Jan 16, 2019

தை- தமிழர் புத்தாண்டு

புத்தாண்டுக்கு சித்திரை முதல் தேதியாக இருந்தால் என்ன? தை மாதமாக இருந்தால் என்ன என்கிற மனநிலைதான். முந்நூற்று அறுபத்தைந்து நாட்களில் ஏதோவொன்று. அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆனால் இதில் அரசியல் சாயம் புகுந்து விளையாடுகிறது.  ஒரு தரப்பு தை தான் தமிழர் புத்தாண்டு என்று சொல்ல, பாரம்பரியமாக சித்திரைதானே புத்தாண்டு என்று இன்னொரு தரப்பு மல்லுக்கட்ட என்னதான் இருக்கிறது என்று மண்டை காயாமல் இல்லை. 

வானியல் சாஸ்திரம் பற்றிப் பேசக் கூடிய, ஜோதிட நண்பர்கள் உட்பட சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக சில தரவுகளைத் தேடிப் பார்த்தால் மிக நம்பகமான ஒன்றாக Perihelion/Aphelion-ஐ எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

அது என்ன Perihelion?


பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதை நீள்வட்டம் என்றாலும் கூட, நீள்வட்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதில்லை. இந்த நீள்வட்டத்தில் சுற்றுகிற புவியானது வருடத்தில் ஒரு நாள் சூரியனுக்கு மிக அருகாமைக்கு வருகிறது. இந்த அருகாமையை Perihelion என்கிறார்கள். சூரிய அண்மைப்புள்ளி. டிசம்பர் மாதத்தில் பூமியின் வடதுருவத்தில் அவ்வருடத்திற்கான மிக நீண்ட இருள் நாள் வரும். அந்த நாளுக்கு சற்றேறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்து சூரியனுக்கு மிக அருகில் புவி செல்கிறது. Perihelion. கணக்குப் போட்டுப் பார்த்தால் மார்கழி கடைசி வாரம் அல்லது தை முதல் வாரம்.  

(ஆறு மாதம் கழித்து புவியானது சூரியனுக்கு வெகு தொலைவில் அமைகிற புள்ளி Aphelion)

சரி; புவி சூரியனுக்கு மிக அருகில் சென்றுவிட்டால் அதனை எப்படி புத்தாண்டு என்று எடுத்துக் கொள்ளலாம் என்று கேட்கலாம்.

சூரியனானது தினசரி நேர் கிழக்கில் உதித்து நேர் மேற்கு நோக்கிப் பயணிக்கிறதா? ஆறு மாதங்கள் வடகிழக்கில் உதிக்கும் சூரியன் அடுத்த ஆறு மாதங்கள் தென்கிழக்கில் உதிக்கும். எப்படி சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்கிறது?


பூமியானது 23.4 டிகிரி சாய்ந்த வாக்கில் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டத்தின் அரை பாதியில் சுற்றும் போது வடதுருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கும். அப்பொழுது பூமத்திய ரேகைக்கு மேற்புறமுள்ள வடக்குப் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். அடுத்த ஆறுமாதங்கள் நீள்வட்டத்தின் இன்னொரு பாதியில் சுழலும் போது பூமியானது சூரியனை விட்டு வெளியில் சாய்ந்திருக்கும். அந்த ஆறு மாதங்கள் தென்பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த சாய்வு சூரியனை நோக்கியும், சூரியனிடமிருந்து விலகியும் இருப்பதால்தான் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதாகத் தெரிகிறது.  சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் ஆறு மாத காலத்தை உத்தராயணம் என்கிறார்கள். (உத்தரம்: வடக்கு). இந்த ஆறு மாத காலத்தில் வரக்கூடிய மாதங்கள்- தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி. வெப்பம் மிகுந்த காலகட்டம். 

சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கும் போது அதனை தட்சிணாயனம் என்கிறார்கள். அந்த ஆறு மாத காலத்தில் வரக்கூடிய மாதங்கள்தான் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,மார்கழி- சூறைக்காற்று, மழை, அடைமழை, குளிர், கடுங்குளிர் என்ற பருவம் மாறி இளவேனில் தொடங்குவதை ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிறார்கள். 

இதையெல்லாம் ஓரளவுக்கு புரிந்து வைத்துக் கொள்வதில் தவறேதுமில்லை. வானியல் ரீதியிலாக எடுத்துக் கொண்டாலும் சரி, தமிழர்களின் வேளாண்மை வாழ்வியல் சார்ந்து எடுத்துக் கொண்டாலும் சரி- தை மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. சங்க இலக்கியங்களில் தைப் பொங்கல் குறித்தான ஏதேனும் குறிப்புகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை ஆனால் தை மாதம் குறித்தான குறிப்புகள் புறநானூற்றில் இருக்கிறது. பொங்கல் குறித்தான குறிப்புகளோ, பிற மாதங்கள் குறித்தான குறிப்புகளோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

நானொன்றும் வானியல் வல்லுநர் இல்லை. ஆனால் தை மாதம் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது சரியா தவறா என்று குழப்பம் வரும் போது கருணாநிதி, ஜெயலலிதாவையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு நமக்குத் தெரிந்த வரை சரியான வல்லுநர்கள் வழியாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படியான புரிதலின் வழியாக தை ஒன்றாம் தேதியைப் புத்தாண்டு என எடுத்துக் கொள்வது மிகச் சரியானது என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை தமிழகம் பூமத்திய ரேகைக்குத் தெற்காக இருந்திருந்தால் இந்த கணக்கு முறையே வேறானதாக இருந்திருக்கக் கூடும். 

இத்தகைய விவகாரங்களில் மறைமலையடிகள் உட்பட எந்த அறிஞரைச் சுட்டிக் காட்டினாலும் யாராவது சண்டைக்கு வருவார்கள். அதை முன்வைத்தே உடைக்கவும் செய்வார்கள். யாரையும் சுட்டிக் காட்ட வேண்டியதில்லை. மேற்சொன்ன புரிதலிலிருந்தே பேசலாம். அப்படியும் சம்மதமில்லை என்றாலும் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.

மீண்டுமொருமுறை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

(16.01.2019 அன்று கோபிபாளையம் தூய திரேசாள் ஆரம்பப்பள்ளியில் பொங்கல் விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

13 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Sir, I don't want to loss one holiday. So let it be in April.

நந்தா said...

சோதிடர் மணி னு ஒரு போர்டு வைங்க, கூட்டம் அள்ளும். அப்றம் டேட்டா சைன்சுக்கு டாட்டா :)

KANDASAMY said...

இதை தான் ஏற்கனவே இரண்டு அயன மண்டலம் பிரித்து கணக்கீடு வைத்து உள்ளார்கள்


டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுழற்சி அடிப்படையில்தான் ஆண்டு துவக்கம் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். இதில் எந்த இடத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்ப்து நாட்டுக்கு நாடு பகுதிக்கு பகுதி வேறுபடுகிறது. மகர ரேகையை தொட்டு விட்டுத் திரும்பும் டிசம்பர் 22, அல்லது கடக ரேகையை தொட்டுத் யூ டேர்ன் அடிக்கும் ஜுன் 21 (இத் தேதிக்ள் சற்று மாறுபடலாம்) அன்றோ எடுத்துக் கொண்டிருந்தால் ஆண்டுக் கணக்கீடு எளிதாக் இருக்கும். ஆனால் ஒவ்வொரு பகுதியில் உள்ளவரும் தங்கள் பூகோள அமைப்புப்படி ஆண்டுக் கணக்கீடு செய்து நாட்காட்டி உருவாக்கிக் கொண்டனர். தமிழ் நாட்டு புவியியல் அமைப்பின் படி ஏப்ரல் மத்திய காலத்தில் சூரியன் தலைக்கு நேராக ப்ரகாசிப்பதை அறிய முடியும். . இதன் காரணமாக ஆண்டுக் கணக்கு தொடங்கப் பட்டிருக்கலாம். திருச்சி தஞ்சை மதுரை கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் ஏபரல் 13 முதல் 18 வரை ஏதாவது ஒரு தேதியில் சூரியன் நேர் செங்குத்தாக ப்ர்காசிக்கும். கன்னியாகுமரியில் இன்னும் சற்று முன்னதாக செங்குத்து நிலைக்கு வருகிறது.சென்னையில் மேமாதத்தில்தான் 90* டிகிரியில் காணமுடியும். தமிழ்நாடு தோராயமாக 8முதல் 13டிகிரி வட அட்சங்களுக்கிடையில் அமைந்துள்ளது. ஒரு டிகிரியை சூரியன் கடக்க 3.88 நாட்கள் ஆகின்றன. ஆனால் நிலநடுக்கோட்டுபகுதிகளில் மார்ச் மற்றும் செப்டம்பரில் செங்குத்தாக சூரியன் ஓளிவீசும். சூரியன் செங்குத்தாக பிராகாசிக்கும் நாளை கணக்கில் எடுத்துக் கொண்டு தென்னிந்திய ஆண்டுகள் தொடங்கப் பட்டிருக்கலாம். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் சூரியன் நேர்செங்குத்தாக வர வாய்ப்பில்லை. 23.5 டிகிரிக்கு மேல் உள்ள அட்ச ரேகைப்பகுதிகளில் செஙுத்தாக தலைக்குமேல் பார்க்க இயலாது. ஏன் டில்லியில் கூட செங்குத்து நிலைக்கு மிக அருகில் வந்து திரும்பிவிடும். .அதனால் அவர்களுக்கு ஆண்டு எப்படி தொடங்குவது என்ப்தில் அதிக குழப்பம் இல்லை. அதிக பட்சம் தெற்கு பகுதி 23.5 டிகிரியில் ப்ரகாசிப்பதை டிசம்பரில் ஆண்டுத் தொடக்கமாக கொள்ள அதிக வாய்ப்பு இருந்தது. (இங்கெல்லாம் வடகிழக்குப் பகுதியில் சூரியன் தோன்றவே தோன்றாது). ஆனால் நடைமுறையில் ஜனவரி 1 பின்பற்றப் பட்டு விட்டது.அறிவியல் உலகம் அத்ற்கேற்றபடி கணக்கீட்டு வழி முறையை வகுத்துக் கொண்டது. ஆனாலும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஜனவரியில் தொடங்கும் பொது ஆண்டில் (ஆங்கில ஆண்டு அல்ல )அவ்வப்போது சில மாற்றங்களை அறிவித்து வருகிறது. அறிவியல் வளர்ச்சிக்கு முந்தைய அவர்வர் ஆண்டுக் கணக்கை தொன்மையாக கருத் வேண்டுமேயன்றி அதில் மாற்றம் செய்வது ஏற்புடையதல்ல. ஆண்டுகளின் பெயர்கள் வடமொழியில் இருக்கிறதேயன்றி மாதங்களின் பெயர்களில் ஏன் எழுத்துகளில்கூட வடமொழி இல்லை. குறிப்பாக மார்கழி. ழ் வரிசை தம்ழுக்கே உரித்தானது அல்லவா?

சேக்காளி said...

//ஒருவேளை தமிழகம் பூமத்திய ரேகைக்குத் தெற்காக இருந்திருந்தால் இந்த கணக்கு முறையே வேறானதாக இருந்திருக்கக் கூடும்//
அப்ப நாம அந்த ரேகைக்கு தெக்க இல்லியா?

சேக்காளி said...

anonymous "Sir, I don't want to loss one holiday. So let it be in April.
ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள். அரசு விடுமுறைதான்.
அதனால தை 1 ஐ மறுக்கா (இன்னொரு தடவை) பரிசீலனை செய்யவும்.

Anonymous said...

Shame on you. You are not a honest person. Just because you are financially honest, you can't claim you are intellectually honest. You are intellectually corrupt person.

Anonymous said...

You don't want to publish comments which are not praising you. You are intellectually dead person. You can only live a pseudo dishonest intellectual life.But you write as though you encourage discussions and difference of opinion.

Anonymous said...

Who changed the Tamil new year date? Brahmins?? Some conspiracy?? . This totally DMK politics for their survival. Don't talk half cooked stories. Since people are not countering you with questions because of respect, don't think you are super intellectual person.

Vaa.Manikandan said...

என்னவொரு பதற்றம்? :)

தண்ணீர் குடித்துவிட்டு பொறுமையாகத் தட்டச்சு செய்யவும். Comment moderation இருக்கிறது ஆனால் தனிப்பட்ட தாக்குதல், பிறரை வம்பிழுத்தல் தவிர வேறு எந்தவொரு பின்னூட்டத்தையும் தடை செய்வதில்லை. முழுமையாக வேக வைக்கப்பட்ட கதைகளை நீங்கள் பின்னூட்டமாக இடலாம் அல்லது மின்னஞ்சலில் அனுப்பினால் தனியொரு பதிவாகவே இடுகிறேன். எனக்கு எந்த மனத்தடையுமில்லை.

பி.கு: என்னை நேர்மையாளன் என்றோ அறிவாளி என்றோ நினைத்துக் கொள்வதுமில்லை. சொல்லிக் கொள்வதுமில்லை. நேர்மையாக இருக்க முயற்சிக்கிறேன் அவ்வளவுதான்.

மீண்டும் சொல்கிறேன் - பதற்றமில்லாமல், தண்ணீரைக் குடித்துவிட்டு பதில் எழுதவும். இங்கே எழுதப்படுவதால் ஒரேயிரவில் உலகம் குப்புறம் விழுந்துவிடாது. ஒரு சிறு வட்டம். அவ்வளவுதான். அதைத் தாண்டி எதுவுமில்லை.

Unknown said...

// வேளாண்மை வாழ்வியல் சார்ந்து எடுத்துக் கொண்டாலும் சரி //
அது எப்படி சரியா இருக்கும், தை என்றால் அது அறுவடை காலம் தானே. 'ஆடி பட்டம் தான் தேடி விதை' அப்படினு சொல்லுவாங்க, அப்ப வேளாண்மை வாழ்வியல் சார்ந்து ஆடி 1 வருசபிறப்பு னு செல்லாமா??

சேக்காளி said...

"ஒரு ஆப்பாயில் பார்சேல்ல்ல்ல்ல்" சொல்லலாம்னா 10% ஆளுக சாப்புடுறாகளோ என்னமோ தெரியலியே.

Anonymous said...

Bro, What about Vishu, Malayalam new year. It also falls nearly on same time. No much geographical difference between Tamil nadu and Keralam. Seems like this controversy politically motivated.