Mar 12, 2015

சாக்லேட் வேண்டுமா?

ஒரு காகிதத்தைக் இரண்டாக நான்காக எட்டாக பதினாறாக கிழித்துக் கொண்டே போனால் ஒரு கட்டத்திற்கு மேல் அதைக் கிழிக்கவே முடியாத அளவுக்கு ஒரு சிறுதுகளாக நின்று விடும் அல்லவா? - பல நூறு வருடங்களுக்கு முன்பாக ஒரு அறிவியலாளர் இப்படி யோசித்தாராம். அப்படி பிரிக்கவே முடியாத ஒரு ஐட்டம்தான் Atom- அணு என்று முடிவு செய்திருக்கிறார்கள். இது நடந்து ஏகப்பட்ட வருடங்கள் கழித்துத்தான் அணுவை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். அப்பொழுதும் கூட ஆரம்பத்தில் அணுவைப் அதற்கு மேல் பிளக்க முடியாது என்ற நம்பிக்கைதான் இருந்திருக்கிறது. ஆனால் நமக்குத்தான் தெரியுமே? அணுவைப் பிளந்து ஆழ்கடலைத் துளைத்து- ஹிரோஷிமாவையும் நாகசாகியையும் நாசக்கேடாக்கியது. அணு என்பது அதோடு முடிந்து போவதில்லை- அதற்குள் ஏகப்பட்ட சரக்குகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். வெறும் எலெக்ட்ரானும், புரோட்டானும், நியூட்ரானும் மட்டுமில்லை அதைவிடவும் துக்கினியூண்டு சமாச்சாரங்களால் ஆனது என்கிற முடிவுக்கு வந்தார்கள். அப்படியான துக்கினியூண்டு சமாச்சாரங்களில் ஒன்றுதான் நியூட்ரினோ.

இயற்கையாகவே நம்மைச் சுற்றி பல கோடி நியூட்ரினோக்கள் இருக்கின்றன. நமது உடலுக்குள் பல கோடி நியூட்ரினோக்கள் சென்று வருகின்றன. ஆனால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? எதைச் சாதிக்கலாம் என்று யாருக்கும் தெரியாது. வெறும் ஊகங்கள்தான். மருத்துவத்தில் ராணுவத்தில் பயன்படக் கூடும் என்று யூகிக்கிறார்கள். யாருக்குத் தெரியும்? அணுவைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் அது இன்னென்ன வேலைகளைச் செய்யும் என்று யாராவது யோசித்திருப்பார்களா? அதே போலத்தான்  நியூட்ரினோவை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பதைக் கண்டுபிடிக்க சில வேலைகளைச் செய்தாக வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு வேலைதான் தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம்.

இந்தத் திட்டத்திற்கு ஒரு பக்கம் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் இன்னொரு பக்கம் எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.

அப்படி என்னதான் இந்தத் திட்டத்தின் வழியாகச் செய்யப் போகிறார்கள்? 

ஒரு மிக ஆழமான குகையை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைக்கப் போகிறார்கள். மலை உச்சியிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மூன்றாயிரம் அடி ஆழத்தில் மிகப் பெரிய இரண்டு அறைகளை உருவாக்கவிருக்கிறார்கள். அந்த அறைகளில் ஒன்று கட்டுப்பாட்டு அறையாகச் செயல்படும் இன்னொன்றில் நியுட்ரினோவை உணரும் கருவியை வைப்பார்கள். எதற்காக இவ்வளவு ஆழத்தில் வைக்க வேண்டும் என்றால் அப்பொழுதுதான் பிற துகள்களை ஓரளவு வடிகட்ட முடியும் என்கிறார்கள். மலை ஒரு வடிகட்டியைப் போல செயல்படும். இல்லையென்றால் காஸ்மிக் கதிர்கள் உள்ளிட்டவையின் காரணமாக அவ்வளவு தெளிவாக நியூட்ரினோவை அடையாளம் காண முடியாது.

கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் செலவு பிடிக்கும் இந்தத் திட்டத்திற்காக ஏறத்தாழ ஐம்பதாயிரம் டன் எடையுள்ள காந்தத்தை உள்ளே வைக்கப் போகிறார்கள். இப்படியான மிகப்பெரிய ஆராய்ச்சியினால் ஏதேனும் கண்டுபிடிப்புகள் சாத்தியமானால் நம் நாட்டுக்கு பெருமைதானே என்கிறார்கள் ஆதரவாளர்கள். பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத தேனி மாவட்டத்திற்கு இந்தத் திட்டத்தினால் உலக அளவிலான கவனம் கிடைக்கும் என்றும் அவர்கள் பேசுகிறார்கள்.

சரி இந்தத் திட்டத்தினால் என்ன பிரச்சினை? சூழலியலாளர்கள் நிறையக் காரணங்களைச் சொல்கிறார்கள்.

அவற்றில் முக்கியமானவை என்றால் -
  • தமிழக அரசு ஒதுக்கியிருக்கும் 66 ஏக்கர் நிலமும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான பகுதி. இந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டித் தள்ளுவார்கள். இதனால் அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
  • மலைகளைத் தோண்டும் போது உடைபடும் கற்கள், தூசிப் படிவுகள் போன்றவை சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.
  • வெட்டியெடுக்கும் மலைகளை இவர்கள் எங்கே கொண்டு போய் கொட்டுவார்கள்? அதுவும் பாதிப்பை உருவாக்கும்.
  • இந்தத் திட்டத்திற்கு தேவைப்படும் தண்ணீரை எங்கேயிருந்து எடுப்பார்கள்? - இந்தத் திட்டத்திற்கு தண்ணீர் தேவை அதிகம் இருக்கும் என்று சூழலியலாளர்கள் சொல்கிறார்கள். அதற்காக மிகப்பெரிய குழாய்களை வனப்பகுதிக்குள் அமைக்க வேண்டியிருக்கும். அதற்காகவும் மரங்களை வெட்டுவார்கள். குழி தோண்டுவார்கள். இப்படி நிறைய சூழலியல் சார்ந்த பிரச்சினைகளை முன் வைக்கிறார்கள்
வெறும் சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமில்லை- ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியலாளரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். ஸ்டீபன் ஹாக்கிங் நம் காலத்தின் மிக முக்கியமான இயற்பியலாளர். கடவுளின் துகள் என்று அழைக்கப்படுகிற இன்னொரு நுண்துகளான ஹிக்ஸ் துகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் குறித்து ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதுவும் இப்படியொரு எசகுபிசகான ஆராய்ச்சிதான். கிட்டத்தட்ட அறுநூறு அடி ஆழத்தில் ஒரு கருவியை அமைத்து எதிரெதிர்திசைகளிலிருந்து ஒளியின் வேகத்தில் புரோட்டான்களை அனுப்பி மோதச் செய்து அதிலிருந்து ஹிக்ஸ் துகள்களைக் கண்டுபிடிக்கும் வேலைகளைச் செய்தார்கள். அப்பொழுது ஹாக்கிங் ‘தம்பிகளா இயற்கையாக இருக்கும் துகள்களைக் கண்டுபிடிப்பது வேற...இப்படி நீங்க அளவுக்கதிகமான ஆற்றலின் வழியாகக் கண்டுபிடிப்பது வேற...இப்படியெல்லாம் மோதச் செய்தால் இந்தப் புவிக்கு மட்டுமில்லை இந்த பிரபஞ்சத்துக்கே கேடாக முடியலாம்’ என்றார். 

இதே மாதிரியான ஒரு திட்டம்தான் நியுட்ரினோ திட்டமும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். சாமானியர்களுக்கு இத்திட்டத்தினால் என்ன பலன்  கிடைக்கப் போகிறது என்பதையெல்லாம் அப்புறமாக பேசிக் கொள்ளலாம். நியுட்ரினோ துகள்களைக் கவர்வதற்காக மிகப்பெரிய கண்ணாடிகளுக்கு இடையில் ஒரு வாயுவை நிரப்பி அதன் ஓரங்களை அடைத்து ரெஸிஸ்ட் ப்ளேட்டிங் சேம்பர்களைச் செய்கிறார்கள். அது என்ன வாயு? ஒருவேளை கசிந்தால் என்ன நடக்கும் என்றெல்லாம் விசாரிக்கிறார்கள்.

இத்தகைய மிகப்பெரிய சமாச்சாரங்களில் அவ்வளவு சுலபமாக எந்தப் பக்கமும் சாய முடிவதில்லை. கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்த போது இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கும் மக்கள் தொகைக்குமான மின்சாரத்திற்கு எங்கே போவது என்ற கேள்விதான் எழுந்தது. சோலாரில் தயாரிக்கலாம், காற்றாலையில் தயாரிக்கலாம் என்று யானைப்பசிக்கு சோளப்பொறியைக் காட்டினார்கள்.  ‘அதெல்லாம் ஆகிற காரியம் இல்லை சார்’ என்றால் ‘சரி ஏதாவது விபத்து நடந்தால் அதற்கு என்ன உபாயங்களை வைத்திருக்கிறார்கள்?’ என்ற எதிர்கேள்வியைக் கேட்டார்கள். அவர்களின் கேள்வியும் சரியானதுதான். இதுவரை அரசாங்கம் எந்த பதிலையும் சொன்னதாகத் தெரியவில்லை. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடுகிறார்கள்.

இப்பொழுதும் அப்படித்தான். இப்படியான ஆராய்ச்சிகள் நிகழ்ந்தால்தானே எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் எதிர்ப்பாளர்களின் கருத்துகளிலும் நியாயம் இல்லாமல் இல்லை என்றுதான் நம்ப வேண்டியிருக்கிறது.

Oct 25, 2013

கரப்பான் பூச்சியாதல்

அலுவலகத்தில் பிரச்சினை; வீட்டில் சண்டை; வெளியே சென்றால் அங்கும் யாரிடமாவது தகராறு- யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான நாட்களில் பிரச்சினைகளோடு தூங்கி பிரச்சினைகளோடுதான் விழிக்கிறோம். நம்மைச் சுற்றி இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன. சரி, அவற்றுக்கான தீர்வுகள்? நாம்தான் டெக்னாலஜிஸ்ட்கள் ஆயிற்றே. டெக்னாலஜியைப் பயன்படுத்தியே ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆயிரம் தீர்வுகளை கண்டுபிடிக்கலாம். ஆயிரமென்ன ஆயிரம்? இலட்சக்கணக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கலாம். இலட்சம் தீர்வுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அந்த லட்சத்தில் இருந்து ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவும் இருப்பதிலேயே சிறந்த ஒன்றை.

அது எப்படி? டார்வின் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாரே! ‘தக்கன தப்பிப்பிழைக்கும்’(Survival of the fittest').அதே நுட்பம்தான். இந்த தக்கன தப்பிப்பிழைத்தலுக்கு கரப்பான் பூச்சியை உதாரணமாகச் சொன்னால் சாலப் பொருத்தமாக இருக்கும். என்ன மருந்து வேண்டுமானாலும் அடியுங்கள்- இந்த ஜீவனை முற்றாக ஒழித்துக் காட்டுங்கள் பார்க்கலாம். வாய்ப்பே இல்லை. எப்படியும் ஒன்றிரண்டாவது தப்பி தங்கள் சந்ததியை பெருக்கிவிடும். கரப்பானைப் பற்றி இணையத்தில் தேடினால் அவை பல மில்லியன் வருடங்களுக்கு முன்பாகவிருந்தே இந்த பூமியில் கோலோச்சி வருவதாக எழுதி வைத்திருக்கிறார்கள். எரிமலைக் குழம்பு லார்வாவே அடித்து நொறுக்கிக் கொண்டு ஓடினாலும் கூட பாறைக்களின் அடியில் சிறு இடைவெளி இருந்தால் போதுமாம் அதற்கடியில் ஒண்டியும் பதுங்கியும் தப்பித்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தச் செய்தியை நினைத்துக் கொண்டே அடுத்த முறை கில்லாடி கரப்பானைக் கொல்ல முயற்சித்துப் பாருங்கள் அது ‘கெக்கெபிக்கே’ என்று நமக்கு இளிப்புக் காட்டிக் கொண்டே ஓடுவது காதில் விழும். 

மில்லியன் கணக்கான வருடங்களாக இவை எப்படி தப்பித்திருக்கின்றன? இத்தனை வருடங்களாக பூமி ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இங்கு இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, பருவநிலை மாறியிருக்கிறது, கடல் இருந்த இடமெல்லாம் மலைகளாக உருமாறியிருக்கின்றன, நிலப்பகுதிகளையெல்லாம் கடல் ஆக்கிரமித்திருக்கிறது. இப்படி என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தங்களை தகவமைத்துக் கொண்ட உயிர்கள் மட்டும் தப்பிக்கின்றன. மற்றவை எல்லாம் வெறும் எச்சங்களாகிப் போகின்றன. இதைச் சுருக்கமாகச் சொன்னால் அதுதான் ‘தக்கன தப்பிப் பிழைத்தல்’. 

இப்படித் தப்பிப்பிழைப்பதற்கான திறமை எல்லாம் அந்ததந்த உயிரியின் மரபிலேயே வருவது- ஜெனிட்டிக்கல். எவ்வளவுதான் பிரச்சினைகள் வந்தாலும் தீர்வு கண்டுபிடித்து தப்பித்து விடுகின்றன. உயிர்களுக்கான பிரச்சினைகள்- பிரச்சினைகளுக்கான தீர்வுகள்- அந்தத் தீர்வுகளிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்னும்  ‘கான்செப்ட்டை’ நவீன அறிவியலுக்கு பயன்படுத்திப் பார்க்கலாமா என்று யோசித்த போது உருவானதுதான் மரபியல் கணிப்புநெறி (Genetic Algorithm).

அதாவது, இதே உயிரியல் கான்செப்ட்டை கணினியில் ப்ரொகிராமாக எழுதிவிடுவதுதான். 

இப்பொழுது மரபியல் கணிப்புநெறியை ஏகப்பட்ட துறைகளில் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். உதாரணமாக பொருளாதாரத்தை எடுத்துக் கொள்ளலாம். பெட்ரோல் விலை உயர்வோ அல்லது வேலையில்லாத் திண்டாட்டமோ  - பிரச்சினையின் வீரியத்தைப் போலவே அவற்றிற்கான தீர்வுகளும் இருக்கும். ஒரு சாமானிய தனிமனிதனின் பொருளாதாரப் பிரச்சினைக்கே ஏகப்பட்ட தீர்வுகள் இருக்கும் போது ஒரு நாட்டின் அல்லது உலகப் பொருளாதார பிரச்சினைக்கு எத்தனை தீர்வுகள் இருக்கக் கூடும். இந்த எக்கச்சக்கமான தீர்வுகளிலிருந்து மிகச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க மரபியல் கணிப்புநெறியைப் பயன்படுத்தலாம்.

எப்படி? எந்தவொரு பிரச்சினைக்கும் சில தீர்வுகள் மேலோட்டமாகவே கண்ணுக்குத் தென்படும் அல்லவா? அவற்றை குத்து மதிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒவ்வொரு தீர்வையும் ஜெனிடிக் அல்காரிதமானது க்ரோமோசோம் ஆக மாற்றிக் கொள்ளும். இப்படி தேர்ந்தெடுத்த க்ரோமோசோம்களை(தீர்வுகளை) பிணைத்தால்- அதாவது இரண்டு தீர்வுகளை இணைத்து இன்னொரு புதிய தீர்வை அடைவது- இரண்டாம் தலைமுறைத் தீர்வுகள் கிடைக்கும். இரண்டாம் தலைமுறையில் கிடைக்கும் தீர்வுகளை பிணைத்து அடுத்த தலைமுறைக்கு போகலாம். இப்படி ஒவ்வொரு தலைமுறையாகத் தாண்டும் போதும் சிறந்த தீர்வுகளை நோக்கி நகர்கிறோம். 

மேம்போக்காக ‘தீர்வுகளை பிணைத்து இன்னொரு தீர்வை அடைகிறோம்’ என்று சொல்லிவிட்டாலும் கூட அது அவ்வளவு எளிமை இல்லை. தீர்வை க்ரோமோசோமாக மாற்றும் போது அது கணினி புரிந்து கொள்ளும்படியாக 0 அல்லது 1 என்ற பைனரி வடிவத்திற்கு மாற்றுவதிலிருந்து மேற்சொன்ன பிணைத்தல்(Cross over), பிறழ்வு (Mutation) போன்ற இயற்கை நிகழ்த்தும் உயிரியியல் செயல்களை மனிதன் கண்டறிந்த கணினியில் பிரதியெடுத்தல் சற்று சவாலான காரியம்தான். ஆனாலும் நம்மவர்கள் இத்துறையில் படு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கும் போது அப்பாவை நச்சரித்து ஒரு கணிப்பொறி வாங்கித் தரச் சொல்லியிருந்தேன். அப்பொழுது அதன் விலை ஐம்பதாயிரம் ரூபாய். பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அப்பாவால் வங்கிக் கடன் மூலமே வாங்கித் தர முடிந்தது. மூன்றே ஆண்டுகள்தான். நான் வைத்திருந்த கணினியைவிட பன்மடங்கு திறன் வாய்ந்த கணினி நாற்பதாயிரம் ரூபாய்க்கு கிடைத்தது. அடுத்த சில ஆண்டுகளில் அதைவிட நான்கைந்து மடங்கு ஆற்றல் மிகுந்த கணினி இருபத்தைந்தாயிரத்திற்கும் குறைவாக கிடைக்கத் துவங்கிவிட்டது.

எப்படி சாத்தியம்? மின்னணுவியலின் அசுரத்தனமான வளர்ச்சிதான் காரணம். மின்னணுவியல் துறையில் VLSI(Very Large Scale Integration) என்றொரு பிரிவு உண்டு. ஆயிரக்கணக்கான மின்னனு இணைப்புகளை எப்படி மிகக் குறைந்த இடத்தில் வடிவமைப்பது என்பதுதான் இந்த வல்லுனர்களின் வேலை. 64 MB RAM வந்த சில மாதங்களில் 128 MB RAM ஐத் தயாரித்துவிட்டார்கள். அடுத்த சில மாதங்களில் 256 MB RAM. இப்படி திறன் கூடிக் கொண்டே போகும் போது விலை இறங்கிக் கொண்டே வந்ததுதான் ஆச்சரியம்.  அதனால்தான் கணினியின் திறன் கூடினாலும் விலை குறைந்து கொண்டே வந்தது. இப்பொழுதெல்லாம் GB அளவு மெமரி கொண்ட RAM கள் கிடைக்கின்றன. கூடிய விரைவில் Terabyte(TB) அளவில் RAM ஐ எதிர்பார்க்கலாம்.

Pen-drive ஒரு பேனா மூடியளவுதான் இருக்கிறது. ஆனால் ஏகப்பட்ட தகவல்களை அதனுள் அடக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் VLSI தான். துக்கினியூண்டு இடத்தில் அவ்வளவு மெமரியை வடிவமைத்திருக்கிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கான மின்னணு இணைப்புகளை உருவாக்கும் போது எந்த இணைப்பை எந்த இடத்தில் வைக்கலாம் என்பதற்கு ஆயிரக்கணக்கான சாத்தியங்கள் உண்டு அல்லவா? இதில் எது சிறந்தது என்பதை நம் மரபியல் கணிப்பு நெறியை வைத்து எளிதாக கண்டுபிடிக்கலாம். எந்த மாதிரி இணைத்தால் மிகக் குறைந்த இடம் தேவைப்படும், எந்த மாதிரி இணைத்தால் இன்னும் திறன் வாய்ந்த மின்னணு சாதனங்களை உருவாக்க முடியும் போன்ற பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜெனிடிக் அல்காரிதம் கொடுக்கிறது.

பொருளாதாரம், மின்னணுவியல் என்பனவெல்லாம் வெறும் ‘சாம்பிள்’ துறைகள்தான். இவை தவிர ஏகப்பட்ட துறைகளில் மரபியல் கணிப்பு நெறி கலக்கிக் கொண்டிருக்கிறது. என்றாலும் அதன் கால் படாத துறைகளும் நிறைய இருக்கின்றன. வருங்காலத்தில் மரபியல் கணிப்புநெறியை நம் மொபைலில் போட்டு வைத்துக் கொண்டால் முதல் பத்தியில் சொன்ன எல்லாப்பிரச்சினைகளுக்கும் சர்வசாதாரணமாக தீர்வைக் கண்டுபிடித்துவிடலாம் என நினைக்கிறேன். அப்படியான சூழல் வருவதற்கான காலம் ஒன்றும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

(இன்றைய இந்து நாளிதழில் வெளியான கட்டுரை)

Dec 21, 2012

நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்!


“நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்” - அடுத்தவர்களை நக்கலடிப்பதற்கு மட்டுமே இந்த வரியைப் பயன்படுத்துவதால் உண்மையான வில்லேஜ் விஞ்ஞானியை பாராட்டும் போது எப்படி பாராட்டுவது என்று குழப்பம் வந்துவிடுகிறது. 

பாலாஜி அப்படியான ஒரு வில்லேஜ் விஞ்ஞானி. இருபத்தி மூன்று வயதுதான் ஆகிறது. கல்லூரியில் எம்.டெக் படித்துக் கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக்கில் தொலைபேசி எண்ணைக் கேட்டபோது கொடுத்திருந்தேன். ஒரு மாலை நேரத்தில் “சார், விழுப்புரம் மாவட்டம் கண்டராச்சிபுரத்திலிருந்து பேசுகிறேன்” என்று அவர் அலைபேசியில் சொன்னபோது அசால்ட்டாகத்தான் எடுத்துக் கொண்டேன். 

“நிறைய ரோபோ செஞ்சிருக்கேன் சார்” என்று ஆரம்பித்தவர் குட்டி குட்டி ரோபோவில் தொடங்கி ஆளுயர ரோபோ வரைக்கும் தான் விதவிதமாக வடிவமைத்தது குறித்து கில்லி விளையாடினார். அத்தனையும் Made by பாலாஜி. ரோபோ ஒன்றும் லேசுப்பட்ட காரியமில்லை. நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு டீமாக வேலை செய்தாலும் கூட மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படியே சிரமப்பட்டாலும் கூட செய்து முடிக்கும் ரோபோ வெற்றியடையும் என்று சொல்ல முடியாது. 

ஆனால் பாலாஜி ரோபோடிக்ஸில் தனி ஆவர்த்தனம் நடத்துகிறார். அதுவுமில்லாமல் இந்த ரோபோக்கள் வெற்றிகரமானவை என்பதுதான் முக்கியமான விஷயம். கேட்பதற்கு பிரமிப்பாக இருந்தது. பேசி முடித்த பிறகு பாலாஜியை ஆரம்பத்தில் அத்தனை அசால்ட்டாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை எனத் தோன்றியது. 

படத்தில் இருக்கும் ரோபோ பறந்து செல்கிறது. ஆளில்லாத விமானம் போல. காகிதத்தில் ராக்கெட் செய்து பறக்கவிடுவதே எத்தனை சிரமம் என்று செய்து பார்த்தவர்களுக்குத் தெரியும். ஆனால் ஏரோ டயனமிக்ஸை சர்வசாதரணமாக வடிவமைத்திருக்கிறார்.


பாலாஜி தனது பள்ளிப்பருவத்திலேயே ரோபோக்களை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அறிவியல் கருத்தரங்கங்கள், கண்காட்சிகள் என்று என்னதான் கலக்கினாலும் மேலே படிக்க குடும்பச் சூழல் ஒத்து வரவேண்டுமல்லவா? +2 முடித்த பிறகு பிறகு ஒரு ப்ரேக். தச்சுத்தொழிலாளியான அப்பாவால் பாலாஜியை அவ்வளவு எளிதாக கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. அடுத்த வருடம் பணம் சேர்த்து இஞ்சினியரிங் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இப்படிக் கிடைத்த ஒரு வருட இடைவெளியிலும் சில ரோபோக்களை செய்து கொண்டிருந்த பாலாஜி அடுத்த வருடத்தில் மயிலம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.

கல்லூரிக் காலம் பாலாஜிக்கு இரண்டு சிறகுகளை கூடுதலாக செருகிவிட்டிருக்கிறது. உளவு பார்த்து வரும் ஸ்பை ரோபோ, மினியேச்சர் ஜே.சி.பி என கலர்கலராக படம் காட்டிக் கொண்டிருந்தவரின் படத்தை உள்ளூர் பத்திரிக்கைகள் வெளியிடத் துவங்கின. உற்சாகம் பிளிறிட இன்னமும் ஏகப்பட்ட ரோபோக்களை செய்திருக்கிறார்.


கல்லூரியை முடித்துவிட்டு வேறொரு கல்லூரியில் ஆராய்ச்சியாளராக வேலை செய்து கொண்டிருந்தபோது நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி நிர்வாகத்தினர் பாலாஜியின் மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி எஸ்.ஆர்.எம் கல்லூரியில் எம்.டெக் ரோபோடிக்ஸ் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். 

கல்கி வார இதழில் ரோபோடிக்ஸ் குறித்தான தொடரை எழுதிக் கொண்டிருந்தபோது இந்தியாவில் ரோபோடிக் துறையில் முக்கியமான ஆட்களை பற்றிய செய்திகளை இணையத்தில் தேடிப்பார்த்திருக்கிறேன். ஆனால் பாலாஜியின் ஊக்கத்துடன் செயல்படும் ரோபோடிக் ஆர்வலர்களை கண்டுபிடிக்க முடிந்ததில்லை. 



ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ், ஜெனிடிக் அல்காரிதம் போன்ற ரோபோடிக்ஸின் தற்கால நுட்பங்கள் தெரியாமலேயே கலக்கிக் கொண்டிருக்கிறார் பாலாஜி.

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து சொந்தமாக கையை ஊன்றி கர்ணம் அடித்து ரோபோடிக்ஸில் வெற்றிக் கொடிகட்டும் பாலாஜி  நவீன நுட்பங்களைக் கற்றுக் கொள்வதோடு அவருக்கு வாய்ப்புகள் மட்டும் சரியாக அமைந்து விட்டால் மிக முக்கியமான விஞ்ஞானியாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. 

“எம்.டெக் முடிச்சுட்டு வேலை தேடப் போறீங்களா?” என்றேன்

“வேலை கிடக்கட்டும் சார். அது அவசியமில்லை. நான் சயிண்டிஸ்டாக போறேன். அதுவும் சக்ஸஸ்ஃபுல்லான சயிண்டிஸ்ட்” என்றார். அதை அதீத நம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது. அவரிடம் திறமையிருக்கிறது. அந்த திறமை மீது அவருக்கு நம்பிக்கையும் இருக்கிறது. 

இத்தகைய இளம் வயது சாதனையாளருக்கு வசதிகள், வாய்ப்புகள் என எதுவுமே இல்லையென்றாலும் கூட ஊக்கம் அத்தனையையும் சாத்தியப்படுத்திவிடும். யாரேனும் ஊடகவியலாளர்கள் இந்தக் குறிப்பை கவனிக்க நேர்ந்தால் கொஞ்சம் பாலாஜியை கவனியுங்கள். பாலாஜியை 8056834037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  ஒரு அலைபேசி அழைப்பு அல்லது ஒரு எஸ்.எம்.எஸ் அவருக்கான ஊக்கத்தை தரும் என நம்புகிறேன். 

Nov 7, 2012

கடலுக்குள் சீட்டியடிக்கும் மீன்குஞ்சுகள்



எம்.டெக் இறுதியாண்டு படிக்கும் போது ஒரு ப்ராஜக்ட் செய்ய வேண்டியிருந்தது. கடலுக்கடியில் அனுப்பப்படும் இயந்திரங்களுடனான தகவல் தொடர்பை நிலத்தில் இருந்து ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் கொடுக்கப்பட்டிருந்த வேலை. 

கடலுக்கடியில் இயந்திரங்களா? அதுவே வியப்பானதாகத்தான் இருந்தது. மீன்வளத்தை ஆராய்வது, கடலுக்குள் புதைந்து போன தொல்பொருட்களை கண்டறிவது, அந்நிய சக்திகளின் கடல் வழி ஊடுருவலை கண்காணிப்பது என சகட்டு மேனிக்கு கடல்  இயந்திரங்கள் உதவுகின்றன.

மனிதர்களை வைத்தும் கடலாராய்ச்சி செய்யலாம்தான். ஆனால் மனிதனை ஆழ்கடலுக்கு அனுப்பி வைப்பதில் சிக்கல்கள் நிறைந்திருக்கின்றன. கடலுக்குள் முப்பதைந்தாயிரம் அடிகள் வரைக்கும் ஆழமான இடங்கள் உண்டு. (உலகிலேயே ஆழமான மரியானா ட்ரென்ச் கிட்டத்தட்ட 36000 அடிகள்). இவ்வளவு ஆழமான இடத்திற்கு மனிதன் போவது லேசுப்பட்ட காரியமில்லை. கடல்வாழ் உயிரினங்களின் தாக்குதல்களில் தொடங்கி தாறுமாறான 'ப்ரஷர்' வேறுபாடு வரைக்கும் அத்தனையையும் சமாளிக்க வேண்டியிருக்கும். நாட்கணக்கில் கடலுக்குள் இருப்பதும் மனிதனுக்கு சாத்தியமில்லை. அதற்குத்தான் இயந்திரங்கள். இயந்திரங்கள் என்றால் நம் கதாநாயகன் ரோபோவும் உள்ளடக்கம். கடலுக்குள் அனுப்பி வைக்கப்படும் இந்த ரோபோக்களுடனான தகவல் தொடர்புதான் ப்ராஜக்ட். எங்களுக்கு டபுள் சந்தோஷம்.

முதலில் கடலுக்குள் பயணிக்கக் கூடிய ஒரு குட்டி ரோபோ செய்ய வேண்டும். பேட்டரி,வயரிங், மைக்ரோ ப்ராசஸர் என்பவை எல்லாம் வழக்கமான ரோபோக்களுக்குரியவைதான். சென்சாரில் தான் கொஞ்சம் குழப்படிகள். ரோபோவைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவனித்தாக வேண்டும் கடலுக்குள் எந்த இடத்தில் ரோபோ இருக்கிறது என்பதையும் கண்டறிய வேண்டும். பல விவாதங்களுக்குப் பிறகு இரண்டு நீர் புகா குட்டி வீடியோ கேமராக்களும், இன்னொரு சென்சாரும் எங்களின் வேலையை எளிதாக்கின.  இந்த ஒட்டுமொத்த அமைப்பும் கடல் நீருக்குள் தாக்கு பிடிக்கக் கூடியதாக இருக்கும்படி ரப்பரால் மூடி அதன் மீது 'இபாக்ஸி' திரவத்தை பூசிவிட்டோம். 

இத்தனையைச் செய்தும் நீந்துவதற்கான அமைப்பு சரியாக வேலை செய்யவில்லை. கடினமாக முயன்றும் துல்லியமான நீச்சல் சாத்தியமாகவில்லை. எங்களால்தான் முடியவில்லையே தவிர மீனைப் போல நீந்தக் கூடிய ரோபோக்களை வெளிநாடுகளில் வெற்றிகரமாக வடிவமைத்திருக்கிறார்கள். துடுப்புகளை சரியாக வடிவமைப்பதன் மூலம் இதைச் செய்துவிட முடியும். துடுப்புகளை சிறு மோட்டார்களுடன் பொருத்திவிடுவார்கள். மோட்டார்களின் இயக்கம் ப்ராசஸர்களால் கட்டுப்படுத்தப்படும். 

எங்களின் ரோபோவால் நீந்த முடியாததால் நீளமான கயிற்றில் கட்டி நீருக்குள் அனுப்புவது என முடிவு செய்தோம். ரோபோவுடனான தகவல் தொடர்பும் நாங்கள் நினைத்த அளவிற்கு எளிமையானதாக இல்லை. கடலுக்குள் இருக்கும் இரைச்சல்கள் தகவல் தொடர்பிற்கு பெரும் இடைஞ்சலாக இருந்தன. அனுப்பும் சிக்னல் ரோபோவை அடைவதற்குள் வலிமை குறைந்ததாக மாறி எங்களை பாடாய்ப் படுத்தியது. இத்தகைய கசமுசாக்களினால் நாங்கள் தயாரித்த ரோபோவால் அதிகபட்சம் ஐம்பது மீட்டர்களுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. ஆனால் தகவல் தொடர்பிற்காக நாங்கள் பயன்படுத்தியிருந்த 'பீஸோ எலெக்ட்ரிக்' கான்செப்ட்தான் ஹைலைட்.

அழுத்தம் கொடுத்தால் அதற்குரிய அளவுக்கு மின்னதிர்வையும் மாறாக மின்னதிர்வைக் கொடுத்தால் அதற்குரிய அளவிற்கு அழுத்தத்தையும் உருவாக்குவதுதான் பீஸோ எலெக்ட்ரிக் முறை. ரோபோவிற்கு அனுப்பப்பட வேண்டிய தகவல் 'ஒலி' அலைகளாக மாற்றப்பட்டு கடலுக்குள் அனுப்பப்படும். இந்த ஒலி அலைகள் ரோபோவில் இருக்கும் 'பீஸோ எலெக்ட்ரிக்' சென்சார்களால் கண்டறியப்பட்டு மின்னதிர்வாக மாற்றப்படும். இந்த மின்னதிர்வை ரோபோ தகவலாக மாற்றி புரிந்து கொள்ளும். எங்கள் ப்ராஜக்டில் பாதிக்கடலை மட்டுமே தாண்டியிருந்தோம். என்றாலும் 'பீஸோ எலெக்ட்ரிக்' கான்செப்டை கடல் வளத்தை ஆராயும் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து பெற்றுக் கொண்டது. சந்தோஷமாக விற்றுவிட்டு தேர்வுகளுக்கு தயாரானோம். 

ப்ராஜக்ட் முடிந்தாலும் கூட கடல் ரோபோக்கள் தங்களுக்குள் ஆயிரக்கணக்கான புதிர்களை ஒளித்து வைத்திருப்பதாகவே தோன்றும். அவை குறித்தான நிறைய தகவல்களை தேடிப் படிக்க ஆரம்பித்தோம். நிலப்பரப்பை கண்காணிக்க செயற்கை கோள்களை பயன்படுத்துவது போல நீருக்குள் ரோபோவை பயன்படுத்துகிறார்கள். மீன்குஞ்சுகளை நீருக்குள் விடுவது போல இந்த ரோபோக்களை சுற்ற விட்டுவிடுவார்கள். கடலின் தூய்மையை கண்காணிப்பது, கடல்வாழ் உயிரினங்களை கணக்கெடுப்பது, கடலுக்குள் இருக்கும் எரிமலைகளை ஆராய்வது என ரவுண்ட் கட்டி அடிக்கும் இந்த ரோபோக்களுக்குத் தேவையான ஆற்றல் அவ்வப்போது பிரச்சினையாக தலையெடுப்பது உண்டு. ஆற்றல் தீர்ந்து போனால் அப்படியே செயலிழந்து கடலுக்குள்ளேயே ஜலசமாதி ஆகிவிடும். இப்பொழுது அதற்கும் ஒரு வழியை கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ரோபோக்கள் ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் வேதியியல் வினைபுரியச் செய்கின்றன. இந்த வேதியியல் வினையிலிருந்து தமக்கு தேவையான ஆற்றலை எடுத்துக் கொள்கின்றன. நீருக்குள் எப்படி ஆக்ஸிஜன் கிடைக்கும் என்றெல்லாம் மண்டை காய வேண்டியதில்லை. இரண்டு பங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன் சேர்ந்ததுதானே நீர் (H20).

அமெரிக்காவில் கடலுக்குள் வேவு பார்க்க குட்டி ரோபோவை தயாரித்திருக்கிறார்கள். மீனைப் போலவே சிறியதாக இருக்கின்றன இவை. காலநேரம் பார்க்காமல் நீந்திக் கொண்டிருக்கும் இந்த ரோபோக்கள் கடலில் வரும் கப்பல்களின் அடிப்பக்கத்தில் ஒட்டிக் கொள்ளும். இந்தக் கப்பல்களின் அசைவுகள் குறித்த தகவல்களை கடலுக்கு மேலே அமர்ந்திருக்கும் தனது இராணுவ எஜமானர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு அந்த கப்பல் மீது சந்தேகம் இல்லையெனில் "அதை விட்டுவிடு...நம்ம கப்பல்தான்" என்று ரோபோவிற்கு தகவலை அனுப்புவார்கள்.  அந்தக் கப்பலை விட்டுவிட்டு வேறு கப்பலை நோக்கி ரோபோ நகரும்.  சந்தேமான கப்பல் என்றால் கிளம்பி வந்து கோழி அமுக்குவது போல அமுக்கிவிடுகிறார்கள் கடற்படையினர். இப்பொழுது அமெரிக்கக் கடலுக்குள் ஆயிரக்கணக்கான "மீன் குஞ்சுகள்" நீந்துகின்றன.

[கல்கி வார இதழில் எழுதிய ரோபோஜாலம் தொடரின் ஒரு அத்தியாயம். பதினைந்து வாரத் தொடர் இந்த வாரத்துடன் முடிவடைந்தது]

Oct 25, 2012

காந்தியடிகள், சரோஜாதேவி புத்தகங்கள், Chaos Theory



ஒவ்வொரு முறையும் ஊரிலிருந்து பெங்களூர் வரும் போது நள்ளிரவு தாண்டிய நேரத்தில் பஸ் மோட்டலில் நிற்கும். நல்ல தூக்கத்தில் இருக்கும் அந்த நேரத்தில் மோட்டல் வாட்ச்மேன் ஒரு குண்டாந்தடியால் பஸ் டயர்களைத் தட்டுவார். “அஞ்சு நிமிஷம் பஸ் நிக்கும். டீ காபி சாப்பிடுறவங்க சாப்பிட்டுக்கலாம்” என்ற அவரது அலப்பறையில் கும்பகர்ணன் கூட ஒரு தடவை கண்ணை விழித்துத்தான் தீர வேண்டும். அப்படி விழித்த ஒரு நாளில் அங்கு இருந்த பழைய புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். பெரும்பாலும் கவர்ச்சிகரமான நடிகைகளின் படங்களுடைய புத்தகங்கள்தான் இருக்கும். தூக்கத்தை போக்கிக் கொள்வதற்கு டீ குடிப்பதைவிடவும் சிறந்த உபாயம் அந்தப்புத்தகங்களின் அட்டைகளை வேடிக்கை பார்ப்பது என்பது அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. தசாவதாரம் கமலின் அட்டைப்படம் போட்டிருந்த ஒரு பழைய வார இதழை கையில் எடுத்துக் கொண்டேன். ஐந்து ரூபாய் விலை சொன்னான்.

தசாவதாரம் படத்தில்தானே பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு சுனாமியை உருவாக்கக் கூடும் என்று காட்டியிருப்பார்கள்? Chaos Theory. காதில் பூ சுற்றுகிறார்களோ என்றுதான் தோன்றும். ஆனால் இந்த விதியை கமலஹாசனோ சுஜாதாவோ உருவாக்கவில்லை என்பதால் உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

ஏதாவதொரு செயலின் காரணமாகத்தான் இன்னொரு விளைவு (Cause and effect) உருவாகிறது என்று காலங்காலமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். செயலுக்கும்Xவிளைவுக்குமான நேர்கோட்டு (Linear) தொடர்பு குறித்தான நம்பிக்கைகள் இவை. 

உதாரணமாக கிள்ளி வைத்ததால்தான் குழந்தை அழுகிறது; ஒருவனுக்கு தண்டனை அளித்தால் சமூகத்தில் குற்றச் செயல்கள் குறைந்துவிடும்- இப்படியான மூட நம்பிக்கைகள்.  இவற்றை மூட நம்பிக்கைகள் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. உண்மையில் குழந்தை அழுவதற்கு கிள்ளி வைத்த வலியைத்தாண்டி பசி, கிள்ளி வைத்தவரின் மீதான வெறுப்பு, இயலாமை என ஏகப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடும். அதேபோல எத்தனை மரண தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் குற்றச்செயல்கள் என சமூகம் வரையறுத்து வைத்திருப்பவை குறையப்போவதில்லை- கொலை செய்பவனுக்கும், கொள்ளையடிப்பவனுக்கும் தாம் சிக்கிக் கொண்டால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் குற்றத்தைச் செய்கிறார்கள். அரசுகளும், அமைப்புகளும் நேர்கோட்டு விதிகளை முழுமையாக நம்பிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான தியரிகளும், முடிவுகளும் கூட இந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இருந்தன.

ஆனானப்பட்ட சிக்மண்ட் ப்ராய்டின் உளவியல் விதிகளும் கூட நேர்கோட்டிலானவை (Linear)தான். 'முந்தைய பேரதிர்ச்சிகளும்/துன்பநிகழ்வுகளுமே மனித மூளையின் தவறான செயல்பாட்டுக்கு அடிப்படை’ என்று பழைய அதிர்ச்சிகளுக்கும், இன்றைய விளைவுகளுக்குமான நேர்கோட்டுத் தொடர்பைத்தான் அறிவித்திருந்தார். 

இந்த நேர்கோட்டு விதிகளுக்கு சங்கு ஊதுவதற்கான முதல் முயற்சியைச் செய்தவர் எட்வர்ட் லாரண்ட்ஸ். இவர்தான் ‘வண்ணத்துப்பூச்சி விளைவை’ அறிவித்தார். வெறும் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு புயலையோ அல்லது சுனாமியையோ உருவாக்கிவிடுவதில்லை ஆனால் குட்டிக் குட்டி செயல்கள் சேர்ந்து ஒரு பெரிய விளைவை உருவாக்குகின்றன என்பதுதான் இந்த விதியின் அடிப்படை. இந்தக் குட்டி குட்டி விளைவுகள் நேர்பாங்கற்ற (non-linear) தொடர்புடையவை.

இயற்கையை பற்றி நம்மால் எதையுமே ஏன் சரியாக கணிக்க முடிவதில்லை என்பதை Chaos Theory விளக்கியது. மழை வருமா என்பதை கணிக்க வானியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கம்ப்யூட்டரில் துல்லியமான உள்ளீடுகளைக்(Inputs)கொடுப்பார்கள். உதாரணமாக தற்போதைய காற்றின் வேகம் 35.003421 கிமீ/மணி என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து உள்ளீடாகக் கொடுக்கும் சமயத்தில் காற்றின் வேகம் சற்று மாறியிருக்கக் கூடும். இவர்களின் கணக்குப்படி 'இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’. ஆனால் மாறிய காற்றின் வேகத்தால் மழை போக்கு காட்டியிருக்கும். 

எனவே இயற்கையின் கணிக்க முடியாத தன்மையைக் கொஞ்சமாவது வெற்றி கொள்ள வேண்டுமானால் கொடுக்கப்படும் உள்ளீடுகள் துல்லியத்தன்மையற்றதாக(Approximations) இருக்க வேண்டும் என்பதை இந்த விதி அறிவித்தது. ஆனாலும் இன்னமும் நம் ரமணன் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கிறார் என்று தெரியவில்லை.

மோட்டலில் இருந்த பழைய புத்தகக் கடையில் நிரம்பிக்கிடந்த மும்தாஜ், சல்லாபம், கும்தலக்கா என்ற புத்தகங்களுக்களுக்கிடையில் பழங்காலத்து புத்தகம் ஒன்று என்னைப்போலவே தூங்கி வழிந்தது. எடுத்துப்பார்த்தால் 1944 ஆம் வருடத்தில் மயிலாப்பூர் கலைமகள் காரியாலையம் வெளியிட்டிருந்த “தமிழ்நாட்டில் காந்தி” என்ற புத்தகம். எழுதியவர் தி.சே.செள.ராஜன். கடைக்காரர்  இருபது ரூபாய் விலை சொன்னார். ஐம்பது ரூபாயாகக் கொடுத்தேன்.

டாக்டர். ராஜன் ஒரு காங்கிரஸ்காரர். காந்தி காலத்துக் காங்கிரஸ்காரர். 1907 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று டாக்டர் பட்டம் வாங்கி வந்தவர். ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் அமைச்சரவாகவும் இருந்திருக்கிறார். இவரைப் பற்றியக் குறிப்புகள் இணையத்தில் கொஞ்சம் கிடைக்கின்றன. இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்று குறிப்புகள் சொல்லுகின்றன. வ.வே.சு.ஐயர் பற்றிய ஒரு புத்தகம், நினைவு அலைகள் என்று இன்னொரு புத்தகம்.

நான் வாங்கிய புத்தகம் யாருக்குமே தெரியாத அவரது மூன்றாவது புத்தகம். 1934 ஆம் ஆண்டு காந்தி தமிழ்நாட்டில் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்தபோது அவருடைய அனைத்து பயண ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்ட ராஜன் அவர்கள் எழுதிய நூல் இது. காந்தீய சிந்தனையாளர்களுக்கு காந்தியின் இன்னுமொரு பரிமாணத்தை அறிந்து கொள்ளவும், மற்றவர்களுக்கு அந்தக் காலத்திய தமிழகத்தின் ஊர்களைப் பற்றி புரிந்துகொள்ளவும் உதவக்கூடும்.

நேற்று புத்தகத்தை வாசித்த முடித்தேன். ஊரிலிருந்து திரும்பும்போது அரசு பஸ்ஸில் ஏறியதிலிருந்து, தூக்கக் கலக்கத்தில் புத்தகக் கடைக்குள் நுழைந்தது வரைக்கும் ஒவ்வொன்றையும் Chaos Theory யுடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சற்று சம்பந்தமேயில்லாத மாதிரிதான் தெரிகிறது. ஆனால் இந்தக் கட்டுரையை முடிக்க வேண்டுமல்லவா?

Oct 23, 2012

அய்யோ விரலு போயிந்தி



ஹைதராபாத்தில் முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்திருந்த சமயம். எங்களை வேலைக்குச் சேர்க்கும் போதே முடிந்தவரைக்கும் நிறுவனத்தை 'ஆட்டோமேஷன்' செய்துவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதாவது தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்பதுதான் நோக்கம். அந்த நிறுவனத்தில் ஆயிரத்து ஐநூறு தொழிலாளர்கள் பணியில் இருந்தார்கள். மனிதர்களை குறைக்க வேண்டுமானால் நிறுவனத்திற்குள் ரோபோக்களை பணிக்கு அமர்த்த வேண்டும். 

இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் முழுமையான ஆட்டோமேஷன் செய்வதற்கு முனைவதில்லை. அதற்கு அடிப்படையான காரணம் இந்தியாவில் குறைந்த ஊதியத்திற்கு நிறைய ஆட்கள் கிடைக்கிறார்கள். இவர்களை வைத்தே வேலையை செய்துவிட முடியும். ரோபோக்களை விலைக்கு வாங்கினால் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். ரோபோக்களில் முதலீடு செய்வதைவிடவும் வேறு வகைகளில் முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்தவே நிறுவனங்கள் விரும்புகின்றன. 

ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் ரோபோக்களை தொழிற்சாலைகளில் பயன்படுத்துவது சாதாரணம். ரோபோக்களை பயன்படுத்துவதில் நிறைய பலன்கள் இருக்கின்றன. ரோபோக்கள் டீ குடிக்க 'ப்ரேக்' எடுத்துக் கொள்வதில்லை, உண்ட களைப்பு என 'ரெஸ்ட்' எடுப்பதில்லை, வெட்டி அரட்டை, வீண் கிசு கிசு என மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. இவற்றையெல்லாம் விட முக்கியமான அம்சம் இந்த ரோபோக்களின் துல்லியத்தன்மை. உதாரணமாக 1 மி.மீட்டர் அளவில் ஒரு துளையிட வேண்டும் அதுவும் ஆயிரக்கணக்கான துளைகளை இட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். மனிதர்களிடம் இதைச் செய்யச் சொன்னால் ஆயிரம் துளைகள் ஐந்நூறு வகைகளில் இருக்கக் கூடும். ஆனால் ரோபோக்கள் அப்படியில்லை. ஒன்று கூட மிஸ் ஆகாத நெத்தியடிதான்.

எங்கள் நிறுவனத்தின் முதலாளி சரியான கஞ்சூஸ். ஒவ்வொரு வாரமும் எங்களை அழைத்து புதிய ரோபோக்களை வடிவமைப்பது குறித்து பேசுவார். ஆனால் குறைந்த செலவுதான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பார். ரோபோ வடிவமைப்பிற்குத் தேவையான சர்வோ மோட்டரை வாங்குவதற்குக் கூட ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இந்தநிலையில் 'சீப் ரோபோக்களை' எப்படி செய்வது என்று நூடுல்ஸாகிக் கொண்டிருந்தோம்.

முதலாளியின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் 'இண்டஸ்ட்ரியல் ரோபோவை' வடிவமைப்பது குறித்து தகவல்களைச் சேகரிக்கத் துவங்கினோம். மற்றவகை ரோபோக்களைவிடவும் இண்டஸ்ட்ரியல் ரோபோவின் வடிவமைப்பு எளிது. தகரத்தை வெட்டுவதையோ, வெல்டிங் செய்வதையோ அல்லது பொருளை இடம் மாற்றுவதையோ திரும்பத் திரும்பச் செய்வதுதான் பெரும்பான்மையான இண்டஸ்ட்ரியல் ரோபோக்களின் வேலை. இதைச் செய்யக் கூடிய ரோபோவை வடிவமைத்தால் போதும். அதற்கு பிறகு ரோபோவிற்கு மேக்கப் போட வேண்டியதுதான் பாக்கி. மேக்கப் என்பது அந்த ரோபோ மனிதர்களுடன் தொடர்பு கொள்ளத் தேவையான வசதிகளைச் செய்தல், அதன் தகவல் தொடர்பு முறைகள் இன்னபிற இன்னபிற.

இண்டஸ்ட்ரியல் ரோபோக்களை நிறைய ரோபோ கம்பெனிகள் தயாரிக்கின்றன. ஆனால் இந்த கம்பெனிகள் தங்களின் தயாரிப்புகள் பற்றி 'மூச்சு'விடுவதில்லை.  ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ரோபோவை இயக்குவதற்கான மென்பொருளை வேறு எந்த நிறுவனத்தின் ரோபோவிலும் பயன்படுத்த முடியாது. அப்படி 'என்கோடிங்' செய்து வைத்திருப்பார்கள்.  ரோபோவில் சிறு பிரச்சினை என்றாலும் கூட சம்பந்தப்பட்ட கம்பெனி ஆட்களைத்தான் கூப்பிட வேண்டும். நாமாக சரி செய்துவிட முடியாது. இத்தகைய சீக்ரெட் சிக்கல்களால் ரோபோக்களை இந்தக் கம்பெனிகளிடம் வாங்கி பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களின் 'செளகரிய'த்திற்கு ஏற்ப நிறைய மாறுதல்களைச் செய்ய முடிவதில்லை என புலம்புகின்றன.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு ரோபோவை செய்வதற்கான திட்ட வரையறைகளுடன் முதலாளியை சந்திக்கச் சென்றோம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரோலை கொடுத்துவிடுவார்கள். அதை நாங்கள் தயாரிக்கவிருக்கும் ரோபோ துண்டுகளாக வெட்ட வேண்டும். முதல் வெட்டு 20 செ.மீ நீளத்தில் அடுத்த ஒவ்வொரு வெட்டிற்கும் 2 செ.மீ நீளம் குறைய வேண்டும். 4 செ.மீ நீளத்தில் துண்டை வெட்டி முடித்த பிறகு அடுத்த துண்டு மீண்டும் 20 செ.மீ நீளத்தில் தொடங்க  வேண்டும். எங்கள் விளக்கத்தில் இம்ப்ரெஸ் ஆன முதலாளி அனுமதி அளித்ததோடு ஐந்து இலட்சம் பணத்தையும் கொடுத்தார். இரண்டு மாதங்களில் ரோபோவை தயாரித்துவிட்டோம்.

நீளத்தை அளப்பதற்கு ஒரு சென்சார், வெட்டக் கூடிய பிளேடை இயக்கும் ஒரு ஹைட்ராலிக் சிலிண்டர், இந்த ஒட்டுமொத்த ரோபோவை கட்டுப்படுத்தும் ப்ராசஸர். இவ்வளவுதான் அடிப்படை. ப்ராசஸிரில் எழுதிய ப்ரோகிராம் மட்டும் கொஞ்சம் நாள் பிடித்தது என்றாலும் ரோபோவை சிம்பிளாக தயாரித்துவிட்டோம்.

ட்ரையல் ரன் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த நாள் முதலாளிக்கு விளக்கிவிட்டு தொழிற்சாலையில் நிறுவ வேண்டியதுதான் பாக்கி. முந்தின நாள் இரவில் இன்னொரு முறை சோதனை செய்துவிடலாம் என்று ரோபோவை ஓட விட்டோம். முதல் இருபது நிமிடங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதன் பிறகு திடீரென ரோபோவுக்குள் ரோல் சிக்கிக் கொண்டது. எங்களோடு பணி புரிந்த நண்பர் சிக்கிக் கொண்ட ரோலை நீக்க முயற்சித்தார். ஒரு நிமிடம்தான் இருக்கும். அவரது விரலும் சேர்ந்து ரோபோவுக்குள் சிக்கிக் கொண்டது. என்ன செய்வது என்று நாங்கள் சுதாரிப்பதற்குள் ரோபோ வெட்டத் துவங்கிவிட்டது. அவரது சுண்டுவிரல் எங்கள் கண் முன்னாலேயே துண்டிக்கப்பட்டது. "அய்யோ போயிந்தி அய்யோ போயிந்தி” என்று கதறதினார்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ரோபோக்களை தயாரிக்கும் போது சில பாதுகாப்பு அம்சங்களையும் கவனம் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் நிலவும் வெப்பநிலை, அழுத்தம் போன்ற சூழலை தாக்குப்பிடிக்கக் கூடியதாக ரோபோக்கள் இருக்க வேண்டும் அதே சமயம் அருகில் பணி புரியும் மனிதர்களுக்கு தீங்குவிளைவித்து விடாமலும் இருக்க வேண்டும். இந்த அம்சத்தில்தான் நாங்கள் கோட்டைவிட்டிருந்தோம். ஒரு 'எமெர்ஜென்சி ஸ்டாப்' இல்லாத ரோபோவாக எங்கள் ரோபோ பல்லிளித்தது.

இது நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. ரோபோ முயற்சியை கைவிட்டு நாங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட்டோம். தனது சுண்டுவிரலை இழந்த நண்பர் மட்டும் அங்கேயே பணிபுரிகிறார். சில ரோபோக்களை வெற்றிகரமாக தயாரித்தும் விட்டார். இப்பொழுது அந்த நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் துறைக்கும் அவர்தான் தலைவர்.

[கல்கி வார இதழில் வெளியாகும் 'ரோபோஜாலம்' தொடரின் ஒரு அத்தியாயம்]

Oct 5, 2012

ஜாக்கிகள் பலவிதம்

சுபீருக்கு துபாயில் வேலை காத்திருக்கிறது. ஷேக் ஒருவரின் ஒட்டகப் பண்ணையில்தான் வேலை. தங்குமிடம் தந்து, மூன்றுவேளை உணவும்  கொடுத்துவிடுவார்கள் என்று உள்ளூர் புரோக்கர் சுபீரின் அம்மாவிடம் பேசினார். அப்பொழுது சுபீருக்கு மூன்று வயது. ஒரு வேளை சோற்றுக்கு கூட சிரமப்படும்  தனது குடும்பத்துக்காக கடவுள் கண் திறந்துவிட்டார் என்று அவனது அம்மாவுக்கு உற்சாகம் கரை புரண்டது. பெற்ற கடனுக்காக சுபீரின் தாயாருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. சுபீர் தன்னைப்போன்ற ஏராளமான சிறுவர்களுடன் மிரட்சியுடனும் சோற்றுக்கான கனவுகளுடனும் இந்த தேசத்தை கடக்கிறான்.

சில மாதங்களுக்கு பிறகு...



பெட்ரோல் வாசம் வீசும் அரபு தேசத்தின் பாலைவனம். வெயிலில் தகிக்கிறது மணல். ஷேக்குகளின் பாரம்பரியமான விளையாட்டு போட்டியான ஒட்டகப் பந்தயத்தைய காண அரங்கம் தயாராகிறது. திரை உயர்கிறது. ஒட்டகங்கள் ஓடத் துவங்குகின்றன. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஒட்டகங்கள் லயம் மாறாமல் ஒரே மாதிரியாக கால்களை எடுத்து வைக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்தில் ஒட்டகங்களால் ஓட முடியும். கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் வரைக்கும் பந்தயத் தூரம் இருக்கும். ஒட்டகத்தின் ஜாக்கிகள் ஒரு குச்சியை வைத்து ஒட்டகத்தை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டகங்களை பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் யாரும் ஜாக்கிகளை கவனிப்பதில்லை. அந்த ஜாக்கிகளில் ஒருவனாகத்தான் சுபீர் இருக்கிறான். ஜாக்கிகளாக இருப்பவர்களில் நான்கு வயது கூட பூர்த்தியாகாத சிறுவர்கள்தான் அதிகம். இரண்டு அல்லது மூன்று வயதிலேயே பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டவர்கள் அல்லது சொற்ப பணத்திற்காக அரபியர்களிடம் விற்கப்பட்டவர்கள். பிறகு இவர்கள் ஒட்டகம் ஓட்டுவதற்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். ஒட்டகத்தின் மீது அமர்ந்து இருப்பவர்கள் முடிந்த வரையிலும் எடை குறைவானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறுவர்களுக்கு ஒட்டக உரிமையாளர்கள் ஒருவேளை உணவை மட்டும் அளிக்கிறார்கள்.

ஒட்டகம் ஓடத் துவங்கும் போது ஜாக்கிகளின் கவனம் ஒட்டகத்தை செலுத்தச் செய்வதிலேயே இருக்க வேண்டும் என்பது உத்தரவாகவே கடைபிடிக்கப்படும். பந்தயத்தில் தோற்கும் ஒட்டகங்களின் ஜாக்கிகளுக்கு தண்டனை மிகக் கொடூரமாக இருக்கும். நான்கு வயது பிள்ளைகளால் ஒட்டகத்தையும் விரட்டி, அதே சமயம்  கெட்டியாகவும் பிடித்துக்கொள்ளவும் முடியாது என்பதால் ஒட்டகங்களில் இருந்து கீழே விழுவதும், எலும்புகள் முறிவதும், உயிரிழப்பதும்  சாதாரணமான நிகழ்ச்சி. அதிகபட்சமாக ஒரு ‘உச்’ சப்தம் எழும்பும். அவ்வளவுதான். 

குழந்தைகள் மீதான வன்முறையை எதிர்க்கும் சர்வதேச அமைப்புகள் சிறார்களை ஜாக்கிககளாக பயன்படுத்துவதை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பின.சர்வதேச  ஊடகங்களில் இந்தக் கொடுமை விவரிக்கப்பட்டது. பல நாடுகளின் எதிர்ப்புக்கு பிறகு பத்தாண்டுகளுக்கு முன்னதாக துபாய், கத்தார் போன்ற நாடுகளில் சிறுவர்களை பயன்படுத்தும் ஒட்டகப்பந்தயங்கள் தடை செய்யப்பட்டன. ஒட்டக உரிமையாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கணிசமான சிறுவர்கள் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்பட்டார்கள். சுபீர் அதிர்ஷ்டவசமாக தன் தாயை தேடியடையும் போது அவளால் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருமாறியிருந்தான். ஒட்டக ஜாக்கிகள் வெளியேறிய பிறகு தங்களது பந்தயங்களை ரட்சிக்க யாராவது வரமாட்டார்களா என்று பினாத்திக் கொண்டிருந்த ஷேக்குகளின் கைகள் உதறல் எடுக்கத் துவங்கின.


ஹீரோவின் இலாவகத்தோடு ரோபோக்கள் களமிறங்கின. இந்த ஹீரோவின் பெயர் ரோபோ ஜாக்கி. சிறுவர்கள் செய்த அத்தனை வேலையையும் ரோபோக்கள் செய்யப்போகின்றன. ரோபோ ஜாக்கியை கத்தார் அறிவியல் கழகம் முதலில் வடிவமைத்தது ஆனால் வடிவமைப்பில் ஏகப்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டார்கள். செய்தவரைக்கும் போதும் என்று சுவிட்சர்லாந்து நாட்டின் கே-டீம் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களுக்கும் கண்ணாமுழி திருகியது. ரோபோவை உங்களின் மீது வைக்கப் போகிறோம் என்று தூக்கிச் சென்றால் ஒட்டகங்கள் பயத்தில் அலறியடித்து ஓடத் துவங்கின. இறந்த பசுமாட்டின் வயிற்றுக்குள் வைக்கோலை வைத்து கன்றுகுட்டிகளை ஏமாற்றுவதைப் போல இந்த ரோபோக்களுக்கு முகக் கண்ணாடிகள், கலர்கலரான துபாய் சட்டை, நாசியை துளைக்கும் துபாய் செண்ட் என்று மேக்கப் வைபவம் நிகழ்ந்தது. ரோபோக்களை கிட்டத்தட்ட சிறார்களாக மாற்றிவிட்டார்கள். ஒட்டகங்கள் ஒருவாறாக ஏமாந்தன. 

ரோபோக்களை ஷேக்குகள் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தங்களின் சுட்டித்தனத்தால் ஷேக்குகளை ரோபோக்கள் அலேக்காக  மயக்கிவிட்டன. இந்த ரோபோக்களில் ஜி.பி.எஸ் எனப்படும் புவிநிலைகாட்டி (Global Positioning System) பொருத்தப்பட்டிருக்கும். இவை செயற்கை  கோளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் என்பதால் ஒட்டகம் இருக்கும் இடத்தை எஜமானருக்கு தெரிவித்துவிடும். ஒட்டகத்தின் வேகத்தை இன்னும் கொஞ்சம்  கூட்ட வேண்டும் என அவர் நினைத்தால் தன் கையில் இருக்கும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக ரோபோவிற்கு உத்தரவிடுவார். அவர் அழுத்தும் பட்டன்களை  பொறுத்து உத்தரவு ‘சிக்னலாக’ மாற்றப்பட்டு ரோபோவிற்கு அனுப்பி வைக்கப்படும். பெறப்படும் சிக்னலைப் பொறுத்து ஒட்டகத்திற்கு எத்தனை அடி கொடுக்க  வேண்டும்  என்றும் மெதுவாக அடிக்க வேண்டுமா அல்லது பின்னியெடுக்க வேண்டுமா என்பதையெல்லாம் ரோபோவின் ப்ராசஸர் முடிவு செய்யும். இந்த முடிவின் அடிப்படையில் ரோபோவின் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சாட்டை சுழற்றட்டப்படும். ஒட்டகம் வேகமெடுக்கும்.

தூரத்தில் அமர்ந்திருக்கும் எஜமானருக்கு வெற்றி என்பதே குறியாக இருக்கும். கணக்கு வழக்கில்லாமல் ஒட்டகத்தை அடிக்கச் கொடுக்கச் சொல்லி அவர் ரோபோவுக்கு உத்தரவிட்டால் ரோபோவும் கருமமே கண்ணாக அடி நொறுக்கிவிடும். அடி வாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காக ஒட்டகம் ஓட முடியாமல் ஓடி இரத்தக் குழாய்கள் வெடித்து மண்டையை போட்டுவிடும் என்பதால் அதற்கும் ஒரு உபாயத்தை கண்டுபிடித்தார்கள். ஒட்டகத்தின் இதயத்துடிப்பை கண்டுபிடிக்கும் வசதியை ரோபோவில் செய்தார்கள் உண்டு. இந்தக் அளவீட்டை எஜமானருக்கு ரோபோ அனுப்பி வைக்கும். எஜமானரின் கம்ப்யூட்டர் எத்தனை இதயத்துடிப்புக்கு என்ன வேகத்தில் ஓடலாம் என்றும், இப்பொழுது ஓடும் வேகத்தை குறைக்க வேண்டுமா அல்லது கூட்ட முடியுமா என்று கணக்கிட்டுவிடும். இதன்படி ரோபோவின் சாட்டை சுழற்றலை  ரிமோட் மூலமாக கட்டுப்படுத்தலாம். 

என்னதான் அறிவியல் வாய்ப்பளித்தாலும் மனிதனின் புத்தி, குறுக்கு புத்திதானே. அடி கொடுப்பதெல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவு கட்டிய ஷேக்குகள்  ரோபோவின் மூலமாக ஒட்டகங்களுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் உத்தியை கண்டுபிடித்திருக்கிறார்கள். ரிமோட்டை அழுத்தும் போதெல்லாம் ஒட்டகத்திற்கு ரோபோ  ஷாக் கொடுக்கும். ஒட்டகம் பதறியடித்து ஓடத் துவங்கும். இது மிகக் கொடூரமான சித்ரவதை என்று மிருகவதை எதிர்ப்பாளர்கள் குறித்து குரல் எழுப்பத் துவங்கியிருக்கிறார்கள்.

[கல்கி வார இதழில் வெளியாகும் "ரோபோஜாலம்" தொடரின் ஒரு அத்தியாயம்]


Oct 4, 2012

நினைக்கிறதெல்லாமா மச்சி நடக்குது



பிள்ளையார் பிடிக்க போய் குரங்காவதில் ஒரு த்ரில் இருக்கத்தானே செய்கிறது? என் மனைவி 'கேசரி' செய்தால் அல்வாவாகிவிடுகிறது. அம்மா தோசை சுட விரும்பும்போதெல்லாம் 'ஊத்தாப்பம்' ஆகிவிடுகிறது - Unintended Consequences.

ப்ளக்ஸ் பேனர் என்ற அறிவியல் நுட்பத்தின் விளைவினால் சுவரில் ஓவியம் வரையும் தொழில் காணாமல் போனது. ப்ளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் விளைவாக சட்டி பானைத் தொழில் முடங்கிப்போனது. அடுக்கிக் கொண்டே போகலாம். "எதிர்பாராத விளைவுகள்" விதி பொருளாதாரம், அறிவியலில் ஆரம்பித்து நம் அன்றாட வாழ்வு வரைக்கும் சகலத்திலும் இடம் பெறுகிறது. 

கோபர்நிகஸ் வெளியுலகத்திற்கு சொல்லும் வரைக்கும் பூமிதான் இந்த பிரபஞ்சத்தின் மையப்புள்ளி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவர் வெளியிட்ட தியரி 'பூமிதான் மையம்' என்ற கருத்தை அடித்து நொறுக்கியது. நவீன வானவியல் பிறப்பெடுத்தது. தனது தியரி வானவியலை புரட்டிப்போடும் என்றெல்லாம் கோபர்நிகஸ் நினைக்கவில்லை. ஆனால் புரட்டிப்போட்டிருக்கிறது. இன்றைக்கு வான்வெளிக்காக போர் நிகழலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். கோபர்நிகஸ் மட்டுமில்லை நியூட்டன், ஐன்ஸ்டீன், டார்வின் என்ற பெரும்பாலான அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளையும் 'எதிர்பாராத விளைவுகள்' தத்துவத்தோடு பொருத்தி கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

சமூகவியலின் எதிர்பாராத விளைவுகளும், பொருளியலின் எதிர்பாரா விளைவுகளும் முக்கியமானவை. அறிவியலின் பொருளாதார விளைவுகள் முக்கியமானவை மட்டுமில்லை- இண்ட்ரெஸ்டிங்கானவையும் கூட.

ஆஸ்திரேலியாவில் வேட்டையாடுவதற்கு தேவைப்படும் என்பதற்காக 1700களின் இறுதிக்கட்டத்தில் சில முயல்களை இறக்குமதி செய்தார்கள். அவை குட்டிப்போட்டு அந்தக்குட்டிகள் வட்டியோடு குட்டிபோட்டு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கண்களில் வாலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றன. விவசாயத்தை அழிப்பதை வேடிக்கை பார்க்க முடியாமல் குடும்பக்கட்டுப்பாட்டில் ஆரம்பித்து அடித்துக் கொல்வது வரைக்கும் அத்தனையும் செய்து பார்க்கிறது அரசாங்கம். ம்ஹூம்.

எதிர்பாராத விளைவுகள் குறித்து (Unintended Consequences) மேலை நாடுகளில் ஆராய்ச்சி செய்கிறார்கள், புத்தகங்கள் எழுதுகிறார்கள். அதையும் சுவாரசியமாகச் செய்கிறார்கள். நாம்தான் கண்டுகொள்வதில்லை. அரசியல் பிரச்சினைகளுக்கும், கள்ளத்தொடர்புகளுக்கும், திருட்டு நிகழ்வுகளுக்கும் தமிழ் ஊடகங்கள் தரும் இடத்தில் ஒரு சதவீதம் கொடுத்தால் கூட தமிழ் சமூகத்திற்கு அறிமுகமே இல்லாத இத்தகையை தளங்களை தெரிந்துகொள்ள முடியும். 

அணுக்கரு பிளவை(Nuclear)கண்டுபிடித்தபோது ஹிரோஷிமா நாகசாகியைப்பற்றி நினைத்திருக்க மாட்டார்கள். புகுஷிமா அணு உலையைக் கட்டியபோது சுனாமியை யோசித்திருக்க மாட்டார்கள்.

கோயமுத்தூரில் அமரநாதன் என்ற நண்பர் இருக்கிறார். நண்பர் என்றால் சமவயது இல்லை. அனேகமாக என் அப்பாவின் வயதுக்காரர். ப்ரொஜெக்டர், டிவிடி என்ற வசதிகள் இல்லாத எண்பதுகளில் கோவை நகரில் தொடர்ந்து அயல்நாட்டுப்படங்களை திரையிடலை செய்தவர். அவர் மூலமாகத்தான் எதிர்பாராத விளைவுகள் கான்செப்ட் எனக்குத் தெரியும். இத்தனை நாட்களாக இதைப்பற்றி நான் கண்டுகொண்டதில்லை.

சில நாட்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒருவரிடம் முப்பதாயிரம் கொடுத்திருந்தேன். அவர் ஒரு புரோக்கர். புரோக்கர் என்றால் கிரானைட் புரோக்கர்தான். வேறு எதுவுமில்லை. நான் கொடுத்தது அட்வான்ஸ் தொகை. கிரானைட் வாங்கிக் கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்றார். பத்து நாட்கள் இருபது நாட்களாகி இப்பொழுது நாற்பது நாட்களாகிவிட்டது. கல்லும் வந்தபாடில்லை, பணத்தையும் வாங்கியபாடில்லை. பல நேரம் போனை எடுப்பதேயில்லை. அப்படியே எடுத்தாலும் இன்றொரு பேச்சு நாளை ஒரு பேச்சு என்று பேசுவதில்லை. "நாளைக்கு கொடுத்துடுறேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது "எதிர்பாராத விளைவுகள்" கான்செப்டில் வருமா இரண்டு நாட்களாகத் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். 

Sep 21, 2012

வென்ற கதை




கால்பந்து விளையாட்டு. கீழே கிடக்கும் பந்தை பார்க்க வேண்டும், எதிர் அணியினரிடம் இருந்து இலாவகமாக தட்டிச் செல்ல வேண்டும், பந்தை துரத்திச் சென்று கோல் அடிக்க வேண்டும். இவை அத்தனையும் கால்பந்து வீரருக்கு இயலக்கூடிய காரியம்தான். ஆனால் இவற்றை செய்ய வேண்டியது கால்பந்து வீரர் இல்லை. ஒரு இயந்திரம். 

தேசிய அளவில் கல்லூரிகளுக்கிடையேயான ரோபோ போட்டிக்கான அறிவிப்பு வந்திருந்தது. ஒவ்வொரு கல்லூரியும் கால்பந்து விளையாடக் கூடிய மூன்று அல்லது நான்கு ரோபோக்களை வடிவமைக்க வேண்டும். அந்த ரோபோக்கள் தங்களை வடிவமைத்த கல்லூரிக்காக கால்பந்து விளையாட வேண்டும். இதுதான் போட்டியின் விதி. இந்தப் போட்டியில் எங்கள் கல்லூரியும் கலந்து கொள்ள வேண்டும் என பேராசிரியர் விரும்பினார். கால்பந்து விளையாடக்கூடிய ரோபோவை வடிவமைக்க வேண்டும் என்ற அவரது உத்தரவை கேட்டவுடன் உச்சந்தலை கிறுகிறுத்தது.

இரண்டு கால்களில் நிற்கும் மனித உருவிலான ரோபோவை வடிவமைப்பதுதான் முதல் முக்கியமான வேலை. இரவு பகல் பாராது உழைத்ததில் ரோபோவை வடிவமைத்துவிட்டோம். ஆனால் ரோபோ இயங்குவதற்கு தேவையான பேட்டரியை  இணைக்க மறந்திருந்தோம். அடித்துப்பிடித்து கடைசி நேரத்தில் பேட்டரியை ரோபோவின் முதுகில் கட்டினால் பேட்டரியோடு சேர்ந்து ரோபோவும் குப்புற விழுந்தது. எடுத்து  நிறுத்தினால் மல்லாக்க விழுந்தது. புவியீர்ப்பு விசைக்கு எதிராக ரோபோவை நிற்க வைக்கவே பெரும்பாடு பட வேண்டியதாகிவிட்டது. இதன்பிறகுதான் அடிப்படை புரிதலே இல்லாமல் வானம் ஏறி வைகுண்டம் பிடிக்க முயற்சிக்கிறோம் என்பதை உணர்ந்தோம். போட்டிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ரோபோவின் உலகத்தை வேறொரு கோணத்தில் புரிந்து கொள்ளத் துவங்கினோம்.

மிக எளிமையாகச் சொன்னால் ரோபோ மூன்று அடிப்படையான பகுதிகளைக் கொண்டிருக்கும்:

1) உணரிகள்(Sensors)- ரோபோவைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து தெரியப்படுத்துவது இதன் பணி. மனிதனில் கண், காது ஆகிய உறுப்புகள் செய்யும் வேலையை ரோபோவில் உணரிகள் செய்கின்றன.

2) செயலாக்கி(Processor)- உணரி தரும் தகவல்களை கணித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்து உத்தரவிடும் அமைப்பு. இது நமது மூளையைப் போன்றது.

3) இயந்திரப்பகுதி(Mechanical device) - செயலாக்கியால் இடப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப பணியைச் செய்து முடிக்கக்கூடிய வேலையாள். மூளை சொல்வதை செயல்படுத்தும் மனிதனின் கை, கால்கள் போன்றவை இவை.

இந்த மூன்று பகுதிகளையும் மனிதனோடு ஒப்பிட்டால் ரோபோவின் அடிப்படை இன்னும் தெளிவாக புரியும். 

ஒருவனை நாய் துரத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவனது கண்கள் நாய் துரத்துவதை பார்க்கின்றன, காதுகள் நாய் குரைப்பதை கேட்கின்றன. இங்கு கண்களும், காதுகளும் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிகின்ற உணரிகள். உணரிகள் அளித்த தகவலுக்கு ஏற்ப மூளை கணக்குப்போட ஆரம்பிக்கிறது. கீழே கிடக்கும் கல்லை எடுத்து நாயைத் அடிக்கச் சொல்லி உத்தரவிடலாம் அல்லது தப்பிப்பதுதான் உசிதம் என்றால் ஓட்டத்தை வேகப்படுத்து எனவும் உத்தரவிடலாம். இங்கு மூளை செயலாக்கியாக இருக்கிறது. கல்லை எடுத்து வீசு என்ற கட்டளை வந்தால் கைகள் கற்களைப் பொறுக்கி நாயை நோக்கி எறிகின்றன அல்லது ஓட்டம் எடு என்ற கட்டளை வந்தால் கால்கள் ஓடத் துவங்குகின்றன இங்கு கைகளும், கால்களும் இயந்திரப்பகுதியாகச் செயல்படுகின்றன.

இதே ’கான்செப்டை’ வைத்து இயந்திரம் ஒன்றை வடிவமைத்தால் அதுதான் ‘ரோபோ’. 

நீங்கள் பாம்பு பிடிக்கும் ரோபோ ஒன்றை வடிவமைக்க விரும்புகிறீர்கள். பாம்பு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய உணரி ஒன்று தேவைப்படும். அதற்காக உணரியாகச் செயல்படத் தோதான மைக்ரோ கேமரா ஒன்றை தேர்ந்தெடுத்து ரோபோவில் பொருத்திக் கொள்ள வேண்டும். பாம்பு இருப்பின் அதனைப் பிடிப்பதற்கு இயந்திரப்பகுதியும் அவசியம். அதற்காக கை போன்ற அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். செயலாக்கியாக மைக்ரோ ப்ராஸசர் போன்ற சிறு கணிணிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். கேமரா தான் எடுக்கின்ற படங்களை செயலாக்கிக்கு அனுப்பி வைக்கும். தான் பெறுகின்ற படங்களை ஆய்வு செய்து, அருகில் பாம்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் வகையில் செயலாக்கியில் ப்ரொகிராம் செய்யப்பட்டிருக்கும். பாம்பு கண்டறியப்பட்டவுடன், கவ்விப்பிடிக்குமாறு உத்தரவு ஒன்று செயலாக்கியால் பிறப்பிக்கப்படும். இப்பொழுது கை போன்ற அமைப்பு பாம்பை பிடித்துவிடும்.

இதுதான் ரோபோ செயல்பாட்டின் அடிப்படை. சொல்வதற்கு எளிதாகத் தோன்றினாலும், கடலில் விழுந்துவிட்ட ஒரு ரூபாய் காசை அடையாளம் காட்டுவது போலத்தான். மனிதனின் உருவத்தில்தான் ரோபோ இருக்க வேண்டும் என்பதில்லை-  மினியேச்சர் பேருந்தை போலவோ நீந்தக் கூடிய மீன் போன்றோ அல்லது வேறு பலவித வடிவங்களிலோ தேவைகளுக்கு ஏற்ப ரோபோவை வடிவமைக்கிறார்கள்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரோபோவை வைத்து ஒரு பரிசோதனை நிகழ்ந்தது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக் துறையைச் சார்ந்த வல்லுனர்களும், சில மருத்துவர்களும்  சிமி பள்ளத்தாக்கிற்கு இரண்டு வேன்களில் சென்றார்கள். அவர்களுக்கு பின்னாலேயே இன்னொரு வேனில் ’ரோபோ டாக்டர்கள்’ சென்றன. ஆளில்லாத அந்த இடத்தில் மனிதர்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட பொம்மைகளுக்கு ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம். அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்களை வெகுதூரத்தில் அமர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பார்கள். மருத்துவர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையில் வயர்லெஸ் தொடர்பு உருவாக்கப்பட்டன. போர்க்களங்களுக்கு ரோபோக்களை அனுப்பி வைத்தால் அங்கு அடிபட்டுக் கிடக்கும் போர்வீரர்களுக்கு ரோபோக்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்பதை பரிசோதிக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ரோபோட்டிக் வல்லுனர்கள் மட்டுமில்லாது ராணுவ அதிகாரிகளும் பரிசோதனையின் முடிவுகளுக்காக படபடப்புடன் காத்திருந்தார்கள். பல மணி நேர சோதனைக்கு பிறகாக சோதனையை நிகழ்த்திய மருத்துவர்கள் ”வெற்றி” என்பதை உணர்த்தும் வகையில் கட்டை விரலை உயர்த்தினார்கள். ரோபோக்கள் ஜெயித்திருந்தன. 

[கல்கி வார இதழில் எழுதிக்கொண்டிருக்கும் 'ரோபோஜாலம்' தொடரின் இரண்டாவது அத்தியாயம்]

Sep 8, 2012

ரோபோஜாலம்




மார்ச் 11, 2011.வெள்ளிக்கிழமை.

மதியம் 2.46 மணி.

உண்ட களைப்போடு உழைத்துக் கொண்டிருந்த ஜப்பானின் கிழக்குப் பகுதியை மூன்று நிமிடங்களுக்கு புரட்டியெடுத்தது அதிபயங்கர நிலநடுக்கம். பூகம்பத்தை அளவிடும் ரிக்டர் அளவீட்டைப் பார்த்தவர்கள் பேய் அறைந்ததைப் போல அதிர்ந்தார்கள். அது அனாயசமாக ஒன்பது புள்ளிகளைத் தொட்டிருந்தது. இயற்கை தன் தாண்டவத்தை வெறும் நிலநடுக்கத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. சுனாமியையும் அனுப்பி வைத்தது. நிலநடுக்கத்தின் வாலைப்பிடித்துக் கொண்டு  வந்த சுனாமி அலைகள் பதினைந்து மீட்டர் உயரத்திற்கு எழும்பி சிக்கியவற்றையெல்லாம் வாரிச் சென்றன. பத்தொன்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜலசமாதியானார்கள். ஜப்பான் தேசமே சில மீட்டர்கள் தூரத்திற்கு கிழக்கு நோக்கி  இடம் பெயர்ந்தது. 

இயற்கை தனது ஆட்டத்தை முடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகாக இன்னுமொரு பகீர் தகவல் இறக்கை கட்டி பறக்கத் துவங்கியது. அது ஜப்பானுக்கு மட்டுமில்லாது ஒட்டுமொத்த உலகத்திற்கும் அடிவயிற்றில் ஒரு உருண்டையை உருட்டியது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த புகுஷிமா என்ற நகரத்திலிருந்த அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு பரவுவதாக அந்தச்செய்தி கசிந்தது. ஆரம்பத்தில் அணு உலையைச் சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த மக்களை காலி செய்யச் சொன்னார்கள். பிறகு மூன்று கிலோமீட்டர், ஐந்து கிலோ மீட்டர், இருபது கிலோ மீட்டர் என தூரத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தார்கள். பிரச்சினை தீவிரமாவதை ஒவ்வொருவரும் திகிலோடு உணரத் துவங்கினார்கள்.

மக்களை வெளியேற்றும் அதே நேரத்தில் கதிர்வீச்சின் அளவைக் கணக்கிட வேண்டிய கட்டாயமும் அரசாங்கத்தை நெருக்கிக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதர்கள் செல்ல முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருந்தது. மனிதர்களை அனுப்பாமல் கதிர்வீச்சை எப்படிக் கணக்கெடுப்பது என அரசாங்கம் கையை பிசையத் துவங்கிய போது ஆபத்பாந்தவனாக வந்திறங்கின ரோபோக்கள். 

ஐ’ரோபோ என்ற நிறுவனம் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை கொடுத்து அரசாங்கத்திற்கு உதவியது. களமிறங்கிய ரோபோக்கள்  வில்லன்களின் கூட்டத்திற்குள் தயக்கமில்லாமல் நுழையும் கதாநாயகனைப் போல கதிர்வீச்சுக்குள் நுழைந்து விவரங்களை சேகரிக்கத் துவங்கின. கதிர்வீச்சையும் வெப்பத்தையும் தாங்கும் உலோகத்தினால் இந்த ரோபோக்கள் செய்யப்பட்டிருந்தன. ரோபோ நகரும் போது அதன் பாதையில் எதிர்படும் தடைகளை விலக்குவதற்கு ரோபோவின் கைகள் போன்ற அமைப்பும், ரோபோவில் பொருத்தப்பட்டிருந்த கதிர்வீச்சையும் வெப்பத்தையும் அளவிடும் உணரிகளும்(Sensors)காரியத்தை கச்சிதமாகத் தொடர உதவின. திணறிக் கொண்டிருந்த அரசாங்கம் ரோபோக்களின் ஹீரோயிசத்தால் துளி மூச்சு விடத் துவங்கியது.

’எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோவின் அத்தனை சுட்டித்தனங்களையும் செய்யும் உண்மையான ரோபோக்களை விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டார்கள். ஹோண்டா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும் ’அஸிமோ’ ரோபோ ஒரு உதாரணம். மனித உருவத்தில் உலாவரும் காஸ்ட்லி ரோபோ இது. இருபது வருட கடும் உழைப்பில் பிறந்த இந்த ரோபோவுக்கு ஓடுவது, படிகள் ஏறி இறங்குவதெல்லாம் சர்வ சாதாரணம். அஸிமோ நடக்கும் போது இடையில் தடைகள் வந்தால் அசால்ட்டாக விலகிச் சென்றுவிடும். வெவ்வேறு குரல்களை வித்தியாசப்படுத்தி புரிந்து கொள்வதும் தனது எஜமானனின் கட்டளையை ஏற்று நடப்பதும் அஸிமோவுக்கு இயல்பான காரியம்.

நேற்று இருந்த ரோபோக்களை விட இன்று இருக்கும் ரோபோக்கள் திறமைசாலிகள். இன்று இருக்கும் ரோபோக்களை விட கில்லாடி ரோபோக்களை நாளை உருவாக்கிவிடுவார்கள். கில்லாடி மட்டுமில்லை தில்லாலங்கடி ரோபோக்களும் கூட சாத்தியமானதுதான். தில்லாலங்கடி ரோபோக்கள் என்று குறிப்பிடுவது சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய ரோபோக்களை. 

ரோபோவால் சுயமாக முடிவெடுக்க முடியுமா? கொஞ்சம் சிரமம்தான். ஆனால் முடியும். அதற்காக செயற்கை அறிவை(Artificial Intelligence)ரோபோவுக்கு அளிக்க வேண்டும். 

1998 ஆம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் உலக அளவிலான செஸ் ரேங்க் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.  அந்த ஆண்டு எதிர்பார்ப்பு மிகுந்த ஒரு செஸ் போட்டி நடைபெற்றது. ஆனந்தை எதிர்த்து சாட்சாத் கணினியே செஸ் விளையாடியது. கணினியின் பெயர் Rebel.விளையாடியது மட்டுமில்லாமல் கடைசியில் வென்றும் விட்டது. இந்தக் கணினியின் அறிவை ’செயற்கை அறிவு’க்கு உதாரணமாகச் சொல்லலாம். 

கான்செப்ட் ரொம்ப சிம்பிள். செஸ் விளையாட்டில் ஒரு சிப்பாயையோ, ராணியையோ அல்லது குதிரையையோ எத்தனை விதமான வாய்ப்புகளில் எதிராளியால் நகர்த்த முடியும் என்பதையும் ஒவ்வொரு நகர்வுக்கும் எதிராக கணினி எதை நகர்த்த வேண்டும் என்பதையும் உள்ளீடு(Input) செய்து வைத்திருப்பார்கள். இதுதான் அடிப்படை. இதே மாதிரியாக, ஒவ்வொரு சூழலிலும் என்ன மாதிரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதனை ரோபோவுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டால் அது நமது பாஷையில் தில்லாலங்கடி ரோபோவாகிவிடுகிறது. 

சிரமம்தான் என்றாலும் கூட சமீப காலங்களில்  சுயமாக முடிவெடுத்துச் செயலாற்றும் வித விதமான ரோபோக்களை தயாரித்துவிட்டார்கள். அப்படியொரு தில்லாலங்கடி ரோபோவை உருவாக்கும் வாய்ப்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வந்தது. அப்பொழுது ரோபோக்களுக்கான கால்பந்து போட்டியை அறிவித்திருந்தார்கள். ரோபோக்கள் கால்பந்து விளையாட வேண்டும் என்பதுதான் போட்டியின் விதி. கால்பந்து விளையாடும் ரோபோக்களை தயாரித்தே தீருவது என்ற கங்கணத்துடன் பல பகல்களை பசியோடும் இரவுகளை விழிப்போடும் கடந்தோம். ஆனால்...

                                                                  ***

[கல்கி வார இதழில் தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் 'ரோபோஜாலம்' தொடரின் முதல் கட்டுரை இது]