Jan 17, 2019

ஆதியைத் தேடி...

கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் விழாவினைக் கொண்டாடும் ஏகப்பட்ட கிராமங்களைப் பார்க்க நேரிட்டது. அவரவர் வீட்டுக் கொண்டாட்டமாக இருந்த பொங்கல் பண்டிகை சமீபகாலத்தில் ஊர்த் திருவிழாவாக மாறிக் கொண்டிருக்கிறது. பொதுவிடத்தில் பொங்கல் வைத்து, இளைஞர்கள், குழந்தைகள், பெண்களுக்கென விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி, இன்னிசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து என ஊரே கலகலக்கிறது. 

ஆதியில் பொங்கல் இருந்ததா என்று தெரியவில்லை. பொங்கல் குறித்து எந்தக் குறிப்பும் சங்க இலக்கியங்களில் இல்லை என்கிறார்கள். பொங்கல் இடையில் வந்ததுதான். தவறொன்றுமில்லை. தை முதல் நாள் தவிர உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் என எல்லாமே இடையில் வந்ததுதான். இப்பொழுதெல்லாம் ‘இது இடையில் வந்தது’ என்று பேசுவது மிகச் சாதாரணமாகிவிட்டது. எதைப் பற்றிப் பேசினாலும் ‘இது ஆதியில் இல்லை’ என்கிறார்கள். இப்படி இடையில் வந்தவற்றை ஒதுக்கி ஆதியைத் தேடி பயணிக்கும் போது எதுதான் ஆதி என்ற குழப்பம் வந்துவிடுகிறது. எல்லாவற்றையும் களைந்து களைந்து காலத்தின் பின்னோக்கிச் சென்றபடியே இருந்தால் மனிதனின் நிர்வாணமும், மரத்தின் மீதான வாழ்வும்தானே இறுதியில் மிஞ்சும்?

‘கொங்குநாட்டில் இந்து மதத்துக்கு முன்பாக சமணம் விரவியிருந்தது’ என்பது வரலாற்றுத் தரவுதான். மறுக்க முடியாதது. அப்படியானால் சமணத்துக்கு முன்பாக எது? என்ற கேள்வி இயல்பானதுதானே? நல்லதும் கெட்டதுமாக மனித குலத்தைப் பல படலங்கள் மாற்றி மாற்றி மூடுகின்றன. வரலாற்றின் போக்கில் வல்லவன் தனக்கு ஏற்றபடி இந்த உலகை மாற்றுவான். வல்லவனை மிஞ்சும் இன்னொரு வல்லவன் எதிர்காலத்தில் வருவான். இதுதான் உலக இயங்கியல்.  இப்படித்தான் கடந்த காலத்தில் உலகம் இயங்கியது. எதிர்காலத்திலும் இப்படித்தான் இருக்கும்.

நாம் இழந்தவற்றை கண்டெடுத்து பழையனவற்றை மீட்டெடுக்க முயற்சிக்கும் போது அது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுமானால் அவை தமக்கான இடத்தை மீண்டும் கைப்பற்றும். ஆனால் மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும்படியான வல்லவன் உருவாக வேண்டும். இல்லையென்றால் எதுவும் வெற்றுப் பெருமையாக மட்டுமே எஞ்சும். 

இப்படி பழையனவற்றை மழுங்கச் செய்யும் புதிய வழக்கங்கள் மனிதர்களைப் பிளவுபடுத்தாததாக இருக்க வேண்டும். இயற்கையைப் பாழ்படுத்தாததாக இருந்தால் வரவேற்கலாம். விநாயகர் சதுர்த்தியையெல்லாம் நாம் எதிர்க்க வேண்டிய காரணம் என்று பட்டியலிட்டால் இவை இரண்டும்தான் பிரதானமாக இருக்கின்றன. ‘நீ இந்து...அவன் அடுத்தவன்’ என்று வெளிப்படையாகக் கூறு போடுகிற நிகழ்வாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மாறிவிட்டன. இந்துத்துவ வாக்கு வங்கியை வளப்படுத்துவது தவிர விநாயகருக்கு வேறு எந்த வேலையுமில்லை. 

நமக்கும் விநாயகருக்கும் என்ன வாய்க்கால் தகராறா? வரப்புத் தகராறா? எதன் மீதும் வெறுப்பு பாராட்ட வேண்டியதில்லைதான். வன்மம் கொண்டு அலைய வேண்டியதில்லை. ஆனால் மனிதர்களை பகுக்கும் மறைபொருளைக் கொண்டிருக்கும் செயல்பாடுகளைப் பற்றி பேசத்தான் வேண்டியிருக்கிறது. நம் எதிர்ப்பைக் காட்டத்தான் வேண்டும். ஒருவேளை அவர்கள் வல்லவர்களாக இருந்து, தமது செயல்பாட்டில் வெற்றியடைந்துவிட்டால் அதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும்? மேலே சொன்னது போல வல்லவன் வகுப்பதுதான் வரலாறு. ஆனால் நம் காலத்தில் நடைபெறும் மாறுதல்கள்- அவை மனித குலத்துக்கு ஏதேனுமொருவகையில் எதிரானதாக இருப்பின், அவை நம் மக்களின்வாழ்வியலுக்கு முரணானது எனில் நம்முடைய ஆற்றலையெல்லாம் திரட்டி எதிர்க்கலாம்.

வீரியம் பெறும் ஒரு வழக்கம் எந்தவிதத்தில் பெருந்திரளான மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது மக்களிடம் துணிந்து பேசலாம். அதைப் போலவே நல்லனவற்றையும் பேச வேண்டும். 

நேற்று ஒரு கிறித்துவப் பள்ளியில் பொங்கல் கொண்டாடினார்கள். உழவர் சிலைக்கு முன்பாக வண்டி மாட்டுக்கு அலங்காரம் செய்து, படையலிட்டு, பொங்கல் வைத்துக் கொண்டாடிய கொண்டாட்டத்தில் குழந்தைகளிடம் ‘இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள்’ என்று தலைமையாசிரியர் சொல்லிக் கொடுத்தார். கடந்த வருடம் பொங்கலின் போது எங்குமே நீர் இல்லை. கிணறு காய்ந்து கிடந்தது. ஓடைகள் பிளந்து கிடந்தன. இந்த வருடம் அவையெல்லாம் நிரம்பியிருக்கின்றன. இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லுங்கள் என்றார். குழந்தைகள் வணங்கினார்கள். எந்த விழாவில் இப்படியொரு நிகழ்வைப் பார்க்க முடியும்?

இன்னொரு சிற்றூருக்குச் சென்றிருந்தோம். இசுலாமியப் பெண்கள் பொங்கலிட்டுக் கொண்டிருந்தார்கள். உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. பொங்கல், தமிழர்களை ஒன்றிணைக்கிறது. சாதி, மத உணர்வுகளைத் தாண்டி ‘தமிழன்’ என்ற புள்ளியில் கட்டுகிறது. இவை மக்களை உணர்வுப்பூர்வமாக முட்டாள்கள் ஆக்குவதில்லை. விஷ விதைகளை ஊன்றுவதில்லை.  பொங்கல் விழாக்களைக் கொண்டாடும் கிராம மக்களை நெருங்கிப் பார்க்கும் போது இதனை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆயிரமாயிரம் பிரிவினைகளுக்கான விதைகள் விதைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் ஊரே இணைந்து கொண்டாடும் இத்தகைய பொங்கல் நிகழ்ச்சிகள் காலத்தின் தேவையாகவும் அவசியமாகவும் இருக்கிறது. 

ஊர் பொங்கல் விழாக்கள் ஏதோவொருவகையில் மனதுக்கு சந்தோஷமாகவும் நெருக்கமாகவும் இருக்கின்றன. எந்த அமைப்புகளும் முன்னெடுக்காமல் உள்ளூர் மக்கள் அவர்களாகவே கொண்டாடுகிறார்கள்.  பல ஊர்களில் பல்வேறு சாதியினர் இணைந்து சமத்துவப் பொங்கலிடுகிறார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் விழா இன்னமும் விமரிசையாகக் கொண்டாடப்பட வேண்டும். மக்களைப் பிணைக்க வேண்டும். 

6 எதிர் சப்தங்கள்:

நந்தா said...

ரம்சானுக்கு பிரியாணி குடுத்தேன்ல, பொங்கலுக்கு சர்க்கரை பொங்கல் குடு னு கேட்டவனுக்கு இந்த லிங்க அனுப்பி அவனையும் பொங்கல் கொண்டாட சொல்லப்போறேன் அடுத்த வருடம்.. பதிவிற்கு நன்றி.

சேக்காளி said...

//இவை மக்களை உணர்வுப்பூர்வமாக முட்டாள்கள் ஆக்குவதில்லை. விஷ விதைகளை ஊன்றுவதில்லை//
அட ஆமாய்யா. நானும் சிந்திச்சேன். ஊர்த் திருவிழாக்களில் வரும் ஒரு வித பதைபதைப்பு பொங்கல் நாளன்று வருவதில்லை.அன்று மகிழ்வாகவே இருக்கிறது.

சேக்காளி said...

//வரலாற்றின் போக்கில் வல்லவன் தனக்கு ஏற்றபடி இந்த உலகை மாற்றுவான்//
இதை வாசித்த போது இன்று காலையில் வாசித்தது நினைவிற்கு வருகிறது.
"புலிகள் தங்களுக்கென்று ஒரு வரலாற்றை எழுதுமானால் அதில் எந்தவொரு மன்னனின் மாவீரமும் இடம் பெறாமல் தான் இருக்கும்.
அதே போன்று மான்கள் அதன் வரலாற்றை எழுதுமானால் அவற்றின் பயமும் பதைபதைப்புமே உயிர்தப்பித்தலின் தீரமும் இருக்குமேயன்றி புலிகளின் வீரம் புறம் தள்ளப்பட்டே இருக்கும்" என்று

நிவாஸ் திவிக said...

அய்யா அருமையான கட்டுரை. இன்னும் சில ஊர் பகுதிகளில் எனது சாதி மற்றும் உறவுகளை தவிர வேறு யாரும் எங்களது விளையாட்டு நிகழ்வுகளில கலந்து கொள்ள கூடாது என்ற நிலை உள்ளது அவைகளும் களையபடப் வேண்டும்.. நன்றி.

Anonymous said...

"சமீபகாலத்தில் ஊர்த் திருவிழாவாக மாறிக் கொண்டிருக்கிறது" Since my childhood (now I am 32), such things happen in several villages in Tirunelveli.

Anonymous said...

இந்துத்துவ வாக்கு வங்கியை வளப்படுத்துவது தவிர விநாயகருக்கு வேறு எந்த வேலையுமில்லை.
NOT AT ALL. விநாயகர் சதுர்த்தி CAME INTO EXISTENCE AS A POLITICAL MOVEMENT IN OLD BOMBAY PRESIDENCY IN 1893. VERY MUCH BEFORE THE BIRTH OF JANASANH THE FATHER OF TODAY'S BJP.

நீ இந்து...அவன் அடுத்தவன்’ என்று வெளிப்படையாகக் கூறு போடுகிற நிகழ்வாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மாRIYADHU IN TAMILNADU. POLITICAL PARTIES/ LOCAL DADHA'A ARE RESPONSIBLE. IN MANY BJP RULING STATES INCLUDING MAHARASHTRA THE PROCESSION IS VERY PEACEFUL.
TILL EARLY 90'S IT WAS A HOUSE FUNCTION ONLY. A CLAY
விநாயகAR WAS BOUGHT AND IMMERSED IN THE HOUSE WELL.
NO POLLUTION/ NO VIOLENCE/ NO DOOR TO DOOR COLLECTIONS.
LET US NOT BLAME 'LORD VINAYAGA' FOR THE WRONG DOINGS OF VESTED INTERESTS.
'LORD VINAYAGA' MUST BLESS ALL THESE MINDS WITH GOOD SENSE.
ANBUDAN,
M NAGESWARAN