ஊர் முழுவதும் மரங்களை நட்டுவதற்காக கடும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. எதிர்பார்த்ததைவிடவும் நிறையப் பேர் களமிறங்கியிருக்கிறார்கள். நேற்றும் கூட ஒன்று கூடல் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. Core Team. அவர்கள் இன்றும் நாளையும் ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரையிலான ஊர்களில் இருக்கும் களப்பணியாளர்கள், தன்னார்வலர்களைச் சந்தித்து 22.01.206 அன்று கோபி ராமயம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறும் செயலாக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப் போகிறார்கள். செயலாக்கக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையான மரம் நடுவதற்கான இடங்களைக் கண்டறிதல், அந்தந்தப் பகுதிக்கான பொறுப்பாளர்கள், பொறுப்பாளர்களுக்கு இலக்காக நிர்ணயிக்கப்படும் மரங்களின் எண்ணிக்கை ஆகியன குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.
அரசியல், வியாபார நோக்கமின்றி பல தரப்பினரும் முன்வந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் சேர்கிறார்கள். மூத்தவர்கள் வழி நடத்துகிறார்கள். இதுவரைக்கும் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. இதே போன்றதொரு செயல்பாட்டை எதிர்காலத்தில் தமிழகத்தில் எங்கே யார் முன்னெடுத்தாலும் அவர்களுக்கு உதவக் கூடும் என்பதால் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் விவரங்களை நிசப்தம் தளத்தில் பதிவு செய்கிறேன். களப்பணியில் அடுத்தவர்களின் அனுபவத்தைத் தெரிந்து கொள்வது முக்கியமான செயல்பாடு. பெரும்பாலான தவறுகளை தவிர்ப்பதற்கும் நேர விரயத்தைக் குறைப்பதற்கும் அது வெகுவாகப் பயன்படும்.
வாட்ஸப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் வழியாகச் செய்தியை அறிந்து கொண்ட உள்ளூரில் வசிக்காத சில நண்பர்கள் ‘நாங்களும் உதவ விரும்புகிறோம்’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இதைச் செய்யுங்கள் என்று கேட்பதற்கு இப்போதைக்கு எதுவுமில்லை. எதைக் கேட்பது என்று எங்களுக்கும் அனுபவமில்லை. தம்மால் செய்ய முடிந்தவற்றை யோசித்து ‘இதைச் செய்கிறோம்’ என்று தங்களால் முடிந்ததைச் சொல்லுங்கள். நிச்சயமாகப் பயன்படுத்திக் கொள்கிறோம். ஓமனில் வசிக்கும் சரவணன் துண்டறிக்கைகளை அச்சிட்டுத் தருவதாகச் சொன்னார். அதுவும் தேவைதான். பல்லாயிரக்கணக்கான பிரதிகள் தேவைப்படும். அச்சகத்தின் கணக்கு எண்ணை அவருக்கு நேரடியாகக் கொடுத்துவிடுகிறேன். பத்தாயிரம் துண்டறிக்கைகளை அச்சிடுவதற்காக ஐந்தாயிரம் ரூபாயை அச்சகரின் கணக்குக்கு அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்குதல், களத்துக்கு வருகிறவர்களின் உத்வேகமும் ஆர்வமும் வடிந்துவிடாமல் காத்தல் என நிறையப் பணிகள் இருக்கின்றன. நிறையப்பேர் சேர்ந்திருக்கிறார்கள். உற்சாகமாக இருக்கிறோம். வெற்றிகரமாக நினைத்ததைச் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
செய்திகளைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்பி வரும் நண்பர்களுக்கு நன்றி.
அச்சிடப்படும் துண்டறிக்கையில் பின்வரும் செய்தி இருக்கும்-
பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதும், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக போதிய எண்ணிக்கையில் மரங்கள் நட்டப்பட்டு பராமரிக்கப்படாததும் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன. பூமிக்கு அரணாக இருக்கும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதன் விளைவுகளைக் கடந்த பல ஆண்டுகளாக நேரடியாகவே கண்டு வருகிறோம். வெகுவாகக் குறைந்த மழையளவு, கடுமையாக உயர்ந்திருக்கும் சராசரி வெப்பநிலை, அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்ட நிலத்தடி நீர், மோசமான சுற்றுச்சூழல் விளைவுகளால் குழந்தைகளையும் பெரியவர்களையும் தாக்கும் நோய்கள் என பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது.
பூத்துக் குலுங்கிய பசுஞ்சோலை பாலையாகிக் கொண்டிருக்கிறது. சிட்டுக்குருவிகளும் கொக்குகளுமாக நிறைந்திருந்த வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது. மழைக் காலத்தில் பாசியேறிக் கிடந்த மண் இப்பொழுது கால்நடைகளுக்குக் கூட புல் முளைக்காத பாறையாகி இறுகிக் கிடக்கிறது. வற்றாத நதிகளில் வெறும் சாக்கடை மட்டுமே தேங்கி நிற்கிறது.
இருபது வருடங்களுக்கு முன்பாக நம் ஊர் எப்படி இருந்தது? இப்பொழுது என்னவாகியிருக்கிறது? பருவம் தவறாது பெய்த மழை ஏன் தவறிப் போனது? மார்கழியிலும் வெயில் காந்த காரணம் என்ன? செழித்துக் கிடந்த பசுமை எங்கே? ஓடைகளில் குதூகலித்து ஓடிய நீர் எங்கே? வெறும் இருபதே வருடங்களில் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்.
ஒரே காரணம்தான் - பசுமையை அழித்துவிட்டோம்.
போகம் தவறாது விளைந்து செழித்த பூமியில் பசுமை இல்லை. மண்ணில் ஈரம் இல்லை. நிழல்தரும் மரங்கள் இல்லை. அந்தியில் பறவைகளின் சப்தம் இல்லை. இயற்கை இயற்கையாகவே இல்லை.
இயற்கையும் முன்னோர்களும் காலங்காலமாக காப்பாற்றிய மரங்களின் பலன்களை இதுவரை அனுபவித்து வந்த நாம் பல்வேறு காரணங்களால் மரங்களை வெட்டி, மண்ணை மலடாக்கி, விவசாயத்திற்கும் வாழ்தலுக்கும் பயன்படாத பூமியாக்கி அதைத்தான் நம் எதிர்கால சந்ததியினருக்கு வழங்கப் போகிறோமா? வறட்சியும் வெக்கையும் காந்தலும் மிகுந்த நிலத்தைத்தான் நம்முடைய பிள்ளைகளுக்கு பரிசளிக்கப் போகிறோமா? அவர்கள் குடிநீருக்கு என்ன செய்யப் போகிறார்கள்? சுத்தமான காற்றுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? அடுத்த சில ஆண்டு காலத்தில் என்னவாகப் போகிறது நம் ஊர்? நினைத்தாலே நெஞ்சு அடைத்துக் கொள்கிறது.
சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய முக்கியமானதொரு தருணத்தில் நின்று கொண்டிருக்கிறோம். இனியும் தாமதித்தால் எதிர்காலம் நமக்கு இல்லை என்றாகிவிடும்.
இப்பொழுதே தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்து ஆடுவதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. குளங்களும் அணைகளும் நதிகளும் வறண்டு வெடித்துக் கொண்டிருக்கின்றன. கால்நடைகள் மேய புல்வெளி இல்லை. மனிதர்கள் குடிக்க நீர் இல்லை. விவசாயம் தனது இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது. மஞ்சளும் நெல்லும் கரும்பும் விளைந்த மண் உயிர்த்தண்ணீருக்காக வாயைத் திறந்து கொண்டிருக்கிறது. இன்னமும் பத்தாண்டுகளில் நிலைமை விபரீதமாகிவிடும். இனியும் செயல்படாமல் இருந்தால் நமக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்.
ஒவ்வொருவரும் களம் காண வேண்டிய சூழல் ஆரம்பமாகியிருக்கிறது.
ஈரோடு முதல் சத்தியமங்கலம் வழியாக மேட்டுப்பாளையம் வரைக்கும் சாலை விரிவாக்கப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படவிருக்கின்றன. நிலத்தைக் காக்க, நீரைக் காக்க, காற்றைக் காக்க இனியும் தாமதிக்காது செயலாற்ற வேண்டிய காலம் இது. உடனடியாகச் செய்ய வேண்டியதெல்லாம் நிலத்தடி நீரை வெகுவேகமாக உறிஞ்சி மண்ணை சீரழிக்கும் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதும், அரசின் ஒத்துழைப்போடு பொது இடங்களிலும் புறம்போக்கு நிலங்களிலும் மரங்களை நட்டி பராமரிப்பதும், சாலை விரிவாக்கப்பணிகள் முடிந்த பிறகு நெடுஞ்சாலைத் துறையின் உதவியோடு பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருப்பது போல நம்மூர்களிலும் சாலையின் ஓரமாக மரங்களை நட்டுவதுமே ஆகும்.
பசுமையைக் காத்தால் மட்டுமே மனிதம் தப்பிக்கும். பசுமை அழிந்தால் உயிர்கள் அழியும். மனிதமும் மறையும்.
மலடாகும் மண்ணைக் காக்க கரம் கோர்ப்போம்! உதவிக்காக அழையுங்கள்...
**********/**********
5 எதிர் சப்தங்கள்:
Hi Mani, Can you update the date.. it says 22-01-206?
People can understand its 22-01-2017 but want to make sure :)
திரு.மணிகண்டன் அவர்களுக்கு சாலையோர மரங்கள் நடுகையில் வெளிநாட்டு மரங்கள் தவிர்த்து நம் நாட்டு மரங்களை நட்டால் நீரூற்றி பராமரித்து வளர்ந்த பின் புயல் மழைக்கும் வீழாது இருக்கும். புளியமரம், வாகை மரம், அரச மரம், புங்க மரம், மகிழ மரம், நாவல், இலுப்பை, பூவரசு, நாட்டு வாதநாராயண மரம் போன்ற மரங்களை நடலாம். குறிப்பாக புளிய மரம் மற்றும் புங்க மரங்கள் வருடந்தோறும் வருவாய் ஈட்டி புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் மரங்கள்.
புங்க மரத்தின் சிறப்புக்கள் :
- புங்க மரத்தின் தாயகம் இந்தியா. குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை.
- கோடையில் மிக சிறிதளவே இலையுதிரும் ,பசுமை மாறா மரம்
நிழல் தரக்கூடிய, எளிதில் அதிக பராமரிப்பு இன்றி வளரக்கூடிய மரம்.
- ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான்.
- இந்த மரத்தின் விதையில் இருந்தும் எண்ணெய் மற்றும் பயோ டீசல் தயாரிக்கலாம். பயோ டீசல் என்பது சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத எரிபொருள். விதை சேகரிப்பின் மூலம் புதிய வேலைவாய்ப்பும் உண்டாகும்.
- இதன் வேர்கள் ஆழத்தில் மட்டும் அல்லாமல் பக்க வாட்டிலும் வலைப்போல பரவும் தன்மை கொண்டவை என்பதால் மண் அரிப்பு உள்ள இடங்களில் ,மண் பாதுகாப்பிற்காகவும் நடப்படும் ஒரு மரம். புயல்மழை வந்தாலும் எளிதில் சாயாது.
- வேர் முடிச்சுகள் வளி மண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்துவதால் ஊட்ட சத்து இல்லாத நிலமும் வளமடையும்.
சாலையோரம் தவிர்த்து பொது இடங்கள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனிநபர் தரிசு நிலங்களில் நட, மரம் தெரிவு செய்கையில் முடிந்த அளவு அழிந்து வரும் நாட்டு மரங்களையும் சேர்த்து நடவும். கீழ் கண்ட மரங்கள் யாவும் 20 , 30 வருடங்களுக்கு முன் வேலியோரம் சாதாரணமாக காணப்பட்ட மரங்கள் ஆனால் இன்றோ தேடினாலும் கிடைப்பதில்லை அனைத்துமே உண்ண கனி தரும் மரங்கள். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற ஏற்றுமதி கனிகளை கண்டபின் மக்கள் சுத்தமாக மறந்து, ஒதுக்கி விட்ட நாட்டு கனி மரங்கள்.
இலந்தை மற்றும் கொடுக்கா புளி மரங்கள் நாம் அறிந்ததே, இவை தவிர நாம் அறியாத கிட்டத்தட்ட அழிவு நிலைக்கு வந்து விட்ட நாட்டு கனி மரங்கள்.
காரைப்பழம்
சூரி பழம்
தொரட்டி பழம்
வீரை
அழிஞ்சி பழம்
விரியன் பழம்
களாக்காய்
வீரன் பழம்
நறுவிலிப் பழம் (மூக்குச்சளிப் பழம்)
குருவி பழம்
கிண்ணம்பழம் (தக்கை மரம்)
ஈச்சம் பழம்
தெரணிப்பழம்
புலாப்பழம் (பூலாப்பழம்)
சொடலி
காட்டு சீத்தா
வெள்ளை கோட்டான்
காட்டத்தி
பல்லுகுச்சி பழம்
நரி வெளாம் பழம்
உணிப்பழம்
கிழுவைப்பழம்
சுக்கம் பழம்
தோடம்பழம்
கழுதை விட்டை மாம்பழம்
ஆனம்பழம்
ஞானாப்பழம்
ஆசினிப்பழம்
துடரிப்பழம்
கொஞ்சிப்பழம்
மகுடம்பழம்
சூரைப் பழம்
சுரபுன்னை (சுரமின்னாப்பழம்)
துவரம்பழம்
தேற்றன் கொட்டை மரம்
வருப்புலாபழம்
தவிட்டான்பழம்
பாலைப்பழம்
பூனை பழம்
புளிச்சிக்காய் மரம்
மிளகு பழம்
ஆயினி சக்கை
"விதைப் பந்துகளை மழைக் காலத்துக்கு முன்பாக தரிசு நிலங் களிலும் காடுகளிலும் போட்டுவிட வேண்டும். மழை பொழியும்போது இவை மண்ணோடு மண்ணாக கரைந்து செடிகளும் மரங்களும் இயல்பாக முளைக்கும். பொதுவாக ஒரு தாவரம் விதையாக தூவப்பட்டு இயல்பாக முளைப்பதுதான் ஆரோக்கியமானது. அப்போது தான் மண்ணில் விதையின் ஆணி வேர் செங்குத்தாக ஊடுருவிச் செல்லும். இந்த வகையில் ஒரு மரம் எவ்வளவு உயரமாக பூமியின் மேற்பரப்பில் வளர்கிறதோ அவ்வளவு உயரத்துக்கு பூமிக்கு கீழே ஆணி வேர் ஊடுருவும். ஆனால், சிறு பிளாஸ்டிக் பைகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கன்று களின் வேர்கள் நேராக அல்லாமல் வளைவாகவும் சுருண்டும் இருக் கும். அந்தக் கன்றுகளை மண்ணில் நட்டால் அவற்றின் வேர்கள் பூமியை ஆழமாக ஊடுருவிச் செல் லாமல் பக்கவாட்டிலேயே செல்லும். இதனாலேயே தெருக்களிலும் வீடு களிலும் நடப்படும் மரங்கள் புயலில் விழுந்துவிடுகின்றன. அதேசமயம் காடுகளில் இயற்கையான விதைப் பரவல் மூலம் வளரும் மரங்கள் உறுதியாக இருக்கின்றன."
Source:
http://m.tamil.thehindu.com/tamilnadu/சென்னையில்-தூவ-30000-நாட்டுமர-விதைப்-பந்துகள்-தயார்-இளைஞர்களை-அழைக்கிறது-தாம்பரம்-மக்கள்-குழு/article9436988.ece
செடிகளை நடும்பொழுது பிளாஸ்டிக் பையை முழுதுமாக எடுத்துவிடாமல், அடியில் மட்டும் கிழித்து விட்டு நடுவதால் வேர்கள் செங்குத்தாக மட்டுமே ஊடுருவும்.
பள்ளியில் படித்த காலத்தில் புங்க மரம் மற்றும் புளிய மரம் நன்மை பயக்கும் என படித்த காரணத்தால் பம்மல், சென்னையில், எனது வீடு முன்பக்கம் இவையும் பின் பக்கம் தென்னையும் வைக்க நான் அலைந்தும், எனக்கு கிடைத்தது என்னவோ தென்னம் பிள்ளையும், நெல்லி மர கன்றுகள் மட்டுமே. அவற்றையே வைத்தேன்.
புங்க, புளிய மரம் வைக்க முடியவில்லை என்ற என் ஆதங்கம், பெங்களூர் வந்த பின்னும் உள்ளது.
Post a Comment