ஒவ்வொரு முறையும் ஊரிலிருந்து பெங்களூர் வரும் போது நள்ளிரவு தாண்டிய நேரத்தில் பஸ் மோட்டலில் நிற்கும். நல்ல தூக்கத்தில் இருக்கும் அந்த நேரத்தில் மோட்டல் வாட்ச்மேன் ஒரு குண்டாந்தடியால் பஸ் டயர்களைத் தட்டுவார். “அஞ்சு நிமிஷம் பஸ் நிக்கும். டீ காபி சாப்பிடுறவங்க சாப்பிட்டுக்கலாம்” என்ற அவரது அலப்பறையில் கும்பகர்ணன் கூட ஒரு தடவை கண்ணை விழித்துத்தான் தீர வேண்டும். அப்படி விழித்த ஒரு நாளில் அங்கு இருந்த பழைய புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். பெரும்பாலும் கவர்ச்சிகரமான நடிகைகளின் படங்களுடைய புத்தகங்கள்தான் இருக்கும். தூக்கத்தை போக்கிக் கொள்வதற்கு டீ குடிப்பதைவிடவும் சிறந்த உபாயம் அந்தப்புத்தகங்களின் அட்டைகளை வேடிக்கை பார்ப்பது என்பது அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. தசாவதாரம் கமலின் அட்டைப்படம் போட்டிருந்த ஒரு பழைய வார இதழை கையில் எடுத்துக் கொண்டேன். ஐந்து ரூபாய் விலை சொன்னான்.
தசாவதாரம் படத்தில்தானே பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு சுனாமியை உருவாக்கக் கூடும் என்று காட்டியிருப்பார்கள்? Chaos Theory. காதில் பூ சுற்றுகிறார்களோ என்றுதான் தோன்றும். ஆனால் இந்த விதியை கமலஹாசனோ சுஜாதாவோ உருவாக்கவில்லை என்பதால் உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஏதாவதொரு செயலின் காரணமாகத்தான் இன்னொரு விளைவு (Cause and effect) உருவாகிறது என்று காலங்காலமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். செயலுக்கும்Xவிளைவுக்குமான நேர்கோட்டு (Linear) தொடர்பு குறித்தான நம்பிக்கைகள் இவை.
உதாரணமாக கிள்ளி வைத்ததால்தான் குழந்தை அழுகிறது; ஒருவனுக்கு தண்டனை அளித்தால் சமூகத்தில் குற்றச் செயல்கள் குறைந்துவிடும்- இப்படியான மூட நம்பிக்கைகள். இவற்றை மூட நம்பிக்கைகள் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. உண்மையில் குழந்தை அழுவதற்கு கிள்ளி வைத்த வலியைத்தாண்டி பசி, கிள்ளி வைத்தவரின் மீதான வெறுப்பு, இயலாமை என ஏகப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடும். அதேபோல எத்தனை மரண தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் குற்றச்செயல்கள் என சமூகம் வரையறுத்து வைத்திருப்பவை குறையப்போவதில்லை- கொலை செய்பவனுக்கும், கொள்ளையடிப்பவனுக்கும் தாம் சிக்கிக் கொண்டால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் குற்றத்தைச் செய்கிறார்கள். அரசுகளும், அமைப்புகளும் நேர்கோட்டு விதிகளை முழுமையாக நம்பிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான தியரிகளும், முடிவுகளும் கூட இந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இருந்தன.
ஆனானப்பட்ட சிக்மண்ட் ப்ராய்டின் உளவியல் விதிகளும் கூட நேர்கோட்டிலானவை (Linear)தான். 'முந்தைய பேரதிர்ச்சிகளும்/துன்பநிகழ்வுகளுமே மனித மூளையின் தவறான செயல்பாட்டுக்கு அடிப்படை’ என்று பழைய அதிர்ச்சிகளுக்கும், இன்றைய விளைவுகளுக்குமான நேர்கோட்டுத் தொடர்பைத்தான் அறிவித்திருந்தார்.
இந்த நேர்கோட்டு விதிகளுக்கு சங்கு ஊதுவதற்கான முதல் முயற்சியைச் செய்தவர் எட்வர்ட் லாரண்ட்ஸ். இவர்தான் ‘வண்ணத்துப்பூச்சி விளைவை’ அறிவித்தார். வெறும் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு புயலையோ அல்லது சுனாமியையோ உருவாக்கிவிடுவதில்லை ஆனால் குட்டிக் குட்டி செயல்கள் சேர்ந்து ஒரு பெரிய விளைவை உருவாக்குகின்றன என்பதுதான் இந்த விதியின் அடிப்படை. இந்தக் குட்டி குட்டி விளைவுகள் நேர்பாங்கற்ற (non-linear) தொடர்புடையவை.
இயற்கையை பற்றி நம்மால் எதையுமே ஏன் சரியாக கணிக்க முடிவதில்லை என்பதை Chaos Theory விளக்கியது. மழை வருமா என்பதை கணிக்க வானியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கம்ப்யூட்டரில் துல்லியமான உள்ளீடுகளைக்(Inputs)கொடுப்பார்கள். உதாரணமாக தற்போதைய காற்றின் வேகம் 35.003421 கிமீ/மணி என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து உள்ளீடாகக் கொடுக்கும் சமயத்தில் காற்றின் வேகம் சற்று மாறியிருக்கக் கூடும். இவர்களின் கணக்குப்படி 'இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’. ஆனால் மாறிய காற்றின் வேகத்தால் மழை போக்கு காட்டியிருக்கும்.
எனவே இயற்கையின் கணிக்க முடியாத தன்மையைக் கொஞ்சமாவது வெற்றி கொள்ள வேண்டுமானால் கொடுக்கப்படும் உள்ளீடுகள் துல்லியத்தன்மையற்றதாக(Approximations) இருக்க வேண்டும் என்பதை இந்த விதி அறிவித்தது. ஆனாலும் இன்னமும் நம் ரமணன் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கிறார் என்று தெரியவில்லை.
மோட்டலில் இருந்த பழைய புத்தகக் கடையில் நிரம்பிக்கிடந்த மும்தாஜ், சல்லாபம், கும்தலக்கா என்ற புத்தகங்களுக்களுக்கிடையில் பழங்காலத்து புத்தகம் ஒன்று என்னைப்போலவே தூங்கி வழிந்தது. எடுத்துப்பார்த்தால் 1944 ஆம் வருடத்தில் மயிலாப்பூர் கலைமகள் காரியாலையம் வெளியிட்டிருந்த “தமிழ்நாட்டில் காந்தி” என்ற புத்தகம். எழுதியவர் தி.சே.செள.ராஜன். கடைக்காரர் இருபது ரூபாய் விலை சொன்னார். ஐம்பது ரூபாயாகக் கொடுத்தேன்.
டாக்டர். ராஜன் ஒரு காங்கிரஸ்காரர். காந்தி காலத்துக் காங்கிரஸ்காரர். 1907 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று டாக்டர் பட்டம் வாங்கி வந்தவர். ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் அமைச்சரவாகவும் இருந்திருக்கிறார். இவரைப் பற்றியக் குறிப்புகள் இணையத்தில் கொஞ்சம் கிடைக்கின்றன. இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்று குறிப்புகள் சொல்லுகின்றன. வ.வே.சு.ஐயர் பற்றிய ஒரு புத்தகம், நினைவு அலைகள் என்று இன்னொரு புத்தகம்.
நான் வாங்கிய புத்தகம் யாருக்குமே தெரியாத அவரது மூன்றாவது புத்தகம். 1934 ஆம் ஆண்டு காந்தி தமிழ்நாட்டில் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்தபோது அவருடைய அனைத்து பயண ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்ட ராஜன் அவர்கள் எழுதிய நூல் இது. காந்தீய சிந்தனையாளர்களுக்கு காந்தியின் இன்னுமொரு பரிமாணத்தை அறிந்து கொள்ளவும், மற்றவர்களுக்கு அந்தக் காலத்திய தமிழகத்தின் ஊர்களைப் பற்றி புரிந்துகொள்ளவும் உதவக்கூடும்.
நேற்று புத்தகத்தை வாசித்த முடித்தேன். ஊரிலிருந்து திரும்பும்போது அரசு பஸ்ஸில் ஏறியதிலிருந்து, தூக்கக் கலக்கத்தில் புத்தகக் கடைக்குள் நுழைந்தது வரைக்கும் ஒவ்வொன்றையும் Chaos Theory யுடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சற்று சம்பந்தமேயில்லாத மாதிரிதான் தெரிகிறது. ஆனால் இந்தக் கட்டுரையை முடிக்க வேண்டுமல்லவா?
7 எதிர் சப்தங்கள்:
தி.சே.சௌ. ராஜன் எழுதிய நினைவு அலைகள் என்ற நூல் (சந்தியா பதிப்பகம் என்று நினைவு) கடந்த உலகப் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். படித்து நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டது. படித்தவுடன் நூலைப்பற்றி பதிவு எழுத வேண்டும் என்று எழுந்த ஆவல் இப்போது அடங்கி விட்டது. மீண்டும் படித்தால்தான் முடியும். அருமையான சுயசரிதை. ஆனால் முடிவுபெறாமல் சட்டென்று நின்றுவிட்டதுபோலத் தோன்றியது.
உங்கள் எழுத்து வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது மணிகண்டன். தொடர்ந்து இந்தத் தளத்திற்கு வருகை புரிகிறேன். நன்றி
நன்றி ஷாஜஹான், நவநீதகிருஷ்ணன்
மீண்டும் மின் வெட்டு அதிகம் என்பதால் உங்கள் தளம் வரமுடியவில்லை...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_26.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,
தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் அறிய: http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_26.html
You could have explained little more about Chaos Theory. Good read. Thanks for sharing your experience.
தமிழ்நாட்டில் காந்தி 2012 ஆண்டு மறுபதிப்பாக சந்திய பதிப்பகம் வெளியிட்டுள்ளது.http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%9A%E0%AF%87.%E0%AE%9A%E0%AF%8C.+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&si=2
இதே பெயரில் அ.இராமசாமியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
Post a Comment