சந்நியாசிகளிடம் பேசுவது தனித்த அனுபவம். திருவாரூரில் ஐங்கலக்காசு விநாயகர் என்று ஒரு பிள்ளையார் உண்டு. சிவனின் இரண்டு சந்நிதிகளுக்கும் நடுவில். போகிற போக்கில் பிள்ளையாரைப் பார்த்து கன்னத்தில் தட்டிக் கொண்டு நகர்கிறவர்கள்தான் அதிகம். அங்கேயொரு சந்நியாசி. தோளில் ஒரு ஜோல்னாபை அணிந்த சந்நியாசி அவர். நின்றபடியே விநாயகரின் சந்நிதிச் சுவரில் முகத்தைப் பதித்து- ஒளிந்து விளையாடும் போது குழந்தைகள் தமது முகத்துக்கு இரண்டு புறமும் கைகளை வைத்து மறைத்துக் கொள்வார்களே- அப்படி நின்றபடியே அரை மணி நேரமாக நின்று கொண்டிருந்தார்.
‘சரி வரட்டும் பேசலாம்’ எனக் காத்திருந்து கால்கள் வலித்ததுதான் மிச்சம். ‘இவர் வேலைக்கு ஆக மாட்டார்’ என்று கிளம்பி மற்ற சாமிகளைக் கும்பிட்டுக் கொண்டிருந்தேன்.
திருவாரூரில் யாருமே கண்டு கொள்ளாத ஒரு சிவன் சந்நிதி இருந்தது. ஆரூரில் அப்படி நிறைய லிங்கங்கள் இருக்கின்றன. கோவிலிருந்து வெளியில் வந்த சாமியார் நேராக அந்த இருட்டுக்குள் சென்று மண்டி போட்டு வணங்க ஆரம்பித்துவிட்டார். எப்படியும் அடுத்த அரை மணி நேரம் ஆகும் என்று நினைத்தது தவறாகவில்லை. அங்கேயே அமர்ந்து கொண்டேன். ஆளரவரவமில்லாத சந்நிதி அது.
வணங்கி முடித்துவிட்டு அவர் வந்த போது எழுந்து நின்று‘இந்த லிங்கத்துல என்ன சிறப்பு?’ என்றேன். நேருக்கு நேராகப் பார்த்துவிட்டு சாவாதானமாக ஒரு சிரிப்பை உதிர்த்தார். அசட்டுச் சிரிப்பு. எதுவும் சொல்லாமல் நின்றிருந்தேன். அந்தச் சந்நிதியைச் சுற்றி வந்தவர் எதுவுமே பேசவில்லை. இரண்டு நிமிடம் பார்த்துவிட்டு அவர் பேசவில்லையென்றால் நகர்ந்துவிடலாம் எனத் தோன்றியது.
‘உங்ககிட்ட பேச வேண்டாம்ன்னுதான் தோணுச்சு...சிவனைச் சுத்தும் போது மனசு மாறிடுச்சு’ என்றார். அதன் பிறகு இரண்டு மணி நேரங்களாவது பேசிக் கொண்டிருந்தோம். சில செய்திகள் மிக ஆச்சரியமாக இருந்தன. ‘நீங்க வந்து எவ்வளவு வருஷம் ஆச்சு’ என்றேன். அவருக்கே அது தெரியவில்லை. எப்பொழுதோ மனதில் தோன்றியதாம். வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். நாள், கிழமை என்று எதுவுமே அவருக்கு இல்லை. நினைக்கும் வரைக்கும் திருவாரூர் வாசம். போதும் என்று நினைக்கும் போது இன்னொரு சிவாலயம். நடந்தே சென்றுவிடுவார். எனக்கு அவரிடம் ஆன்மிக ரீதியாக பேச வேண்டும் என்றெல்லாம் பெரிய எண்ணமில்லை. ‘நாயன்மார் கதையெல்லாம் தெரியுமா’ என்றேன். அதற்கும் ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார். எதற்குச் சிரிக்கிறார் என்றே தெரியவில்லை.
‘லிங்கத்துல என்ன சிறப்பு? எதையுமே பார்க்கிற கோணத்துலதான் இருக்கு...சிறப்புன்னு பார்த்தா சிறப்பு’ என்றார். பேசிக் கொண்டிருந்தபோது சம்பந்தமேயில்லாமல் எனது முதல் கேள்விக்கான பதிலைச் சொன்னார். ‘அப்புறம் ஏன் திருவாரூர், திருவண்ணாமலைன்னு சுத்துறீங்க? ஊர்லயே இருந்திருக்கலாம்ல’ என்றேன் அவருக்கு அது எரிச்சலை உண்டாக்கிவிடுமோ என்று கூடத் தோன்றியது. கடுப்பாகி சாபம் விட்டுவிட்டால் நான் தியானத்தில் அமர்ந்து, புற்று உருவாகி, சிவபெருமானை அழைத்து பாபவிமோசனம் பெறுவதெல்லாம் நடக்கிற காரியமா?
அவர் திருவண்ணாமலையிலிருந்துதான் வந்திருந்தார். நடைபயணம்தான். தோன்றுகிற போது நடக்கத் தொடங்கி இருள் கட்டும் போதும் உறங்கி எவ்வளவு நாள் பயணம் என்றெல்லாம் அவருக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. எப்பொழுதோ கிளம்பியிருக்கிறார். எப்பொழுதோ வந்து சேர்ந்திருக்கிறார்.
அவர் திருவண்ணாமலையிலிருந்துதான் வந்திருந்தார். நடைபயணம்தான். தோன்றுகிற போது நடக்கத் தொடங்கி இருள் கட்டும் போதும் உறங்கி எவ்வளவு நாள் பயணம் என்றெல்லாம் அவருக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. எப்பொழுதோ கிளம்பியிருக்கிறார். எப்பொழுதோ வந்து சேர்ந்திருக்கிறார்.
‘என்கிட்ட உனக்கான செய்தி என்னவோ இருக்கு...அதனாலதான் ஈசன் உன்னை அனுப்பி வெச்சிருக்கான்’ என்றார்.
என்னை ஈசன் அவரிடம் அனுப்பிவைத்தாரா என்று தெரியாது. ‘ஒருவேளை உங்களுக்கு என்கிட்ட ஏதாச்சும் செய்தி இருக்கலாம்ல’ என்றேன்.
சிரித்துவிட்டு ‘பால் எங்க இருந்து கிடைக்குது?’என்றார்.
‘மாடு’.
‘மாட்டோட வயித்த அறுத்தா பால் கிடைக்குமா?’
....
‘மடியில் இருந்துதானே வருது? மடியைக் கூட அறுத்தா கிடைக்குமா? அதுக்குன்னு ஒரு முறை இருக்குல்ல’ என்றார்.
என்னய்யா இது சம்பந்தமில்லாத பேச்சு என்று குழப்படியாக இருந்தது. ‘கோவிலுங்கிறது மடி மாதிரி. நீங்க இங்க இருந்துதான் சில ஆன்ம அனுபவங்களை எடுக்க முடியும்..உங்களோட மனப்பூர்வமான வழிபாடுங்கிறது கறக்கிறது மாதிரி. அறுத்து எடுக்க முடியாது’ என்றார். அவராகச் சொன்னாரா அல்லது யாராவது ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததா என்று தெரியவில்லை. எனக்கு அது மன அமைதி தரக் கூடிய பதிலாக இருந்தது.
அவருடைய வயதைக் கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை. ஊரைக் கேட்டதற்கு. ‘திருவண்ணாமலையிலிருந்து வர்றேன்..எங்க போறேன்னு தெரியலை’ என்றார். ‘வீட்டுக்கு போகலாம்ன்னு தோணாதா?’ என்று கேட்டிருக்கக் கூடாது. கேட்டுவிட்டேன். ‘என்னைப்பத்தி தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க? நானே சிவ சிவன்னு கெடக்குறேன்’ என்றார்.
இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருந்திருந்தால் ‘உங்க பேர் என்ன’வென்றாவது கேட்டிருக்கலாம். அமைதியாக அமர்ந்திருந்தேன். இவர் வழியாக ஈசன் அனுப்பி வைத்த செய்தி என்னவென்று யோசித்துக் கொண்டிருந்தது மனம். அப்படியில்லாவிட்டால் சம்பந்தமேயில்லாத ஒரு காவி பூண்ட சாமியாரிடம் இந்த இரவில் ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றாமல் இல்லை. கோவிலைப் பூட்டுகிற நேரம். இரவில் கமலாலயம் குளக்கரையில் இருக்கும் ஏதாவதொரு மண்டபத்தில் படுத்துக் கொள்வதாகச் சொன்னார்.
‘காசு கொடுத்தால் வாங்கிக்குவீங்களா?’என்றேன்.
‘சோறு மட்டும்தான்’ என்றார். எப்பொழுதுமே சோறு கிடைக்கும் என்று சொல்ல முடியாது என்று சொல்லியிருந்தார்.
‘எல்லாம் அவனோட விளையாட்டுத்தான்..சில சமயம் பல நாட்களுக்கு பட்டினி போட்டுடுவான்’என்றார்.
‘எதுக்கு இந்தக் கஷ்டம்? பசி, பட்டினி, கொசுக்கடி, அலைச்சல்’ என்று கேட்டேவிட்டேன்.
சிரித்துவிட்டு தனது கையிலிருந்த திருவோட்டை தலைகீழாகக் கொட்டிக் காட்டினார். எந்த பாரமுமில்லை என்று அர்த்தம். ஜோல்னா பையைக் கொட்டினார். வெறும் திருநீறு. ஊதினார். பறந்தது. பையை உதறி தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டு சிரித்தார். எனக்கு எந்தக் கஷ்டமுமில்லை என்று சொல்லிக் காட்டிவிட்டார்.
கண் புருவங்களை உயர்த்தி வனையைக் காட்டினார். ‘உனக்கும் இப்படித்தானா?’ என்றாரா அல்லது ‘வேற என்ன?’ என்றாரா என்று புரியவில்லை. அதற்கு மேல் என்ன பேசுவது?
சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு ‘நாளைக்கு காலையில் வர்றேன்..இருப்பீங்களா?’
‘நீங்களும் நானும் பேசணும்ன்னு சித்தமிருந்தா இருப்பேன்’ என்றார்.
அடுத்த நாள் காலையில் கோயிலைச் சுற்றி வந்தேன். அவரைக் காணவில்லை.
12 எதிர் சப்தங்கள்:
Oh Wow!What an experience to reader! Mani, You've made my day.
Thank you.
That pic credit?
Took it from some website. (Google image search)
//‘ஒருவேளை உங்களுக்கு என்கிட்ட ஏதாச்சும் செய்தி இருக்கலாம்ல’ என்றேன்.//
ரசித்த குசும்பு
தி மு க காரர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் துளி கூட தொடர்பில்லை என்று நினைத்து கொண்டிருந்தேன், கொண்டிருக்கிரேன். நீங்கள் ஆன்மீக தேடல் கொண்டிருப்பது கொஞ்சம் ஆச்சரியம் தருகிறது. வாழ்த்துக்கள்
ஏதாவது கொஞ்சம் சேர்ந்துட்டாலே எவ்வளவு அலட்டல் இந்தக் காலத்தில்....ஒன்னுமே இல்லைன்னா .....
தெளித்த மனமே இத்தகைய புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும். எந்த கஷ்டமில்லை என்று அந்த சந்தியாசி ஓட்டை திருப்பி காட்டிது பெருமை இல்லை. நாம் பிறந்ததற்கு அர்த்தங்கள் ஒவ்வொருவரின் பார்வையில் மாறும். நமக்கு பிறகு நமது சந்ததி, அடுத்த தலைமுறை இருப்பது நமக்கு பெருமை தரும். ஒற்றை ஆளாய் சுற்றி வருவது நிம்மதியாக இருக்கலாம். நமக்கு அடுத்த தலைமுறை வேண்டாமா இது தானே உலக இயல்பு.
பே.ஆவுடையப்பன்
கெட்ட வார்த்தையில்லாமல் பின்னூட்டம் எழுதினால் வெளியிடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அப்படி எழுதிவிட்டு ‘பிரசுரம் பண்ணிட்டானா’ என்று திறந்து திறந்து பார்க்க வேண்டியதில்லை. பிரசுரம் செய்யமாட்டேன்.
இந்தியா முழுவதுமே இந்த சாமியாரை போன்ற சோம்பேறிகளும் அந்த சோம்பேறி சாமியார்கள் விடும் குசுவிற்கு கூட தத்துவ விளக்கம் கண்டுபிடிக்கும் உங்களை போன்றவர்களாலும் தானே நிரம்பி நாறுகின்றது குசு கெட்டவார்த்தை இல்லை மணி ஆச்சர்யமாக இது தமிழ் வார்த்தையும் இல்லை பெர்சிய மொழி.
ரிஷி சாபம்
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
"குண்டியில கட்டி வந்து சாவப்போற" அப்டினு சாபம் கொடுக்காத வரைக்கும் நீங்க நல்ல ரிஷி தான்.
when u gone to tiruvarur?
Post a Comment