May 29, 2008

ஆர்குட் பூதம்

ஆர்குட். கூகிள் நிறுவனம் நடத்தும் வலைதளத்தின் பெயர் இது. இணையத்தை உபயோகப்படுத்தும் இளைய தலைமுறையினரில் இந்த இணையத்தளத்தில் உறுப்பினராக இல்லாதவரை பார்ப்பது என்பது புற்று வளரும் அளவிற்கு தவம் செய்து சிவ பெருமானை தரிசிப்பதற்குச் சமம்.

இந்த‌த் தளத்தின் பயனாளர் தன்னைப் பற்றி சில குறிப்புகள், புகைப்படம் ஆகியவற்றை தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள பக்கத்தில் வைத்துக் கொள்வார். இவற்றை மற்ற யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். மற்றவரின் பக்கத்தைப் பார்த்து ஏதாவது ஒரு அம்சத்தில் கவரப்பட்டு அவரோடு நட்பு வளர்க்கலாம் என்று தோன்றினால், அவரின் பகுதிக்கு சென்று "ஹாய்" ,"நீங்கதான் அவரா?", "நாம் இருவரும் நண்பராக இருக்கலாமா?" என்று ஏதாவது ஒரு வாக்கியத்தில் ஆரம்பிப்பார்கள். இப்படி எழுதுவதற்கு 'ஸ்க்ரேப்' என்று பெயர்.

தனக்கு வந்திருக்கும் அந்தச் செய்தியை படித்த நபர், செய்தி கொடுத்தவரின் பக்கத்திற்கு வந்து அவரின் புகைப்படம், அவரைப்பற்றிய செய்திகளைப் பார்ப்பார். அவருக்கும் பிடித்துவிட்டால் அடுத்த சில நாட்கள் அல்லது மணிகளில் இருவரும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். இது பெரும்பாலும் பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் நட்பளவிற்கு இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவரின் பகுதியில் அவர் எதாவது எழுதுவது அவரின் பக்கத்தைத் திறந்து இவர் எழுதுவது என்று தொடரும். 'ஸ்க்ரேப்' செய்யாத நாட்களில் இருவருக்கும் மண்டையே பிளந்துவிடலாம்.

இந்த இணையத்தளத்தில் குழுமங்களும் இருக்கின்றன. குழுமங்கள் என்பது யாராவது ஒருவர், ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி குழுமத்தை தொடங்குவார். உதாரணமாக "ரஜினி காந்த்". ரஜினியின் புகைப்படங்களை வைத்து அவரைப் சில குறிப்புகளையும் குழுமத்தை ஆரம்பிப்பவர் போட்டு வைப்பார். இக்குழுமம் கண்ணில்படும் யாராவது ரஜினி மீது ஈர்ப்பு உடையவராக இருந்தால் குழுமத்தில் இணைந்து விடுவார். முதலில் கொஞ்ச நாட்கள் அவரும் ரஜினி பற்றிதான் குழுமத்தில் பேசுவார். இணையாகவே அக்குழுமத்தில் உள்ள வேறொருவரின் பக்கத்தில் சென்று "அய்..நீங்களும் ரஜினி ரசிகரா? நானும்தான்" என்று ஆரம்பிப்பார். இப்படியாக புதிதாக சில ஆட்களின் நட்பு கிடைத்தவுடன் குழுமத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் அல்லது அவ்வப்போது எதையாவது எழுதலாம்.

இப்படியான குழுமங்கள் தென் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் தொடங்கி நடிகை மும்தாஜ் வரைக்கும் இருக்கின்றன. மாடர்னிசம் தொடங்கி சைக்கோத்தனம் என்னும் வரை நீள்கிறது.

நல்ல விஷயம்தானே. நட்பு வட்டம் பெரிதாகிறது. சில பொதுவான விஷயங்களை விவாதிக்க முடிகிறது. இப்படி எல்லாம் நீங்கள் நினைத்தால் "ரொம்ப நல்லவராக" இருக்கிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். இத்தகைய தளங்களுக்கு 'கம்யூனிட்டி' தளங்கள் என்று பெயர். ஆர்குட் தவிர்த்து எண்ணற்ற கம்யூனிட்டி தளங்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் இணையத்தை உபயோகப்படுத்துபவர்கள் பெரும்பான்மையான நேரம் 'கம்யூனிட்டி' தளங்களில் செலவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சைபர் உலகத்தில் கீபோர்ட் மூலமாக உருவாக்கப்படும் சொற்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முயல்கிறார்கள். தான் டைப் செய்யும் எழுத்துக்களை நூலாக பிடித்து அடுத்தவரின் இதயத்தை நெருங்கிவிடுவதான பாவனைதான். மற்றபடி சைபர் உறவுகள் உடைந்து போவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஒரு உறவு உடைந்து போகும் பட்சத்தில் சில நாட்களின் மெளனத்திற்குப் பிறகு அல்லது உடனடியாக இன்னொரு அந்தரங்கமான உறவை பெற்றுவிட முடிகிறது.

தொண்ணூறு சதவிகிதம் ஆட்கள் எதிர்பாலின நட்பைத் தேடித்தான் உறுப்பினராக இருக்கிறார்கள் என்று என் நண்பன் சொல்கிறான். இன்னொரு செய்தியும் அவன் சொன்னதை கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒரு சைபர் உறவை ஒருவன்/ஒருத்தி உடைப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் போதே அவருக்கு வேறொரு விருப்பமான உறவு, தற்போதைய உறவை விட கவர்ச்சியான உறவு அமைந்துவிட்டதாகவும் சொல்கிறான் அல்லது ஒரே சமயத்தில் பல்வேறு தளங்களில் வெவ்வேறு உறவுகளை ஒருவர் பராமரிப்பதும், ஒரு உறவு குறித்தான தகவல்களை மற்ற உறவுகளுக்குத் தெரியாமல் வைத்திருப்பதும் நடக்கிறது என்கிறான். அவசியம் ஏற்பட்டு வேறொருவரோடான தன் சைபர் உறவு பற்றி மற்றவரிடம் பேசும் போது மேலோட்டமாக மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறார்கள்.

சில நண்பர்கள் ஆர்குட்டினை திறக்க முடியாத நாட்களை கை உடைந்தவர்கள் போல உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதையாவது யோசிக்க வேண்டும், அதை யாருடைய பக்கத்திலாவது எழுதிக் கொண்டிருக்க வேண்டும். இதனை ஒரு வித போதை என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆர்குட்டை தடை செய்து வைத்திருக்கின்றன. ஆனால் பிராக்ஸி என்றொரு ஆயுதம் இருக்கிறது அதை வைத்து உள்நுழைந்து விடலாம். தடை செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு குறிப்பிட்ட தளத்தை மட்டும் தடை செய்தல் என்பது இன்றைய சூழலில் முடியாத காரியம். ஆர்குட் அல்லது அதனையொத்த வேறு தளங்களால் உலகம் முழுவதும் நடக்கும் குற்றங்களில் சாம்பிளுக்கு ஒன்று மட்டும் இங்கே.

கெளசாம்பி, சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி கம்பெனியின் மும்பை கிளையில் பணிபுரிந்து கொண்டிருக்கையில் அவருக்கு ஆர்குட் அறிமுகமாகிறது. ஆர்குட்டோடு சேர்ந்து 28 வயதான மணீஷ் தாக்கூரும் அறிமுகமாகிறார்.

மணீஷை பற்றி கெளசாம்பியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் "விளையாட்டுத்தனமான, உண்மையாகவே கவனித்துக் கொள்கிற தனமையுள்ள அன்பாளன்...விளையாட்டாகட்டும், இசையாகட்டும்,படிப்பாகட்டும் அவன் ஆல்ரவுண்டர்". மணீஷின் ஆர்குட் பக்கத்தில் அவரைப் பற்றி கெளசாம்பி எழுதி வைத்திருக்கும் வாசகங்கள்தான் மேலே சொன்னது.

"நீங்கள் என்னோடு பழகும் போது சுவாரசியமாக உணர்வீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். நல்ல நண்பர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி. நன்றி" மணீஷ் தன்னைப் பற்றி தன் பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்ட வாசகங்கள் இவை.

கெளசாம்பி, மணீஷ் இருவரும் ஆர்குட் மூலமாக பழகிய பின்னர், தொலைபேசி மூலமாகவும், சாட்டிங் மூலமாகவும் உறவை வளர்த்திருக்கிறார்கள். உறவின் உச்சகட்டமாக மும்பையின் ஒரு வசதியான் விடுதியில் அறை எடுத்திருக்கிறார்கள். பின்னர் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள். நீங்கள் யூகித்த்தும் சரிதான். மர்மக் கதைகளில் வருவது போல விடுதிப் பணியாளர் காலையில் கதவைத் தட்டியிருக்கிறார். நீண்ட நேரம் தட்டியும் யாரும் திறக்காததால் கதவை உடைத்திருக்கிறார்கள். கழுத்திலும், தலையிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கெளசாம்பி இறந்து கிடந்திருக்கிறார்.

விசாரணையில் இருவரும் இதற்கு முன்னதாகவே மும்பையில் வேறு சில ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. காணாமல் போய்விட்ட மணீஷ்க்கு காவல்துறையினர் வலை விரித்திருக்கிறார்கள். மற்ற லாட்ஜ் கொலைகளில் இருந்து எந்த விதத்திலும் பெரிய வேறுபாடில்லாத இந்த சம்பவத்தின் முக்கியமான அம்சமே இருவருக்குமிடையிலான அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்பதுதான்.

இந்தக் கட்டுரையின் நோக்கம், ஆர்குட் என்பது தவறான இணையதளம் என்பதைக் குறிப்பிடுவதற்காக இல்லை. எந்தத் தொழில்நுட்பத்தையும் தவறாக பயன்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதனை சுட்டிக்காட்டுவதாகும்.

இன்டர்நெட் உலகத்தில் இரண்டு அறிமுகமற்ற மனிதர்கள் சந்தித்து எந்த விதமான உறவும் நிலைபெற்று அவர்களின் முடிவு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள்ளாக‌ கொலை வரைக்கும் சாத்தியம் என்பது பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட நினைத்து பார்த்திருக்க முடியாத விஷயம்.

ஒரு இணையதளம் மட்டுமே இருவருக்குமிடையிலான பாலமாகியிருக்கிறது. இருவரும் சொற்களை கீபோர்டில் தட்டி தட்டி நெருக்கமாகியிருக்கிறார்கள். இரண்டு மாத காலம் ஒன்றாக வேறு விடுதிகளிலும் தங்கியிருக்கிறார்கள். அறுபது நாட்களில் எல்லாம் முடிந்து உறவு முடிந்து ஆயுளும் முடிகிறது. எஸ் எம் எஸ்ஸின் அளவுதான் வாழ்க்கையும் என்பதும் நம் தலைமுறைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.
--------

அந்திமழை.காம் தளத்தில் வெளிவரும் விரல்நுனி விபரீதம் தொடரின் ஏழாம் அத்தியாயம்.

9 எதிர் சப்தங்கள்:

கல்வெட்டு said...

//இந்த இணையத்தளத்தில் உறுப்பினராக இல்லாதவரை பார்ப்பது என்பது புற்று வளரும் அளவிற்கு தவம் செய்து சிவ பெருமானை தரிசிப்பதற்குச் சமம்.//

:-))

இதோ உங்களுக்குத் தரிசனம் :-)))


**


எனது பார்வையில்...

பக்கத்து வீட்டிலும், தெருவிலும், டீக்கடையிலும், சொந்த வீட்டிலும் ,உறவுகளிடமும் நட்பை வளர்க்கத் தெரியாத மொள்ளமாரிகள் செய்யும் இணைய சோசியல் நெட்நொர்க் என்பது virtual சாப்பாடு போன்றது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

விவரமான கட்டுரை மணிகண்டன் (எனக்கு ஆர்குட் எல்லாம் தெரியாது.!).

மிச்ச ஆறு அத்தியாயங்கள் எங்கே.? நான் தான் மிஸ் பண்ணிட்டனா.?

Anonymous said...

echcharikkai mani maathiri oru avasiyamaana pathivu.

idhan mukkiyathuvam unarnthathaal naanum ennathu valai poovil oru pathivezhuthi ungalathu indha pathivai inaippaaga koduththullen.

mun anumathi peraamal seithatharkku mannikkavum.

Anonymous said...

Good One....

மங்களூர் சிவா said...

ரொம்ப அருமையான பதிவு. ஆனால் நான் ஆர்குட் உபயோகிக்கிறேன்.

கண்மணி/kanmani said...

பக்கத்துவீட்டு நட்புனாக் கூட அளவோடு இருக்க வேண்டிய காலமிது.ஆனால் இணையத்தில் வளரும்/பெருகும் நட்பின் வேகமும் நெருக்கமும் கொஞ்சம் ஆபத்தானவையே.வார்த்தைகளாலும் அடுத்த கட்டமாக தொலைபேசி உரையாடல்களாலும் வளரும் நட்பு நல்லதா கெட்டதா என்பதை விட அளவோடு கட்டுப்பாட்டோடு இருந்தால் நிச்சயம் பிரச்சினை தராது.
சோஷியல் நெட்வொர்க் தளங்கள் பெரும்பாலும் செக்ஸ் சார்புடையவையே.எதிர்பாலின ஈர்ப்பே அதிகம்.எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.

Anonymous said...

hello friends, I am also used the orkut .I m not atttracted by orkut, because it is not suitable for indians,very soon our govt will band this site confirmly.

ச.பிரேம்குமார் said...

//இந்த சம்பவத்தின் முக்கியமான அம்சமே இருவருக்குமிடையிலான அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்பதுதான்.
//

இது ஏன் என்று விளக்கியிருக்கலாம். அத சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்

ஆர்குட் எல்லாம் வருவதற்கு முன் மக்கள் எல்லாம் கடலை போடுவில்லையா, விடுதியில் தங்கியதில்லையா ? நல்ல ஒரு ஊடகத்தையும் கடலை போடுவதற்கும் ரூம் போடுவதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்றால், தப்பு எங்கே என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

வெகு நாளாக தொடர்பற்ற நண்பர்களுடன் பேச முடிவது, ஒத்தக் கருத்தையுடைய நபர்களுடன் கருத்து பறிமாறிக் கொள்ள முடிவது என ஆர்குட்டிற்கும் சில நன்மைகள் இருக்கின்றன

ஆனா நன்மைய யாரு பாக்குறா ? அந்த அளவுக்கு நம்மாளுங்க இதுல கேடுகெட்டதனங்கள் செய்து அதுக்கு கெட்ட பெயர் சம்பாதிச்சு கொடுத்துருகாய்ங்க

எந்த technology கண்டுப்பிடித்தாலும் அதன் மூலம் எப்படி கெட்டவைகளை செய்யலாம் என யோசிக்கும் மனித மூளை வாழ்க!

Boston Bala said...

தெளிவான அறிமுகம். நன்றி