Sep 26, 2012

நிர்வாணக் கடற்கரை



அது முதன்முறையாக பிரான்ஸ் சென்றிருந்த சமயம். பிரான்ஸின் தெற்குப்பகுதியில் இருக்கும் மாண்ட்பெல்லியே என்ற நகரத்தில்தான் எங்கள் அலுவலகம் இருந்தது. இரு வாரம் தங்கியிருக்க வேண்டும். இடையில் சனி,ஞாயிறு ஆகிய இருநாட்கள் விடுமுறை கிடைத்தது. அலுவலக நாட்களில் ஐந்து மணிக்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுவது வழக்கமாகியிருந்தது. ஹோட்டல் அறையில் பையை வீசிவிட்டு கால் போன போக்கில் நடப்பதுண்டு. ஸ்டீரீட் டான்ஸ், ஃபாலே நடன க்ளப், அருங்காட்சியகம், ஏதாவது ரெஸ்டாரண்ட் என நாட்கள் சர்வசாதாரணமாக கடந்தன. ஒரே பிரச்சினை நான் கஞ்சப்பயலாக இருந்ததுதான். டாக்ஸிக்கு அதிக செலவு ஆகிறது என நடந்தே சுற்றினேன். அந்த ஊரில் நடந்து கொண்டிருக்கும் ஒரே மனிதனாக நான் இருந்தேன்.

சனி,ஞாயிறு விடுமுறையை ‘உருப்படி’யாக கழித்துவிட வேண்டும் என கூகிளை டார்ச்சர் செய்தேன். அது கொண்டு வந்து கொட்டிய இடங்களில் ஒன்று Cap d'Agde. (கெப்ட் ஆக்ட்) எப்படித்தான் நாக்கை சுழற்றி சுழற்றிச் சொன்னாலும் இந்த ஊர்ப்பெயருக்கான சரியான உச்சரிப்பை என்னால் செய்ய முடிந்ததில்லை. உச்சரிப்பா முக்கியம்? அந்த ஊரில் இருக்கும் Naturist Beach பற்றி பேசலாம். பெயரிலேயே இருக்கிறது-‘இயற்கையான’ கடற்கரை. நம்மிடம் இருக்கும் செயற்கைகளான துணிமணிகளை நிராகரித்துவிட்டு உலவும் நிர்வாணக் கடற்கரை. இந்தக் கடற்கரையை பார்க்காமல் நாடு திரும்பினால் எனது கண்கள் அவிந்துவிடும் என்று கனவில் வந்த சில சாமிகள் சொன்னதை முழுமையாக நம்ப வேண்டியதாயிற்று.   சனிக்கிழமை கிளம்புவது என முடிவு செய்து வைத்திருந்தேன். வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் குண்டு போட்டார்கள். அடுத்த நாள் “நிம்ஸ்” செல்லலாம் என்று அறிவித்தார்கள். வாடி வதங்கிப்போனேன். “நிம்ஸ்” ஒரு காய்ந்த பூமி. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரம் அது. சில கட்டிடங்களை சுற்றிக் காட்டினார்கள். “இதுகாய்யா கூட்டிட்டு வந்தீங்க?” என்று நினைத்துக் கொண்டேன். 

எனது ’பெர்சனல்’திட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது. நிம்ஸிலிருந்து விடுதிக்கு கிளம்பும்போது ”நாளைக்கு எங்கே போகலாம்” என்றார்கள்? நான் ரெஸ்ட் எடுக்கப் போகிறேன் என்று கழண்டு கொண்டேன். அவர்கள் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை பார்க்கப் போகலாம் என்று பேசிக் கொண்டார்கள். சாய்ந்த கோபுரங்களை பார்ப்பதில் விருப்பமில்லை எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

மாண்ட்பெல்லியேவிலிருந்து கெப்ட்’ஆக்ட் செல்ல பெரிய சிரமம் இல்லை. மாண்ட்பெல்லியேவிலிருந்து நிறைய தொடரூர்திகள் இருக்கின்றன. நாற்பது நிமிடங்களில் அடைந்துவிடலாம். அங்கு இருந்து கடற்கரைக்கு ஒரு பேருந்து- ஒரு யூரோ கட்டணம். பீச் நுழைவுக்கட்டணம் ஐந்து யூரோ. போய்வர கிட்டத்தட்ட மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய் செலவு. 

பாஸ்போர்ட், ஒரு பேப்பர், பேனா, ஒரு செட் பேண்ட் சர்ட் எடுத்துக் கொண்டேன். நிர்வாணக் கடற்கரைக்கு ஒரு செட் துணிமணியைத் தூக்கிச் சென்ற முதல் ஆள் நானாகத்தான் இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. வெற்றிகரமாக பீச்சை அடைந்துவிட்டேன். “வெற்றிகரமாக” என்பது எழுதுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். உண்மையில் உதறிக் கொண்டிருந்தேன். டிக்கெட் வாங்கும் இடத்தில் இருந்தே தூரத்தில் சிலரை மொழு மொழுவெனெ பார்த்த போது ‘த்ரில்’ ஆகியிருந்தேன். என் பேச்சிலர் வாழ்க்கையின் ஆகச்சிறந்த தருணம் என்றும் இப்பொழுது ஒரு கவிதை எழுதிவிட வேண்டும் என்று மொக்கைத்தனமாக யோசித்துக் கொண்டிருதேன். 

பெயருக்குத்தான் பீச். ஆனால் அது ஒரு குட்டி நகரம். தங்குவதற்கான நட்சத்திர விடுதிகள், ரெஸ்டாரண்ட், சினிமா தியேட்டர் என சகலமும் உள்ளுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் எல்லா இடத்திலும் “மொழு மொழு”தான். நாகரீகம் கருதியும், சுத்தம் கருதியும் அமரும் இடங்களில் எல்லாம் கர்ச்சீஃபை விரித்து அமரச் சொல்கிறார்கள். அவ்வளவுதான். 

பல்லாயிரக்கணக்கானோரில் நான் உட்பட இன்னும் இரண்டு மூன்று பேர்கள் மட்டுமே துணியணிந்திருந்தோம். ஜெர்மானியர்கள்,பிரெஞ்சுக்காரர்கள்,ஆங்கிலேயர்கள், ஆப்பிரிக்கர் என சகல மொழு மொழு மனிதர்களையும் பார்த்த கொஞ்ச நேரத்தில் இயல்பு மனநிலைக்கு வந்துவிட முடிந்தது. என் வயதையொத்த ஒரு துருக்கியன் என்னிடம் பேசினான். தன் மனைவியோடு வந்திருந்தான். அவள் அவனுக்கு ஐந்தாவது மனைவியாம். முப்பது வயதுக்குள் ஐந்து மனைவியா என்று கேட்டபோது அவன் பெருமையடைந்தான். அவள் எங்கள் ஊர் சினிமா நடிகைகளை விட அழகாக இருப்பதாக கூறியபோது அவன் அவளிடம் மொழிபெயர்த்தான். துணியை துறந்தபோது கூட வெட்கமடையாதவள் இதைக் கேட்டு வெட்கப்பட்டாள். என்னிடம் ”துணியை கழட்டிவிடு” என்றான். நான் சிரித்துக்கொண்டே நடக்கத் துவங்கினேன்.

’நிர்வாணம் என்பது மட்டுமே முழு சுதந்திரம்’ என வாசித்ததுண்டு. அதை அங்கே ஒவ்வொருவரும் அனுபவிப்பதாகத் தோன்றியது. அங்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பண்பாடு, சமூக ஒழுக்கம் என்பதெல்லாம் கடலில் கரைக்கப்பட்டிருந்தது. வாழ்க்கையின் அந்தக் கணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றியது. சில கிலோமீட்டர்களுக்கு கடற்கரையையொட்டி நடந்தபோது சிலர் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதையும், அடுத்தவர்களுக்கு தெரியாமல் அவர்களது அந்தரங்கங்களை எள்ளுவதையும், குடும்பத்தோடு நிர்வாணமாக சுற்றுபவர்களையும் சர்வசாதாரணமாக பார்க்க முடிந்தது.

கேமராக்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் அடுத்தவர்களை படம் எடுக்க அவர்களின் அனுமதி பெற வேண்டும். எந்தப் பயணத்திலும் கேமரா எனக்கு சுமை என்பதால் அது பற்றிய அக்கறை எனக்கு இருந்ததில்லை. ஒரு எகிப்தியன் சில ஜெர்மானிய பெண்களை படம் எடுத்தபோது அவனை ஜெர்மானியர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவன் ஆடை அணிந்திருந்தான். அவன் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் சூழ்ந்து கொண்ட ஜெர்மானியர்கள் குறித்து நக்கலடித்தான். ஜெர்மானியப் பெண்கள் அவன் நிர்வாணம் ஆகியே தீர வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினார்கள். அவன் முடியாது என்றான். சில ஆண்கள் வலுக்கட்டாயமாக அவனது கால்சட்டையை உருவினார்கள். அவனால் ரொம்ப நேரம் அவனது துணிகளைப் பிடித்துக் கொள்ள முடியவில்லை. அவனது உள்ளாடையை சில பெண்கள் உருவினார்கள். அவன் சுருங்கிக் கொண்டான். அப்பொழுது பெண்கள் அவனைப்பார்த்து கேலி பேசினார்கள். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவனது அந்தரங்கம் பற்றிய கேலி என்பதை தெரிந்து கொண்டேன். அவன் எழுந்து ஓடினான். அவனது ஆடைகளை ஒருவன் வீசியெறிந்தான். பொறுக்கிக் கொண்டு ஓடினான். அங்கு இருந்தவர்கள் கைகொட்டினார்கள்.

ஒரு ஜெர்மானியன் அறிவித்தான். “இங்கு யாரும் ஆடைகளோடு சுற்றக் கூடாது”. நான் சுற்றிலும் பார்த்தேன். அந்த அறிவிப்பு எனக்கானது என்று புரிந்துகொண்டேன். மீண்டும் அறிவித்தவனின் முகத்தை பார்த்தேன். அவன் என்னைப்பார்த்து சிரித்தான். அப்பொழுது எனக்கு பதில் சிரிப்பு வரவில்லை.

7 எதிர் சப்தங்கள்:

pravinfeb13 said...

மிக அருமை சார்...

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்தேன்...

Seeni said...

aakaa...

கோவி.கண்ணன் said...

நல்லப்பதிவு, அவர்கள் குடும்பம் குடும்பமாக எந்த வயது குழந்தைகளையும் அவ்வாறே கூட்டிவருவார்கள் என்றும் படித்திருக்கிறேன்.

வானம் ஆடையாக இருக்க வேறொரு உடை தேவை இல்லை என்று நினைப்பவர்கள் போல, அவர்களின் உரிமையும் மதிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Anonymous said...

ஆனாலும் உங்களுக்கு என்ன ஆச்சுன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல???!!

Vaa.Manikandan said...

நன்றி பிரவீண், தனபாலன், சீனி & கோவி.கண்ணன்.

அனானிமஸ்,

கடைசியில் சொல்கிறேன்.

மலரின் நினைவுகள் said...

"சாய்ந்த கோபுரங்களை பார்ப்பதில் விருப்பமில்லை"
- செம நக்கலுங்க..!!

"அவள் எங்கள் ஊர் சினிமா நடிகைகளை விட அழகாக இருப்பதாக கூறியபோது"
- வன்மையாகக் கண்டிக்கிறேன்..!! (ஒருவேளை நம்ம நடிகைகளையும் அங்கு உலவ விட்டிருந்தால் நீங்கள் அவ்வாறு சொல்லியிருக்க மாட்டீர்களோ?!)

அடுத்தமுறை செல்லும் போது கேமரா எடுத்திட்டுப் போங்க.. நாங்களும் இயற்கையான "மொழு மொழுவைப்" பாக்கணும்ல!!

தீபாவளிக்கு கடன் வாங்கி புதுத்துணி எடுக்கிறவங்க எல்லாம் இத கட்டாயம் படிக்கணும்