Dec 24, 2012

விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான்


நம்பிக்கை 1: “சக்கிலி நாய், பீ தின்னி நாய், கூட்டிக் கொடுத்த நாய்” - தேவர், கவுண்டர், நாய்க்கர் போன்ற ஆதிக்க சாதியினர்தான் தாழ்த்தப்பட்டவர்களை இப்படியெல்லாம் விளிப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆதிக்க சாதியினர் மட்டுமில்லை ஜார்ஜ் வொயிட் என்ற வெள்ளைக்காரனும் இப்படித்தான் விளித்திருக்கிறான்.

நம்பிக்கை 2: சென்ற வாரத்தில் யாரோ ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் வெள்ளைக்காரனை சிலாகித்தார். அவர்கள் ஆண்டதால்தான் இந்த தேசத்தில் ரயில் வண்டியிலிருந்து சகல வசதிகளும் வந்திருப்பதாகவும் அவர்கள் இன்னும் சில பத்தாண்டுகளுக்கு ஆட்சியைத் தொடர்ந்திருந்தால் இந்த தேசம் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் வந்திருக்கும் என்று அந்த நண்பர் சொல்லிக் கொண்டிருந்த போது பதில் எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நம்பிக்கை 3: சனிக்கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தில் நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக காத்திருந்த போது வேறொரு நண்பரை யதேச்சையாக பார்க்க முடிந்தது. அவர் சந்தைப் பொருளாதாரத்தின் தீவிர ஆதரவாளர். அவர் நிறைய பேசினார். நான் கேட்டுக் கொண்டிருந்தேன். “பண்ணை முறையை ஒழித்திருக்கக் கூடாது என்றும் ஒருவர் ஐந்நூறு அறுநூறு ஏக்கர் நிலங்களை மொத்தமாக வைத்திருப்பது பல நல்ல பலன்களைத் தந்திருக்கும்” என்றும் பேசிக் கொண்டிருந்தார். 

                                                                                    ***

நாம் நம்பிக் கொண்டிருக்கும் எதுவுமே முழுமையான உண்மையில்லை என்பதை ஒரு நாவலினால் நிரூபித்துவிட முடிகிறது. மேலே மூன்று பத்திகளில் இருக்கும் நம்பிக்கைகளை ஒரு நாவல் தகர்த்து எறிந்தது. நாவலின் பெயர் “எரியும் பனிக்காடு”.


தென்னிந்திய டீ எஸ்டேட்களில் நிகழ்ந்த கொடூரங்களை 1969 ஆம் ஆண்டு Red Tea என்ற பெயரில் பி.எச். டேனியல் நாவலாக்கியிருக்கிறார். என் யூகம் சரியாக இருக்குமாயின் நாவலின் இறுதிப்பகுதியில் எஸ்டேட்டுக்கு மருத்துவராக வரும் ஆபிரஹாம்தான் டேனியல். டேனியல், தென்னிந்திய எஸ்டேட்களில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த அனுபவம் உடையவர். அற்புதமான இந்தப் புதினம் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரா.முருகவேளால் ‘எரியும் பனிக்காடா’க மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. (விடியல் பதிப்பகம்)

நாவல் 1925 ஆண்டு தொடங்குகிறது. திருநெல்வேலி ஜில்லா மயிலோடை என்ற கிராமத்தில் வசிக்கும் கருப்பனுக்கு அவனது அக்காவின் மகள் வள்ளியையே திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். இவர்களோடு கருப்பனின் அம்மாவும் தங்கியிருக்கிறாள். கருப்பனின் அம்மா மூட்டுவலி நோயாளி. ஊர்ப்பக்கம் மழையில்லாத காரணத்தினால் கருப்பனுக்கு வேலை கிடைப்பதில் கடும் சிரமம் உண்டாகிறது. மூன்று வேளை உணவு இரண்டு வேளை கஞ்சியாக மாறுகிறது. நாட்கள் கடக்கையில் ஒருவேளை கஞ்சிக்கும் கூட மூவரும் சிரமப்பட ஆரம்பிக்கிறார்கள்.

இந்தச் சமயத்தில் கயத்தாறில் சங்கர பாண்டியன் என்ற மேஸ்திரியை கருப்பன் சந்திக்கிறான். அவன் ஆனைமலை டீ எஸ்டேட்டில் ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் கங்காணி. ஆனைமலைக்கு வந்தால் ஒரே வருடத்தில் கை நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து ஊரில் நிலபுலன், ஆடுமாடுகளோடு செட்டில் ஆகிவிடலாம் என்கிறான். கருப்பனுக்கு ஆர்வம் மேலிடுகிறது. வள்ளிக்கும் அவனது அம்மாவும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள். கருப்பனின் மாமனாரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். இறுதியில் ஆனைமலை செல்வது என்று முடிவெடுக்கிறார்கள். கருப்பனின் அம்மா தனது மகளின் வீட்டில் தங்கிக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்படுகிறது.

கருப்பனுக்கும் அவனது மனைவிக்கும் சேர்த்து நாற்பது ரூபாயை ‘அட்வான்ஸாக’ கங்காணி கொடுத்துவிடுகிறான். அவர்களை ஆனைமலைக்கு அழைத்துச் செல்லும் செலவான இருபத்தைந்து ரூபாயையும் சேர்த்து மொத்தமாக அறுபத்தைந்து ரூபாய் கருப்பன் வள்ளியின் கணக்கில் கடன் வந்துவிடுகிறது. அதை அவர்களது சம்பளப்பணத்தில் கழித்துக் கொள்வார்கள்.

கனவுகளுடன் வள்ளியும், கருப்பனும் அவர்களோடு இன்னும் பலரும் எஸ்டேட்டிற்குள் நுழைகிறார்கள். எஸ்டேட்டிற்குள் நுழைந்தவுடன் கங்காணி சங்கரபாண்டியனின் முகம் மாறுகிறது. ஐந்துக்கு நாலடி உள்ள அறையில் மூன்று குடும்பங்கள் தங்க வைக்கப்படுகின்றன. கருப்பன் தனக்கு வசதியான இடம் வேண்டும் என்று கேட்கும் போது அவனுக்கு அடி விழுகிறது. அவர்களோடு அதே அறையை பகிர்ந்திருக்கும் முத்தையா குடும்பத்தினர் எஸ்டேட்டில் மூன்று ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள்தான் கருப்பனுக்கு, வள்ளிக்கும் ஆறுதலாக இருக்கிறார்கள். எப்படியும் பொறுத்துக் கொண்டாக வேண்டும் என்று சமாதானப்படுத்துகிறார்கள். அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் அடித்துக் கொன்றுவிட முடியும் என்று கருப்பனை அமைதிப்படுத்துகிறார்கள். ஒரு அடிமைப்பட்டிக்குள் தாங்கள் சிக்கிக் கொண்டதை கருப்பனும் வள்ளியும் முழுமையாக உணர்கிறார்கள். அடுத்த நாள் எஸ்டேட் ரெஜிஸ்டரில் பெயர் பதிவை ஆரம்பிக்கும் போதிலிருந்து வள்ளியின் மீதான பாலியல் தாக்குதல்களை தொடங்குகிறார்கள் எஸ்டேட் அதிகாரிகள். 

இந்தச் சிரமங்களுக்கிடையே மலேரியா, கடும் குளிர், பெருமழை, அட்டைப் பூச்சிகள், நிமோனியா ஆகியன வாட்டி வதைக்கின்றன. மலேரியாவில் கொத்து கொத்தாக தொழிலாளிகள் இறக்கிறார்கள். எஸ்டேட்டுக்குள் எந்த மருத்துவவசதியும் கிடையாது. மருத்துவனாக இருக்கும் மலையாளியான குரூப் என்பவன் கம்பெளண்டர் கூட கிடையாது. கைவசம் இருக்கும் மருந்தை நோயாளிக்கு கொடுப்பான். குரூப்பை தவிர்த்து நாட்டு வைத்தியன் ஒருவனும் எஸ்டேட்டில் இருக்கிறான். அவனுக்கு தாயத்து கொடுப்பதுதான் தெரிந்த வைத்தியம். ஒரு நாளைக்கு நாலணா கூலி வாங்கும் தொழிலாளிகளிடம் ‘தாயத்து மந்திரித்து தருகிறேன்’ என்று ஏழு ரூபாய் பறிப்பதுதான் அவனது வேலை. தொழிலாளிகளின் இறப்பை இவர்களால் எந்த விதத்திலும் தடுக்க முடிவதில்லை.

இத்தனை சிரமப்பட்டாலும் ஆண்டு இறுதியில் கணக்கு பார்க்கும் போது கருப்பனுக்கும் வள்ளிக்கும் எந்தப் பணமும் மிச்சமாவதில்லை. தங்களின் கடனை அடைப்பதற்காக அடுத்த ஆண்டும் அவர்கள் அதே எஸ்டேட்டில் தங்க வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தொடர்கிறது.

இதனிடையே ஊருக்கும், இவர்களுக்கும் எந்த தகவல் தொடர்பும் இருப்பதில்லை. தபால்கள் யாவும் மேஸ்திரிகளால் தணிக்கை செய்யப்படுகிறது. எஸ்டேட்களில் இருந்து யாராலும் தப்பித்து போக முடிவதில்லை. மலைப் பாதைகளில் எஸ்டேட்காரர்கள் காவலுக்கு இருப்பார்கள். பிடித்துக் கொண்டுவருவதோடு நில்லாமல் மற்றவர்களுக்கு பயம் வர வேண்டும் என்பதற்காக அவர்களின் முன்னால் அடித்துக் கொன்றுவிடுவார்கள்.

மூன்றாவது ஆண்டு இறுதியில் கருப்பனுக்கும் வள்ளிக்கும் பணம் மிச்சமாகும் போலிருக்கிறது. ஆனால் கருப்பன்- வள்ளியின் வாழ்வில் விதி விளையாடுகிறது. வள்ளி மலேரியாவினால் கடுமையாக பாதிக்கப்படுகிறாள். அவளது வயிறு வீங்கிவிடுகிறது. புதிதாக வந்திருக்கும் மருத்துவரான ஆபிரஹாம் தன்னால் முயன்ற அளவிற்கு வள்ளிக்கு சிகிச்சையளிக்கிறார். பிறகு வள்ளியும் கருப்பனும் இந்த நரகத்திலிருந்து தப்பிக்க முடிகிறதா என்பதுதான் நாவலின் முடிவு.

இந்த புதினத்தில் தத்துவ விசாரணைகள், விவரணைகள் போன்றவையெல்லாம் இல்லை. நேரடியான மொழியும் படு வேகமான கதை சொல்லும் முறையும் நாவலுடன் வாசகனை ஒன்றச் செய்துவிடுகிறது. அந்தக்காலத்தில் எஸ்டேட்களில் நிகழ்ந்த கொடூரங்களும், எஸ்டேட் அதிகாரிகளும் மற்றும் வெள்ளைத் துரைகளும் நிகழ்த்திய காமக் களியாட்டங்களும், தலித்கள் மீது அவர்கள் செலுத்திய அதிகாரங்களும் புதினத்தின் வழியாக காட்சியாக விரிகின்றன. எஸ்டேட் அடிமைகளின் வரலாறு, இந்திய பொருளாதாரத்தின் மீதான ஆங்கிலேயர்களின் சுரண்டல்கள், இந்தியர்கள் மீது ஆங்கிலேயருக்கு இருந்த வெறுப்பு ஆகியன நாவலில் மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றியது.

                                                                            ***

சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் சனிக்கிழமையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு திரும்பும் போது அடுத்த நாள் பேருந்தில் வாசிப்பதற்காக ஒரு புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தேன். நண்பர் சாத்தப்பன் யாரிடமோ போனில் பேசிக் கொண்டே இந்த நாவலை சுட்டிக் காட்டினார். கோயம்பேட்டில் பெங்களூருக்குச் செல்லும் பேருந்தில் அமர்ந்து கொண்டு புத்தகத்தை வெளியில் எடுக்கும் போது அவ்வளவு ஆர்வமாக இல்லை. ஆனால் நாவலின் மொழியும் அது கையாண்டிருக்கும் இருண்ட பக்கங்களும், எஸ்டேட் கூலிகள் அனுபவித்த கொடுமையும் உருவாக்கிய மனச்சித்திரங்கள் வேறு எதைப்பற்றிய சிந்தனையும் வராமல் பார்த்துக் கொண்டன. எந்த ஒரு நாவலையும் ஒரே Sitting இல் நான் வாசித்ததில்லை. ஆனால் எரியும் பனிக்காடு நாவலை முடிக்க முடிந்தது. கோயம்பேட்டில் ஆரம்பித்து ஓசூரை அடைவதற்கு முன்பாக நாவலை முடித்திருந்தேன்.

பொதுவாக புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கும் முன் முன்னுரை, ஆசிரியர் குறிப்பு, அணிந்துரை, பின்னட்டை வாசகம் என எதையும் வாசிப்பதில்லை. அவை அந்தப்புத்தகம் குறித்தான முன்முடிவுகளை உருவாக்கிவிடும் என்று தயக்கமாக இருக்கும். புத்தகத்தை வாசித்து முடித்த பிறகு இவற்றை வாசிப்பது வழக்கம். இந்த நாவலையும் வாசித்து முடித்த பிறகுதான் பி.எச்.டேனியலின் முன்னுரையை வாசித்தேன். பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

“உங்களது அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதுக்கு இதமளிக்கும் ஒரு கோப்பைத் தேனீரை உறிஞ்சும் போது அதற்காக, அந்த ஆண்டுகளில் உங்களுடையவற்றைவிட எளிய ஆனால் உங்களுடையதைப் போன்றே இன்பமும் அமைதியும் நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன, அழித்து நாசமாக்கப்பட்டன என்பதை நினைவு கூறுங்கள்”.

இந்த வரிகள் உருவாக்கிய குற்றவுணர்ச்சியுடன் புத்தகத்தை மூடி வைத்தேன். நேற்றிரவு உறக்கம் தொலைந்திருந்தது. 

5 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...

'எரியும் பனிக்காடு' நாவல், அழுத்தம் நிறைந்த கோர்வை...

ச.பாலமுருகனின் 'சோளகர் தொட்டி' படித்திருக்கிறீர்களா??

சேக்காளி said...

உங்களுக்கு ஏர்பட்ட தாக்கம் பரதேசி மூலம் அனைவரையும் தாக்குமா என பார்க்கலாம்.

ஜீவ கரிகாலன் said...

படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது

Anonymous said...

super!! good write up.. What I am observing is Mr.Manikandan appreciates liberally and if somebody criticizes him that also is being uploaded without any animosity. That is how you can grow.. Keep it up..

Massy spl France. said...

ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து தந்த பதிவு.

இன்று காலையில்தான் புதிதாக டீத்தூள் வாங்க கடைக்கு போயிருந்தேன். பல தரப்பட்ட சரக்குகளின் இடையில் கடைசியாக 'சிறீலங்கா' தூளே என் கடைசி தேர்வானது. இத்தனைக்கும் இதன் விலையோ எக்க சக்கம். ஆனால் நல்ல தரம். பெட்டியை கையில் வைத்துக் கொண்டு சில கனம் அத்தூளின் பூர்வீகம் பற்றி என எண்ணத்தை ஓடவிட்டேன். சிறீலங்கா என்றதும் அங்கு தமிழர்களுக்கும் இழைகப்படும் கொடுமைகள் என் கண் முன்னால் வராமல் இருக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர் என்பதை நான் உணர்கிறேன். இருந்தாலும், இந்த டீ தூளை நாம் வாங்குவதால் அங்கு எஸ்டேட்டுகளில் ஓடாய் உழைக்கும் தமிழர்களுக்கு நான் செய்யும் தூரத்து உதவியாக இருக்கும் என்கிற நல்ல எண்ணத்தை நினைத்து மனதை சரி செய்து கொண்டேன். ஆனால், மறு பக்கமோ தமிழர்களை வதைக்கும் சிங்கள தோட்ட முதலாளிகளுக்கு நாம் உதவுகிறோமோ என்கிற குற்ற உணர்வும் இருந்தது. என் மனதிற்குள் ஒரு சிறு போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்த்து.

கடைசியாக, நம் செயலால் தமிழர்களுக்கு நல்லது நடக்கும் எனகிற நல்ல நம்பிக்கையோடு பணம் கட்டிவிட்டு வீடு திரும்பினேன்.

இது இப்பதிவை படிப்பதற்கு முன்.

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்து வரும் ஒவ்வொரு சிறு சாதாரண செயலுக்குப் பின்னும் எத்தனை எத்தனை மரமங்கள் என்பதை நேரம் எடுத்து சிந்தித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதை இப்பதிவு நன்றாக உணர்த்தி உள்ளது.

உங்கள் பதிவுகள் அனத்தையும் ஒரே மூச்சாக படிக்க முயற்சித்து வருகிறேன். அருமையான நடை. படிக்க ஆரம்பித்தால் நிறுத்த மனம் வர வில்லை. உங்கள் நிழல் போல் உங்களுடன் ஒட்டிக்கொண்டு தொடர்வது போல் ஒரு உணர்வை தருகிறது.

சித்ரா டீச்சர் மனதை பயங்கரமாக பற்றிக்கொண்டு நிற்கிறார்.

'எரியும் பனிக்காடு' கிடைத்தால் கட்டாயம் வாங்கி படிப்பேன்.

தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகிறேன் மணிகண்டன்.