கோவிலைக் கட்டினார்கள். கோவில் கட்டிய பெரியவர்கள் ஓய்ந்துவிட்டார்கள். இப்பொழுது இளரத்தங்கள். இரு குழுக்கள் பிரிந்து தனித்தனியாகக் கோவில் கட்டுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஈகோ தவிர வேறெதுவுமில்லை. கடைசிக் கட்டம் வரைக்கும் ‘நமக்கு எதுக்கு ஊர் வம்பு’ என்று இருந்து கொண்டேன். கடைசியாக முயற்சித்துப் பார்க்கலாம் என்று ‘ஒண்ணாவே இருந்துக்கலாம்ல’ என்று பேசத் தொடங்கிய போது சரி என்றார்கள். தனித்தனியாகப் பேசினால் சரி என்கிறார்கள். கோயமுத்தூருக்கு திரும்ப வந்து அலைபேசியில் பேசினால் ‘அவங்க ஒத்துக்க மாட்டேங்குறாங்க’ என்று இவர்களும் ‘இவங்க ஒத்துக்க மாட்டேங்குறாங்க’ என்று அவர்களும் சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை என்று இறங்கினால் ஊரிலேயே குடியிருந்து முழு வேலையாகச் செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போது பேசிப்பார்க்கலாம் என்றால் துரும்பைக் கூட அசைக்க முடியாது. பேர் கெட்டுப் போகாமல் பொதுக்காரியங்களில் முடிவு கொண்டு வருவது லேசுப்பட்ட காரியமில்லை. 

மாரியம்மன் கோவிலில் கடந்த பல வருடங்களாகவே தொடர்ச்சியாக சித்திரை மாத திருவிழாவில் அக்னிக்கும்பம் எடுப்பது வழக்கம். தார்ச்சாலையில் கால் பற்றிக் கொள்ளும். மத்தியான நேரத்தில் மண்சட்டியில் நெல் உமியை நிரப்பி அதில் நெருப்பை பற்ற வைத்து கைகளில் ஏந்திக் கொண்டு ஊரைச் சுற்றி வர வேண்டும். ஷூ மட்டுமே அணிந்து மென்மையாகிவிட்ட பாதங்கள்- எனது கைகளும் அப்படித்தான் இருக்கும். ஏதோ தைரியத்தில் கும்பத்தை ஏந்திக் கொண்ட பிறகு இறக்கி வைக்க எப்படியும் சுமார் மூன்று மணி நேரம் ஆகிவிடும். மனம் முழுக்கவும் ஒருமுகமாகக் குவிந்து ‘கொண்டு போய்ச் சேர்த்துவிட வேண்டும்’ என்ற நினைப்பிலேயே இருக்கும். எல்லோரும் ஆடிக் கொண்டிருப்பார்கள். எனக்கு ஆட்டம் வராது. ஒருவித தியானம் அது. இனி அதெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை.

உள்ளூர் கோவில்கள் ஏதோவொரு வகையில் பல குடும்பங்களை பிணைத்து வைத்திருக்கும். மாவிளக்கு, தீர்த்தக் குடம், அக்னிக்கும்பம், கம்பத்தாட்டம் என்று ஒவ்வொரு கொண்டாட்டத்துக்கும் ஒரு காரணமும் இருக்கும். இப்பொழுதெல்லாம் உள்ளூர் கோவில்களைவிடவும் பெரும் கோவில்களைத்தான் மக்கள் நம்புகிறார்கள். உள்ளூர் கோவில்கள் என்பவை வெறுமனே தம் ஈகோவை முன்னிறுத்தவும், உள்ளூரில் தம் சக்தியை பிரஸ்தாபிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. உள்ளூர் கோவில்கள் வலுவிழப்பது நம் பாரம்பரியத்தை இழப்பைதப் போலத்தான்.

செருப்பு விவகாரத்தில் ஆரம்பித்து செருப்பு விவகாரத்திலேயே முடித்துக் கொள்ளலாம். 

கோபிச்செட்டிபாளையத்தில் ஜி.எஸ்.லட்சுமண அய்யரைத் தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. அவரது அப்பா பெரும் செல்வந்தர். டி.எஸ் என்ற பெயரில் சொந்த வங்கி நடத்தி வந்தவர். பல நூறு ஏக்கர் நிலபுலன்களைக் கொண்டவர். அவரது மகன் லட்சுமண அய்யர் காந்தியவாதி. சுதந்திரப் போராட்ட வீரர். தலித் மேம்பாட்டுக்காக தம் சொத்துக்களை முழுவதுமாக இழந்தவர். எங்கள் அப்பா எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு- அப்பொழுது வேலை இல்லாமல் இருந்திருக்கிறார்- வெறுங்காலில் நடந்து போய்க் கொண்டிருந்தாராம். அப்பொழுது அய்யர் பார்த்துவிட்டு இயல்பாகப் பேசத் தொடங்கி ‘என்ன படிச்சிருக்க?’ ‘காலில் ஏன் செருப்பில்லை’ என்பதையெல்லாம் கேட்டுவிட்டு ‘அஞ்சு செண்ட் இடம் என் பேர்ல இருக்கு..வேணும்னா உன் பேர்ல எழுதி பொழச்சுக்கிறியா?’ என்று கேட்டாராம். அப்பா கடைசி வரைக்கும் சொல்லிக் கொண்டிருப்பார்.

லட்சுமண அய்யர் மாதிரியான ஆட்கள் புழங்கிய மண்தானே இது?

இடைவெளி ஏன்? ஏன் எழுதவில்லை என்று விசாரணைகளை நடத்திய அத்தனை நல்லவர்களுக்கும் நன்றி. பல மின்னஞ்சல்களுக்கும் பதில் சொல்லவில்லை.மன்னித்துக் கொள்ளவும்.

பதினாறாம் வருடம் செருப்பும் கோவிலுமாக ஆரம்பித்திருக்கிறது. அடித்து நொறுக்கிவிட வேண்டியதுதான்.

5 எதிர் சப்தங்கள்:

செல்வகுமார் முருகப்பன் said...

WELCOME BACK :)

Unknown said...

👌👌

ரா.சிவானந்தம் said...

தமிழ்மணம் இல்லாத நிலையில், ரெகுலராய் வாசிப்பது நிசப்தம்தான். எனவே இவ்வளவு இடைவெளி வேண்டாம். அவ்வப்போது வாருங்கள்.

சேக்காளி said...

//மாரியம்மன் கோவிலில் கடந்த பல வருடங்களாகவே தொடர்ச்சியாக சித்திரை மாத திருவிழா//
அதை சிறப்பா நடந்துங்க.
மத்தது நேரம் வரும் போது தானா நடக்கும்

Saravanan Sekar said...

நிசப்தம் தளத்தை 2 நாளைக்கு இரு முறை எட்டி பார்க்காமல் விட்டதில்லை. பதிவுகள் சமீபமாக குறைந்திருந்தது , திரும்ப ஆரம்பித்ததற்கு நன்றி னே ..

- சரவணன் சே

வா ம பாறைகள் , பொருளாளர்