Feb 10, 2006

வைர விழா மேல்நிலைப் பள்ளி.

பெயர் வித்தியாசமாகப் படுகிறதா? பள்ளியும் வித்தியாசமானதுதான். 1898ஆம் ஆண்டு இங்கிலாந்தை ஆண்டு வந்த விக்டோரியா மகாராணி ஆட்சிக்கு வந்து அறுபது ஆண்டுகள் முடிந்திருந்தன. அப்போது கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியிருந்த மிராஸ்தாரர்கள், இதன் நினைவாக நமது ஊரிலும் ஏதேனும் நினைவுச் சின்னம் அமைப்போம் என முடிவு செய்தனர்.

அறுபதாம் ஆண்டு வைரவிழா என்பதனால் வைரவிழாப் பள்ளி என ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தனர்.அதன் விளைவாக வைரவிழாப் பள்ளியானது.

வர்கீஸ் குரியன் கேள்விப்பட்டிருக்கீர்களா? நம் நாட்டின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். 'ஆனந்த்'ன் தலைவர். அவர் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர். மகாத்மா காந்தி, வினோப பாவே எல்லாம் வந்து சென்றிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்பாக என்ன காரணத்திலோ பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என பெண்களுக்குத் தனியாகப் பிரித்துவிட்டனர்.(எங்களை எல்லாம் எண்ணிப் பாராமல்)

அந்தக் கால கட்டங்களிலோ அல்லது அதற்கு பின்னரோ திரு.அருணாச்சலக் கவுண்டர் என்பவர் தலைமை ஆசிரியராக
இருந்திருக்கிறார். தினமும் காலை வணக்கவகுப்பில் "சில பொறுக்குமணிகள் நேற்று பழனியம்மள் பள்ளியின் சாலையில்(!) சுற்றியிருக்கிறார்கள்.நீங்களாக வந்துவிடுவது நல்லது" என்று அறிவிப்பாராம்.உண்மையா பொய்யா-இவருக்கு தெரியுமா தெரியாதா என்று புரியாமல் பல மாணவர்களும் மேடைக்கு வந்து தண்டனை பெற்று செல்வார்களாம்.எங்க அப்பா சொன்னது.எங்க அப்பா அடிவாங்கினாரா என்பது தெரியாது.

ஆனால் ஒருவர் இருக்கிறார். எங்க அப்பவிற்கு எதிர் அணி- அந்தக் காலத்தில். ஏதோ ஒரு அலுவலக விஷயமாக சமீபத்தில் என் வீட்டுக்கு வந்த போது பழைய பகைமையில் இருவரும் நெளிந்ததை உணர முடிந்தது.(30 வருடத்திற்கு முன்பிருந்த பகை). அவர் சென்றவுடன் அப்பா சொன்னார்.

அந்த 'மீன் வாயன்' தன்னை அடிக்க ஆள் சேர்த்து வந்ததாகவும்,அடுத்த நாள் தானும் ஒரு படை சேர்த்து சென்றதாகவும்.என் அப்பா அமைதியானவர் என்று நினைத்திருந்தேன் . அந்த நிகழ்வும் அந்தப் பள்ளியின் ஒரு வரலாற்றுத் துணுக்கு.

நான் படித்த கதை சுவாரசியமானது. மூன்றாம் வகுப்பு வரை 'கான்வென்ட்'.தயவு செய்து ஊட்டி, கொடைக்கானால் அளவுக்கு நினைத்துக் கொள்ளாதீர்கள்.

மூன்றிலிருந்து ஐந்தாவது வரை 'சின்ன' வைரவிழா.எலிமெண்டரி ஸ்கூலை அப்படித்தான் சொல்வோம். அப்பவே எனக்கு நேரம் சரி இல்லை. அழகான பொண்ணு (சின்ன வைரவிழா இருபாலருக்குமான பள்ளி) ஏதாவது நம்ம வகுப்பில் இருக்காதானு ஏங்கிப் பார்ப்பேன்.(நிஜமாத்தாஙக).

மூன்றாவது படிக்கும் போது மட்டும் எனக்குப் பிடித்த ஒரு பெண் இருந்தாள். அவளையும் அடுத்த வருஷம் வேற வகுப்பில் மாற்றிவிட்டார்கள். அப்போ ஆரம்பித்த பிரமச்சாரி ராசி இன்னமும் தொடர்கிறது. பிரம்மச்சாரி ராசின்னா ஒரு பொண்ணும் நாயை மதிக்கும் அளவிற்குக் கூட நம்மை மதிக்காமல் இருப்பது.

ஆறாவது வகுப்பில் நோட்டில் எழுதாமல் தப்பிக்க நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி அப்பாவுக்கு ரூ.3000 செலவு வைத்தது, ஏழாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வரை வகுப்புத் தலைவன் ஆக செய்த தகிடுதத்தங்கள்,எட்டாம் வகுப்பில் வேலுச்சாமி வாத்தியார் டியூஷனில் அடிவாங்கமல் தப்பிக்க மேற்கொண்ட வழிமுறைகள். ஒன்பதாம் வகுப்பில் நண்பனின் காதலை பார்த்து நமக்கு ஒரு காதல் வராதா என்று பேயாக அலைந்தது, பத்தாம் வகுப்பு தனம் டீச்சர் டியூஷன்,
பதினொன்று,பன்னிரெண்டாம் வகுப்பில் கட் அடித்து கிரவுண்டில் நாடு பிடித்து விளையாடுவது, கர்ணன் டியூஷனில் அடிக்கு பயந்து இளம்பரிதியிடம் மாறினால் அங்கு அப்புசாமி மூஞ்சி மொகறையப் பெயர்த்ததுன்னு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பதிவு எழுதினாலே நூறு பதிவுகளைத் தாண்டிவிடும்.இன்னொரு ஆட்டோகிராப் படமே ஓட்டலாம்.

என்னதான் சொன்னாலும் செய்தாலும் ஸ்கூல் வாழ்க்கை திரும்பி வருமா?

(இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும் போது பள்ளியினை பற்றி முழுமையான கட்டுரையாக எழுத நினைத்தேன். ஆனால் பல விஷயங்களை நினைவில் நிறுத்த முடியவில்லை.(நூரு வருட வரலாறு) மேலும் பல செய்திகள் திரட்டப் பட வேண்டியதாக இருக்கிறது. பதிவாளர் தாணு தெரிவித்தது போல் என் ஊர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அதன் திருவிழாக்கள் கலாச்சாரக் குறியீடுகள் என அனைத்து பற்றியும் சில தகவலகளைத் தரலாம்தான்.
தகவல் திரட்டி முழுமையான கட்டுரைகளாகவே தரலாம் என்று நினைக்கிறேன்.)

12 எதிர் சப்தங்கள்:

Pavals said...

நமக்கு ஒரு ஐடியா குடுத்திட்டீங்க... கூடிய சீக்கிரம் என் பதிவுல 'கல்லுமெத்தை' பத்தி எதிர்பாருங்க,.
அப்புறம்.. காலேஜ் படிக்கும் போது எதோ ஒரு விழாவுக்காக உங்க பள்ளிகூடத்துக்கு வந்திருக்கேன். எதுக்குன்னு ஞாபகம் வர மாட்டேங்குது.. :-(

சிறில் அலெக்ஸ் said...

நகைச்சுவை கலந்த சுவையான நடை. தொடருங்கள்.

dvetrivel said...

அப்பூ அப்பிடியே நம்ம கல்லூரிய பத்தியும் ஒரு பதிவை தட்டி உட்டேனா நல்லாருக்கும்.

Anonymous said...

romba superunga...
appusaamy kitta adivaangina anubavam (baakiyam?) enakkum irukkuthungo...:-)

manasu said...

///////எங்க அப்பா அடிவாங்கினாரா என்பது தெரியாது./

அப்ப நீங்க????????

Vaa.Manikandan said...

நன்றி ராசா விரைவில் எதிர்பார்க்கிறேன்.

நன்றி சிறில். பூபதி விரைவில் எழுதுகிறேன்.

அகதீஷ் நீங்கள் யாரென்று தெரியவில்லையே.

எங்கள் காலத்தில் அந்த மாதிரியான தடை எதுவும் இல்லை மனசு.

Anonymous said...

its really nice ariticle..

You could have added more events and any things happened..

Regards,
Suresh kannan.

பொன்ஸ்~~Poorna said...

மணி,
நீங்க எல்லாமே இப்படித் தான் அரை குறையா? ஆந்திர ஸ்னாக்ஸ், பள்ளி பற்றிய நினைவுகள், திருவிழாக்கள், கலாச்சாரக் குறியீடுகள், நவீனத்துவம் பற்றிய கட்டுரை.. இப்படியே எல்லாத்தையும் பார்ட் பார்ட்டா எழுதி விட்டுட்டா எப்படி?

Vaa.Manikandan said...

அட...நான் எழுதறது எல்லாம் படிக்கறீங்களா?

எழுதுறேன்...செகண்ட் பார்ட் ஆரம்பிக்கலாம். அதுக்குள்ள கவிஞர்கள் வந்துட்டாங்க. வெயிட் பிளீஸ்.

ப்ரியன் said...

என்னுடன் கல்லூரியில் பயின்ற பல நண்பர்கள் சிலர் உங்கள் பள்ளியில் படித்தவர்கள்தான்(கோபியும் - சத்தியமங்கலமும் பக்கம்தானுங்களே) நல்ல பள்ளி நல்ல கெடுபிடி என கேள்விப் பட்டிருக்கிறேன்...

ஆனால் அவர்கள் பெண்களைக் கண்டால் ஒன்றா உருகிப் போவது அல்லது ஒதுங்கிப் போவது ஏன் என்பது இப்போதுதான் தெரிகிறது. :)

தமிழ் பையன் said...

சூப்பர் கட்டுரை. நமக்கு ஜூனியர் நீங்க. நாங்க படிக்கறப்போ இவ்வளவு விவரம்மா இல்லையேன்னு வருத்தம்தான். நம்ம பள்ளியிலே தேர்தல் இருந்தப்போ நான் சேர்ந்தேன் (வருஷம் சொல்ல மாட்டேன்). அப்போ எல்லாம் மாணவர் தேர்தல் முடிந்தவுடன் பழனியம்மாள் பள்ளிக்கு அருகில் சென்று "பிளஸ் டூ படிக்கிற பாமா..." போட்டு ஆட்டம் ஆடுவாங்க.. அப்புறம் தலைமை ஆசிரியர் அதை எல்லாம் மாத்திட்டார்.

நன்றி,
நடராஜ கிருஷ்ணன்.

sankar guru said...

Mani, namaku innumoru perumai undu. Namma DJHSS oda 100 vathu batch....