எங்கள் அலுவலகத்தில் பிறந்தநாளுக்கு என விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். நேற்று ஊரிலிருந்து வரும் போது உடல்நிலை சற்று சரியில்லாமல் போய்விட்டது. கடை உணவு, கடும் வெப்பம் என எல்லாமுமாகச் சேர்ந்து சற்று உடலைக் கலைத்துவிட்டன. வேணியும் விடுப்பு எடுத்துக் கொண்டாள். வீட்டில் நம்மை கவனிக்க ஓராள் இருந்தால் நன்றாகவே இருந்தாலும் கூட எழுந்து வர மனம் வருவதில்லை. இன்று காலையிலேயே பழைய நிலைமைக்குத் திரும்பியிருந்தேன் என்றாலும் உறங்கச் சுகமாக இருந்தது. முப்பத்தியாறாவது பிறந்தநாளின் பகற்பொழுது தூங்கியே கரைந்தது. இதுவும் கூட ஒரு வகைக் கொண்டாட்டமாகவே தெரிகிறது.
1982 ஏப்ரல் பத்து.
எண்ணிப் பார்த்தால் முப்பத்தைந்து வருடங்கள் முடிந்துவிட்டன. படித்து முடித்து, வேலை தேடி, திருமணம் செய்து, குழந்தை பெற்று என - இந்த வயதில் செய்ய வேண்டிய கடமைகளை அந்தந்த வயதில் செய்திருக்கிறேன். நானாக எங்கே செய்தேன்? அவ்வப்போது யாராவது ஒழுங்குபடுத்தினார்கள். திசை தவறிய போதெல்லாம் வழிகாட்ட யாராவது ஒருவர் அமைந்தார்கள். படிக்கும் போது செய்யாத சேட்டைகள் இல்லை. அப்பா அடித்து வழிக்குக் கொண்டு வந்தால் அம்மா அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஒழுங்குபடுத்தினார். திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சரியாக வாழப் போகிறேன் என்ற போது உறவினர்கள் கூடி மிரட்டி உருட்டினார்கள். மலேசியாவில் இருந்த போது பெண்ணின் நிழற்படத்தை அனுப்பினார்கள். ‘சரி பெண் பார்க்க வருகிறேன்’ என்று ஒத்துக்க் கொண்டேன். இவையெல்லாம் ஏற்கனவே விதிக்கப்பட்டவை. இது இவனுக்கு இப்படித்தான் அமையும் என்றிருந்தால் அது அவனுக்கு அப்படித்தான் அமையும். மூடநம்பிக்கை என்றில்லை- யோசித்துப் பார்த்தால் அப்படித்தானே இருக்கிறது?
வாழ்வின் பாதியைக் கடந்தாகிவிட்டது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக உருப்படியான காரியங்களைச் செய்து கொண்டிருப்பதாக நம்பிக்கை வந்திருக்கிறது. இப்படியே சென்று கொண்டிருப்போம். அதே சமயம் எதிர்காலத் திட்டம் என்னவென்றும் யோசிக்காமல் இல்லை. நண்பர் ஜீவகரிகாலன் இன்று அனுப்பியிருந்த பிறந்த நாள் வாழ்த்தில் ‘அன்புள்ள மணிகண்டன், பிறந்தநாள் வாழ்த்துகள். ஒவ்வொரு பிறந்தநாளிலும் நீங்கள் திட்டமிடும் செயல்களைத் தாண்டியும் வெற்றி அடைவதாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதற்காக மகிழும் நண்பனாக, மற்றொரு கேள்வி - இந்த பயணம் எங்கே இட்டுச் செல்லும் என்று உங்களுக்கு அது குறித்த ஒரு பார்வை இருக்கிறதா?’ என்று கேட்டிருந்தார்.
ஏதாவது நக்கலாக பதில் சொல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. பின்குறிப்பாக ‘கோபிச்செட்டிபாளையம் குசும்பைக் காண்பிக்காது நல்லா பதில் சொல்லணும், ஆமா’ என்று குறிப்பிட்டிருந்தார்.
வருங்காலத்தில் செய்வதற்கான பெரிய ஆசை ஒன்றிருக்கிறது. மருத்துவமனை ஒன்றைக் கட்ட வேண்டும். பத்து அல்லது இருபது ரூபாய்தான் ஃபீஸ். மருத்துவமனை ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் பராமரிப்புச் செலவைக் கணக்கிட்டு அதற்கேற்றபடி குறைந்த தொகையை வாங்கிக் கொள்ள வேண்டும். மற்றபடி ஒற்றை ரூபாய் கூட இலாபமில்லாமல் சாமானியர்களுக்கு முழுமையான மருத்துவ சேவையை வழங்கும் மருத்துவமனையாக இருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத மருத்துவமனையாகவும் இருக்க வேண்டும். இது மிகப்பெரிய திட்டம். இடம் வாங்கி, கட்டிடம் கட்டி, சாதனங்கள் வாங்கி என பெரிய வேலை இது. செய்ய இயலுமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படியொரு கனவு இருக்கிறது.
அவருக்கு அனுப்பிய தனிச்செய்தியில் எனது புத்தகங்களை விற்று ராயல்டியாக நீங்கள் ஒன்றரைக் கோடி ரூபாயை ஒரே தவணையாகக் கொடுத்தால் இதைச் செய்துவிடுவேன் என்று பதில் அனுப்பியிருந்தேன். அநேகமாக இந்நேரம் காதில் புகை விட்டுக் கொண்டிருப்பார்.
இத்தகைய செயல்களைப் பொறுத்தவரையிலும் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. காட்டாற்று வெள்ளம் போலத்தான். அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? போகிற போக்கில் போய்க் கொண்டேயிருக்க வேண்டியதுதான். ஆற்றின் போக்கில் நமக்கு ஒத்து வரும் என்று நினைப்பதைப் பற்றிக் கொள்ளலாம். சரிப்பட்டு வராது என்பதை விட்டுவிடலாம்.
அப்பா இல்லாத முதல் பிறந்தநாள் இது. வாழ்த்துகள் என்றெல்லாம் அவர் சொன்னதில்லை. அவரது பிறந்தநாளில் ‘அப்பா...இன்னைக்கு மார்ச் 17..என்னங்கப்பா பண்ணுறீங்க?’ என்பேன். ‘அட ஆமால்ல..என்ன பண்ணுறது? சும்மாதான் இருக்கிறேன்’ என்பார். அதோடு என் பிறந்தநாள் வாழ்த்து முடிந்துவிடும். என் பிறந்தநாளன்று ‘கோயிலுக்கு போறயா?’ என்பார். போ என்றெல்லாம் சொல்லமாட்டார். சொல்லாமல் சொல்வதோடு அவருடைய வாழ்த்து முடிந்துவிடும். இந்த வருடம் அவருடையக் குரலைக் கேட்கவில்லை.
மகி நந்தனும் யுவ நந்தனும் தத்தமது பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கொடுத்தார்கள். யுவ நந்தன் தம்பியின் மகன்.
மற்றவர்களுக்கு வழமையான நாள் இது. எனக்கு தனிச்சிறப்பு வாய்ந்த நாள். வருடத்தின் நூறாவது நாளும் கூட.
வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
22 எதிர் சப்தங்கள்:
பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மணி.
//அவருக்கு அனுப்பிய தனிச்செய்தியில் எனது புத்தகங்களை விற்று ராயல்டியாக நீங்கள் ஒன்றரைக் கோடி ரூபாயை ஒரே தவணையாகக் கொடுத்தால் இதைச் செய்துவிடுவேன் என்று பதில் அனுப்பியிருந்தேன். அநேகமாக இந்நேரம் காதில் புகை விட்டுக் கொண்டிருப்பார்.//
அல்லோ!!!!!!!!! வருமான வரிதுறை யா?.
Please please "Golden House story"
"தங்க வீடு" பற்றி ஒரு பதிவு எழுதலாமே.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே !!!
பிறந்தநாள் வாழ்த்துகள்
Tamil News | Latest News | Business News
!! பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இந்த பிறந்த நாளில் நீங்கள் விரும்பிய ஆசைப்பட்ட நம்பிய அனைத்தும் கிடைக்க வாழத்துக்கள்( நடிகைகளை தவிர )
Happy birthday sir!!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் சிறக்க இந்நன்நாளில் வாழ்த்துகிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா....நிச்சயம் மருத்துவமனை கனவு நிறைவேறும்... "சின்ராசு கவுண்டர்" மருத்தவமனையை திருந்து வைத்து ஒரு சொற்பொழிவு ஆற்றுவதைபோல், நான் உங்களை நினைத்து பார்க்கிறேன். :)
அந்த சொற்பொழிவை நேரில் கேற்க நிசப்ததின் "நிசப்தமான வாசகர்களும்" ஆவலாக உள்ளோம்.... வாழ்க வளமுடன்....
பிறந்தநாள் வாழ்த்துகள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
இன்று போல் என்றும் வாழ்க.
Happy Birthday Manikandan.
More than a hospital, I am thinking we should create elementary schools, where teach the kids our traditional way of living.
There is lot of awareness now, that except you are in an accident, blood flowing, you should not go to a doctor.
Our forefathers have created excellent methods of living, if we teach the kids, the future generations can be completely free of hospital needs.
Just my thoughts.
Valthukkal Mani
!! பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
அன்பு மணி,
ஹோமியோபதியின் தந்தை டாக்டர் ஹானிமனின் பிறந்ததினத்தன்று பிறந்த உனக்கு இயற்கை அன்னை எல்லா வளமும் தருவாள்...
...
மருத்துவமனை தொடங்க விருப்பம் கொண்டிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
மற்றும் மருத்துவமனை தொடங்க உள்ள உங்களுக்கு பணிவான எம்மின் சில கருத்துக்கள்...
குறைந்த கட்டணத்தில் மருத்துவசேவை செய்யவேண்டும்,மருத்துவத்தின் மூலம், மருத்துவமனை கட்டுவது மூலம் சேவை செய்யவேண்டும் என்பது ஏறத்தாழ சமூக ஆர்வலர்கள்... ஏன் மருத்துவம் படிக்கப்போகுமுன் மாணவர்கள் சொல்லும் சொல்லாக இருந்து.... காற்றில் கரைந்து போகிறது..
காரணம்..அவ்ர்களின் சேவை மனப்பாண்மையில் குறை இல்லை...ஆனால் இன்றைய மருத்துவத்தின் அடிப்படையில் குறை இருக்கிறது..அதன் பண்பு அப்படி...
இன்று சேவைத்துறையான மருத்துவத்துறை என்பது கல்வி,தொழில்,அரசியல் இவற்றை விட எல்லாம் பன்மடங்கு லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியது மட்டுமல்லாமல் மாபியாவின் தலைமையிடமாக மாறிவிட்டது.
..
ஆதலால்
முதலில் எது மருத்துவம்...
எது சரியான மருத்துவம்...
மருத்துவச்சேவை என்பது என்ன...?
அதை நாம் நியமிக்கும் மருத்துவர் செய்வாரா....?
என்பதை
கவனத்துடன் உற்றறிந்து
தொடங்குங்கள்....
வாழ்த்துக்கள்...
Happy bday
பிறந்தநாள் வாழ்த்துகள்
Many More Happy Returns of the Day. May God Bless you with Longlife,Good Health Happiness and good Thoughts
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Happy Birthday too you, Happy Birthday too you,Happy Birthday too Mani Sir,Happy Birthday too you...Current Tamil News
Post a Comment