Apr 11, 2017

அம்மணம்

தேசத்தின் தலைநகரில் நிர்வாணமாக நின்றால் அந்தப் படம் செய்தித்தாள்களில் வரும். தொலைக்காட்சிகளில் காட்டுவார்கள். தெரிந்தவர்கள், உறவினர்கள் என எல்லோருடைய கண்களிலும் படும். நாளை ஊருக்குச் சென்றால் உறவுக்காரப் பெண்மணிகளின் முகத்தில் விழிப்பதற்கு சங்கடமாக இருக்காதா? ஊர்க்காரர்கள் நம்மைப் பார்க்கும் போது நம்முடைய நிர்வாண உருவம் அவர்களது மனக்கண்ணில் வந்து போகக் கூடுமல்லவா? நம் வீட்டுப் பெண்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? நம் குழந்தைகள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? தான் நிர்வாணமாக நிற்கும் படங்கள் வெளியானால் அது தமக்கு மட்டுமில்லாமல் தம் குடும்பத்திற்கும் இது அவமானமாக இருக்காதா- இப்படியெல்லாம் யோசிக்காமலா ஒற்றைக் கோவணத்தையும் அவிழ்த்து வீசிவிட்டு நாடே பார்க்கட்டும் என்று நிர்வாணமாக நின்றார்கள்?

ஏசி அறையில் அமர்ந்து கொண்டு தலைநகர் போராட்டத்தை விமர்சிப்பவர்கள் மிகச் சாதாரணமாக பீடைகள், தேசத்தை அவமானப்படுத்த வந்த பாவிகள் என்றெல்லாம் எழுதுகிறார்கள். 

எது அவமானம்? தலைநகரில் நான்கைந்து விவசாயிகள் அம்மணமாக ஓடுகிறார்கள் என்பது விவசாயிகளுக்கு அவமானமில்லை. புதிய இந்தியாவை உருவாக்கப் போகிறோம் என்று மார்தட்டுகிறவர்கள் உழவனுக்குக் செவி கொடுக்க நேரமில்லை என்பதுதான் அவமானம். தனி விமானம் பிடித்து கோயமுத்தூர் வந்து அங்கேயிருந்து ஹெலிக்காப்டரில் சென்று சிவலிங்கத்தைத் திறந்து வைக்க நேரத்தை உருவாக்கிக் கொள்ளும் பிரதமருக்கு அதே மாநிலத்திலிருந்து வந்திருக்கிற உழவர்களுக்காக ஐந்து நிமிடம் ஒதுக்க முடியவில்லை என்பதுதான் அவமானம். 

மனுவைப் பெற்றுக் கொண்டு நிழற்படங்களுக்கு புன்னகைத்தபடியே முகம் கொடுத்து ‘பரிசிலீக்கிறேன்...நீங்க ஊருக்குப் போங்க’ என்கிற ஒற்றை வரி. அவ்வளவுதானே? எந்த ஈகோ மத்திய அரசைத் தடுக்கிறது? இவர்களை அனுமதித்தால் ஆளாளுக்குக் கிளம்பி வந்து டெல்லியில் அமர்ந்துவிடுவார்கள் என்கிற பயமா? அப்படி கிளம்பி வருகிற அத்தனை பேராலும் இவ்வளவு உறுதியாகப் போராட முடியும் என்று மத்திய அரசாங்கம் நம்புகிறதா என்ன?

தமிழகத்திலிருந்து கிளம்பிச் சென்று டெல்லியில் போராடுகிற விவசாயிகள் யார்? அவர்களின் வசதி வாய்ப்புகள் என்ன? அவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் மத்திய உளவுத்துறை இன்னமுமா கண்டுபிடிக்காமல் இருக்கிறது? தோண்டியெடுத்திருப்பார்கள். கடந்த சில தினங்களாக இங்கே கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தார்களே ‘அவர்களுக்குப் பின்புலம் இருக்கிறது; யாரோ இயக்குகிறார்கள்’ என்றெல்லாம்- அப்படியொரு பின்னணி இருக்குமானால் மத்திய அரசும் உளவுத்துறையும் இத்தனை நாட்கள் விட்டு வைத்திருப்பார்களா என்ன? உரித்துத் தோரணம் கட்டி, போராட்டக்காரர்களை நசுக்கி வீசியிருக்க மாட்டார்களா? 

ஏன் முடியவில்லை? எதனால் தயங்குகிறார்கள்? தோண்டித்துருவியும் ஆதாரம் ஏதுமில்லை என்றுதானே அர்த்தம்? 

உழவர்களின் கோரிக்கைகள் வலிமையானவை. தமது கோரிக்கைகள் சரியானவை என்று முழுமையாக நம்புகிறார்கள். உறுதியாகவும் நிற்கிறார்கள். தொடர்ந்து கிளப்பிவிடப்பட்ட எந்தப் புரளியும் அவர்களைத் துளி கூட அசைக்கவில்லை. இன்னமும் எவ்வளவு நாட்கள் ஆனாலும் குலையாமல் நிற்பார்கள் என்று உறுதியாக நம்ப முடிகிறது.

இவர்கள் கிளப்பிவிட்டதைப் போல பின்புலத்தில் யாரோ நின்று இயக்கினால் எவ்வளவுதான் கொட்டிக் கொடுத்தாலும் ஒரு குடும்பஸ்தன் நிர்வாணமாக ஒத்துக் கொள்வானா? திருமணம் செய்து குழந்தைகள் பெற்றவன் பொதுவிடத்தில் ஆடை களைந்து நிற்கத் தயாராகிறான் என்பது பைத்தியகாரத்தனமில்லை. இயலாமையின் உச்சம். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக மத்திய அரசை அணுக முடியாத வலி. காவிரி மேலாண்மை அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோருவது, மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோருவது, மத்திய அரசின் நிவாரணத் தொகையைக் கூடுதலாக்கக் கெஞ்சுவது, தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகளில் உழவர்கள் பெற்றக் கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்வது உள்ளிட்ட கோரிக்கைகள் மத்திய அரசால் முடிவு செய்யப்பட வேண்டிய கோரிக்கைகள். மாநில அரசிடம் கேட்டாலும் அர்த்தமில்லாதவை. 

இவற்றையெல்லாம் முன்வைத்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துப் போராடுகிறார்கள். நிலத்தை விட்டு, குடும்பத்தைப் பிரிந்து மாதக்கணக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து நிமிடம் ஒதுக்கி மனுவைப் பெற்றுக் கொள்ளக் கூட நேரமில்லை என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது? கிட்டத்தட்ட போராட்டத்தின் எல்லாவிதமான வடிவங்களையும் மேற்கொண்டு பார்க்கிறார்கள். சீனப் பத்திரிக்கைகளில் கூட போராட்டம் குறித்தான பதிவு வெளியாகிறது. ஆனால் நம் அரசுக்குத்தான் கண்டுகொள்ள நேரமில்லை. உண்ணாவிரதம், நிலத்தில் உருளுதல், அரை நிர்வாணப் போராட்டம், தலைகீழாக நிற்றல் என சகலத்தையும் செய்து கவனத்தைக் கோரினார்கள். திரும்பிக் கூட பார்க்கவில்லை. வேறு வழியே இல்லாமல் அம்மணமாக நின்றிருக்கிறார்கள்.

இதை விவசாயிகளின் துக்கமாகத்தானே பார்க்க வேண்டும்? அங்கே அம்மணமாக ஓடிய உழவர்களின் மனைவிகளின் மனநிலையை யோசித்துப் பார்த்தவனுக்கு விவசாயியைத் திட்டுகிற எண்ணம் தோன்றாது. அவனது குழந்தைகள் எதிர்கொண்டிருக்கும் அதிர்ச்சியை நினைத்துப் பார்த்தால் உழவனை வசைபாடம் மனம் வராது. வினாடிக்கு வெறும் முப்பத்தேழு கன அடி தண்ணீர்தான் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரு கன அடி என்பது இருபத்தெட்டு லிட்டர். முப்பத்தியேழு பேர் ஆளுக்கொரு வாளியைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றால் மொண்டு ஊற்றிவிட முடியும். டெல்டா விவசாயி என்ன செய்வான்? அகண்ட காவிரி வறண்ட காவிரியாகக் கிடக்கிறது. பவானி, நொய்யல், தாமிரபரணி என அத்தனை நதிகளும் செத்துக் கிடக்கின்றன. ஆயிரம் அடி ஆழ்குழாய்களிலிருந்து கூட வெறும் புகைதான் வருகிறது. உழவன் கெஞ்சாமல் என்ன செய்வான்? 

பாஜக ஆதரவு என்பது வேறு. என்னிடமும் மனச்சாய்வு உண்டு. ஆனால் உழவர்களின் துன்பத்தையும் அவனது கோரிக்கையையும் புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமானப்படுத்துவது வேறு. வெறும் காவிக் கொடியைக் கண்களுக்கு மேலாகச் சுற்றிக் கொண்டு யோசித்துப் பார்த்தால் எந்தக் காலத்திலும் உழவனின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது. உழவனின் வலியைப் புரிந்து கொள்ளாத எந்தவொரு மனிதனும் மனிதனாகவே இருக்க முடியாது.

5 எதிர் சப்தங்கள்:

Unknown said...

உழவர்களின் போராட்டம் மனதை உருக்குகிறது. நம்மால் என்ன செய்ய முடிகிறது என்ற குற்றவுணர்ச்சி குத்துகிறது. மோடியை குறை சொன்னாலும், தமிழக அரசு அவர்களை சென்று பார்க்காமலிருப்பது இன்னும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

kailash said...

போராட்டம் செய்பவர்களின் கோரிக்கை என்னவென்று பரிசீலிக்காமல் நான் ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக பேசுகிறானே இவன் ஒன்றாம் வகுப்பில் யாரை கிள்ளினான் தெரியுமா என்று பேச ஆரம்பிக்கும் வியாதி நிறைய பேருக்கு உள்ளது . அவர்களின் கோரிக்கை நியாயமானதா இல்லையா என்று பாருங்கள் பிறகு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் . Our Mindset should change "Don't look at brand look at the content".

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இந்த விஷயத்தில் மோடியின் அணுகுமுறை மன்னிக்க முடியாதது

சேக்காளி said...

ம். இந்த நாட்டில் பிறந்து தொலைத்து விட்டேனே என்ன செய்ய?

கே.பழனிசாமி, அன்னூர் said...

தவிர்த்திருக்கலாம்...