Jun 14, 2018

தம்பி எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு கொடு..

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பேச்சு போட்டிக்காக ஈரோடு அழைத்துச் சென்றார்கள். பாரிமணியம் என்ற ஆசிரியர்தான் எங்களுக்கு பாதுகாப்புக்கு. அதற்கு முன்பாகவே ஒன்றிரண்டு கில்மா படங்களை ஊரில் பார்த்திருந்தேன். சாந்தி தியேட்டரில் நிறைய வரும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் யாராவது பார்த்துவிட்டால் பெரிய வம்பாகிவிடும். இப்பொழுதே சுண்டைக்காய் மாதிரிதான் இருக்கிறேன். பள்ளிக் காலத்தில் கேட்கவா வேண்டும்? பம்மி பம்மி உள்ளே சென்று வெளியே வருவதற்குள்..ஸ்ஸ்ஸ்ப்பா . படம் பார்க்கும் போது இருந்த ஜிவ்வு எல்லாம் வெளியே வந்து சேர்வதற்குள் காணாமல் போய்விடும். அதனால் உள்ளூர் தியேட்டர்களில் போஸ்டர் பார்ப்பதோடு சரி. 

ஈரோடு போகும் போது ஒரு படமாவது பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். இந்த மாதிரி காரியங்களில் கூட்டு வைத்துக் கொள்வதில்லை. எதற்கு வம்பு? ஏதோ உலக  சாதனை செய்த மாதிரி அவனவன் பேசத் தொடங்கிவிடுவான். தனியாகச் செல்வதுதான் வசதி. ஆனால் பள்ளியிலிருந்து வந்திருக்கும் குழுவை கத்தரித்துவிட்டுவிட்டு தனியாகச் செல்ல வேண்டும் என்றால் ஏதாவது புருடா விட வேண்டும். பாரிமணியத்திடம் 'சார் திண்டல்ல சித்தப்பா வீடு இருக்குது..போட்டி முடிஞ்ச பிறகு அங்க போய்ட்டு வந்துடுறேன்' என்று சொன்னேன். வாத்தியாருக்கு என் மேல் நம்பிக்கை அதிகம். எந்த மறுப்புமில்லாமல் சரி என்று சொல்லிவிட்டார். 

போட்டி மதியம் முடிந்தது. இரண்டாம் பரிசு. கையில் பணமும் கொடுத்து விட்டிருந்தார்கள்.துல்லியமாக நினைவில் இல்லை- 'செவன் நைட்ஸ் இன் த பெவெர்லி ஹில்ஸ்' என்று நினைக்கிறேன். இளம் தம்பதி ஏழு நாட்கள் அந்த மலைப்பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி இருப்பார்கள். ஏழு நாள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை. அபிராமி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது. ஈரோட்டில் பேருந்து நுழையும் போதிருந்தே போஸ்டர்களைத் தான் கண்கள் துழாவிக் கொண்டிருந்தன. ஆங்கிலத்தில் எழுதியிருந்த படத்தின் பெயரை படித்து சேர்க்கவே எனக்கு அரை மணி நேரம் பிடித்தது. பெவெர்லி என்பது ஒரு இடம் என்பதே எனக்கு வெகு காலத்துக்குப் பிறகுதான் தெரியும். ஹில்ஸ்க்கு முன்பாக பெவெர்லி என்று இருந்ததால் ஏதோ கசமுசா வார்த்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 'வசனமா முக்கியம் வகையறா' என்பதால் எந்த மொழியாக இருந்தால் என்ன என்று முடிவுக்கு வந்துவிட்டேன்.

தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவரே ஒரு மார்க்கமாகத்தான் பார்த்தார். ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்பட முடியுமா? உள்ளே நுழைந்து தைரியமாக அமர்ந்து கொண்டேன். உள்ளூர் திரையரங்காக இருந்தால் இப்படி தெனாவெட்டு காட்ட முடியாது. தலையை மறைத்துக் கொண்டு அடங்கிக் கிடக்க வேண்டும். படம் ஆரம்பித்து, முக்கியமான கட்டத்தில் எல்லாம் கத்தரித்து, கூட்டம் கத்தி கதறி, ஆர்ப்பரித்து கடைசியில் போனால் போகட்டும் என்று ஒரே ஒரு பிட்டை காட்டி புளகாங்கிதம் அடையச் செய்து வெளியில் அனுப்பியதெல்லாம் தனிக்கதை.

முடித்துவிட்டு- படத்தைதான் - வெளியில் வரும் போது ஒரு ஆளிடம் சிக்கிக் கொண்டேன். 'தம்பி இங்க வா' என்றுதான் அழைத்தார். தீப்பெட்டி கேட்கிறாரோ என்று பக்கத்தில் போனேன். கையை பிடித்துக் கொண்டு 'உங்க அம்மா அப்பாவுக்கு தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாங்க' என்று எடுத்த உடனேயே எமோஷனல் அட்டாக்கை ஆரம்பித்துவிட்டார். இத்தனைக்கும் அந்த ஆளும் படம் பார்க்க வந்தவர்தான். ஆனால் வயதாகி இருந்தது. அவரிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. கடைசியில் எனக்கு அழுகையே வந்துவிட்டது. அவ்வளவு குற்றவுணர்ச்சியை மண்டைக்குள் ஏற்றி பேருந்துக்கு அனுப்பி வைத்தார். வீடு வந்து சேருவதற்குள் அழுது தீர்த்திருந்தேன். 

அவர் எப்படிப்பட்ட மனிதர் என்றால் 'படிப்பு மேல ஆணையா இனிமேல் பிட்டு படம் பார்க்க மாட்டேன்னு' எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு என்று ஜெ. சமாதியில் சசிகலா சத்தியம் அடித்தது போல அடித்து வாங்கி கொண்டார். அவர் அதுவரைக்கும் பேசிப் பேசி என்னை உருக்கி வைத்திருந்தார் என்பதால் எப்படி சத்தியம் கேட்டிருந்தாலும் கையில் அடித்து இருப்பேன்.

சத்தியத்திற்கு பிறகும் சகலமும் பார்த்திருக்கிறேன் என்று வையுங்கள். பொதுவாக படம் பார்க்கும் போது அந்த ஆளின் நினைப்பு வராது. ஆனால் அரியர் விழுந்த போதெல்லாம் அந்த ஆளுக்கு செய்து கொடுத்த சத்தியம்தான் நினைவுக்கு வரும். ஆனால் சத்தியத்தையும் மீறி எப்படியோ திக்கித் திணறி படிப்பை முடித்துவிட்டேன்.

யாருக்காவது அறிவுரை சொல்லும் போது இதுதான் நினைவில் வரும். அந்தக் காலத்தில் சாதாரணமாக அறிவுரை சொல்லிவிட்டார்கள். சத்தியம் கூட வாங்கிவிட்டார்கள். 

இன்றைக்கு அறிமுகமில்லாத- கல்லூரி பையன்களுக்கு கூட சொல்லிவிடலாம். பள்ளி மாணவர்களுக்கு சொல்லிப் பாருங்கள். கதறவிட்டுவிடுவார்கள். திருப்பூரில் நகரத்துக்குள்ளுயே ஒரு டாஸ்மாக் இருக்கிறது. இப்பொழுதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. கொஞ்ச காலத்துக்கு முன்பாக பள்ளி சீருடையணிந்து குடித்துவிட்டு நான்கு மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நண்பர் ஒருவர் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்தார். அவருக்காக காத்திருந்தேன். சமூகம் சீரழிவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? நாம்தான் 24x7 போராளியாச்சே. 

'தம்பி டைம் என்ன ஆகுது' என்றேன். சொன்னார்கள். 'படிக்குறீங்களா?' என்றேன். கேள்வியை  முடிக்கவில்லை. அதில் ஒருவன் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி 'அவன் ஏதாச்சும் அட்வைஸுன்னு ஆரம்பிச்சான்னு வையி' என்று இன்னொருவனிடம் சொன்னான். அதற்கு மேல் என்ன பேசுவது. சத்தமில்லாமல் இடத்தை காலி செய்துவிட்டு வந்துவிட்டேன்.

தெரிந்த ஆசிரியர் ஒருவரிடம் பேசும் போது இதைச் சொல்லி புலம்பினேன். 'நல்லவேளை..தப்பிச்சு வந்துட்டீங்க..மப்புல பாட்டிலை உடைச்சு உள்ள சொருகி இருந்தானுகன்னா என்ன ஆகியிருக்கும்' என்றார். என்ன ஆகியிருக்கும்? வெளியே சரியும் கிட்டினியை கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியதாகியிருக்கும்.

11 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

என் மாணவர்கள் பலர் தலைமை ஆசிரியர்கள் ஆக இப்படி பட்ட மாணவர்கள் இடம்'மாட்டிக்கொண்டு'துன்பம் பட்டதை கேள்வி பட்டு மிகவும் வருத்தம் அடைந்து இருந்தேன். என்ன செய்வது பள்ளிகளுக்கு அருகிலேயே பல குடித்தளங்கள் உள்ளனவே..

சேக்காளி said...

//குடித்தளங்கள்//
அட இது நல்லாருக்கே

சேக்காளி said...

// சத்தமில்லாமல் இடத்தை காலி செய்துவிட்டு வந்துவிட்டேன்//
சரி சின்னையா எனக்கு ஒரு அறிவுரை சொல்லுங்க
(இப்படியாவது கேட்டு மணியோட ஆதங்கத்தை குறைப்போம்.

viswa said...

ரொம்ப நா கழிச்சு நல்லா சிரிக்க வச்சீங்க இப்பிடியே எழுதுங்க

விஸ்வநாதன்

Murugan R.D. said...

சினிமா பட ஹீரோ ரஜினியின் ரசிகராக காலா படத்தை பற்றி இன்னும் எழுதலையே என்று யோசித்துக்கொண்டிருந்தேன், காலா தூத்துக்குடி துப்பாக்கி ஷூட்டிங் பற்றி சினிமா ஷூட்டிங் போல வசனம் பேசியதால் வந்த ஆத்திரம் இன்னும் தீரலையா? காலா விமர்சனத்துக்குப் மாற்றாகதான் இந்த கசமுசா சினிமா விமர்சனமா?

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

சேக்காளி வாழ்க வளமுடன்

Selvaraj said...

செம காமெடி ஹாஹாஹாஹாஹா
'நல்லவேளை..தப்பிச்சு வந்துட்டீங்க..மப்புல பாட்டிலை உடைச்சு உள்ள சொருகி இருந்தானுகன்னா என்ன ஆகியிருக்கும்' என்றார். என்ன ஆகியிருக்கும்? வெளியே சரியும் கிட்டினியை கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியதாகியிருக்கும்'
அதில் ஒருவன் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி 'அவன் ஏதாச்சும் அட்வைஸுன்னு ஆரம்பிச்சான்னு வையி' என்று இன்னொருவனிடம் சொன்னான்.

Selvaraj said...

இன்னிக்கு 'செவன் நைட்ஸ் இன் த பெவெர்லி ஹில்ஸ்' படத்த யாரெல்லாம் Google பண்ணுனீங்க. நிசப்தம் வாசகர்கள் வெட்கபடாம கை தூக்குங்க

குமரேசு said...

யோவ் செல்வராசு, கூகிள்ல அப்படியொரு படமே வரமாட்டீங்குது. ஃபளோவுல பட பெயரையும் அடிச்சு விட்டுட்டாரு போல. வரவர நிசப்தமும் சவுக்கு தளம் மாரியே ஆயிட்டு - எது உண்மை எது காமெடின்னு தெரிய மாட்டீங்குது!

Selvaraj said...

@குமரேசு Said... பதட்டப்படாதீங்க. இந்தமாதிரி விஷயத்தில பொறுமை ரொம்ப முக்கியம். அடுத்தவாட்டி நல்ல கில்மா படமா சொல்லுவாப்ல. நீங்க நம்பிக்கை இழக்காதீங்க

சேக்காளி said...

//இன்னிக்கு 'செவன் நைட்ஸ் இன் த பெவெர்லி ஹில்ஸ்' படத்த யாரெல்லாம் Google பண்ணுனீங்க. நிசப்தம் வாசகர்கள் வெட்கபடாம கை தூக்குங்க//
நானெல்ல்லாம் தேடல ய்யா