Sep 21, 2012

வென்ற கதை
கால்பந்து விளையாட்டு. கீழே கிடக்கும் பந்தை பார்க்க வேண்டும், எதிர் அணியினரிடம் இருந்து இலாவகமாக தட்டிச் செல்ல வேண்டும், பந்தை துரத்திச் சென்று கோல் அடிக்க வேண்டும். இவை அத்தனையும் கால்பந்து வீரருக்கு இயலக்கூடிய காரியம்தான். ஆனால் இவற்றை செய்ய வேண்டியது கால்பந்து வீரர் இல்லை. ஒரு இயந்திரம். 

தேசிய அளவில் கல்லூரிகளுக்கிடையேயான ரோபோ போட்டிக்கான அறிவிப்பு வந்திருந்தது. ஒவ்வொரு கல்லூரியும் கால்பந்து விளையாடக் கூடிய மூன்று அல்லது நான்கு ரோபோக்களை வடிவமைக்க வேண்டும். அந்த ரோபோக்கள் தங்களை வடிவமைத்த கல்லூரிக்காக கால்பந்து விளையாட வேண்டும். இதுதான் போட்டியின் விதி. இந்தப் போட்டியில் எங்கள் கல்லூரியும் கலந்து கொள்ள வேண்டும் என பேராசிரியர் விரும்பினார். கால்பந்து விளையாடக்கூடிய ரோபோவை வடிவமைக்க வேண்டும் என்ற அவரது உத்தரவை கேட்டவுடன் உச்சந்தலை கிறுகிறுத்தது.

இரண்டு கால்களில் நிற்கும் மனித உருவிலான ரோபோவை வடிவமைப்பதுதான் முதல் முக்கியமான வேலை. இரவு பகல் பாராது உழைத்ததில் ரோபோவை வடிவமைத்துவிட்டோம். ஆனால் ரோபோ இயங்குவதற்கு தேவையான பேட்டரியை  இணைக்க மறந்திருந்தோம். அடித்துப்பிடித்து கடைசி நேரத்தில் பேட்டரியை ரோபோவின் முதுகில் கட்டினால் பேட்டரியோடு சேர்ந்து ரோபோவும் குப்புற விழுந்தது. எடுத்து  நிறுத்தினால் மல்லாக்க விழுந்தது. புவியீர்ப்பு விசைக்கு எதிராக ரோபோவை நிற்க வைக்கவே பெரும்பாடு பட வேண்டியதாகிவிட்டது. இதன்பிறகுதான் அடிப்படை புரிதலே இல்லாமல் வானம் ஏறி வைகுண்டம் பிடிக்க முயற்சிக்கிறோம் என்பதை உணர்ந்தோம். போட்டிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ரோபோவின் உலகத்தை வேறொரு கோணத்தில் புரிந்து கொள்ளத் துவங்கினோம்.

மிக எளிமையாகச் சொன்னால் ரோபோ மூன்று அடிப்படையான பகுதிகளைக் கொண்டிருக்கும்:

1) உணரிகள்(Sensors)- ரோபோவைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து தெரியப்படுத்துவது இதன் பணி. மனிதனில் கண், காது ஆகிய உறுப்புகள் செய்யும் வேலையை ரோபோவில் உணரிகள் செய்கின்றன.

2) செயலாக்கி(Processor)- உணரி தரும் தகவல்களை கணித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்து உத்தரவிடும் அமைப்பு. இது நமது மூளையைப் போன்றது.

3) இயந்திரப்பகுதி(Mechanical device) - செயலாக்கியால் இடப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப பணியைச் செய்து முடிக்கக்கூடிய வேலையாள். மூளை சொல்வதை செயல்படுத்தும் மனிதனின் கை, கால்கள் போன்றவை இவை.

இந்த மூன்று பகுதிகளையும் மனிதனோடு ஒப்பிட்டால் ரோபோவின் அடிப்படை இன்னும் தெளிவாக புரியும். 

ஒருவனை நாய் துரத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவனது கண்கள் நாய் துரத்துவதை பார்க்கின்றன, காதுகள் நாய் குரைப்பதை கேட்கின்றன. இங்கு கண்களும், காதுகளும் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிகின்ற உணரிகள். உணரிகள் அளித்த தகவலுக்கு ஏற்ப மூளை கணக்குப்போட ஆரம்பிக்கிறது. கீழே கிடக்கும் கல்லை எடுத்து நாயைத் அடிக்கச் சொல்லி உத்தரவிடலாம் அல்லது தப்பிப்பதுதான் உசிதம் என்றால் ஓட்டத்தை வேகப்படுத்து எனவும் உத்தரவிடலாம். இங்கு மூளை செயலாக்கியாக இருக்கிறது. கல்லை எடுத்து வீசு என்ற கட்டளை வந்தால் கைகள் கற்களைப் பொறுக்கி நாயை நோக்கி எறிகின்றன அல்லது ஓட்டம் எடு என்ற கட்டளை வந்தால் கால்கள் ஓடத் துவங்குகின்றன இங்கு கைகளும், கால்களும் இயந்திரப்பகுதியாகச் செயல்படுகின்றன.

இதே ’கான்செப்டை’ வைத்து இயந்திரம் ஒன்றை வடிவமைத்தால் அதுதான் ‘ரோபோ’. 

நீங்கள் பாம்பு பிடிக்கும் ரோபோ ஒன்றை வடிவமைக்க விரும்புகிறீர்கள். பாம்பு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய உணரி ஒன்று தேவைப்படும். அதற்காக உணரியாகச் செயல்படத் தோதான மைக்ரோ கேமரா ஒன்றை தேர்ந்தெடுத்து ரோபோவில் பொருத்திக் கொள்ள வேண்டும். பாம்பு இருப்பின் அதனைப் பிடிப்பதற்கு இயந்திரப்பகுதியும் அவசியம். அதற்காக கை போன்ற அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். செயலாக்கியாக மைக்ரோ ப்ராஸசர் போன்ற சிறு கணிணிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். கேமரா தான் எடுக்கின்ற படங்களை செயலாக்கிக்கு அனுப்பி வைக்கும். தான் பெறுகின்ற படங்களை ஆய்வு செய்து, அருகில் பாம்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் வகையில் செயலாக்கியில் ப்ரொகிராம் செய்யப்பட்டிருக்கும். பாம்பு கண்டறியப்பட்டவுடன், கவ்விப்பிடிக்குமாறு உத்தரவு ஒன்று செயலாக்கியால் பிறப்பிக்கப்படும். இப்பொழுது கை போன்ற அமைப்பு பாம்பை பிடித்துவிடும்.

இதுதான் ரோபோ செயல்பாட்டின் அடிப்படை. சொல்வதற்கு எளிதாகத் தோன்றினாலும், கடலில் விழுந்துவிட்ட ஒரு ரூபாய் காசை அடையாளம் காட்டுவது போலத்தான். மனிதனின் உருவத்தில்தான் ரோபோ இருக்க வேண்டும் என்பதில்லை-  மினியேச்சர் பேருந்தை போலவோ நீந்தக் கூடிய மீன் போன்றோ அல்லது வேறு பலவித வடிவங்களிலோ தேவைகளுக்கு ஏற்ப ரோபோவை வடிவமைக்கிறார்கள்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரோபோவை வைத்து ஒரு பரிசோதனை நிகழ்ந்தது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக் துறையைச் சார்ந்த வல்லுனர்களும், சில மருத்துவர்களும்  சிமி பள்ளத்தாக்கிற்கு இரண்டு வேன்களில் சென்றார்கள். அவர்களுக்கு பின்னாலேயே இன்னொரு வேனில் ’ரோபோ டாக்டர்கள்’ சென்றன. ஆளில்லாத அந்த இடத்தில் மனிதர்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட பொம்மைகளுக்கு ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம். அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்களை வெகுதூரத்தில் அமர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பார்கள். மருத்துவர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையில் வயர்லெஸ் தொடர்பு உருவாக்கப்பட்டன. போர்க்களங்களுக்கு ரோபோக்களை அனுப்பி வைத்தால் அங்கு அடிபட்டுக் கிடக்கும் போர்வீரர்களுக்கு ரோபோக்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்பதை பரிசோதிக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ரோபோட்டிக் வல்லுனர்கள் மட்டுமில்லாது ராணுவ அதிகாரிகளும் பரிசோதனையின் முடிவுகளுக்காக படபடப்புடன் காத்திருந்தார்கள். பல மணி நேர சோதனைக்கு பிறகாக சோதனையை நிகழ்த்திய மருத்துவர்கள் ”வெற்றி” என்பதை உணர்த்தும் வகையில் கட்டை விரலை உயர்த்தினார்கள். ரோபோக்கள் ஜெயித்திருந்தன. 

[கல்கி வார இதழில் எழுதிக்கொண்டிருக்கும் 'ரோபோஜாலம்' தொடரின் இரண்டாவது அத்தியாயம்]

3 எதிர் சப்தங்கள்:

சங்கர் said...

மிக எளிமையான கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி.

சிவஹரி said...

எல்லோருக்கும் புரிந்து கொள்ளும்படி இக்கட்டுரை அமைந்திருக்கின்றது. தலைப்பே மென்மேலும் படிக்கத் தூண்டிடும் வகையில் இருப்பது கூடுதற் சிறப்பு.!

படைவீரர்களாக ரோபோக்களைப் பயன்படுத்திட வேண்டிய முயற்சியின் அடித்தளத்தினை சமீபத்தில் வெளியான ரஜினி படத்தில் பார்த்திருப்போம்.

அவ்வாறு பயன்படுத்திட முனையும் போது ஏற்படும் பாதகங்களை அந்தப் படத்தில் காட்டியிருந்தார்கள்.


இங்கே, உண்மையில் ரோபோக்கள் அறுவைச் சிகிச்சை செய்திருக்கின்றன.. வளரும் உலகத்தை நாமும் பார்க்கலாம்.


நன்றி

Anonymous said...


It happened in Simi valley?
Wow! nostalgic memories...