May 28, 2008

ஒரு கவிதை - ஒரு சொல்

(1)
ஒரு கவிதை உதிரும் தருணத்தை வேறு எதனுடனும் ஒப்பிட முடியும் என்று தோன்றவில்லை. எந்தக் கவிதையும் தந்துவிட முடியாத ஒரு பரவச கணத்தை ஒருவனுக்கு அதிகாலை தெரு வெளிச்சம் தந்துவிடலாம் அல்லது வாழ்நாள் முழுவது தேடியலைந்த, சிலிர்ப்பூட்டக் கூடிய கணத்தை கவிதையின் ஒற்றை வரியோ அல்லது கவிதை வரிகளினூடாக ஒளிந்து கிடக்கும் மெளனமோ தந்துவிடலாம். கவிதையின் சூட்சுமம் இதில்தான் இருக்கிறது. இந்த சூட்சுமத்தை அவிழ்த்துவிடவே ஒவ்வொரு கவிதையும் முயன்று கொண்டிருப்பதாக எனக்குப் படும்.

க‌விதையில் இட‌ம்பெறாத‌ ஒவ்வொரு சொல்லும், இட‌ம் பெற்ற‌ சொற்க‌ளைக் காட்டிலும் முக்கிய‌மான‌வை. அவை க‌விதையில் ஏற்ப‌டுத்தும் வெற்றிட‌த்தில் - மெள‌ன‌த்தில் வாச‌க‌ன் த‌ன் ஆயாச‌த்தோடு ஓய்வெடுக்கிறான். த‌ன் எண்ண‌ங்க‌ளை அலைய‌விட்டு க‌விதைக்கான‌ வ‌ர்ணங்க‌ளைக் க‌ண்ட‌டைகிறான். இந்த வெற்றிட‌மும் மெள‌ன‌மும் க‌விதையில் உண்டாக்கும் ச‌ல‌ன‌மின்மையை, மெல்ல‌க் க‌ளைத்துவிடும் ப‌ணியை த‌ன் சொற்க‌ளின் மூல‌ம் க‌விஞ‌ன் மேற்கொள்கிறான். இந்த‌ச் ச‌ல‌ன‌மும், மெள‌ன‌முமே க‌விதையை உள்வாங்கும் வாச‌க‌னை அதிர்வுற‌வோ, ஆர‌வாரிக்க‌வோ, ஆன‌ந்த‌ம‌டைய‌வோ அல்ல‌து க‌ண்ணீர் க‌சிய‌வோ செய்கின்ற‌ன‌.

க‌விதையில் உண்டாகும்‌ ச‌ல‌னமின்மை, ச‌ல‌ன‌ம், மெள‌ன‌ம் என்ற‌ த‌ன்மைக‌ளின் க‌ல‌வையில் க‌விதை த‌ன‌க்கான‌ இட‌த்தை தானே பெற்றுக் கொள்கிற‌து.

(2)
க‌விதையில் சொற்க‌ளை தேர்ந்தெடுப்ப‌த‌ற்கு க‌விஞ‌ன் பெரும் பிர‌ய‌த்த‌ன‌ப் ப‌ட‌ வேண்டியிருக்கிற‌து. க‌விதையை ப‌டைத்த‌வ‌னின் எண்ண‌த்திற்கு முற்றிலும் முர‌ணான‌ ஒருவ‌ன் வாசிக்கும் போது், அந்த‌க் க‌விதையை முற்றாக‌ வேறொரு த‌ள‌த்தில், வேறொரு அர்த்த‌த்தில் அவனால் புரிந்து கொள்ள‌ முடியும். இது பெரும்பாலும் உரைந‌டையில் சாத்திய‌மில்லாத‌ அம்ச‌ம்.

இந்த‌ மாற்று த‌ள‌ம், மாற்றுப் பொருளை உருவாக்குவ‌த‌ற்கான‌ பொறுப்பு ப‌டைப்பாளியிட‌ம் இருக்கிற‌து.சொற்க‌ளைத் தேர்ந்தெடுப்ப‌திலும், க‌விதையில் அந்தச் சொற்களுக்கான‌ இட‌த்தை அளிப்ப‌திலும், சொற்க‌ளை வெட்டும் நுட்ப‌த்திலும் இந்தப்‌ பொறுப்பினை க‌விஞ‌ன் நிறைவேற்றுகிறான்.

க‌விதை(இந்த‌ச் சொல் போகிற‌ போக்கில் எழுத‌ப்ப‌ட்ட நிலாவினை பிடிக்கும் அல்ல‌து க‌ன்ன‌த்தை ம‌துக் கிண்ண‌த்தோடு ஒப்பிடும் சொற்கூட்ட‌ங்க‌ளை குறிப்பிட‌வில்லை என‌க் கொள்க‌.) த‌ன் சொற்க‌ளின் க‌ட்ட‌மைப்பின் கார‌ண‌மாக‌ இசைத் த‌ன்மையை உருவாக்குவ‌தாக‌, காட்சியொன்றை வெளிப்ப‌டுத்துவ‌தாக‌ அல்ல‌து க‌தையின் புனைவோடு அமைவ‌தாக‌ என‌ எப்ப‌டியும் வ‌டிவ‌ம் பெற‌லாம்.

க‌விதைக்கான‌ சொற்தேட‌லில் க‌விஞ‌ன் மிகுந்த‌ பொறுப்புண‌ர்ச்சியோடு செய‌ல்ப‌ட‌ வேண்டுமென்பேன். இங்கு க‌விதையை க‌விதையாக‌ வாசிப்ப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை சொற்ப‌ம். இந்த‌க் கூற்றினை நான் புகாராக‌ ப‌திவு செய்ய‌வில்லை.

இந்த சொற்ப எண்ணிக்கையில் உள்ளவர்களில் க‌விஞ‌னை விட‌ க‌விதையை உக்கிர‌மான‌ பார்வையில் வாசிப்ப‌வ‌ன் உண்டு. அந்த வாசகனின் அறிவு, க‌விதைக்குள்ளான‌ க‌விஞ‌னின் அறிவை விட‌ அதிக‌ம். மூன்று மாத‌மாக‌ க‌விதையை உருவாக்க‌ செல‌வான‌ ப‌டைப்ப‌வ‌னின் உழைப்பை நிராக‌ரிக்க‌ அவ‌னுக்கு ஒரு சொல்லினை க‌ட‌ப்ப‌த‌ற்கான‌ நேர‌ம் ம‌ட்டுமே தேவைப்ப‌டுகிறது.

அந்த‌ வாச‌க‌னை க‌விதைக்குள்ளாக‌ கொண்டு வ‌ருவ‌தும் அவ‌னை க‌விதை ப‌ற்றி பேச‌ச் செய்வ‌தும் க‌விஞ‌ன‌து க‌ட‌மை.

சொற்தேர்வின் நுட்ப‌த்தோடுதான் க‌விதை எழுத‌ வேண்டும் என்ப‌தை வ‌லியுறுத்த‌ நான் வ‌ர‌வில்லை. ஆனால் க‌விதையின் அம‌ர‌த்துவ‌ம் சொற்க‌ளின் ப‌ய‌ன்பாட்டிலும் இருக்கிற‌து.

(3)

ந‌குல‌ன் ப‌ற்றிய‌ நாலு க‌விதைக‌ள் 'புதிய‌ பார்வை'யில் வாசிக்கும் போது நான்காவ‌து க‌விதையில் க‌விஞ‌ரின் சொற்பிர‌யோக‌ம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய‌து.

வ‌லி என்றாள் சுசிலா
திரும்ப‌ மெள‌னித்து
த‌ன் போர்வைக்குள்
அட‌ங்கினார் ந‌குல‌ன்

சுசிலாவின் ம‌றுநாள் ம‌ர‌ண‌த்தில்
அழுக‌ ம‌றுத்து
சாப்பிட‌ச் சென்றார்.

இந்த‌க் க‌விதையில் 'அழுக‌' என்ற‌ சொல்லினை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் என்ன‌ நேர்ந்த‌து? 'அழுக‌' என்ப‌து 'அழுகிப் போத‌ல்' என்ற‌ பொருளில் வ‌ர‌லாம். ஆனால் ந‌குல‌ன் காய்க‌றியா என்று தெரிய‌வில்லை.

'அழுவ‌த‌ற்கும்', 'அழுகுவ‌த‌ற்கும்' உள்ள‌ பெரும் வித்தியாச‌த்தின் நுணுக்க‌மில்லாத‌ க‌விதையொன்று வாசகனுக்கு அதிர்ச்சியை உண்டாக்குவ‌தில் விய‌ப்பில்லை.

வாய்மொழி வ‌ழக்கில் உள்ள‌ சொற்க‌ளை க‌விதைக்குள் கொண்டு வ‌ரும் போது க‌விஞ‌ன் கைக்கொள்ள‌ வேண்டிய‌ எச்ச‌ரிக்கையுண‌ர்வுக்கு இக்க‌விதை உதார‌ண‌மாகிற‌து.

நாஞ்சில் நாட‌ன் அவ‌ர்க‌ள் த‌மிழில் க‌விதையை அடுத்த‌ த‌லைமுறைக்கு கொண்டு செல்ல‌விய‌லும் என்ப‌தில் த‌ன‌க்கு பெரும் ச‌ந்தேக‌மிருப்ப‌தாக‌ச் சொன்னார். அத‌ற்கு அவ‌ர‌து கார‌ண‌ங்க‌ளில் பிர‌தான‌மான‌து த‌ற்கால‌க் க‌விஞ‌ர்க‌ள் மொழி மீது ஆளுமை இல்லாம‌ல் இருப்ப‌து. இதை ஏற்றுக் கொள்ள‌ வேண்டித்தானிருக்கிற‌து.

வெறும் இருநூற்றைம்ப‌து சொற்க‌ளைத் திரும்ப‌ திரும்ப‌ ப‌ய‌ன்ப‌டுத்தி க‌விதைக‌ளை வ‌டிவ‌மைப்ப‌தும், சொற்க‌ளின் பிர‌யோக‌த்தில் பெரும் ப‌ல‌வீன‌ர்க‌ளாக‌ இருப்ப‌தும் அடுத்த‌ த‌லைமுறை த‌மிழ்க் க‌விஞ‌ர்க‌ளின் குறைபாடு.

இந்த‌க் குறைபாடுக‌ள் உள்ள‌வ‌ர்க‌ள் க‌விதையை த‌ன்னோடு வைத்திருப்ப‌தும், கொஞ்ச‌ நாட்க‌ளாவ‌து வாசிப்புட‌ன் நிறுத்திக் கொள்வதும் ந‌ல்ல‌து.

இதை என‌க்கும் சேர்த்துச் சொல்கிறேன்.

4 எதிர் சப்தங்கள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/சுசிலாவின் ம‌றுநாள் ம‌ர‌ண‌த்தில்
அழுக‌ ம‌றுத்து
சாப்பிட‌ச் சென்றார்/

எனக்கு மிகப் பிடித்திருக்கிறது இது.!

மரணம் / அழுக, இங்கே உடல் அழுக என வாசிக்க வாய்ப்பிருக்கிறதே... இறந்தது சுசீலா / அழுகுவது நகுலன், அழுக மறுத்து சாப்பிடச் சென்றார் என்றும் வாசிக்கலாம்.

Vaa.Manikandan said...

தங்களின் பார்வையை பகிர்ந்தமைக்கு ந‌ன்றி சுந்த‌ர். பார்க்கலாம்..வேறு ஏதேனும் வாசிப்ப‌னுவ‌ம் பதிவு செய்யப்படுமாயின்.

Anonymous said...

மணிகண்டன்,

நல்ல பதிவு. 'அழுக' என்பது அழுவதற்கான வட்டாரச்சொல் என்று ஒரு தளத்திலும், சுந்தர் சொல்வதுபோல் 'அழுக' மறுத்து சாப்பிடுவது என்றும் பொருள் கொள்ளலாம். சிலேடையாக உபயோகப்படுத்தி இருக்கலாம்.

'அழுகுதல்' என்பது அதற்கான, நடைமுறையில் நிர்ணயிக்கப்பட்ட பலன்களை ஒருவர் அனுபவிக்காமல் ஒருவித புறக்கணிப்பால் முதுமை (அது காய்கறியானாலும்) எய்தும் துயரம் என்ற கோணத்தில் பார்க்கையில், இது 'pun intended' என்றே எண்ணத் தோன்றுகிறது. மேலும் எழுதியவர் நகுலன் என்பதால் சந்தேகத்தின் பலனை அவருக்கே சாதகமாக்க வேண்டியதும் ஆகிறது.

நாஞ்சில் நாடன் அவர்களின் கவலை கூடிய சந்தேகங்களும் உங்களுடைய கருத்தும் ஏற்புக்குரியனவே. ஆயினும் வெறும் மொழிப்புலமையின் வெளிப்பாடாக மட்டுமின்றி ஒரு அனுபவத்தின் வெளிப்பாடாக இருப்பது கவிதைக்கு மிக அவசியம். ஒரு விளையாட்டு வீரனின் ஓட்டம் 'சீரிய செய்யுள்' என்றால் தத்தித் தத்தி ஓடும் மழலையின் ஓட்டம் 'கவிதை' எனலாம்.

அன்புடன் ராஜா

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

அருமை... :)