Feb 13, 2006

காதலர் தினம்!

1996 ஆம் வருடம் ஒரு அது. அரும்பு மீசை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. அஜீத், விஜய் என்று பலரும் சினிமாத்துறையில் நுழைந்தது மட்டுமில்லாமல் என்னைப் போன்ற பலரின் எண்ணத்திலும் தங்களையும் ஒரு கதாநாயகனாக நினைத்துக் கொள்ளச் செய்திருந்தனர்.

எல்லோரும் கதாநயகர்கள் ஆன சமயத்தில் எனக்கும்தான் அதற்கான தருணம் வந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நானே சிரித்துக் கொள்வது, 'அழகன்டா' என நினைத்துக் கொள்வது என ஒரே மயக்கம். அப்போது நான் என்ன படித்துக் கொண்டிருந்தேன் என்பதனைச் சொல்லவில்லையே? ஒன்பதாம் வகுப்பு. பிஞ்சில் பழுத்தவன் என்றெல்லாம் சொல்லாமல் கதையை முழுவதுமாகக் கேட்கவும். ஏதோ ஒரு கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த நடனக் குழு அமலா ஸ்கூல் என்று தெரிந்துவிட்டது. ஆனால் என்ன பெயர்,என்ன படிக்கிறாள் என்பதெல்லாம் தெரியாதே! அதற்கென்ன? அதை விடுத்தால் வேறு என்ன பெரிய வெட்டி முறிக்கும் வேலை காத்துக் கிடக்கிறது?

அதுவரை அந்தப் பெயரில் பள்ளி ஒன்று இருப்பது தெரியும் அவ்வளவுதான். அதன் பின்னர் அங்கு படிப்பவர்களை விட எனக்குத்தான் நிறையச் செய்திகள் தெரியும். அப்பள்ளியின் முதல்வர் பெயர் எல்லாம் தெரிந்து வைத்து என்ன செய்தேன் என்று தெரியவில்லை.

எனக்கு 4.30 க்கு பள்ளி முடியும். ஆனால் அவளுக்கு 3.30க்கு. தவியாய் தவித்துவிட்டேன். முதல் வேலையாக அவளின் பள்ளி அருகே தங்கி இருக்கும் ஏதாவது ஒருவனை நண்பனாகப் பிடித்தால் தேவலாம் என்று தோன்றியதால்,பல்குமார் என்று செல்லமாக அழைக்கப்பட்ட சக்திக்குமாரை பிடித்துக் கொண்டேன். அவன் வீடுதான் எனக்கு போதிமரம் ஆகிப் போனது. நல்ல வேலையாக அவளுக்கு சனிக்கிழமை பள்ளி இருக்கும். எனக்கு விடுமுறை அல்லது ஒரு மணிவரைதான். அடித்து பிடித்து சென்றுவிடுவேன். தவமாய் தவமிருந்து பல்லுக்கு தேவதையை காட்டிவிட்டேன்.

பல் சொன்னது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. "அவள் எனக்கு பேமிலி பிரன்ட். அவுங்க வீட்டில தான் நான் எப்பவுமே இருப்பேன். கவலைப் படாதே அவளை நீ கல்யாணம் பண்ணுற, நாந்தான் உனக்கு துணை மாப்பிள்ளை. ஆனால் சர்ச்ல துணை மாப்பிள்ளை இருப்பாரான்னு தெரியலை" என்றான். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. கிறிஸ்தவப் பெண். ஆனால் காதலுக்குத்தான் கண் இல்லையே. தலைவரே தொடர்ந்தார். "இது எல்லாம் சகஜம்டா.இப்போ எல்லாம் ஒரு முறை சர்ச்சிலயும் அப்புறம் கோவில்லையும் கல்யாணம் பண்ணி வைப்பார்கள். நீ உங்க வீட்ட பார்த்துக்க, அவுங்க வீட்டுக்கு நான் பொறுப்பு."

நான் பறக்க ஆரம்பித்துவிட்டேன். எப்படியாவது அவள் வீட்டுக்குப் போகவேண்டும் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து அவர்கள் வீட்டில் என்னை மிகவும் பிடித்துப் போய்விட வேண்டும் என்றெல்லாம் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் எப்பொழுது போகலாம் என்பதைப் பல்தான் தெரிவிக்க வேண்டும். நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். அவன் ஒரு சனிக்கிழமை போகலாம் என்று சொல்லி ஐடியா ஒன்றைக் கொடுத்தான்.

"என் வீட்டுக்கு வந்து விடு. இருவரும் கிளம்பிப் போகலாம். நான் முன்னதாகப் போய்விடுவேன் சிறிது நேரம் கழித்து நீ அந்தப் பக்கமாக வா. நான் உன்னை அழைப்பேன்"

"சைக்கிள் பெல் அடிக்கட்டுமாடா?" இது நான்.

"ஐயோ..உனக்கு அறிவே இல்லைடா. உன்னை எல்லாம் எப்படி தேத்தறதுனு தெரியலை. பெல் அடிச்சா அவுங்க வீட்டில சந்தேகம் வந்துடும். நீ அங்க வா மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்"

எப்பொழுது சனிக்கிழமை வரும் என்று தவிப்புடனே திரிந்தேன். காலையில் அம்மா அப்பா அலுவலகம் சென்றவுடன் அப்பாவுடைய ஷேவிங் செட்டை தேடிப் பிடித்து எடுத்தேன். ஆனால் ஷேவ் செய்யும் அளவுக்கு தாடி மீசை எல்லாம் இல்லை. எசகு பிசகாக இழுத்ததில் ஒரு ஆழமான கீறல். இரத்தம் ஒழுக ஆரம்பித்துவிட்டது. அது குறித்து பிறிதொரு நாளில் கவிதை கூட எழுதினேன்.

"எப்படியென்றே
தெரியாமல்
கோணலாய்ப் பிடித்து
இழுத்துக் கிழித்த வடு
இன்னும் இருக்கிறது.

உனக்கு
மீசையில்லாத
நடிகர் பிடிக்கும்
என்ற
செய்தியால்".

முகம் நிறைய கோகுல் சேன்டல் பவுடரைப் பூசிக் கொண்டு-அப்பிக் கொண்டு என்பது பொருத்தமாக இருக்கும். முதன் முறையாக டக் செய்து கொண்டு அதுவும் அரைஞான்கயிறு போட்டு சென்றேன். சைக்கிள் மிதித்த வேகத்தில் வியர்வை வழிந்து அழகு கூடிக் கொண்டே வந்தது. அதற்கும் காரணமிருக்கிறது. அவன் வர சொன்ன நேரம் நான்கு மணி. நான் சப்பிட்டவுடன் 1.30 க்கெல்லாம் கிளம்பிவிட்டென். வெய்யில் கருக்கி எடுத்தது. வியர்வை வழியாமல் என்ன செய்யும்?

நான் சென்றிருந்த போது பல்லு அவன் வீட்டில் இல்லை. சரி அவன் சொன்ன நேரத்தில் வந்துவிடுவான் என்று நினைத்தேன். வெகு நேரம் கழித்து பொறுமையாக வந்து "ஏண்டா அங்க வரல” என்றான். தூக்கி வாரிபோட்டது. ஆனால் இன்று அவர்களின் வீட்டுக்குச் செல்ல முடியாது என்று வருத்தமாக இருந்தது.

அவனே தொடந்தான் "சரி அவளின் வீட்டுப் பக்கத்தில் ஒருவன் இருக்கிறான். என் நண்பன் அவனைப் பிடித்தால் காரியம் ஆகும்" என்றான். யாராக இருந்தால் என்ன? நமக்கு காரியம் ஆனால் போதும். அவனையும் இப்பொழுதே சந்தித்து விடலாம் என்றேன்.

"அவனுக்கு ஐஸ் போடணும். டைரி மில்க் வாங்கிக்க" என்றான்.

"நானே டைரி மில்க் சப்பிட்டதில்லை டா" என்றேன்.

"அதனால? லவ் சக்ஸஸ் ஆகணுமில்ல? வாங்கு டா!" கிட்டத்தட்ட உத்தரவிட்டான். என்ன இருந்தாலும் நம் ஆளுக்குதானே என்று திருப்திபட்டுக் கொண்டேன்.

டைரி மில்க் வாங்கிக் கொண்டு வசந்த்தைப் பார்க்கச் சென்றோம்.(வசந்த்- புது தூதுவரின் பெயர்). அப்பொழுது அவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அறிமுகப் படுத்திய பிறகு பல் கிளம்பும்போது சொன்னது "நான் கொஞ்சம் பிஸி.உன் ஆளை அவனிடம் காண்பித்துவிடு. மத்ததெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்.நான் தெளிவா சொல்லிவிட்டேன்"

"டேய் ப்ளீஸ்டா நீயும் இருடா"

"கவலைப் படாதடா. இவன் நம்ம பையன்தான். வசந்த் வரட்டுமா?" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

வசந்த்தின் அப்பா என் ஊரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் என்பதால் நம்பிக்கை கூடியது.கோபிசெட்டிபாளையம் கிடையாது. அருகில் இருக்கும் சிற்றூர். நம்பிக்கை கூடியதற்கான காரணம் இப்போது யோசித்தால் புலப்படவில்லை.

சரியாக அரைமணி நேரத்தில் மூன்று பெண்கள் சைக்கிளில் வந்தனர். "அண்ணா(இதுதான் முதலும் கடைசியுமான அண்ணா) இதில் யார்?" நான் காண்பித்தவுடன் "அவுங்க பேர் அனிதா.எட்டாவது படிக்கிறாங்க" என வரலாறு ஒப்பித்தான். சரி என்று தூதுவரிடம் இரண்டு டைரி மில்க் கொடுத்தேன். ஒன்று உனக்கு மற்றொன்று அனிதாவுக்கு.

என் பெயர் எழுதும் போது என் பெயரில் அனி என்னும் மூன்று எழுத்தை மட்டும் அழுத்தமாக எழுதுவது என எல்லாம் அலம்பல் செய்தேன்.

அடுத்த நாள் வசந்த்திடம்  டைரி மில்க்கை வாங்கிக் கொண்டாளா என்று கேட்டதற்கு முதலில் முறைத்ததாகவும் பின்னர் வாங்கிக் கொண்டதாகவும் சொன்னான்.

"பல்லனுக்கு அனிதா ரொம்ப பழக்கமா வஸந்த்?" என்றேன்.

"அப்படியா சொன்னான் அவன் கதை விடுறான். நம்பாதே" என்றான்.

பல்லன் போனால் போகட்டும். வஸந்த்தாவது கிடைத்தானே? அதன் பிறகு அவனிடம் நிறைய டைரி மில்க் அதுவும் இரண்டு இரண்டாக கொடுக்க வேண்டி இருந்தது.

ஒரு நாள் வஸந்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது "உன் ஆள் வருது பார்" என்றான்.

"அது அனிதாவோட பிரண்டுடா"

"என்கிட்டயேவா? அதுதான் அனிதா" என்று சாதாரணமாகச் சொன்னான்.

"அடப் பாவி நான் சொன்னது வேறடா"

"ஓ! அன்னைக்குப் பார்த்தமே அதுவா? அது ஷீபா". அவன் சொல்லச் சொல்ல என் நெஞ்சாங்கூட்டில் ஹிரோஷிமா, நாகசாகி எல்லாம் வெடித்தன. ஐயோ! என் பெயரில் இருந்த ani என்ற மூன்றெழுத்து சிதற ஆரம்பித்தன.

“ஒன்னும் கவலைப்படாதே. நான் அனிதாகிட்டதான் சொல்லி இருக்கேன். அனிதாவையே காதலி” என்றான்.

"டேய் நீ என்னடா சொல்றது. என்னோட காதல் தெய்வீகக் காதல். ஆளை எல்லாம் மாத்த முடியாது.ஷீபாவைத்தான் காதலிப்பேன் உதவ முடியுமா முடியாதா?" என்று கோபத்தில் கேட்டதற்கு

"யோசிக்கலாம்" - என்றான் அந்தப் பெரிய மனுஷன். பிறகு கண்டு கொள்ளவே இல்லை.

நானாக முயற்சிக்க வேண்டியதாகி விட்டது. அவள் டியூஷனுக்கு வரும்போது நண்பர்களிடம் சொல்லி வைத்து என் பெயரைக் கத்தச் சொல்வது, டூயட் படத்தில் வரும் "சித்தத்தினால் உண்ட பித்தத்தினால்" கவிதையை மனனம் செய்வது, எப்பொழுதாவது அமலா பள்ளியில் பேச்சுப் போட்டியோ கவிதை போட்டியோ வராதா என தேவுடு காப்பது (நமக்குதான் டான்ஸ் எல்லாம் வராதே) என்றே நாட்கள் கடந்தன. டி.வி.எஸ் 50 ஐ சைக்கிளில் துரத்துவது, அவளின் அப்பா பெயர் வண்டியின் பின்புறம் எழுதி இருக்கும். அதனை வைத்து தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அடிக்கடி ரிங் கொடுப்பது, தனி ஒரு நோட் வைத்து கவிதை எழுதுவது என அன்றைய முயற்சிகள் எல்லாம் இன்றைக்கும் சிரிப்பு வர வைப்பன. எவ்வளவுதான் முயன்றும் ஒற்றை வார்த்தை கூட பேசியதில்லை. எல்லவற்றையும் விட காமெடி(எனக்கு டிராஜடி) அவளுக்கு இப்படி ஒருவன் அலைந்தான் என்பதாவது அந்தப் பெண்ணுக்குத்  தெரியுமா என்பதுதான்.

அவ்வளவுதான் என் காதல். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் எனக்கு தினம் இப்படித்தான் இருக்கிறது. காதலைப் பொறுத்தவரையிலும் எனக்கு பிரமச்சாரி ராசி. கடும் பிரம்மச்சாரி.

"இன்று குளிக்கும்போதும்
வலது காலின் பெருவிரலில்
கல் தடுக்கிய கணமும்
உன்னை நினைக்கவில்லை.

நினைத்த நேரத்தை விட
நினைக்காத நேரத்தை சொல்வது
எளிதெனக்கு"

7 எதிர் சப்தங்கள்:

நாமக்கல் சிபி said...

பழைய நினௌவுகள் அருமை மணிகண்டன். தூதர்களால் இப்படிப்பட்ட குளறுபடிடளும் நடப்பதுண்டு.

Anonymous said...

Hi I am gobi's collegue in DNB.
ஆனால் இதுதான் காதலா?தெரியவில்லை- U wil never find an answer -

I like to quote onething - "16 vaisil yelorukum varukindra kadal athsiyam"

Great!!

Regards
Selvi

Amar said...

மனிகண்டன்,

நானும் ஒரு காதல் Counsellor ஆக பள்ளி நாட்களில் இருந்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள்!

ஆனா நான் diary milk வாங்கறது இல்லை.Free Service தான்.

Gopalan Ramasubbu said...

Manikandan,

Fantastic work, You have a great flow.Cheers

Anbudan
Gopalan

Anonymous said...

Hello Manikandan,
Whether its true story or not that i dont know . Its like real live commentory of your school life "Kaathal".
Congradulation.
Keep on trying .
Regards,
R.VINOTH RAJAKUMAR

manasu said...

அடுத்த FEB 13 ல் ஷிபா க்கு பதில் வேற ஒரு ஷில்பாவோ, சுபாவோ போட்டு கதை எழுதமாட்டிங்களே??

ம்ம்ம்...வீட்டுக்கு வீடு, இல்ல இல்ல

ஆளுக்கு ஆள் ஆட்டோகிரஃப்!!!!!!!

Anonymous said...

Natha,
Enna ambo'nuu vittuteengalae?
Neenga nallavan vallavannu vasanth sonnane !!!

- Anitha