Oct 4, 2012

நினைக்கிறதெல்லாமா மச்சி நடக்குது



பிள்ளையார் பிடிக்க போய் குரங்காவதில் ஒரு த்ரில் இருக்கத்தானே செய்கிறது? என் மனைவி 'கேசரி' செய்தால் அல்வாவாகிவிடுகிறது. அம்மா தோசை சுட விரும்பும்போதெல்லாம் 'ஊத்தாப்பம்' ஆகிவிடுகிறது - Unintended Consequences.

ப்ளக்ஸ் பேனர் என்ற அறிவியல் நுட்பத்தின் விளைவினால் சுவரில் ஓவியம் வரையும் தொழில் காணாமல் போனது. ப்ளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் விளைவாக சட்டி பானைத் தொழில் முடங்கிப்போனது. அடுக்கிக் கொண்டே போகலாம். "எதிர்பாராத விளைவுகள்" விதி பொருளாதாரம், அறிவியலில் ஆரம்பித்து நம் அன்றாட வாழ்வு வரைக்கும் சகலத்திலும் இடம் பெறுகிறது. 

கோபர்நிகஸ் வெளியுலகத்திற்கு சொல்லும் வரைக்கும் பூமிதான் இந்த பிரபஞ்சத்தின் மையப்புள்ளி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவர் வெளியிட்ட தியரி 'பூமிதான் மையம்' என்ற கருத்தை அடித்து நொறுக்கியது. நவீன வானவியல் பிறப்பெடுத்தது. தனது தியரி வானவியலை புரட்டிப்போடும் என்றெல்லாம் கோபர்நிகஸ் நினைக்கவில்லை. ஆனால் புரட்டிப்போட்டிருக்கிறது. இன்றைக்கு வான்வெளிக்காக போர் நிகழலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். கோபர்நிகஸ் மட்டுமில்லை நியூட்டன், ஐன்ஸ்டீன், டார்வின் என்ற பெரும்பாலான அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளையும் 'எதிர்பாராத விளைவுகள்' தத்துவத்தோடு பொருத்தி கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

சமூகவியலின் எதிர்பாராத விளைவுகளும், பொருளியலின் எதிர்பாரா விளைவுகளும் முக்கியமானவை. அறிவியலின் பொருளாதார விளைவுகள் முக்கியமானவை மட்டுமில்லை- இண்ட்ரெஸ்டிங்கானவையும் கூட.

ஆஸ்திரேலியாவில் வேட்டையாடுவதற்கு தேவைப்படும் என்பதற்காக 1700களின் இறுதிக்கட்டத்தில் சில முயல்களை இறக்குமதி செய்தார்கள். அவை குட்டிப்போட்டு அந்தக்குட்டிகள் வட்டியோடு குட்டிபோட்டு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கண்களில் வாலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றன. விவசாயத்தை அழிப்பதை வேடிக்கை பார்க்க முடியாமல் குடும்பக்கட்டுப்பாட்டில் ஆரம்பித்து அடித்துக் கொல்வது வரைக்கும் அத்தனையும் செய்து பார்க்கிறது அரசாங்கம். ம்ஹூம்.

எதிர்பாராத விளைவுகள் குறித்து (Unintended Consequences) மேலை நாடுகளில் ஆராய்ச்சி செய்கிறார்கள், புத்தகங்கள் எழுதுகிறார்கள். அதையும் சுவாரசியமாகச் செய்கிறார்கள். நாம்தான் கண்டுகொள்வதில்லை. அரசியல் பிரச்சினைகளுக்கும், கள்ளத்தொடர்புகளுக்கும், திருட்டு நிகழ்வுகளுக்கும் தமிழ் ஊடகங்கள் தரும் இடத்தில் ஒரு சதவீதம் கொடுத்தால் கூட தமிழ் சமூகத்திற்கு அறிமுகமே இல்லாத இத்தகையை தளங்களை தெரிந்துகொள்ள முடியும். 

அணுக்கரு பிளவை(Nuclear)கண்டுபிடித்தபோது ஹிரோஷிமா நாகசாகியைப்பற்றி நினைத்திருக்க மாட்டார்கள். புகுஷிமா அணு உலையைக் கட்டியபோது சுனாமியை யோசித்திருக்க மாட்டார்கள்.

கோயமுத்தூரில் அமரநாதன் என்ற நண்பர் இருக்கிறார். நண்பர் என்றால் சமவயது இல்லை. அனேகமாக என் அப்பாவின் வயதுக்காரர். ப்ரொஜெக்டர், டிவிடி என்ற வசதிகள் இல்லாத எண்பதுகளில் கோவை நகரில் தொடர்ந்து அயல்நாட்டுப்படங்களை திரையிடலை செய்தவர். அவர் மூலமாகத்தான் எதிர்பாராத விளைவுகள் கான்செப்ட் எனக்குத் தெரியும். இத்தனை நாட்களாக இதைப்பற்றி நான் கண்டுகொண்டதில்லை.

சில நாட்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒருவரிடம் முப்பதாயிரம் கொடுத்திருந்தேன். அவர் ஒரு புரோக்கர். புரோக்கர் என்றால் கிரானைட் புரோக்கர்தான். வேறு எதுவுமில்லை. நான் கொடுத்தது அட்வான்ஸ் தொகை. கிரானைட் வாங்கிக் கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்றார். பத்து நாட்கள் இருபது நாட்களாகி இப்பொழுது நாற்பது நாட்களாகிவிட்டது. கல்லும் வந்தபாடில்லை, பணத்தையும் வாங்கியபாடில்லை. பல நேரம் போனை எடுப்பதேயில்லை. அப்படியே எடுத்தாலும் இன்றொரு பேச்சு நாளை ஒரு பேச்சு என்று பேசுவதில்லை. "நாளைக்கு கொடுத்துடுறேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது "எதிர்பாராத விளைவுகள்" கான்செப்டில் வருமா இரண்டு நாட்களாகத் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். 

6 எதிர் சப்தங்கள்:

Uma said...

Interesting!

Unknown said...

//இன்றொரு பேச்சு நாளை ஒரு பேச்சு என்று பேசுவதில்லை. "நாளைக்கு கொடுத்துடுறேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது "எதிர்பாராத விளைவுகள்" கான்செப்டில் வருமா இரண்டு நாட்களாகத் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். //

சிரிப்பதற்கு மட்டும் அல்ல :)

Anonymous said...

அருமை..இந்த மாதிரி தொடர்ந்து எழுதுங்க...

Vaa.Manikandan said...

நன்றி உமா, ஆறுமுகம்.

நன்றி அனானிமஸ். :)

திண்டுக்கல் தனபாலன் said...

எதற்கும் நேரில் சென்று பணத்தை வாங்கி விடுவது நல்லது...

Aba said...

சுவாரஸ்யமான பதிவு..

//ஆஸ்திரேலியாவில் வேட்டையாடுவதற்கு தேவைப்படும் என்பதற்காக//

இது அறிவியலின் விளைவு அல்ல. அறிவுகெட்ட செயலின் விளைவு. இயற்கைத் தேர்வின் விதிகளின்படி, முயல்களும் ஆஸ்திரேலியாவும் பரஸ்பரம் புதியவை. புதிய ecosystem இல், பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் இரைகவ்விகள், போட்டி எதுவும் இல்லாமல் ஜாலியாக முயல்கள் வளர்ந்திருக்கின்றன.

பல வேளைகளில், biological control எனும் பெயரில், களைகள், pestகளை ஒழிக்கிறேன் பேர்வழி என உயிரியலாளர்களும் இந்த மடத்தனங்களை செய்வதுண்டு...