Jan 18, 2017

அக்னிக்குஞ்சுகள்

ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் இவ்வளவு வேகமெடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அத்தனை பேரும் இளைஞர்கள். ‘இதெல்லாம் வேலைக்கு ஆகாது’ என்று பேசுகிறவர்கள் சலித்துப் போன அரசியல் நாடகங்களைப் பார்த்துப் பார்த்து தலையில் சொட்டை விழுந்தவர்கள் அல்லது நரைத்துப் போனவர்கள். பெங்களூரில் நடத்துகிற போராட்டம் குறித்தான கலந்துரையாடலுக்குச் சென்றிருந்தேன். அரும்பு மீசையுடனான இளைஞர்கள்தான் அத்தனை பேரும். அவர்களைப் போலவே இன்னமும் இரண்டு மூன்று குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனுமதி வாங்குதல், நண்பர்களுக்குத் தகவல்களைப் பரப்புதல் என்று வெகு வேகமாக இருக்கிறார்கள். 

தமிழகம் முழுவதும் இப்படித்தான். இல்லையா?

மிகச் சிறிய ஊர்களில் கூட ஒன்றிணைந்திருக்கிறார்கள். இளவட்டங்கள் விடுமுறைக்காகச் சேர்ந்திருக்கிறார்கள் என்றும், டைம்பாஸூக்காகச் சேர்ந்திருக்கிறார்கள் என்றும் பேசிக் கொண்டிருக்கும் மூத்தவர்களுக்கு இந்த வேகம் புரிய வாய்ப்பில்லை. சுரணையே இல்லாத சமூகமாகத் தெரிந்த தமிழகம் இன்று சிலிர்த்துக் கொண்டு நிற்கிறது. மொன்னையாகிக் கிடந்த உணர்வுகள் மெல்ல மெல்ல கூர் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்பாராத எழுச்சி இது.

சிலர் ‘அய்யய்யோ..சரியான வழிகாட்டல் இல்லை’ ‘இது நமுத்துப் போய்விடும்’ என்றெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அது சரிதான். போராட்டக்களத்தில் வழிகாட்டல் என்று யாருமே இல்லை. எந்த இளைஞனுக்கும் இத்தகைய போராட்டங்களில் அனுபவமும் இல்லை. ‘வீறு கொண்டு வா’ என்று கர்ஜிக்க எந்தக் கரைவேட்டிக்காரனுமில்லை. அவரவராகக் களமிறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் தாமாகவே முடிவு செய்கிறார்கள். இப்படித்தான் எதிர்காலத் தலைவர்களின் ஆளுமை உருவாக்கப்படுகிறது. இந்த இளைஞர்கள் தமக்கு வழிகாட்ட வேண்டும் என்று யாரையும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் வழிகாட்டுகிறேன் என்று யாராவது துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போனால் ‘நாங்க பார்த்துக்கிறோம்...ஒதுங்குங்க’ என்கிறார்கள்.

வலுவான அரசாக இருந்து சரியாகக் காய் நகர்த்தினால் போராட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்துவிடக் கூடும். நல்லவேளையாக இங்கு வலுவான அரசு இல்லை. அவர்களால் இதை எளிதில் கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்று தோன்றவில்லை. அந்தவிதத்தில் இதைச் சரியான தருணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரியாணியும் குவார்ட்டரும் கைச்செலவுக்கு ஐநூறும் கொடுத்து ஆள் திரட்டி அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களே தமிழகத்தில் ஒவ்வொன்றாக பல்லிளித்துக் கொண்டிருக்க பிழைப்புத்தனத்தை விட்டுவிட்டு தம் வீட்டுப் பிரச்சினையப் போல குரல் எழுப்பியபடி களத்தில் நிற்கும் ஒவ்வொரு இளைஞனும் நம் சமூகத்திற்கான எதிர்கால நம்பிக்கையை விதைக்கிறான். ‘நாங்கள் ஒன்றும் உணர்வற்றவர்கள் இல்லை’ என்று உரக்கக் கத்துகிறான். இதைத்தானே இவ்வளவு நாட்களாக இந்த மண் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது? இத்தகைய உணர்வெழுச்சியைத்தானே நாம் விரும்பினோம்?

அரசியல் ஆதாயமற்ற, வாக்கரசியல் இல்லாத, இலாபம் எதிர்பார்க்கும் தலைமையில்லாத ஒரு போராட்டம் என்பது எவ்வளவு உணர்வுப்பூர்வமானது? let it be emotional. nothing wrong in that.


பொதுவான ஒரு உரிமைக்காக தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்கள் உணர்வுரீதியாக ஒன்று திரள்வதை மனப்பூர்வமாக வரவேற்கலாம். இதுவொன்றும் அவ்வளவு எளிதில் நடந்துவிடாது.

தலையாயப் பிரச்சினைகள் நிகழ்ந்த போதெல்லாம் கூட கிணற்றில் விழுந்த கல்லாகத்தான் தமிழகம் கிடந்தது. வேறு சில சமயங்களில் ஈழம், மதுவிலக்கு என்று பிரச்சினைகளுக்காக இளைஞர்களும் மாணவர்களும் களத்துக்கு வந்த போதெல்லாம் முளையிலேயே நசுக்கப்பட்டார்கள். போராட்டம் நடந்ததற்கான எந்தவிதமான தடயமும் இல்லாமல் அழிக்கப்பட்டன. மக்கள் உணர்வு ரீதியாக ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதில் ஆளும்வர்க்கம் தெளிவாக இருந்தது. இந்தக் கட்சி அந்தக் கட்சி என்றெல்லாம் இல்லை- எல்லா கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆளுங்கட்சிகள் நேரடியாக இயங்க முடியாத தருணங்களில் ‘உங்களோடு நிற்கிறோம்’ என்று சில பொறுக்கித் தின்னும் தலைவர்கள் களமிறங்கி முனையை மழுங்கடிக்கச் செய்தார்கள்.

வெகுகாலமாக இத்தகைய அரசியல் சதுரங்கங்களையும் உணர்வெழுச்சியில்லாத மொன்னைச் சமூகத்தையும் பார்த்துச் சலித்துக் கிடந்தவர்களுக்கு இன்னமும் கூட இந்தப் போராட்டத்தின் உணர்ச்சி வேகத்தை நம்ப முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். விரைவில் முடிந்துவிடக் கூடும் என்று நம்பியவர்களும் கூட அதிர்ச்சியோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எழுச்சிதான் எதிர்காலத்திற்கான வெளிச்சம்.

ஜல்லிக்கட்டுவை ஆதரிக்கிறேன்; எதிர்க்கிறேன் என்பதையெல்லாம் தாண்டி இவ்வளவு பெருங்கூட்டத்தை உணர்வு ரீதியில் இணைக்கிறது என்பதற்காகவே ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கலாம்.

இது உணர்ச்சி மிகுந்த போராட்டம்தான். இல்லையென்றல்லாம் மறுக்கவில்லை. வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இத்தகைய உணர்வு ரீதியிலான ஒன்றிணைதல்தான் அரசியல் விழிப்புணர்வை உண்டாக்கும். நம் இனம், நம் உரிமை என்று பெருங்கூட்டம் களமிறங்கியிருக்கிறது அல்லவா? இந்த ‘நம்’ என்கிற உணர்ச்சி அடுத்த ஆண்டுகளுக்கு நெருப்பென கனன்று கொண்டேயிருக்கும். அந்தக் கனல்தான் அரசியல் புரிதல்களை அடுத்த தலைமுறைக்கு விதைக்கும். நமது வரலாறு, பாரம்பரியம், எதிர்காலம் குறித்தெல்லாம் சற்றேனும் யோசிக்கச் செய்யும். எதிர்காலத்திற்கான அரசியல் பாதை குறித்து சற்றேனும் சலனமுறச் செய்யும்.

சினிமா நடிகர்களுக்கு காவடி எடுத்துக் கொண்டும் கிரிக்கெட் ஸ்டிக்கர்களையும் ஒட்டிக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளத்திற்கு நமக்கான அரசியல் எது? நமக்கான தலைவன் யார் என்பதையெல்லாம் உணரச் செய்யும் களமாகவும் தருணமாகவுமே இத்தகைய போராட்டங்களைச் சொல்லலாம்.  நீர்க்குமிழியாகவே இருந்தாலும் அது உண்டாக்கும் வட்டங்களுக்காக வரவேற்கலாம்.

இளைஞர்களுக்கான களம் உண்டாகும் வகையில் தமிழகத்தில் வெகு காலத்திற்குப் பின்பாக உண்டாகியிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நன்றியோடு வணங்க வேண்டும். ஒரு சமூகத்தை விழிக்கச் செய்வதற்கான தீக்குச்சியை உரசி வீசிய அத்தனை பேரும் நம் நன்றிக்குரியவர்கள். வலுவில்லாத தலைமுறையொன்று உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று பதறியவர்களுக்கு இதுவொரு ஆசுவாசம். ஜல்லிக்கட்டுவுக்கான ஆதரவுப் போராட்டம் வெற்றி தோல்வி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். தோல்வியடைந்தாலும் தவறில்லை. சாதியை அரசியல்கட்சிகளை சினிமாவை ஓரங்கட்டிவிட்டு நெருப்புப் பொறியொன்று விழுந்திருக்கிறது. அக்னிக் குஞ்சொன்றைக் கண்டு அதை ஆங்கொரு காட்டினில் பொந்திடை வைத்துக் கனவு கண்ட பாரதியை நினைவுபடுத்திக் கொள்கிறேன். சங்கை முழங்கச் சொன்ன பாரதியின் தாசனையும்.

5 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

நல்லது. இதைத்தான் எதிர்பார்த்து காத்துக்கிடந்தோம். இதுமட்டுமல்ல.. இன்னும் ஆயிரமாயிரம் பிரச்னைகளுக்கு லட்சம் லட்சம் இளைஞர்கள் ஒன்று கூடி தீர்வு காணட்டும். புதிய தமிழகம் பிறக்கட்டும். போராட்டத்தில் பங்குகொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துகள்..!

Mohamed Ibrahim said...

Can't believe. The fire might burn any thing. Vazha Tamizh! Valarha Thamizaham!

சேக்காளி said...

//எதிர்பாராத எழுச்சி இது//
ஆமா பாஸ்.
என் மனதில் தோன்றியதை எழுத்தாக வெளிப்படுத்தியிருக்கீங்க மணி.
வெல்லட்டும் போராட்டம்.
தொடரட்டும் ஒற்றுமை.

Asok said...

இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இது ஆரம்பம்தான். நாம ஒரு எடுத்துகாட்டா இந்த உலகுக்கு இருப்போம். காத்திருப்போம் நல்ல செய்திக்காக!!!

YogAnand said...

அய்யா சகாயம் அவர்களை ஏன் தலைமை தாங்க அழைக்கக் கூடாது. இது குறித்து உங்கள் கருத்து என்ன மணி.