Sep 8, 2012

ரோபோஜாலம்




மார்ச் 11, 2011.வெள்ளிக்கிழமை.

மதியம் 2.46 மணி.

உண்ட களைப்போடு உழைத்துக் கொண்டிருந்த ஜப்பானின் கிழக்குப் பகுதியை மூன்று நிமிடங்களுக்கு புரட்டியெடுத்தது அதிபயங்கர நிலநடுக்கம். பூகம்பத்தை அளவிடும் ரிக்டர் அளவீட்டைப் பார்த்தவர்கள் பேய் அறைந்ததைப் போல அதிர்ந்தார்கள். அது அனாயசமாக ஒன்பது புள்ளிகளைத் தொட்டிருந்தது. இயற்கை தன் தாண்டவத்தை வெறும் நிலநடுக்கத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. சுனாமியையும் அனுப்பி வைத்தது. நிலநடுக்கத்தின் வாலைப்பிடித்துக் கொண்டு  வந்த சுனாமி அலைகள் பதினைந்து மீட்டர் உயரத்திற்கு எழும்பி சிக்கியவற்றையெல்லாம் வாரிச் சென்றன. பத்தொன்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜலசமாதியானார்கள். ஜப்பான் தேசமே சில மீட்டர்கள் தூரத்திற்கு கிழக்கு நோக்கி  இடம் பெயர்ந்தது. 

இயற்கை தனது ஆட்டத்தை முடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகாக இன்னுமொரு பகீர் தகவல் இறக்கை கட்டி பறக்கத் துவங்கியது. அது ஜப்பானுக்கு மட்டுமில்லாது ஒட்டுமொத்த உலகத்திற்கும் அடிவயிற்றில் ஒரு உருண்டையை உருட்டியது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த புகுஷிமா என்ற நகரத்திலிருந்த அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு பரவுவதாக அந்தச்செய்தி கசிந்தது. ஆரம்பத்தில் அணு உலையைச் சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த மக்களை காலி செய்யச் சொன்னார்கள். பிறகு மூன்று கிலோமீட்டர், ஐந்து கிலோ மீட்டர், இருபது கிலோ மீட்டர் என தூரத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தார்கள். பிரச்சினை தீவிரமாவதை ஒவ்வொருவரும் திகிலோடு உணரத் துவங்கினார்கள்.

மக்களை வெளியேற்றும் அதே நேரத்தில் கதிர்வீச்சின் அளவைக் கணக்கிட வேண்டிய கட்டாயமும் அரசாங்கத்தை நெருக்கிக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதர்கள் செல்ல முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருந்தது. மனிதர்களை அனுப்பாமல் கதிர்வீச்சை எப்படிக் கணக்கெடுப்பது என அரசாங்கம் கையை பிசையத் துவங்கிய போது ஆபத்பாந்தவனாக வந்திறங்கின ரோபோக்கள். 

ஐ’ரோபோ என்ற நிறுவனம் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை கொடுத்து அரசாங்கத்திற்கு உதவியது. களமிறங்கிய ரோபோக்கள்  வில்லன்களின் கூட்டத்திற்குள் தயக்கமில்லாமல் நுழையும் கதாநாயகனைப் போல கதிர்வீச்சுக்குள் நுழைந்து விவரங்களை சேகரிக்கத் துவங்கின. கதிர்வீச்சையும் வெப்பத்தையும் தாங்கும் உலோகத்தினால் இந்த ரோபோக்கள் செய்யப்பட்டிருந்தன. ரோபோ நகரும் போது அதன் பாதையில் எதிர்படும் தடைகளை விலக்குவதற்கு ரோபோவின் கைகள் போன்ற அமைப்பும், ரோபோவில் பொருத்தப்பட்டிருந்த கதிர்வீச்சையும் வெப்பத்தையும் அளவிடும் உணரிகளும்(Sensors)காரியத்தை கச்சிதமாகத் தொடர உதவின. திணறிக் கொண்டிருந்த அரசாங்கம் ரோபோக்களின் ஹீரோயிசத்தால் துளி மூச்சு விடத் துவங்கியது.

’எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோவின் அத்தனை சுட்டித்தனங்களையும் செய்யும் உண்மையான ரோபோக்களை விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டார்கள். ஹோண்டா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும் ’அஸிமோ’ ரோபோ ஒரு உதாரணம். மனித உருவத்தில் உலாவரும் காஸ்ட்லி ரோபோ இது. இருபது வருட கடும் உழைப்பில் பிறந்த இந்த ரோபோவுக்கு ஓடுவது, படிகள் ஏறி இறங்குவதெல்லாம் சர்வ சாதாரணம். அஸிமோ நடக்கும் போது இடையில் தடைகள் வந்தால் அசால்ட்டாக விலகிச் சென்றுவிடும். வெவ்வேறு குரல்களை வித்தியாசப்படுத்தி புரிந்து கொள்வதும் தனது எஜமானனின் கட்டளையை ஏற்று நடப்பதும் அஸிமோவுக்கு இயல்பான காரியம்.

நேற்று இருந்த ரோபோக்களை விட இன்று இருக்கும் ரோபோக்கள் திறமைசாலிகள். இன்று இருக்கும் ரோபோக்களை விட கில்லாடி ரோபோக்களை நாளை உருவாக்கிவிடுவார்கள். கில்லாடி மட்டுமில்லை தில்லாலங்கடி ரோபோக்களும் கூட சாத்தியமானதுதான். தில்லாலங்கடி ரோபோக்கள் என்று குறிப்பிடுவது சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய ரோபோக்களை. 

ரோபோவால் சுயமாக முடிவெடுக்க முடியுமா? கொஞ்சம் சிரமம்தான். ஆனால் முடியும். அதற்காக செயற்கை அறிவை(Artificial Intelligence)ரோபோவுக்கு அளிக்க வேண்டும். 

1998 ஆம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் உலக அளவிலான செஸ் ரேங்க் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.  அந்த ஆண்டு எதிர்பார்ப்பு மிகுந்த ஒரு செஸ் போட்டி நடைபெற்றது. ஆனந்தை எதிர்த்து சாட்சாத் கணினியே செஸ் விளையாடியது. கணினியின் பெயர் Rebel.விளையாடியது மட்டுமில்லாமல் கடைசியில் வென்றும் விட்டது. இந்தக் கணினியின் அறிவை ’செயற்கை அறிவு’க்கு உதாரணமாகச் சொல்லலாம். 

கான்செப்ட் ரொம்ப சிம்பிள். செஸ் விளையாட்டில் ஒரு சிப்பாயையோ, ராணியையோ அல்லது குதிரையையோ எத்தனை விதமான வாய்ப்புகளில் எதிராளியால் நகர்த்த முடியும் என்பதையும் ஒவ்வொரு நகர்வுக்கும் எதிராக கணினி எதை நகர்த்த வேண்டும் என்பதையும் உள்ளீடு(Input) செய்து வைத்திருப்பார்கள். இதுதான் அடிப்படை. இதே மாதிரியாக, ஒவ்வொரு சூழலிலும் என்ன மாதிரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதனை ரோபோவுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டால் அது நமது பாஷையில் தில்லாலங்கடி ரோபோவாகிவிடுகிறது. 

சிரமம்தான் என்றாலும் கூட சமீப காலங்களில்  சுயமாக முடிவெடுத்துச் செயலாற்றும் வித விதமான ரோபோக்களை தயாரித்துவிட்டார்கள். அப்படியொரு தில்லாலங்கடி ரோபோவை உருவாக்கும் வாய்ப்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வந்தது. அப்பொழுது ரோபோக்களுக்கான கால்பந்து போட்டியை அறிவித்திருந்தார்கள். ரோபோக்கள் கால்பந்து விளையாட வேண்டும் என்பதுதான் போட்டியின் விதி. கால்பந்து விளையாடும் ரோபோக்களை தயாரித்தே தீருவது என்ற கங்கணத்துடன் பல பகல்களை பசியோடும் இரவுகளை விழிப்போடும் கடந்தோம். ஆனால்...

                                                                  ***

[கல்கி வார இதழில் தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் 'ரோபோஜாலம்' தொடரின் முதல் கட்டுரை இது]

2 எதிர் சப்தங்கள்:

Uma said...

வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் கட்டுரையை ஆரம்பித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்!

Aba said...

அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை ரொம்ப சுவாரஸ்யமா எழுதறீங்க... வாழ்த்துக்கள்.. இந்த சப்ஜெக்ட்ல இன்னும் நிறைய எழுதுங்க..