Jun 13, 2018

கழுதை மேய்க்கத்தான் போவோனும்

பெங்களூரில் நேற்று ஒருவர் பனிரெண்டாவது மாடியிலிருந்து எட்டிக் குதித்துவிட்டார். அலுவலகத்தின் மாடி அது. அலுவல் சம்பந்தமான அழுத்தம் இருக்கக் கூடும் என்று விசாரிக்கிறார்களாம். இப்பொழுதெல்லாம் இவை பெரிய செய்தியே இல்லை. மாதம் இரண்டு பேராவது இப்படிச் சாகிறார்கள்.  வேலை போய்விடும், வேலையின் அழுத்தம் அதிகம் என்றெல்லாம் நடுங்குகிறவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. 

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் போதும்- பிழைக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. எவனை நம்பியும் நாம் பிழைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வேலையே போனாலும் சரி- கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். கொஞ்ச நாட்களுக்குத்தான். பிறகு எப்படியும் நமக்கு ஒரு வழி கிடைத்துவிடும்.

உசுப்பேற்றுவதற்காக இதைச் சொல்லவில்லை. 

எங்கள் ஊர்ப்பக்கம் 'கழுதை மேய்க்கத்தான் போவோனும்' என்று திட்டுவார்கள். இப்பொழுது அதுவும் கூட நல்ல தொழில்தான். இரண்டொரு நாட்களுக்கு முன்பாக அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த  போது மங்கமன்பாள்யா சாலையில் ஒருவர் ஐந்தாறு கழுதைகளை ஓட்டிக் கொண்டிருந்தார். இப்பொழுதெல்லாம் கழுதைப்பால் வியாபாரம் கொடி கட்டுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பெங்களூருவில் இப்படியெல்லாம் வித்தியாசமான தொழிலைச் செய்தால் அவர்களிடம் துணிந்து தமிழில் பேசலாம். நம்மவர்களாகத்தான் இருப்பார்கள்.

வண்டியை நிறுத்தி 'எந்த ஊருங்க நீங்க?' என்றதற்கு 'ராயக்கோட்டை' என்றார்.

 ஆறுமுகம்.

பெங்களூரிலிருந்து ராயக்கோட்டை பக்கம்தான்.



ஐந்தாறு பேர்கள் இருபது முப்பது கழுதைகளை ஓட்டி வந்து பெங்களூரிலேயே தங்கி இருக்கிறார்கள். விடிந்தால் கழுதையை ஓட்டிக் கொண்டு வீதி வீதியாகச் செல்கிறார்கள். பால் வேண்டும் என்று கேட்கிறவர்களுக்கு அங்கேயே கறந்து ஊற்றுகிறார்கள். கழுதைப்பால்தான். சொன்னால் நம்ப முடியாது. ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஆயிரத்து ஐநூறு முதல் இரண்டாயிரத்து ஐநூறு வரை. 'அடிக்கறான் பாரு உடான்ஸ்' என்றுதானே தோன்றும்? ஆறுமுகம் கையில் வைத்திருக்கும் சங்கு நிறைய பால் ஊற்றிக் கொடுத்தால் அது ஐம்பது ரூபாய். சிறு குடுவையில் ஊற்றிக் கொடுத்தால் நூறு ரூபாய்.

மேய்க்கிற வேலை கூட இல்லை. இதற்கு மேல் ஆச்சரியம் வராமல் இருக்குமா? 

'உங்களை ஒரு படம் எடுத்துக்குறேன்' என்றேன். சிரித்தபடியே திரும்பி நின்றார். 

'இந்த பால் எதுக்குங்க?' 

'குழந்தைங்களுக்கு இருமல் சளி இருந்தால் கொடுக்கலாம். நல்லா பசி எடுக்கும்' என்று வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தார். இருக்குமோ என்னவோ. 

கழுதை மேய்க்கிறவர் கூட மாதம் அறுபதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்து வைத்திருக்கிறார். நமக்கு ஐடியா கிடைக்காதா? கொஞ்சம் யோசித்தால் போதும். சம்பாதிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்துவிடலாம். நூற்றியிருபது கோடி மக்கள் இருக்கிறார்கள். இந்த மனிதர்களுக்கான தேவை மிகப்பெரியது. கண்டுபிடிக்கப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய ஏற்கனவே வியாபாரிகள் இருக்கிறார்கள். தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். 'இது உங்களுக்கு தேவை' என்று புதியதாக ஒரு தேவையை அடையாளம் கண்டுபிடித்து கொடுக்கிறவர்கள் தமக்கான தொழிலைக் கண்டுபிடித்துக் கொள்கிறார்கள்.

ஆறுமுகம் மாதிரியானவர்கள் சொல்லும் 'கழுதைப்பால் பசியைத் தூண்டும்..குழந்தைக்கு கொடுங்க' என்பது கூட புதிதாக உருவாக்கும் தேவைதான். 'இப்போ இருக்கிற அரிசி பருப்பு பூரா கெமிக்கல் சார்...இயற்கையான அரிசி இது' என்று விற்பது அப்படி புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் தொழில். வரிசையாகச் சொல்லலாம். எல்லாவற்றிலும் இதுதான் சூட்சுமம். தேவையை உருவாக்க வேண்டும் அல்லது இருக்கும் தேவையை கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டும். அடுத்தவர்களை ஏமாற்றாமல், பைத்தியக்காரனாக்காமல் தேவையை உருவாக்குவதில் தவறே இல்லை.

இதைத்தான் 'புதியதாக தொழில் தொடங்குகிறேன்' என்று யாராவது சொன்னால் சொல்லத் தோன்றும். அடுத்தவர்களிடம் சம்பளத்துக்கு வேலையில் இருந்தாலும் இதைத்தான் சொல்லத் தோன்றும். வாய்ப்புகள் குறித்து மனம் யோசித்துக் கொண்டேயிருக்க வேண்டும். பொதுவாக நமக்கு சம்பளம் வந்து கொண்டிருக்கும் வரையில் எதுவுமே பிரச்சினையில்லை. எப்பொழுதாவது சம்பளம் ஆட்டம் காணும் போதுதான் பயம் வந்துவிடுகிறது. அதுவும் முப்பத்தைந்தை தாண்டிய பிறகு கேட்கவே வேண்டியதில்லை. இ.எம்.ஐ தொடங்கி குழந்தைகளுக்கான பள்ளிக்கட்டணம் வரை எல்லாமும் சேர்ந்து பயமுறுத்தும். அதனால்தான் பதறுகிறார்கள். 

எந்தக் காலத்திலும் பயப்பட வேண்டியதில்லை என்பதை நாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கலாம். இந்த உலகத்தின் தேவைகள் மிக அதிகம். அந்த தேவையை நிறைவேற்றும் ஒரு மீச்சிறு பகுதியை நாம் அடையாளம் கண்டறிந்து எடுத்துக் கொண்டால் போதும். வாழ்நாள் முழுக்கவும் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். வெறும் டிகிரியை வைத்துக் கொண்டு அடுத்தவனுக்கு மாடு மாதிரி உழைத்து,  எப்பொழுதுமே ஜன்னலைத் தாண்டி யோசிக்கவில்லையென்றால் ஜன்னலைத் தாண்டி எட்டிக் குதிக்கத்தான் தோன்றும்.

உண்மையிலேயே பணம், வேலை, சம்பளம் என்பதெல்லாம் அற்பமான விஷயங்கள். சத்தியமாகத்தான். எப்படியோ அவற்றை மிக முக்கியமானவையாக நம் மனம் நினைத்துக் கொள்கிறது. அதுதான் நம் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூல காரணமாகிவிடுகிறது.  கடைசிக்கு, கழுதை மேய்த்து கூட சம்பாதித்துவிடலாம். 

9 எதிர் சப்தங்கள்:

S.NEDUMARAN , said...

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”

சேக்காளி said...

//கடைசிக்கு, கழுதை மேய்த்து கூட சம்பாதித்துவிடலாம். //
தடுக்கும் கௌரவத்தை என்ன செய்ய?

Vaa.Manikandan said...

கடைசிக்குன்னுதானே சொன்னேன்? சாவுவதற்கு முன்பாக..

அன்பே சிவம் said...

கழுதைப்பால் Concept புதுசெல்லாம் இல்லைங்க. இப்பவும் எல்லா பகுதியிலும் வீட்டு பெரியவர்களாகட்டும் பிறந்த குழந்தைக்கு ஒரு சில வாரங்களில் ஊட்டம் படுகிறது. அதற்கு காரணமாக குரல் வளம், நோய் எதிர்ப்புச் சக்தி என சொல்லப்படுகிறது. ஆனால் அது குறித்த மற்ற விவரங்கள் தெரியாது.

Unknown said...

உண்மைதாங்க, படிப்பு மூலமா மாதம் 35000 சம்பளம் வாங்கினேன், இப்ப நம்ம ஊர்லயே மாட்டுப் பண்ணை வச்சு மாதம் 60000 வருமானமும் அதற்கு அதிகமாக நிம்மதியும் கிடைக்குது..

சிவா said...

கழுதைகள் முன்பு ஊருக்கு ஊர் சுமை தூக்க வண்ணான் வைத்திருப்பார்கள். இப்போது அந்த தேவை இல்லை என்பதால் அவைகள் தெரு தெருவாக சுற்றுவதை பார்க்க பாவமாய் இருக்கும். மனிதன் மெதுவாய் அழித்து கொண்டிருக்கும் உயிர்கள் எவ்வளவோ. எப்படியோ ஏதோ ஒரு வழியில் அவைகள் அழிந்து போன இனமாய் இல்லாமல் மீட்கப்பட இது பயன்பட்டால் சரி. சந்தோசம்

Anonymous said...

இதையே தான் ரிச் டாட் புவர் டாட் புக் கூட சொல்லுது...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முன்பே இதனைப் படிக்க நேர்ந்திருந்தால் இப்படி எழுதி இருக்கமாட்டேன்
நான் கழுதை

சேக்காளி said...

முரளிதரன் "வடிவேலு வாங்கிய கழுதை"
படித்தேன். நல்லா இருக்கு கற்பனை.