Sep 29, 2012

பேசலாம்


2004 ஆம் ஆண்டு படிப்பிற்காக சென்னை வந்திருந்த காலகட்டம். அப்பொழுது சினிமாவும், இலக்கியமும் மட்டுமே தேடலாக இருந்தது. சினிமா என்றால் பாடலாசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவு. அதுவரையிலும் எழுதி வைத்திருந்த கவிதைகள் அந்த கனவுத் தீக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தன.

 வைரமுத்துவும், மேத்தாவும் மட்டுமே இலக்கிய கர்த்தாக்கள் என்ற நினைப்பு ஆக்கிரமித்திருந்த அந்த நாட்களில் சினிமாக்கவிஞர்களை தேடிப்பிடிப்பதுதான் ஞாயிற்றுக்கிழமைகளின் பொழுதுபோக்காக இருந்தது. கங்காரு தன் குட்டியை சுமந்து செல்வது போல எழுதி வைத்திருக்கும் கவிதைகள் அனைத்தையும் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கம். பாடலாசிரியர்களிடம்  என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வாஞ்சையோடு அந்த கவிதைத் தாள்களை நீட்டுவேன். 

அப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மாலை வேளையில் தமிழச்சி தங்கப்பாண்டியனின் புத்தக அறிமுக விழா ஒன்று மைலாப்பூரில் நடந்து கொண்டிருந்தது. யுகபாரதியை சந்திக்க செல்லவிருக்கும் திட்டத்தை திசை மாற்றி விழாவில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து கொண்டேன். முந்தைய வரிசையில் மனுஷ்ய புத்திரன் அமர்ந்திருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனடியாக நிகழ்ச்சி தொடங்கிவிட்டதால் அவருடன் அதிகம் பேச முடியவில்லை. தன்னைச் சந்திக்க வருமாறு  உயிர்மை முகவரியைக் கொடுத்தார். 

அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் வழக்கம் போலவே நான் எழுதி வைத்திருந்த கவிதைகளை தூக்கிக் கொண்டு அவரை சந்திக்க சென்றிருந்தேன். ஆனால் அது வழக்கமான சினிமாக் கவிஞர்களுடனான சந்திப்பு போன்றில்லை. என் கவிதைகளை புரட்டி பார்த்தவர் எதுவும் சொல்லவில்லை. பசுவய்யாவின் 107 கவிதைகள், சுகுமாரன், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைத் தொகுப்புகளை கொடுத்து வாசித்துவிட்டு வரச் சொன்னார். முதலில் இந்தக் கவிதைகளில் எதுவுமே புரியவில்லை. ஆனால் அந்த புரியாததன்மைதான் வெறியூட்டியது. கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அது ஒரு பித்து நிலை. அந்தக் காலகட்டத்தில் என்னைச் சுற்றி நடந்தவைகளை கிஞ்சித்தும் இப்பொழுது ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நவீன கவிதையுலகின் கதவுகள் மெல்லத் திறக்கத் துவங்கின. என் பழைய கவிதைகள் என்னிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டன.  அதற்கு பிறகு அந்தத் கவிதைகள் எழுதப்பட்டிருந்த தாள்களை தேடவே இல்லை.

ஆனால் நவீன கவிதைகளில் நான் புரிந்து கொண்டவை சரிதானா என்ற குழப்பம் அரித்துக் கொண்டிருந்தது. மனுஷ்ய புத்திரனிடமே கேட்டேன். "கவிதை என்ன சொல்ல வருதுங்கிறது முக்கியம் இல்லை. கவிதையில் நீ என்ன புரிஞ்சுக்கிட்டேங்கிறதுதான் முக்கியம். அதனால நீ எப்படி புரிஞ்சுகிட்டாலும் சரிதான்" என்றார். இனி நவீன கவிதைகள் கைகூடிவிடும் என்ற நம்பிக்கை தொற்றிக் கொண்டது.

நவீன கவிதைகளை எனக்கான அடையாளமாக்கிக் கொள்ள விரும்பியதன் விளைவாகவே வலைப்பதிவு தொடங்க விரும்பினேன். 2005 ஆம் ஆண்டு பிப்ரவரியில் "பேசலாம்" என்ற பெயரில் வலைப்பதிவை தொடங்கி கணினித்திரையில் பெயரை பார்க்கும் போது உலகமே என் காலடியில் இருப்பதான ஒரு உற்சாக பிரமை தொற்றிக் கொண்டது. ஆனால் அது உண்மையாக இருக்கவில்லை. அந்தக்காலகட்டத்தில் வலைப்பதிவில் பிரபலமாக எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலரும் மிகுந்த சிரத்தையுடன் எழுதிக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கையாளர் மாலன், பத்ரி, மதி கந்தசாமி, காசி, முத்து தமிழினி, பாலபாரதி, குழலி, தமிழ் சசி, ஐகாரஸ் பிரகாஷ் என்ற பெயர்கள் உடனடியாக நினைவில் வருகின்றன. அவர்களோடு போட்டி போட முடியாத அளவிற்குத்தான் என் எழுத்துக்கள் இருந்தன்.

எனது எழுத்துக்கள் பக்குவமற்ற, முதிர்ச்சியில்லாத வகையினதாக இருந்திருக்கின்றன என்பதை ஆரம்பகால பதிவுகளை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தை தொடர்ந்து சீர்படுத்திக் கொள்ள வலைப்பதிவு உதவியிருக்கிறது. தொடர்ந்து எழுதுவதால் மட்டுமே எழுத்து மேன்மையடைகிறது என்பதை நேரடியாக உணர முடிந்தது. எழுத்தில் இன்றுவரை கடந்திருக்கும் சிறு தொலைவை இந்த வலைப்பதிவுதான் சாத்தியப்படுத்தியிருக்கிறது  என நம்புகிறேன். 

'பேசலாம்' என்ற வலைப்பதிவு இப்பொழுது 'நிசப்தம்' என பெயர் மாறியிருக்கிறது.  பேசலாம் என்றிருந்த போது அதிகம் பேசவில்லை. நிசப்தம் என்றான பிறகு நிறைய எழுத முடிந்திருக்கிறது என்பது நகைமுரண்.

வலைப்பதிவை நான் ஆரம்பித்த காலகட்டத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்பொழுது எழுதுவதில்லை. இடையில் அவ்வப்போது பிரபலமடைந்தவர்கள் பிறகு எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள். சிலர் ஒரே சீராக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வலைப்பதிவு உலகம் ஒரு காட்டாறு. தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. தனக்குள் விழும் சருகுகள், பூக்கள், இலைகள் என சகலத்தையும் அடித்துச் செல்கிறது. தலையுயர்த்தும் பூக்களைப் போலவே சருகுகளும் தலையுயர்த்துகின்றன. ஆனால் பூக்கள் தனக்கான அடையாளத்தை விட்டுச் செல்கின்றன. சருகுகள் காணாமல் போகின்றன.

வலைப்பதிவை ஏழரை ஆண்டுகளாக வைத்திருப்பதில் கொஞ்சம் அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. கொஞ்சம் நட்புகள் கிடைத்திருக்கின்றன, கொஞ்சம் அடையாளமும் கிடைத்திருக்கிறது. 

[வலைச்சரம் என்ற தளத்தில் பிடித்தமான வலைப்பதிவுகள் பற்றிய குறிப்புகளை ஒரு வார காலத்திற்கு எழுதச் சொல்லியிருந்தார்கள். அதன் தொடக்கமாக எழுதிய அறிமுகக் குறிப்பு]

6 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

மிக அருமையான அனுபவப் பகிர்வு.. முகநூலில் கிடைக்கும் போலி லைக்குகளுக்கு மயங்கி தன்னையும் ஒரு கவிஞனாக பாவித்துக் கொண்டு Slam book கவிதைகளையோ மடங்கு சொற்கோர்வைகளியோ எழுதிவிட்டு. வாசகனாய் கடக்க வேண்டிய தூரங்களை கடந்து விட்டதாய் புறச்சாலைகளின் ஓரத்திலே இன்று பலரும் நிற்கின்றனர். இதே போன்ற தெளிவில் தான் நான் கவிதை எழுதும் முயற்சியை தள்ளி வைத்துவிட்டேன். இது போன்ற பதிவு உண்மையில் பலருக்கு தெளிவு கொடுக்கும் என்று நம்புகிறேன். .....வாழ்த்துகள்

Uma said...

ஏழரை ஆண்டுகளாக எழுதுவது என்பதே விடாமுயற்சியின் இனிய சாதனைதான் வெற்றிக்கு வாழ்த்துக்கள் ! பேசலாம் என்பதைவிட நிசப்தம் எனும் சொல்லில் ஒரு அழகிய ஈர்ப்பு உள்ளது

Vaa.Manikandan said...

நன்றி கரிகாலன், உமா :)

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரத்தில் படித்தது தான் என்றாலும், தங்களின் தளத்தில் பகிர்ந்து கொள்வது பலருக்கும் அறிய உதவும்...

ஏழரை ஆண்டுகள் என்பது சாதனை - அதை உங்கள் தளத்தின் பெயருக்கேற்றவாறு சொல்லி உள்ளீர்கள்... நன்றி...

சுந்தரம் சின்னுசாமி said...

அருமை

Karthik.. said...

அருமையான பதிவு.. "எந்த புத்தகமாக இருந்தாலும் படி.. எதாவது ஒரு புத்தகம் உன் வாழ்வின் போக்கை மாற்றும்" என்று ஒரு அறிஞர் சொன்னதாய் படித்ததுண்டு.. உங்கள் அனுபவம் அதற்க்கு நல்ல உதாரணம்..

-கார்த்திக்