Sep 28, 2012

தனியார் பள்ளிகள் என்னும் கொள்ளிவாய் கூடாரங்கள்



மகனுக்கு அட்மிஷன் வாங்குவதற்கான பெரும் பொறுப்பு என் தலையில் இறங்கியிருக்கிறது. விசாரணைப்படலத்தில் இருக்கிறேன். நேற்றும் ஒரு விசாரணைப்படலம். 

பிரமாண்டமான வரவேற்பறையில் மெல்லிசை ஓடிக் கொண்டிருந்தது. 

"ஹலோ சார்" ஒரு கொஞ்சும்கிளி வரவேற்றாள்.

"பையனுக்கு அட்மிஷன்" வாக்கியத்தை நான் முழுமையாக முடிக்கவில்லை.

"ப்ளீஸ் உட்காருங்க சார்" ஒரு விண்ணப்பத்தை கொடுத்து நிரப்பச் சொன்னாள். விருப்பக் கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டு கர்ம சிரத்தையாக நிரப்பிக் கொடுத்தேன். 

விண்ணப்பத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு "நீங்க என்ன படிச்சிருக்கீங்க?" என்றாள்.

"எம்.டெக். அந்த ஃபார்ம்ல எழுதியிருக்கேன்"

"ஓ..நைஸ்...என்ன ஸ்பெஷலைஷேசன்?" 

"மெக்கட்ரானிக்ஸ்"

"உங்க மனைவி?"

"அவங்க பி.ஈ" என்னை விடுவதாகத் தெரியவில்லை.

"அவங்களும் மெக்கட்ரானிக்ஸா?" 

"ட்ரிப்பிள் ஈ...சாரி...இசிஇ"

கொஞ்சம் திருப்தியடைந்திருப்பாள் போலிருந்தது. 

"அக்டோபர் மூன்றாம் தேதி இண்டர்வியூக்கு அப்பாயிண்ட்மெண்ட்" என்றவள் "நீங்களும் மனைவியும் வந்துடுங்க" என்றாள்.

கொஞ்சம் குழப்பமடைந்து "அட்மிஷன் பையனுக்குத்தானே?" என்றேன்.

தனது மூக்குக்கண்ணாடியின் மேல்விளிம்புக்கும் புருவத்துக்கும் இடையே இருக்கும் சந்து வழியாக பார்வையை செலுத்தியவள் "ஆமாம், அவனுடைய எல்.கே.ஜி அட்மிஷனுக்குத்தான்" என்று குரலைக் கட்டையாக்கினாள். டென்ஷனாகிவிட்டாள் போலிருக்கிறது.

சூழலை சாந்தமாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்திருந்தது. வழிந்துகொண்டே "ஃபீஸ் ஸ்ட்ரக்ச்சரை சொல்லுறீங்களா" என்றேன்.

அவளும் புன்னகைத்தப்படி பட்டியலை அடுக்கினாள். அட்மிஷன் பீஸ், வருடாந்திர கட்டணம், பேருந்துக்கு, ஸ்பெஷல் க்ளாஸூக்கு என வரிசையாகச் சொன்னவள் இடைவெளி விட்ட நேரத்தில் கூட்டிப்பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் வந்திருந்தது. மூச்சடைத்தது. இதற்கு மேல் இந்த இரும்படிக்கும் பட்டறையில் வேலையில்லை என ஈ ஐவிடவும் வேகமாக வெளியேறினேன்.

                                                                ***

அருகில் இருக்கும் வரத்தூர் ஏரியில் காற்று வாங்கலாம் எனத் தோன்றியது.  தண்ணீருக்குள் விநாயகர் சதுர்த்தி பிள்ளையார்கள் உடைந்தும் நொறுங்கியும் கிடந்தார்கள். அதே ஏரியில் சிலர் துவைத்துக் கொண்டிருக்க இன்னும் சிலர் தூரத்தில் துணியை முட்டி வரைக்கும் தூக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பிள்ளையாரும் பாவம்தான் என நினைத்துக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

***

இது இரண்டாவது அடி. சென்றவாரம் சனிக்கிழமை இப்படித்தான் வேறொரு பள்ளியில் அடி வாங்கினேன். எனது டைரக்டரின் மகன் ஒரு பள்ளியில் படிப்பதாகச் சொல்லியிருந்தார். அவரிடம் அதிகம் பேச முடியாது. நேரடியாக பள்ளியில் விசாரித்து பார்க்கலாம் எனச் சென்றிருந்தேன். விடுதியோடு சேர்த்து வருடக்கட்டணம் ஆறேகால் இலட்சம். எப்படியும் என்னால் இங்கு சேர்க்க முடியாது என்று தெரியும். குறைந்தபட்சம் ஏதாவது கேள்வியாவது கேட்க வேண்டும் என மீசை துடித்தது.

"எதனால இவ்வளவு ஃபீஸ்?" என்றேன்.

"ப்ராண்ட் வேல்யூ சார். அது போக நீச்சல் குளத்தில் ஆரம்பித்து சகலமும் இருக்கு" என்றாள். இவள் பஞ்சவர்ணக்கிளி.

"ம்ம்"

"நிறைய சொல்லித்தருவோம். வேற பள்ளியில் இதெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது"

"என்ன இருந்தாலும் எல்.கே.ஜி தானே மேடம்" என்றேன்.

"இருந்தாலும் நாங்க நிறைய சொல்லித்தருவோம்"

கடுப்பின் உச்சத்தில் இருந்தேன் " என்ன நிறைய சொல்லித்தருவீங்க? ஏரோப்ளேன் ஓட்ட சொல்லித்தருவீங்களா?" - சிரிக்காமல்தான் கேட்டேன். அவள் முறைத்தாள். பிறகு முறைப்பை சிரிப்பாக மாற்றினாள். 

"இல்லை கப்பல் கட்ட சொல்லித்தருவீங்களா?" தொடர்ந்த போது அவள் ஏதோ முணுமுணுத்தாள். அப்பொழுதும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

"என்ன சொன்னீங்க?" என்றேன். சிரித்தாள்.

என்ன திட்டு திட்டினாலும் சமாளிக்கச் சொல்லித்தந்திருக்கிறார்கள். எதுவும் சொல்லாமல் கிளம்பி வந்துவிட்டேன்.
                                
                                                               ***

வெளியே பிள்ளையார் கோயில் இருந்தது. அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் அதில் என் தந்தையார் பள்ளி நடத்துபவராக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அவர் தலையாட்டியது போலிருந்தது. பார்க்கலாம்.

8 எதிர் சப்தங்கள்:

Seeni said...

vethanaiyai azhakaa sollideenga....

திண்டுக்கல் தனபாலன் said...

நகைச்சுவையாக எழுதி இருந்தாலும் வேதனை தெரிகிறது... (சொந்த நொந்த அனுபவம் தான்...)

விழியன் said...

மணி, அப்ப ப்ரீகேஜியில் பிள்ளையை போட்டாச்சா? இப்ப எல்லாம் நர்சரி, ப்ரீகேஜி அப்புறம் தானே எல்.கே.ஜி?

பிரகாஷ் said...

கட்டணம் வசூலிக்கும் விஷயத்தில் பெங்களூர் பள்ளிகள் மகா மோசம். என் பதினோரு மாதப் பையன் வளர வளர எனக்கு டென்ஷன் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நம் பள்ளிப் பருவத்தில், ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மொத்தத்துக்கும் கூட இவ்வளவு செலவு செய்திருக்க மாட்டோம். இருப்பதிலேயே “பெஸ்ட்” கல்விச் சூழலை நம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று பெற்றோராகிய நமக்கு இருக்கும் தீராத ஆசை / கனவு மற்றும் நாம் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் போய்க் கொண்டே இருக்கும் அட்மிஷன் ஃபீஸ்.. இரண்டுக்கும் நடுவே தவிக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோர் மனது..

Vaa.Manikandan said...

நன்றி சீனி, தனபாலன், பிரகாஷ்.

விழியன் -

ஏற்கனவே ப்ளே குரூப்பில் ஒரு பள்ளியில் இருக்கிறான். அது வேறொரு கதை :)

Anonymous said...

//என் பதினோரு மாதப் பையன் வளர வளர எனக்கு டென்ஷன் அதிகமாகிக் கொண்டே வருகிறது. //

இப்பவே மாசம் ஐந்தாயிரம் ரெக்கரிங் டெப்பாஸிட்ல போட ஆரம்பிங்க.

எல் கே said...

மணிகண்டன் நீங்கள் எந்த ஊர் என்று தெரியாது . பெரிய பள்ளிகள் வேண்டாம். நடுத்தர பள்ளிகளில் எவை நல்லவை என்று விசாரிக்கவும்... சென்னையாக இருந்தால் எந்த ஏரியா என்று சொல்லுங்கள் உதவ முயற்ச்சிக்கிறேன்

Anonymous said...

தமிழ்நாட்டிலும் இதே கதை தான். திருச்சிக்கு வந்து பார்த்தால் தெளிவாக தெரியும்.
இதில் என்ன மிக பெரிய வேடிக்கை என்ன வென்றால் இவர்கள் கல்வி நிறுவனம் நடத்துவது எதோ மக்களுக்கு பெரும் சேவை செய்வதாக வேறு சொல்லிகொள்வர்கள். அடிப்பதோ கொள்ளை சொல்வதோ சேவை..பேசுவதை கேட்டால் நாமே பையில் இருக்கும் காசை எடுத்து அவர்களிடம் கொடுக்கும்
அளவிற்கு பேச்சு ஜாலம் வேறு.
எப்போதும் வளரும் ஒரே தொழிலான கல்வியை இன்றைய புத்திசாலிகள் பலர் தெரிந்து எடுத்து சாதாரண மக்களை பிழிந்து எடுகின்றனர்.
எதை கேட்டாலும் உங்கள் குழந்தை களுக்கு தானே என்று கேட்டு பல நூதன வழிகளில் பணம் பறிக்கின்றனர்.
ஒரு விதமான வசதியும் இல்லாமல் லட்ச கணக்கில் இவர்கள் வாங்கி சில வருடங்களில் பல கோடி உள்ள அதிபர் ஆகின்றனர்.
அரசு கல்வி தரமானதாக வளரும் வரை இந்நிலை இருக்கும்.