நேற்று கோபியில் இருந்தேன். மூன்று பெண்களுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்கிறோம் அல்லவா? கோபி ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் நவம்பர் 3 ஆம் தேதி மதியம் மூன்று மணிக்கு நிகழ்வு தொடங்குகிறது. மண்டபத்துக்கு வாடகை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். மணமக்களுக்கு புத்தாடைகள் வாங்கியாகிவிட்டது. சீர்வரிசை பொருட்களையும் வாங்கி விட்டோம். ‘படிப்புக்கு, மருத்துவத்துக்குன்னு செலவு செஞ்சுட்டு இருக்கிற நீங்க கல்யாணம் எல்லாம் செஞ்சு வைக்கணுமா?’ என்று ஒருவர் விவகாரமாக கேட்டிருந்தார்- அதுவும் வக்கிரமான சொற்களுடன். ஃபேஸ்புக் அப்படித்தான். பொருட்படுத்த வேண்டியதில்லைதான். ஆனாலும் ஒருவருக்கேனும் கேள்வி வருமானால் விளக்கிவிட வேண்டும்.
சரவணன் ஜெர்மனியில் வசிக்கிறார். ஒரு நாள் அழைத்து ‘அம்மா அப்பாவுக்கு மணிவிழா..அதற்கு ஆகும் செலவில் எதாவது ஒரு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சுடலாம்ன்னு இருக்கோம்’ என்றார். உண்மையில் இந்தக் காலத்தில் பிரச்சினையே தகுதியான பயனாளிகளைத் தேடுவதுதான். இவனைக் கேட்டால் வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையில் அவர் அழைத்திருக்கக் கூடும். ‘எந்த ஊர்ல தேடுறீங்க?’என்றேன். எந்த ஊர் என்றாலும் பரவாயில்லை என்றார். நமக்குத்தான் நல்ல அணி ஒன்றிருக்கிறதே. வலை போட்டுத் தேடி மூன்று பெண்களைக் கண்டறிந்தோம். மொத்தச் செலவும் சரவணன் குடும்பத்தினருடையதுதான்.
இந்தத் திருமணத்தில் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தோம். முதலாவது, அந்த மூன்று பெண்களுக்கு வெறுமனே சீர் வரிசை கொடுப்பதாக இருக்கக் கூடாது. பெற்றோர் இல்லாமல் வளர்ந்த நம்மையும் ஆதரிக்க ஒரு வட்டம் இருக்கிறது என்பது அழுந்தப் பதிய வேண்டும். காலத்துக்கும் அவர்களுக்கான மனவலிமையைத் தர வேண்டும்.
தமது பெற்றோரின் மணிவிழாச் செலவை வேறொரு பெண்ணுக்குக் கொடுக்கும் நல்ல மனம் கொண்ட அந்தக் குடும்பத்திற்கு நம்மால் முடிந்தளவு மனதிருப்தியைத் தர வேண்டும் என்பது இரண்டாவது விஷயம். வேலைகளைப் பிரித்துச் செய்து கொடுக்க நல்ல குழு இருக்கிறது. சிரமப்படவும் தயாராக இருக்கும் குழு அது. அதனால்தான் ‘சரிங்க..செய்துவிடலாம்’என்று சரவணனிடம் சொன்னேன். ஜெர்மனியில் அமர்ந்து கொண்டு இதைச் செய்து முடிப்பது சரவணனுக்கு சாத்தியமில்லை. ‘இல்லைங்க வாய்ப்பில்லை’ என்று நானும் சொல்லிவிட்டால் அவர் இந்தத் திட்டத்தையே கூட கைவிட்டிருக்கக் கூடும். ஆனால் மூன்று பெண்களுக்கு நம்மால் இயன்ற சிறு உதவியைச் செய்ய முடியுமானால் சிரமப்படத்தான் வேண்டும். இப்படி யாராவது குறுக்குக் கேள்வி கேட்டால் பதில் சொல்லத்தான் வேண்டும்.
நேற்று மதியம் பாத்திரம் வாங்க கடையில் இருந்த போது ‘சான்ஸ்லர் ஃப்ரீயா இருக்காரு வாங்க’ என்று அழைப்பு வந்தது. வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.ஜி.விஸ்வநாதன் கோபிக்கு வந்திருந்தார். கோபி கலைக்கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியின் நிறைவு விழாவுக்காக வரப் போகிறார் என்று தெரியும். கல்லூரி நிர்வாகத்தினரிடம் முன்பே பேசி வைத்திருந்தேன். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு முதல்வரின் அறையில் இருந்தார். பாத்திரக்கடையிலிருந்து கல்லூரிக்குச் சென்று சேர்வதற்குள் மூன்று முறை அழைத்துவிட்டார்கள். பைக்கை தாறுமாறாக நிறுத்திவிட்டு, வியர்வையைத் துடைத்துக் கொண்டே ஓடி அறிமுகப்படுத்திக் கொண்டேன். அமரச் சொன்னார். அமர்ந்துவிட்டேன். நேருக்கு நேராக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் கிளம்பிய பிறகுதான் அவருக்கு முன்பாக அப்படி அமர்ந்திருக்கக் கூடாது எனத் தோன்றியது.
‘வி.ஐ.டியில் படிச்சேன்’ என்பதைத் தாண்டி பெரிதாக எதுவும் சொல்லிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. என்னுடைய நோக்கமெல்லாம் வேலூர் கல்லூரியின் கல்வி சார்ந்த ஆதரவு கோபி கலைக்கல்லூரிக்கு கிடைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், அங்கே வரக்கூடிய பெரும் கல்வி ஆளுமைகள், வளாகத் தேர்வுக்கான தயாரிப்பு முஸ்தீபுகள் போன்றவற்றில் சிற்சில உதவிகளை கோபி கலைக்கல்லூரிக்கும் செய்து கொடுங்கள் என்று கோரிக்கையை முன் வைத்த போது ‘இந்த காலேஜ்ல இருந்து கொஞ்சம் பேர் வந்து பார்க்கட்டும்....என்ன தேவைன்னு பேசலாம்...என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யறேன்..நீயும் கூட வா’ என்றார். அவ்வளவுதான். அதைப் பேசுவது மட்டும்தான் நோக்கமாக இருந்தது.
கனவு மாதிரிதான் இருந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ‘வேலூர் விஸ்வநாதன் காலேஜ்’ என்றுதான் எனக்கு வி.ஐ.டி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. பொறியியல் முடித்துவிட்டு எம்.டெக் சேரப்போவதாகச் சொன்ன போது பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். கல்லூரியின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் அந்தக் காலத்து வழக்குரைஞர். அந்தக் காலம் என்றால் அந்தக் காலம்தான். அவருக்கு இப்பொழுது எண்பது வயது. ஒரே தலைமுறையில்- முப்பத்தைந்தாண்டுகளில் அசைக்க முடியாத கல்வி சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்துவிட்டார். அவரது காலகட்டத்தில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அளவுக்கு தமது எல்லைகளை விஸ்தரித்த கல்லூரி என்று வேறு எதையாவது சுட்டிக்காட்ட இயலுமா என்று தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. கல்லூரி வளாகத்தை நேரில் பார்க்காதவரைக்கும்- எவ்வளவுதான் குறைத்து எழுதினாலும் அதீதமாகப் புகழ் பாடுவதாகவே தெரியும். நிறுத்திக் கொள்கிறேன்.
அவர் எனக்கெல்லாம் அவ்வளவு இயல்பாக செவிமடுக்கவேண்டிய அவசியமேயில்லை. காது கொடுத்துக் கேட்டார். அது மட்டுமில்லை. இரவில் சிங்கப்பூரிலிருந்து கல்லூரியின் முன்னாள் மாணவர் மஹாவீர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். வி.ஐ.டியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் வலையமைவு ஆச்சரியமூட்டக் கூடியது. சிறு துரும்பு அசைந்தாலும் கண்டறிந்துவிடுவார்கள். ‘G.V ஐயா அவர்கள் இன்று உங்களை சந்தித்ததாக குறிப்பிட்டார்... கோபிசெட்டிபாளையம் சென்றதாக கூறினார்.. அப்படியென்றால் மணிகண்டன் அவர்களை சந்தித்து இருக்கலாம் என்றேன்... பார்த்தேன் என சொல்லும்போதே மகிழ்ச்சி .. மயக்கம் ..’ என்று அவரது செய்தியைப் பார்த்துவிட்டு அலைபேசியில் அழைத்தேன். ‘பையன் நல்லா பேசறான்’ என்று சொன்னார். ‘அப்படி என்ன அவரிடம் பேசின’ என்று மஹாவீர் கேட்டார். எனக்கே தெரியவில்லை என்றுதான் சொன்னேன்.
சிற்சில சமயங்களில் தாறுமாறான வேலைப்பளு சேர்ந்துவிடுகிறது. ‘உலகத்திலேயே நான் தான் உழைப்பாளி’ என்கிற அர்த்தத்தில் இதைச் சொல்லவில்லை. கிடைக்கிற நேரத்தில் எல்லாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் கோபியில் எங்கள் வீட்டில் சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்கள். பாத்திரங்கள் முழுவதும் வெளியில் கிடக்கின்றன. அம்மாவும் தம்பியும் ஊரில்தான் இருந்தார்கள். ஆனால் சாப்பாட்டு நேரம் தவிர அரை மணி நேரம் கூட ஒதுக்க முடியவில்லை. ‘நீ எதையாச்சும் கண்டுக்குறியா? உனக்கு வெளி வேலைதான் பெருசு...ஊடு எப்படிக் கெடந்தா என்ன?’ என்று குற்றச்சாட்டுகளாக அம்மா அடுக்குகிறார்.
என்னதான் ஊர் வேலைகளைச் செய்தாலும் வீட்டில் ஏதாவது சின்னச் சின்னக் காரியங்களையாவது செய்யவில்லையென்றால் ‘உன்னால வீட்டுக்கு என்ன பிரயோஜனம்’ என்ற கேள்வி வந்துவிடும். ஊர் நாட்டாமைக் கதை தெரியும்தானே? அதேதான். நாய்க்கு வேலையுமில்லை; நிற்க நேரமுமில்லை என்று சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு உறவுகள் நம்மைப் பற்றி கிசுகிசுத்துக் கொள்வார்கள். அப்படி ’இவன் ஊர் நாட்டாமை’ என்கிற பிம்பம் உருவாகிவிட்டால் அவ்வளவுதான். எந்தக் காலத்திலும் அதைச் சிதைக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன்.
சரி. எப்படியும் திட்டத்தானே செய்வார்கள்? மீண்டும் இரவு உணவை முடித்துவிட்டு பையை எடுத்துக் கொண்டு பேருந்து ஏறிவிட்டேன்.
என்னதான் ஊர் வேலைகளைச் செய்தாலும் வீட்டில் ஏதாவது சின்னச் சின்னக் காரியங்களையாவது செய்யவில்லையென்றால் ‘உன்னால வீட்டுக்கு என்ன பிரயோஜனம்’ என்ற கேள்வி வந்துவிடும். ஊர் நாட்டாமைக் கதை தெரியும்தானே? அதேதான். நாய்க்கு வேலையுமில்லை; நிற்க நேரமுமில்லை என்று சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு உறவுகள் நம்மைப் பற்றி கிசுகிசுத்துக் கொள்வார்கள். அப்படி ’இவன் ஊர் நாட்டாமை’ என்கிற பிம்பம் உருவாகிவிட்டால் அவ்வளவுதான். எந்தக் காலத்திலும் அதைச் சிதைக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன்.
சரி. எப்படியும் திட்டத்தானே செய்வார்கள்? மீண்டும் இரவு உணவை முடித்துவிட்டு பையை எடுத்துக் கொண்டு பேருந்து ஏறிவிட்டேன்.
3 எதிர் சப்தங்கள்:
அடிக்கடி சொம்பு ரொம்ப அடி வாங்கினாலும் வேந்தர் திரு.ஜி.விஸ்வநாதன் மாதிரியான ஆட்கள் வந்து வளைவு சுளிவு நெளிவை தட்டி எடுத்து ஓட்டை ஒடைசலை அடைச்சி ஈயம் பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் பண்ணிடுறாங்களே.
மகிழ்ச்சி. நிகழ்வுகளை சிறப்பாக நடத்திட வாழ்த்துகள்
நிகழ்வுகளில் வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் தானே.. வாழ்க வளமுடன்
Post a Comment