Oct 23, 2012

அய்யோ விரலு போயிந்திஹைதராபாத்தில் முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்திருந்த சமயம். எங்களை வேலைக்குச் சேர்க்கும் போதே முடிந்தவரைக்கும் நிறுவனத்தை 'ஆட்டோமேஷன்' செய்துவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதாவது தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்பதுதான் நோக்கம். அந்த நிறுவனத்தில் ஆயிரத்து ஐநூறு தொழிலாளர்கள் பணியில் இருந்தார்கள். மனிதர்களை குறைக்க வேண்டுமானால் நிறுவனத்திற்குள் ரோபோக்களை பணிக்கு அமர்த்த வேண்டும். 

இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் முழுமையான ஆட்டோமேஷன் செய்வதற்கு முனைவதில்லை. அதற்கு அடிப்படையான காரணம் இந்தியாவில் குறைந்த ஊதியத்திற்கு நிறைய ஆட்கள் கிடைக்கிறார்கள். இவர்களை வைத்தே வேலையை செய்துவிட முடியும். ரோபோக்களை விலைக்கு வாங்கினால் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். ரோபோக்களில் முதலீடு செய்வதைவிடவும் வேறு வகைகளில் முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்தவே நிறுவனங்கள் விரும்புகின்றன. 

ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் ரோபோக்களை தொழிற்சாலைகளில் பயன்படுத்துவது சாதாரணம். ரோபோக்களை பயன்படுத்துவதில் நிறைய பலன்கள் இருக்கின்றன. ரோபோக்கள் டீ குடிக்க 'ப்ரேக்' எடுத்துக் கொள்வதில்லை, உண்ட களைப்பு என 'ரெஸ்ட்' எடுப்பதில்லை, வெட்டி அரட்டை, வீண் கிசு கிசு என மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. இவற்றையெல்லாம் விட முக்கியமான அம்சம் இந்த ரோபோக்களின் துல்லியத்தன்மை. உதாரணமாக 1 மி.மீட்டர் அளவில் ஒரு துளையிட வேண்டும் அதுவும் ஆயிரக்கணக்கான துளைகளை இட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். மனிதர்களிடம் இதைச் செய்யச் சொன்னால் ஆயிரம் துளைகள் ஐந்நூறு வகைகளில் இருக்கக் கூடும். ஆனால் ரோபோக்கள் அப்படியில்லை. ஒன்று கூட மிஸ் ஆகாத நெத்தியடிதான்.

எங்கள் நிறுவனத்தின் முதலாளி சரியான கஞ்சூஸ். ஒவ்வொரு வாரமும் எங்களை அழைத்து புதிய ரோபோக்களை வடிவமைப்பது குறித்து பேசுவார். ஆனால் குறைந்த செலவுதான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பார். ரோபோ வடிவமைப்பிற்குத் தேவையான சர்வோ மோட்டரை வாங்குவதற்குக் கூட ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இந்தநிலையில் 'சீப் ரோபோக்களை' எப்படி செய்வது என்று நூடுல்ஸாகிக் கொண்டிருந்தோம்.

முதலாளியின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் 'இண்டஸ்ட்ரியல் ரோபோவை' வடிவமைப்பது குறித்து தகவல்களைச் சேகரிக்கத் துவங்கினோம். மற்றவகை ரோபோக்களைவிடவும் இண்டஸ்ட்ரியல் ரோபோவின் வடிவமைப்பு எளிது. தகரத்தை வெட்டுவதையோ, வெல்டிங் செய்வதையோ அல்லது பொருளை இடம் மாற்றுவதையோ திரும்பத் திரும்பச் செய்வதுதான் பெரும்பான்மையான இண்டஸ்ட்ரியல் ரோபோக்களின் வேலை. இதைச் செய்யக் கூடிய ரோபோவை வடிவமைத்தால் போதும். அதற்கு பிறகு ரோபோவிற்கு மேக்கப் போட வேண்டியதுதான் பாக்கி. மேக்கப் என்பது அந்த ரோபோ மனிதர்களுடன் தொடர்பு கொள்ளத் தேவையான வசதிகளைச் செய்தல், அதன் தகவல் தொடர்பு முறைகள் இன்னபிற இன்னபிற.

இண்டஸ்ட்ரியல் ரோபோக்களை நிறைய ரோபோ கம்பெனிகள் தயாரிக்கின்றன. ஆனால் இந்த கம்பெனிகள் தங்களின் தயாரிப்புகள் பற்றி 'மூச்சு'விடுவதில்லை.  ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ரோபோவை இயக்குவதற்கான மென்பொருளை வேறு எந்த நிறுவனத்தின் ரோபோவிலும் பயன்படுத்த முடியாது. அப்படி 'என்கோடிங்' செய்து வைத்திருப்பார்கள்.  ரோபோவில் சிறு பிரச்சினை என்றாலும் கூட சம்பந்தப்பட்ட கம்பெனி ஆட்களைத்தான் கூப்பிட வேண்டும். நாமாக சரி செய்துவிட முடியாது. இத்தகைய சீக்ரெட் சிக்கல்களால் ரோபோக்களை இந்தக் கம்பெனிகளிடம் வாங்கி பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களின் 'செளகரிய'த்திற்கு ஏற்ப நிறைய மாறுதல்களைச் செய்ய முடிவதில்லை என புலம்புகின்றன.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு ரோபோவை செய்வதற்கான திட்ட வரையறைகளுடன் முதலாளியை சந்திக்கச் சென்றோம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரோலை கொடுத்துவிடுவார்கள். அதை நாங்கள் தயாரிக்கவிருக்கும் ரோபோ துண்டுகளாக வெட்ட வேண்டும். முதல் வெட்டு 20 செ.மீ நீளத்தில் அடுத்த ஒவ்வொரு வெட்டிற்கும் 2 செ.மீ நீளம் குறைய வேண்டும். 4 செ.மீ நீளத்தில் துண்டை வெட்டி முடித்த பிறகு அடுத்த துண்டு மீண்டும் 20 செ.மீ நீளத்தில் தொடங்க  வேண்டும். எங்கள் விளக்கத்தில் இம்ப்ரெஸ் ஆன முதலாளி அனுமதி அளித்ததோடு ஐந்து இலட்சம் பணத்தையும் கொடுத்தார். இரண்டு மாதங்களில் ரோபோவை தயாரித்துவிட்டோம்.

நீளத்தை அளப்பதற்கு ஒரு சென்சார், வெட்டக் கூடிய பிளேடை இயக்கும் ஒரு ஹைட்ராலிக் சிலிண்டர், இந்த ஒட்டுமொத்த ரோபோவை கட்டுப்படுத்தும் ப்ராசஸர். இவ்வளவுதான் அடிப்படை. ப்ராசஸிரில் எழுதிய ப்ரோகிராம் மட்டும் கொஞ்சம் நாள் பிடித்தது என்றாலும் ரோபோவை சிம்பிளாக தயாரித்துவிட்டோம்.

ட்ரையல் ரன் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த நாள் முதலாளிக்கு விளக்கிவிட்டு தொழிற்சாலையில் நிறுவ வேண்டியதுதான் பாக்கி. முந்தின நாள் இரவில் இன்னொரு முறை சோதனை செய்துவிடலாம் என்று ரோபோவை ஓட விட்டோம். முதல் இருபது நிமிடங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதன் பிறகு திடீரென ரோபோவுக்குள் ரோல் சிக்கிக் கொண்டது. எங்களோடு பணி புரிந்த நண்பர் சிக்கிக் கொண்ட ரோலை நீக்க முயற்சித்தார். ஒரு நிமிடம்தான் இருக்கும். அவரது விரலும் சேர்ந்து ரோபோவுக்குள் சிக்கிக் கொண்டது. என்ன செய்வது என்று நாங்கள் சுதாரிப்பதற்குள் ரோபோ வெட்டத் துவங்கிவிட்டது. அவரது சுண்டுவிரல் எங்கள் கண் முன்னாலேயே துண்டிக்கப்பட்டது. "அய்யோ போயிந்தி அய்யோ போயிந்தி” என்று கதறதினார்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ரோபோக்களை தயாரிக்கும் போது சில பாதுகாப்பு அம்சங்களையும் கவனம் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் நிலவும் வெப்பநிலை, அழுத்தம் போன்ற சூழலை தாக்குப்பிடிக்கக் கூடியதாக ரோபோக்கள் இருக்க வேண்டும் அதே சமயம் அருகில் பணி புரியும் மனிதர்களுக்கு தீங்குவிளைவித்து விடாமலும் இருக்க வேண்டும். இந்த அம்சத்தில்தான் நாங்கள் கோட்டைவிட்டிருந்தோம். ஒரு 'எமெர்ஜென்சி ஸ்டாப்' இல்லாத ரோபோவாக எங்கள் ரோபோ பல்லிளித்தது.

இது நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. ரோபோ முயற்சியை கைவிட்டு நாங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட்டோம். தனது சுண்டுவிரலை இழந்த நண்பர் மட்டும் அங்கேயே பணிபுரிகிறார். சில ரோபோக்களை வெற்றிகரமாக தயாரித்தும் விட்டார். இப்பொழுது அந்த நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் துறைக்கும் அவர்தான் தலைவர்.

[கல்கி வார இதழில் வெளியாகும் 'ரோபோஜாலம்' தொடரின் ஒரு அத்தியாயம்]

1 எதிர் சப்தங்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை சிரமங்கள்... பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...