Jan 16, 2017

தேவதையும் முண்டக்கண்ணனும்

வெள்ளை நிற டீஷர்ட் அணிந்திருந்தாள். நீல நிற ஜீன்ஸ். தேவதைதான். கோபக்கார தேவதை. அநேகமாக ஐடி நிறுவனமொன்றில் பணி புரிகிறவளாக இருக்க வேண்டும். அவனும் அப்படித்தான் இருந்தான். அவர்கள் இருவரும் மங்கமன்பாளையாவில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். திருமணமானவர்களா அல்லது காதலர்களா என்று கணித்துவிட முடியாத உருவமும் உடல்மொழியுமாக திட்டிக் கொண்டிருந்தார்கள். மங்கமன்பாளையா எப்பொழுதுமே கசகசத்துத்தான் கிடக்கும். ஜனநெருக்கடி அதிகம். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்கள். சிலரது கண்கள் இருவரையுமே வெறித்துக் கொண்டிருந்தன. சிலர் பார்த்தும் பார்க்காததும் போல கடந்து கொண்டிருந்தார்கள். 

அப்போ பார்மஸியில் மருந்து வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தேன். அவர்களது சப்தம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. சண்டையிடுவதென்றால் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு சத்தம் வெளியில் வராமல் பேசிக் கொள்ளும் மனிதர்களைத் தெரியும். எவ்வளவுதான் கோபமிருந்தாலும் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அடக்கிக் கொள்வதுதானே நம்மவர்களின் வழக்கம். நம் காலத்தில் ‘என் கோபம்...நான் காட்டுறேன்...அடுத்தவனைப் பத்தி எனக்கென்ன கவலை?’ என்கிற மனநிலை கிட்டத்தட்ட அத்தனை உணர்வுகளுக்கும் வந்து சேர்ந்துவிட்டது. காதல், காமம், அன்பு என எல்லாவற்றையும் கடை பரப்பிவிடுகிறோம். 

வெள்ளிக்கிழமையன்று பிரிகேட் சாலையில் சுற்றுவதற்கு காணக் கண்கோடி வேண்டும். கண்ணாடியணிந்த ஒன்றரைக் கண்களை வைத்துக் கொண்டு என்னுடைய அவஸ்தை எனக்குத்தான் தெரியும். திரும்பிய பக்கமெல்லாம் கண்காணிப்பு கேமிரா உண்டு. ஆனால் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத தலைமுறை இது. அந்தத் தலைமுறையின் பிரதிநிதிதான் டீஷர்ட் தேவதையும் அந்த முண்டக்கண்ணனும். தேவதைகளோடு சுற்றுகிற ஒவ்வொரு பையனும் எனக்கு முண்டக்கண்ணனாகத்தான் தெரிகிறார்கள். பொறாமை. சண்டை ஒரு கட்டத்தை நெருங்கினால் அவளுக்கு ஆதரவாகக் களமிறங்கி அவனை மிரட்டி அவளது கன்னத்தை வருடிக் கொடுத்து ஒரு காபி குடிக்க அழைத்துச் செல்லலாம் என்று மனம் சிறகடித்துக் கொண்டிருந்தது. எப்படியும் அவன் அவளை ஓங்கி அறைவான் என்ற முடிவுக்கு வந்து சேர வெகு நேரம் பிடிக்கவில்லை. 

ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி திட்டிக் கொண்டிருந்தார்கள்.  

கியர் படுவேகமாக மாறிய ஒரு கட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத காரியத்தை அந்த தேவதை செய்தாள். அருகில் இருந்த இளநீர்கடைக்காரரின் வண்டியிலிருந்த கத்தியை எடுத்து தனது கழுத்து மீது வைத்துக் கொண்டாள். சினிமா பார்த்து கெட்டவளாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அதன் பிறகான அவளது வேகமும் குரலும் தொனியும் அப்படித் தெரியவில்லை. கடையிலிருந்து கத்தியை எடுத்ததும் கழுத்தில் வைத்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது. முண்டக்கண்ணன் உட்பட யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. எல்லோரையும் விடவும் அவன்தான் நிலைகுலைந்து போனான். செத்துத் தொலைந்தால் சங்கை அறுத்துவிடுவார்கள் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? கத்தியை தனது கழுத்தில் வைத்துக் கொண்டவள் சுற்றிலும் நின்றிருந்தவர்களைப் பார்த்து செல்போனின் கேமிராவை எடுக்கச் சொன்னாள்.

‘அவனை முதல்ல படம் எடுங்க...கழுத்தை அறுத்துட்டு நான் இவனைப் பத்தி சொல்லுறேன்..ரெக்கார்ட் பண்ணுங்க...வாட்ஸப், ஃபேஸ்புக்குன்னு ஒண்ணுவிடாம ஷேர் செய்யுங்க’ என்றாள். அவள் கண்கள் கசிந்து நின்றன. குரலில் படபடப்பு இருந்தது. அந்த இடத்தில் நின்றிருந்த ஒவ்வொருவரையும் மரணத்தின் சாட்சியாக்கிவிடுவதற்கான எத்தனிப்பு அந்தக் குரலில் இருந்தது. ஒன்றிரண்டு பேர் செல்போனை எடுத்தார்கள். முண்டக்கண்ணன் வெகு குழப்பத்தில் இருந்தான். அவளைக் கெஞ்சினான். அழுதான். சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டு செல்போனை எடுத்தவர்களைக் கெஞ்சினான். பிறகு தனது முகத்தை மறைத்தான். அவ்வளவு கூட்டத்திலிருந்து அவளருகில் செல்வதற்கு யாருக்குமே தைரியமில்லை. கதுமையான கத்தியின் அருகாமை அவளை எந்த முடிவுக்கு இழுத்துச் சென்றுவிடக் கூடும் என்ற பயம் என்னைத் தாக்கியிருந்தது. அந்தக் கணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

மீண்டுமொருமுறை ‘கேமிராவை ஆன் பண்ணுங்க’ என்று உரக்கக் கத்தினாள். இப்பொழுது வேறு சிலரும் தயாரானார்கள். பூக்காரப் பெண்மணி மட்டும் அவளைச் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை. 

அந்தப் பெண்மணியை நோக்கி ‘கிட்ட வராதீங்க’ என்று உரக்கக் கத்தினாள். 

‘எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்குங்க’ என்று அந்த மத்தியஸ்த பெண்மணி கன்னடத்தில் சொன்னது அவளுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. தேவதை தொடர்ந்து மிரட்டிக் கொண்டேயிருந்தாள். என்னருகில் நின்றிருந்தவர் அவசர அவசரமாக 100க்கு தகவல் சொன்னார். அவர் இருந்த பதற்றத்தில் ‘சார் இது என்ன ரோடு?’ என்றார். பக்கத்தில் இருந்தவர் இடத்தைத் தெளிவாகச் சொன்னார். அலைபேசியின் மறுமுனையிலிருந்த காக்கிச் சட்டைக்காரர் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் காவலர்கள் வந்துவிடுவார்கள் என்று ஆசுவாசமாகச் சொன்னார்.

அவர்கள் வந்து மட்டும் என்ன செய்துவிட முடியும்? 100க்கு பதிலாக 108 வருவதுதான் சரியாக இருக்கும் என்று கூடத் தோன்றியது. அவளது கோபம் வடிந்து அங்கேயிருப்பவர்களின் பரிதாபத்தைக் கோருபவளாக மாறியிருந்தாள். அவள் அழுதவற்றில் எனக்கு பாதி புரியவில்லை. ஆனால் முண்டக்கண்ணனைக் குற்றம் சாட்டுகிறாள் என்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. கூட்டம் சேர்ந்து கொண்டேயிருந்தது. நிறையப் பேர் அவளைச் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார்கள். ம்ஹூம்.

மொத்தச் சாலையையும் தேவதையும் முண்டக்கண்ணனும் கட்டுப்பாட்டில் எடுத்திருந்தார்கள். பெண்கள் மட்டும்தான் யூகிக்கவே முடியாததைச் செய்வார்கள் என்று அர்த்தமில்லை. ஆண்களும் கூடச் செய்வார்கள். முண்டக்கண்ணன் எதைப் பற்றியும் யோசிக்காமல் நெடுஞ்சாண்கிடையாக அவளது காலில் விழுந்தான். தலையையே தூக்காமல் கெஞ்சினான். சத்தியமெல்லாம் செய்தான். சுற்றியிருந்தவர்கள் இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கவில்லை. இதற்கு மேல் அவளால் வளையாமல் இருக்க முடியும் எனத் தோன்றவில்லை. எட்டி தலையில் உதைத்துவிட்டு கத்தியை அதே தள்ளுவண்டியில் வைத்துவிட்டு வேகமாக நடந்தாள். சிலர் கை தட்டினார்கள். விழுந்து கிடந்தவன் எழுந்து பின்னாலேயே ஓடினான். வீடியோ எடுத்தவர்களுக்கு இனி இதை என்ன செய்ய வேண்டும் என்று குழப்பம் வந்திருக்கக் கூடும். அணைத்து வைத்தார்கள். சனிக்கிழமையன்று உள்ளூர் கன்னட சேனலில் இந்த நிகழ்வு ஒளிபரப்பானதாகச் சொன்னார்கள். 

மத்தியஸ்தம் செய்த பெண்மணிக்கு வாய்கொள்ளாச் சிரிப்பு. சிரித்துக் கொண்டேயிருந்தார். எனக்கும் சிரிப்பாகத்தான் வந்தது. கோபம் வந்தால் எட்டி உதைத்த ஆண்களையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அடி வாங்கிய ஆண்கள் குறித்தும் கிசுகிசுப்பாகச் சொல்வார்கள். அத்தனை பேரும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போது நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்தவன் ஆச்சரியம்தான். சில வினாடிகளில் அதை அவள் ஏற்றுக் கொண்டதும் ஆச்சரியமாக இருந்தது. கணப்பொழுதில் இருவரும் கண்களில் இருந்து மறைந்து போனார்கள். சண்டை இல்லாத இணையர் இந்த உலகில் யார் இருக்கிறார்கள்? சண்டை வரத்தான் செய்யும். அப்படியான தருணங்களில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் வெடிப்பதும், வெடித்தவரைச் சமாதானப்படுத்தவும், மிரட்டவும், அடக்கவும் எந்தவிதமான சாம பேத தான தண்டத்தையும் எடுப்பதும்தான் காதலின் அதிசுவாரசியம். இந்தச் சூட்சமம் தெரிந்தவன் காதலை அனுபவிக்கிறான். தெரியாதவன் ‘இந்த வாழ்க்கையே மொக்கை பாஸ்’ என்று புலம்புகிறான்.  தேவதையும் முண்டக்கண்ணனையும் நினைத்தபடியே வந்து யூடியூப்பில் தேடி பார்த்தேன். இதுவரைக்கும் யாரும் பதிவு செய்யவில்லை. அநேகமாக சில நாட்களில் வந்துவிடக் கூடும். 

8 எதிர் சப்தங்கள்:

sivaraman75 said...

இதை, எல்லோரையும் போல, வீட்டுக்குள்ளேயே செஞ்சு தொலைச்சிருக்கலாமே! ரோட்டுல எதுக்கு இந்த ஸீன்! புதுசா கல்யாணமானவங்களா இருப்பாங்கன்னு நினைக்குறேன் இல்ல அவ்வளவா சண்டை போட்டு பிராக்டீஸ் ஆகலைன்னு நினைக்குறேன்! என்ன இருந்தாலும் நம்ம டிரைனிங் வருமா.....

போ போ கூட்டம் போடாத....போ போ!

Jaypon , Canada said...

Super Narration. ஆனாலும் ஒரு ஆண்மகனை தெருவில் விழவைப்பதா? பெண்மை தெருவில் இருப்பவனை கோபுரத்திற்கு உயர்த்துவது. இது அதுவல்ல.என்ன சேடிஷம்?

Muthu said...

// இந்தச் சூட்சமம் தெரிந்தவன் காதலை அனுபவிக்கிறான். //

இப்போவே இப்படீன்னா ... யப்பா .... கொலை நடுங்குது. பரிதாபப்பட்ட ஜென்மம் பாஸ் இவன். இவனப்போயி ”காதலை அனுபவிக்கிறான்”-னு சொல்றீங்க பாருங்க :)

Aravind said...

"தேவதைகளோடு சுற்றுகிற ஒவ்வொரு பையனும் எனக்கு முண்டக்கண்ணனாகத்தான் தெரிகிறார்கள். பொறாமை".
அன்னி இதையெல்லாம் படிக்கிரது இல்லை என்ற தைரியமா?
இருண்தாலும் அவனை ஒரு அரை விட்டிருண்தால் அவள் அவண் பக்கம் மாரி உங்களை இருவரும் சேர்ண்து சாத்துசாத்துனு சாத்திட்டு அவங்க ஒன்னு சேர்ண்திருப்பாய்ங்க.

Paramasivam said...

இது எலெக்ட்ரோனிக் சிட்டி பகுதியில் சாதாரணமாக நடக்கிறது சார். 4வது கேட், 6வது இன்போசிஸ் கேட் அருகில், வட மாநில யுவன் யுவதிகள் இவ்வாறு உரக்க சண்டை போட்டுக் கொள்வதை நானும் பார்த்திக்கிறேன். ஆனால், கத்தியை தன் கழுத்தில் வைத்து, எதிர் பார்ட்டியை காலில் விழ வைத்த இவள் புது புது புதுமைப் பெண். அதிசய பெங்களூரு.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

எழுதுபவர்களுக்கு ஆயிரம் கண் அதற்கும் மேல் கண்கள் .முண்டக்கண்ணன் சரியான பொறாமை . அவனவன் உசார் பண்ண எப்படியெல்லாம் உருளுகண்டம் போட்டுக்கொண்டு இருக்கிறான் .ஒரு நிமிசத்தில் அவள் மேல் இரக்கம் வந்து ஆண் மேல் தப்பு என்று நம் ஆள் களத்தில் இறங்கிவிடுகிறார்கள் .

Vinoth Subramanian said...

இந்த கதைல நீங்க எதுவுமே செய்யலயா சார்? நீங்க போயி அந்த ஆண் கழுத்துல கத்தி வெச்சிருக்கனும். இல்லாட்டி, அவனும் அவன் கழுத்துல கத்தி வெச்சிருக்கனும். ஒரே காமடிதான் போங்க. அதுசரி... இப்பொ அந்த தேவதை எங்கே? ஐ வாண்டு மீட் ஹெர். I want to meet her!

சேக்காளி said...

//வீடியோ எடுத்தவர்களுக்கு இனி இதை என்ன செய்ய வேண்டும் என்று குழப்பம் வந்திருக்கக் கூடும்//
சரி! சரி! பேஸ்புக் ல அப்லோடு பண்ணி விடுங்க.