May 30, 2008

இரண்டு கவிதைகள்


1) வெயிலின் கிளைக‌ளை ஓவிய‌மாக்குப‌வ‌ள்

ஆண்க‌ளால் நிர‌ம்பியிருக்கும்
பேருந்தில் ஏறியவள்
வெறித்து
கணங்களைக் கடத்தினாள்.

இர‌வின் ப‌க்க‌ங்க‌ளில் எழுதிய‌ க‌தைகளில்
மழைத்துளியின் க‌ன்ன‌ங்க‌ளில் வ‌ரைந்த‌ ஓவியங்களில்
காற்றின் இடைவெளிக‌ளில் நிர‌ப்பிய‌ க‌விதைகளில் -
நினைவுப் பந்தலிட்டு
வ‌சிக்கத் துவங்கிய
அவ‌ளுக்கும்
என‌க்குமிடையில்
நீ
வருகையில்

சொல்ல‌த்துவ‌ங்கினாள்
தான்
வெயிலின் கிளைக‌ளை
ஓவிய‌மாக்குப‌வ‌ள் என்று.

நன்றி: நெய்தல்
------
2) க‌விதையைக் கைவிடுத‌ல்

ம‌ர‌ண‌த்தின் க‌விஞ‌ன்
இரவின் பேரமைதியில்
கவிதை எழுதத் துவங்கினான்.

வேசி
மதுக்குப்பி
சிகரெட் துண்டு
கண்ணாடி மீன்கள்
சொற்களாகின.

முடிவுறாத வரிகளின்
விரல் பிடித்து நடந்தவன்
பெரும் வ‌ன‌த்தின்
இருளில்
க‌விதையைக் கைவிடுகிறான்.

அவ‌ன்-
திக்க‌ற்ற‌ பர‌ப்பில்
க‌விதையின்
துக்கத்தை நினைக்கையில்
பதட்டம் க‌விகிறது‍.

ந‌ட்ச‌த்திரவொளியில்
ந‌டுங்கும்
மயான‌மொன்றின் ப‌த‌ட்டம்.

நன்றி: வார்த்தை, மே'2008
---
ஓவியம்: ராஜன் புதியேடம்

1 எதிர் சப்தங்கள்:

anujanya said...

இரண்டு கவிதைகளுமே வசிகரமாக இருந்தாலும் பயிற்சியின்மையால் வாசிப்பனுபவம் கிட்டவில்லை இதுவரை. ஆயினும் இரு நல்ல கவிதைகள் சட்டைப்பையில் உள்ள திருப்தி உள்ளது தற்போது.