
மரணத்திற்கும்
உடல் சிதறலுக்குமான
இடைவெளியில்
நிகழ்ந்த
விபத்தொன்றில்
சிவப்புச்சாயத்தில் விழுந்த
துணியென கிடந்தவனை
நிலம் உரச
வெளியில் இழுத்தார்கள்.
அனிச்சையாக நகரும்
கரங்களின் சிவப்புப்பட்டையை
புதிரான ஓவியமாக்கிவன்
சில பெண்களின்
கருணையைப் பெற்றுக் கொண்டான்.
நினைவு வந்த கருநாளில்
அவனிடம்
தண்டுவடம் முறிந்து போனதாகச்
சொன்ன போது
இடுப்புக் கீழ் செயல்படாதென்ற
துக்கத்தின் கண்ணீர்
ஈரமாக்கிய தலையணையிலிருந்து
கருணையின் கடவுள் தோன்றினார்.
மது அருந்துவதிலும்
சிகரெட் உறிஞ்சுவதிலும்
தடையில்லை என்றவுடன்
சற்று ஆசுவாசமடைந்த
மெலிபவனின் பொழுதுகள்
காற்றில் அலையும்
டிஜிட்டல் உருவங்களால்
வடிவமைக்கப்படலாயிற்று.
சலனமில்லாத வெறும் பகலில்
ஒரு தலைவன் மார்க்ஸியம் பேசிக் கொண்டிருக்கிறான்
பழைய கிரிக்கெட் போட்டியில் ஒருவன் பந்தை விரட்டிக் கொண்டிருந்தான்
கவிஞன் என்று சொல்லிக் கொண்டவன் தன் பிரதாபங்களை அடுக்குகிறான்
பெட்ரோல் விலை பற்றி வட்டமாக அமர்ந்த நால்வர் அரிதாரங்களுடன் பேசுகிறார்கள்
காட்டெருமைகளால் நிரம்பிய வனத்தில் ஒரு யானை தனித்து அலைகிறது
சலித்துச் சேனலை மாற்றியவன்
உந்திச் சுழி தெரிய நடந்து கொண்டிருந்த
நெடுந்தொடர் நாயகியைஅழைக்கிறான்.
யாரும் இல்லாத தனிமையில்
அவள்
டிவியில் இருந்து இறங்கி வருகிறாள்
கண்களை மூடிக் கொண்டவனுடன்
சல்லாபித்து திரும்பியவள்
இனிமேல் வரப்போவதில்லை என
சொல்லிச் செல்கிறாள்.
அதிர்ந்தவன் காரணம் கேட்க
எத்தனிக்கும் கணத்தில்
வேறொரு விளம்பரப் பெண்
ஆட
வந்துவிடுகிறாள்.
9 எதிர் சப்தங்கள்:
:)
//அனிச்சையாக நகரும்
கரங்களின் சிவப்புப்பட்டையை
புதிரான ஓவியமாக்கிவன்
சில பெண்களின்
கருணையைப் பெற்றுக் கொண்டான்.//
அழகான ஆழமான வரிகள்...
Interesting!
//அனிச்சையாக நகரும்
கரங்களின் சிவப்புப்பட்டையை
புதிரான ஓவியமாக்கிவன்
சில பெண்களின்
கருணையைப் பெற்றுக் கொண்டான்.
//
அழகாக காட்சி படுத்தி இருக்குறீர்கள்..
அதுவும் //அனிச்சையாக நகரும்
கரங்களின் சிவப்புப்பட்டையை // இந்த வரிகள் மனசுக்குள் என்னென்னவோ எண்ணங்களை காட்சிகளை கொண்டு வந்து இறைத்து போகிறது..
//மது அருந்துவதிலும்
சிகரெட் உறிஞ்சுவதிலும்
தடையில்லை என்றவுடன்
சற்று ஆசுவாசமடைந்த
மெலிபவனின் பொழுதுகள்
காற்றில் அலையும்
டிஜிட்டல் உருவங்களால்
வடிவமைக்கப்படலாயிற்று.//
மிக ஆழமான வரிகள்..
அந்த விபத்து அவன் மது அருந்தியதால் கூட நிகழ்ந்திருக்க கூடும் என்றொரு எண்ணம் தோன்றாமல் இல்லை..
//டிஜிட்டல் உருவங்களால்
வடிவமைக்கப்படலாயிற்று//
மருத்துவமனை, பொருளாதாரம், பட்ஜட் என ஒரு கோணம் தோன்றினாலும்.. ப்ரோகிறாம் போல இயங்கும் வாழ்க்கை என்றும் எண்ண வைக்கிறது..
//அதிர்ந்தவன் காரணம் கேட்க
எத்தனிக்கும் கணத்தில்
வேறொரு விளம்பரப் பெண்
ஆட
வந்துவிடுகிறாள்.//
ஒன்றைவிட ஒன்று பெட்டா தெரியும் என்னும் ஜானி படத்தின் வசனம்..
இயலாமையிலும் எழும் காம உணர்வு..
தனிமையில் தணியும் கறையும் எண்ணங்கள்..
//இனிமேல் வரப்போவதில்லை என
சொல்லிச் செல்கிறாள்.
//
நேரடியாய் பொருளெடுத்தால் முதுகு தண்டில் அடிப்பட்டவன் கலவியில் ஈடுபட முடியாது என்பதை உணர்த்துவதாய் தோன்றுகிறது என்றாலும் கவிதையை நான் சரியாக புரிந்து கொண்டேனா என்று தோன்றுகிறது..
பாராட்டுக்கள் மணிகட்டன்..
மன்னிக்கவும் மணிகண்டன்..
தவறாக தங்கள் பெயரை தட்டச்சியமைக்கு..
அசோக்,சங்கவி,மதன் ஆகிய நண்பர்களுக்கு நன்றி.
ஆதி,
ஒரு கவிதையில் ஒவ்வொரு வரியிலும் தன் புரிதல்களை வெளிப்படுத்துபவர்களோ அல்லது விமர்சிப்பவர்களையோ எதிர் கொள்ளும்போது மகிழ்ச்சியடைகிறேன்.
மிகச் சமீபத்தில் ஒரு நண்பர் கண்ணாடியில் நகரும் வெயில் தொகுப்பை வாசித்துவிட்டு விரிவாக எழுதியிருந்தார். (இப்படி யாராவது எப்பொழுதாவது எழுதுவதுதான் கவிதைக்கு எழுத்து ரீதியாக நான் பெறும் எதிர்வினைகள். ஆனால் நூறு பேர் கவிதையை பற்றி 'பேசு'வதை விடவும் 'ஒரு' கடிதம் என்னை அதிகம் மகிழ்ச்சியடைச் செய்துவிடுகிறது.)
விமர்சன ரீதியில் கவிதையை இப்படி வரி வரியாக அணுகுவது சரியா என்று யோசித்திருக்கிறேன். ஆனால் மொத்தமாக கவிதையை அணுகுவதும், வரிகளை தனித்து அணுகுவதும் ரசனை சார்ந்த விஷயம் தானே.
கவிதையை சரியாக புரிந்து கொண்டோமா என்பது பற்றி எந்தச் சந்தேகமும் தேவையில்லை. நீங்கள் புரிந்ததில் இருந்து முற்றும் எதிர்த்திசையில் இன்னொருவர் புரிந்து கொள்ளலாம். கவிதையில் இரண்டுமே சாத்தியம்தானே. சொல்லப்போனால் கவிதையின் சூட்சமமே அதுதான்.
நன்றி.
மரபிலும், புதுக்கவிதையிலும் அதிகமாய் மயங்கி கிடந்தவன் நான், ஆதலால் கவிதையின் கரு, சுவை, வார்த்தையமைப்பு, உவமை என அனைத்தையும் பார்த்து ரசித்து பழகிவிட்டேன்.. நவீனக்கவிதைகள் கொஞ்சம் அறிமுகமான பிறகு, அதிகமாய் தங்களின் வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தேன்.. எனக்கு தெரியாத பல எழுத்தாளர்களை நீங்கள் அறிமுகம் செய்திருக்குறீர்கள், அதற்காக தங்களுக்கு தனியாக ஒரு நன்றி சொல்ல வேண்டும்..
நன்று திரு .மணிகண்டன்
நன்று திரு .மணிகண்டன்
Post a Comment