Mar 2, 2011

எஸ்.வி.ராமகிருஷ்ணன்(1936-2011) - வரலாற்றில் எரிந்த சுடர்.



படிப்பை முடித்த பிறகு எனக்கு முதலில் வேலை கிடைத்த இடம் ஹைதராபாத். அதற்கு முன்பான ஓரிரு வருடங்களில்தான் எனக்கு புத்தகங்களின் பரிச்சயமும், இலக்கியம் மீதான ஈர்ப்பும் உண்டாகியிருந்தது. இதன் காரணமாகவே சென்னை மீதான மோகமும் உருவாகி வளர்ந்து இருந்தது. சென்னையை விட்டு வேறு ஊர்களுக்குச் செல்ல விருப்பமில்லாதவனாக இருந்தேன்.

ஹைதராபாத் என்பது தயக்கத்தை அதிகமாக்குவதாகவே இருந்தது. சென்னையைவிட்டுச் செல்ல வருத்தமாக இருப்பதாக மனுஷ்ய புத்திரனிடம் சொன்ன போது, எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் ஹைதராபாத்தில் இருப்பதாகச் சொல்லி அவரது எண்ணை எனக்குக் கொடுத்திருந்தார். அப்பொழுது வெளிவந்திருந்த எஸ்.வி.ஆரின் "அது அந்தக் காலம்" என்ற முதல் கட்டுரைத் தொகுப்பினை வாசித்திருந்தேன்.

நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த நிறுவனம், எனக்குத் தருவதாக சொல்லியிருந்த சம்பளத்தில் பாதியை மட்டுமே முதல் ஆறு மாதங்களுக்குத் தர முடியும் என்று சொல்லியிருந்தது. வாடகை, உணவுச் செலவு தவிர வேறு எந்தச் செலவும் செய்யாதவனாக இருந்தேன்.

முதல் சம்பளம் கூட வாங்கியிராத எனக்கு 'மிஸ்டு கால்' கொடுப்பது என்பதுதான் வழக்கமாக இருந்தது. அதிசயமாக ஓரிரு அழைப்புகளை எனது அலைபேசியில் இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் உருவானால் நேரடியாக விஷயத்திற்கு வந்து விடுவேன். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் எஸ்.வி.ராமகிருஷ்ணனை அழைத்து உங்களின் முகவரி வேண்டும் என்றேன். சற்றே பதட்டமடைந்தவராக "யார் நீங்கள்?" என்றார். பிறகுதான் "மனுஷ்ய புத்திரன் உங்கள் எண்ணைக் கொடுத்தார், உங்களைப் பார்க்க வருகிறேன்" என்றேன். அப்பொழுதும் என்னை முழுமையாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.

2A,அட்லஸ் அபார்ட்மெண்ட், பஞ்சாரா ஹில்ஸ் என்ற முகவரியை கண்டறிவதில் அத்தனை சிரமம் இருக்கவில்லை. பஞ்சாரா ஹில்ஸில் இப்பொழுது இருக்கும் சிட்டி சென்டர் உள்ளிட்ட வணிகக் கட்டிடங்கள் முளைத்திருக்கவில்லை. அமைதியான இடமாக, மேல்தட்ட மக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியாக இருந்தது. மியாப்பூரில் இருந்து பஞ்சகுட்டாவில் இருக்கும் ஹைதராபாத் சென்ட்ரலுக்கு பஸ் பிடித்து அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் நடந்து பஞ்சாராஹில்ஸூக்குச் சென்றேன்.

முதல் அறிமுகத்தில் அவருடைய கணினியில் இருந்த சிக்கல்கள் பற்றியே அதிகம் பேசினோம். இதன் பின்னர் ஓரிரு முறை கணினி குறித்தான சந்தேகங்களுக்காகவே என்னை அழைத்தவர் கணினி பற்றி அறிந்து கொள்வதில் அதீத தீவிரம் காட்டினார். இதன் பிறகாக அடிக்கடி அவரது இல்லத்திற்குச் செல்லத் துவங்கினேன். அவர் சுங்கத் துறையில் முதன்மை ஆணையாளராக இருந்தவர் என்ற அவரது பதவியும் அவரது வயதும் அவரோடு பழகுவதில் எனக்கு பெரும் தயக்கத்தை உருவாக்கியிருந்தது.

எனக்கு வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே விடுமுறை என்பதால், அன்று காலையிலேயே துணிகளைத் துவைத்துவிட்டு மதியத்திற்குப் பிறகாக எஸ்.வி.ஆரின் வீட்டிற்குச் செல்வேன். அந்த வாரத்தில் அவர் எழுதி வைத்திருந்த கட்டுரையை கணினியில் தட்டச்சு செய்வதுதான் எனக்கான முதல் வேலையாக இருக்கும். அவரது கையெழுத்தைப் புரிந்து கட்டுரையை முடிக்க ஓரிரு மணி நேரங்கள் தேவைப்படும். பின்னர் அதை அவர் வாசித்து திருத்தங்களைச் சொல்வார். ஆறு மணிக்கு மேலாக அநேகமான ஞாயிற்றுக் கிழமைகளில் பஞ்சாரா ஹில்ஸ் சாலையில் நடைப் பயிற்சிக்கு என்னையும் அழைத்துச் செல்வார். கையில் நுணுக்கமான வேலைப்பாடுகளால் ஆன சிறு தடி ஒன்றை வைத்திருப்பார். எதிரில் வரும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் அவரை நோக்கி வருவதைப் போல தடியை நீட்டி தடுக்க முயற்சி செய்வது எனக்கு சிரிப்பை உண்டாக்கும். ஏதேனும் ஒரு வாகனம் சற்றே நெருங்கி வந்தாலும் கூட அடித்துவிடுவது போல தடியை வீசிக் காட்டுவார். அந்த வாகன ஓட்டி கோபக்காரனாக இருந்து சண்டைக்கு வந்துவிடுவானோ என்று எனக்கு பயம் வந்துவிடும்.

இந்த நடைப் பயிற்சியின் போதுதான் நிறைய நிகழ்வுகளையும் செய்திகளையும் அவரிடமிருந்து கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் 1850க்குப் பிறகான இந்தியாவில் அல்லது உலகில் நிகழ்ந்த சம்பவங்களைப் பேசுவார். அவருடைய ஞாபக சக்தி துல்லியமானது. சில நிகழ்வுகளை தேதி வாரியாகச் சொல்லியிருக்கிறார். அவருடைய செய்திகள் பெரும்பாலும் தமிழ் வருடத்தின் அடிப்படையில் அமைந்தது. சென்ற துன்மதி வருடத்தில்(1982) நிகழ்ந்த ஒரு நிகழ்வைச் சொல்லி, அதற்கு முந்தைய துன்மதி வருடத்தில் அதாவது 1922 இல் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வை கோர்த்துச் சொல்வதுதான் எஸ்.வி.ஆரின் வழிமுறை. இதனாலேயே அவரால் நிறைய தகவல்களைத் துல்லியமாக ஞாபகத்தில் வைத்திருக்க முடிந்ததாக நினைக்கிறேன். அவருடைய தாயார் சொன்னதாக நிறைய தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.

1936 இல் தற்போதைய திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தாராபுரத்தில் பிறந்தார். அவரது தந்தையார் அந்த வட்டாரத்தில் பிரபலமான வக்கீலாக இருந்திருக்கிறார். எஸ்.வி.ராமகிருஷ்ணன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ(ஹானர்ஸ்) முடித்துவிட்டு சட்டம் பயின்றார். இதன் பின்னர் ஐ.ஆர்.எஸ்(Indian Revenue Services) ஆக தேர்வில் வெற்றி பெற்ற பிறகு சுங்கத் துறையில் பணிக்குச் சேர்ந்திருக்கிறார். சவீதா அவரது மனைவியின் பெயர். செளமியா, நிவேதிதா என்ற இரு மகள்களும் உண்டு. அரசாங்கத்தில் அதிகாரியாக இருப்பவர்களின் தோரணை எஸ்.வி.ஆரிடம் இருந்தது. கடைசி வரைக்கும் இந்த அதிகார தோரணையை அவரிடம் கண்டிருக்கிறேன். இந்த தோரணை என்பது அடுத்தவர்களை மிரட்டி ஏய்க்கும் எதிர்மறையான தோரணையைக் குறிப்பதில்லை. 'Loooking Majestic' என்பது சரியாகப் பொருந்தி வரலாம்.

எஸ்.வி.ஆர் ஏதேனும் செய்திகளைச் சொல்லும் போது அவரிடம் நிறைய வினாக்களைக் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பார். வினாக்களுக்கான விடை தெரியவில்லை என்றால் தேடிப்பார்த்துச் சொல்கிறேன் என்பார். அடுத்த முறை அவரைப் பார்க்கச் செல்லும் போது என்னிடம் பேசியிருந்த விஷயங்களை கட்டுரையாக எழுதியிருப்பார் அல்லது ஒரு பக்கத்தில் குறிப்புகளாக எழுதி வைத்திருப்பார். சந்தேகம் வருமானால், பெரும்பாலும் அவரது வயதையொத்த நண்பர்களைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வார்.

அவர் பேசும் போது நான் கூர்ந்து கவனிக்கிறேனா என்பதைச் சோதிக்க அடிக்கடி கேள்விகளைக் கேட்பார். பல சமயங்களில் சரியான பதிலைச் சொல்லிவிடுவேன். பதில் தெரியாத சமயங்களில் எனக்கு கோபம் வந்துவிடும்.

ஹைதராபாத்தில் என்னுடன் தங்கியிருந்தவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்தார்கள். அவர்களுக்கு சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறையாக இருக்கும். சனிக்கிழமைகளில் திரைப்படம், வணிக வளாகங்கள் என்று சுற்றிவிட்டு ஞாயிற்றுக் கிழமையில் தூங்கிக் கொண்டிருப்பார்கள். தொழிற்சாலையில் பணிபுரிந்த எனக்குக் கிடைக்கும் ஒரே விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் தொலைக்காட்சியில் கூட படம் பார்க்காமல் இப்படி ஒரு பள்ளிக்கூட மாணவனைப் போல அவதிப்படுகிறேன் என்று அவரிடம் ஒரு முறை சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டார். பிறிதொரு சமயத்தில் வேறு விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது "உன்னுடன் தங்கியிருப்பவர்கள் ஏதேனும் வரலாற்றுச் செய்தியை, உதாரணமாக இரண்டாம் உலகப்போரைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால் நிறைய புத்தகங்களைத் தேட வேண்டியிருக்கும். நீ இரண்டு அல்லது மூன்று நடைபயிற்சிகளில் என்னிடம் காதை நீட்டினால் போதும்" என்று சொன்னார். அது சரி என்றே எனக்குப் தோன்றியது.

தினமும் அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணி வரைக்கும் வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்த அவர் எந்தப் புத்தகத்தையும் நிராகரித்துப் பேசி நான் பார்த்ததில்லை.

அயோத்திதாசர்,பெரியார்,கி.வீரமணி, மார்க்ஸ்,ஆவி உலகம்,வண்ணநிலவன் கதைகள்,பிரதாப முதலியார் சரித்திரம் என்று பலதரப்பட்ட புத்தகங்களையும் வாசித்துவிட்டு அதைப் பற்றிப் பேசுவார்.

ஹைதராபாத் ஃபிலிம் கிளப்பில் ஒவ்வொரு மாதமும் சில வெளிநாட்டுத் திரைப்படங்களை அமீர்பேட்டில் உள்ள சாரதி ஸ்டுடியோவில் திரையிடுவார்கள். இந்தத் திரைப்படங்களை தவறாமல் பார்த்துவிடும் வழக்கத்தை எஸ்.வி.ஆர் வைத்திருந்தார்.

இரவு ஒன்பது மணிக்கு மேலாக மது அருந்துவார். இது எப்பொழுதும் ஒரே அளவிலேயே இருக்கும். மது அருந்திய பிறகு தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பார். சில சமயங்களில் எனக்கு உறக்கம் வந்துவிடும்.உடனடியாக கிளம்பிச் செல்ல அனுமதிக்க மாட்டார். குறைந்தபட்சம் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாக நான் கிளம்பத் தயாராகும் தகவலை அவருக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த 'நோட்டீஸ் பீரியட்' சமயத்தில் அவரது மனைவி சவிதா எனக்கு இரவு உணவை அளிப்பார். அவர் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவராக இருந்தார்.

ஒவ்வொரு முறை எஸ்.வி.ஆரைப் பார்க்கச் செல்லும் போதும் ஏதாவது புத்தகத்தைக் கொடுத்தனுப்பி அடுத்த முறை வரும் போது படித்துவிட்டு வரச் சொல்வார். விருப்பமில்லாத புத்தகங்கள் என்றால் நான் அப்படியே திருப்பித் தந்துவிடுவேன். அந்தப் புத்தகத்தில் எனக்கு பிடித்த பிடிக்காத அம்சங்களை சொல்லச் சொல்வார். நான் படிக்கவே இல்லை என்று சொன்னால் இந்த வயதில் சில புத்தகங்களை படிக்காமல் தவிர்த்தால் பின்னர் எப்பொழுதுமே அந்தப் புத்தகங்கள் அல்லது அது சார்ந்த புத்தகங்கள் மீது விருப்பம் வராது என்று அவர் கூறியது ஞாபம் இருக்கிறது.

எஸ்.வி.ராமகிருஷ்ணன் ஹோமியோபதி மருத்துவத்தை அறிந்திருந்தார். கர்னாடக இசையிலும் குறிப்பிடத்தக்க புலமை உடையவர்.

மியாப்பூரில் இருந்து மெகதிப்பட்டணத்திற்கு அறையை மாற்றிக் கொண்டு வந்த பிறகு நண்பர் வெங்கடாசலமும் என்னுடன் தங்கியிருந்தார். இதன் பிறகு நாங்கள் இருவரும் எஸ்.வி.ஆரைச் சந்திக்கச் செல்வோம். என்னை விடவும் வெங்கட் அதிகம் கேள்வி கேட்பார். வாசிப்பும் என்னைக்காட்டிலும் வெங்கட்டிற்கு அதிகம். இந்தச் சமயத்தில்தான் எஸ்.வி.ஆரை வைத்து நிறைய நிழற்படங்களை வெங்கட் எடுத்திருந்தார்.

நான் கோபத்தைக் காட்டினாலும், முகத்தை வருத்தமாக மாற்றினாலும் எஸ்.வி.ஆர் தனது உணர்ச்சியை வெளிக்காட்டியதில்லை. சில சமயங்களில் கண்டிப்பான தலைமையாசிரியரைப் போலவும், பல சமயங்களில் கனிவான தாத்தாவைப் போலவுமே நான் பார்த்திருக்கிறேன். அவரது இரண்டாவது தொகுப்பான "வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்" வெளிவந்த பிறகு ' இந்தப் புத்தகத்திற்காக வேலை செய்த என் பெயரை நீங்கள் எந்த இடத்திலுமே குறிப்பிடவில்லை' என்றேன். அது அவரை வருத்தமடையச் செய்திருக்க வேண்டும். இதை நான் தவிர்த்திருக்கலாம் என்று பிறிதொரு சமயத்தில் நினைத்தேன்.

நான் பெங்களூருக்கு இடம் மாற்றம் செய்து போவதில் அவருக்கு விருப்பமில்லை. அடிக்கடி ஹைதராபாத் வரச் சொல்லியிருந்தார். எனக்கு அது அத்தனை சாத்தியமாக இல்லை. மூன்று முறை சென்று வந்தேன். மூன்று முறையுமே எஸ்.வி.ஆரைப் பார்ப்பதற்கு என்றுதான் சென்றேன்.

கடைசியாக நான் பெங்களூரிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்தபோது, அவரது மூன்றாவது கட்டுரைத் தொகுப்புக்கான அத்தனை கட்டுரகளையும் அவரே கணிணியில் தட்டச்சு செய்து வைத்திருந்தார். ஒரு மென்பொருளை கணிணியில் நிறுவதில் இருந்து, சில அடிப்படையான சிக்கல்களை கணினியில் பழுது நீக்குவது வரைக்கும் கற்றிருந்தார். 75 வயதில் இவ்வளவு ஆர்வமாக கற்றுக் கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியமானதாக இருந்தது.

கட்டுரைகளை நானும் அவரும் வரிசைக்கிரமமாகத் தொகுத்து அக்டோபர் மாதத்தில் உயிர்மைக்கு அனுப்பி வைத்தோம். மிகுந்த சந்தோஷம் அடைந்தவராக இருந்தார். இன்னும் எழுதுவதற்கு நிறையச் செய்திகள் இருப்பதாகச் சொல்லியிருந்தார். பிறகு நவம்பரில் அவரது எண்ணை தொடர்பு கொண்ட போது இரத்தப் புற்று நோயைக் கண்டறிந்து இருப்பதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு மருத்துவப் பெயரைச் சொல்லி இந்த வகை இரத்தப் புற்று நோய் வந்தவர்கள் அதிகபட்சம் மூன்று மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஜனவரியில் ஒரு முறை நீண்ட நேரம் அவரோடு தொலைபேசியில் பேசினேன்.

தான் இறக்கப்போவதை தெரிந்து கொண்டவராக கடைசி மாதங்களில் மரணத்தைப் பற்றி நிறையப் பேசினாராம். ஜனவரி பாதிக்குமேல் உடல்நிலை மிக பலவீனம் அடைந்திருக்கிறது. பிப்ரவரி தொடக்கத்தில் பேசுவது குறைந்து போய் ஒருவிதமான மயக்க நிலையில் இருந்திருக்கிறார். "என் அப்பா உயிரோடிருக்கிறாரா" என்று வினவியிருக்கிறார். அவர் கடைசியாகப் பேசியது அதுவாகத்தானிருக்கும்.

அவர் இறந்த(09-02-2011) பிறகு நான்கு நாட்கள் கழித்து ஹைதராபாத் சென்றுவிட்டு திரும்பினேன். பேருந்தில் மஹதீரா என்ற தெலுங்குப் படம் ஓடிக் கொண்டிருந்தது. இனி நான் ஹைதரபாத் வருவதற்கான அவசியமே இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

நன்றி: உயிர்மை- மார்ச்'2011

2 எதிர் சப்தங்கள்:

சாணக்கியன் said...

கொடுத்துவைத்தவர் நீங்கள்!!

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.