கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தேறியது. மிக மிகச் சாதாரணமாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா’ என்று நினைக்க நினைக்க நண்பர்கள் பயமூட்டினார்கள். செல்போன் நமக்கு மிகப்பெரிய சாபக்கேடு. உடனடியாக ஒன்றைப் பற்றி பலரிடமும் விலாவாரியாகப் பேசிவிட முடிகிறது. பேசியவர்களில் பெரும்பாலானோர் இதனை அவ்வளவு சுலபமாக விட்டுவிட முடியாது என்றார்கள். அதன் பிறகு தெரிந்த நண்பர்களிடமெல்லாம் பேசினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உதவினாலும் பெரும்பாலானவர்கள் சொன்னது - சிக்கலானது போலத்தான் தெரிகிறது என்பதுதான். மூன்று நாட்கள் கடுமையான மன உளைச்சல். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்தவர்களிடம் சொல்லிவிட அவர்களும் பதறிவிட்டார்கள்.
எதற்கு இவ்வளவு பீடிகை?
கடந்த தலைமுறையில் இப்படியெல்லாம் சிக்கல் வரும் என்று கற்பனையில் கூட நினைத்திருக்க முடியாது. இது என் வாழ்க்கையில் நடைபெற்றது என்று சொன்னால் ‘இப்படியெல்லாம் நடக்குமா?’ என்றுதான் உங்களுக்கும் தோன்றும். நண்பர் ஒருவரும் ‘உனக்கு மட்டும் என்ன இப்படி பெக்கூலியர் அனுபவம்?’ என்றார். எனக்கும் அதுதான் புரியவில்லை. நானா தேடிச் செல்கிறேன்? அதுவாக வருகிறது. விசித்திரமான அனுபவங்கள் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. நமக்கு நடக்கிற ஒவ்வொரு செயலுக்கும் பின்னணி ஒன்றிருக்கும் என உறுதியாக நம்பலாம். நமக்கு நேர்வதற்கான பின்புலமும் இருக்கும். நாம் பெரும்பாலும் பிரச்சினைகளையும் சம்பவங்களையும் மட்டுமே பிரதானப்படுத்தி அதை மட்டுமே எதிர்கொள்வோம். பிரச்சினையைத் தீர்ப்பதிலேயே கவனத்தைச் செலுத்திவிட்டு பின்னணியையும் பின்புலத்தையும் விட்டுவிடுவோம்.
புரட்டாசி மாதம் என்பதால் ஏதாவதொரு பெருமாள் கோவிலுக்குச் சென்று வரச் சொன்னார்கள். எங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே நிறைய பெருமாள் கோவில்கள் இருக்கின்றன. ஆனால் பெருமாள் என்றால் நம்பிராயர்தான். எட்டு மணி நேரம் பயணிக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே தொந்தரவு. தெளிந்து ஓடும் நம்பியாறு. அடர்ந்த பச்சை, புலிகள் நிறைந்த வனம். முக்கால் மணி நேரம் நடந்து நம்பியாற்றில் குளித்துவிட்டுச் சென்றால் நம்பிராயரைப் பார்த்துவிட்டு வரலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடியைத்தான் சொல்கிறேன். அங்கே செல்லலாம் என்று கிளம்பியிருந்தேன். கிளம்பும் போதுதான் மேற்சொன்ன சம்பவம் குறித்துத் தெரிய வந்தது. ஆரம்பத்தில் சிரித்தபடியே நண்பர்களிடம் சொல்லி, பிறகு மெல்ல பயம் கூடி- அதற்கடுத்த சில நாட்களில் அந்த பிரச்சினையை அணுகிய விதத்தை ஒரு நாவலாகவே எழுதிவிடலாம்.
கடந்த சில மாதங்களாகவே ஜீவகரிகாலன் ஒரு நாவல் எழுதித்தரச் சொன்னார். ஏற்கனவே ஒரு நாவல் எழுதத் தொடங்கியிருந்தேன். பெங்களூருவில் இருக்கும் போது சந்தித்த ஒரு நபர் சொன்ன கதை அது. அது ஒரு கசமுசா கதை. ஆள் ஒரு மார்க்கமான பணியில் இருக்கிறார். அவர் சொன்னதை எழுதிவிடலாம் என்று நம்பி பாதி எழுதிய பிறகு அதன் போக்கு பிடித்தமானதாக இல்லை. விட்டுவிட்டேன். அந்த நண்பரின் கதையை ஒரு கட்டுரையாக வேண்டுமானால் எழுதலாம். அதன் பிறகு நாவல் எழுதுவதென்றால் ஏதாவதொரு அனுபவம் அமைய வேண்டுமல்லவா? கருவே உருவாகாமல் எழுதத் தொடங்கினால் தட்டையாகிவிடும். நாவல் என்பது ஒரு வாழ்க்கையைச் சொல்வதாக இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை உருவாக்கியதாக இருக்க வேண்டும். அப்படியொன்றும் அமையவில்லை.
பொதுவாக மண்டையில் ஏதோவொரு ராட்சச பாறாங்கல் ஒரு பறவையைப் போல வந்து அமர்ந்து கொள்ளும். எழுதுவதற்கான மனநிலையே இல்லாதது போல சில நாட்கள் அமைந்துவிடும். அதை சோம்பேறித்தனம் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. திடீரென சுத்தியல் ஒன்று அந்தப் பாறாங்கல்லை ஓங்கி அறையும். பாறை நொறுங்கிச் சில்லு சில்லுவாகச் சிதறும் போது எழுத என்னென்னவோ தோன்றும். பார்ப்பதையெல்லாம் எழுதலாம் என்கிற மனநிலை உருவாகும். அப்படியொரு மனநிலையை உருவாக்குவதற்கான சம்பவம் என்றுதான் நினைக்கிறேன்.
ஆனால் ஒன்று- நல்ல நண்பர்கள் வட்டாரம் அமைந்திருக்கிறது. எந்தவொரு பிரச்சினையையும் சாதாரணமாக எதிர்கொண்டுவிட முடியும் என்கிற தைரியமும் மனதின் ஓரத்தில் இருக்கிறது. ‘இவன் சமாளிச்சுக்குவான்’ என்றுதான் எனக்கு சம்பந்தமேயில்லாத ஒன்றில் என்னைக் கோர்த்துவிட்டு சூழல் வேடிக்கை பார்த்திருக்கிறது என நினைக்கிறேன். இந்த நண்பர்கள் வட்டாரம் மட்டுமில்லையென்றால் திணறி போயிருக்கக் கூடும். மனதின் ஓரத்தில் இருக்கும் அந்த சிறு தைரியத்தினாலோ என்னவோ பிரச்சினையை எதிர்கொள்ளும் போதே ‘இது ஒன்றுமே இல்லாமல் போய்விடும்’ என்ற நம்பிக்கை இருந்தாலும், நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று தோன்றாமல் இல்லை. பயமில்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. பயம் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்று குழப்பம் இருந்தது. பிரச்சினையைவிடவும் அது எனக்கு நேர்ந்ததற்கான பின்னணி ‘நாவல் எழுதுவது’ என்று மணியடித்துக் கொண்டேயிருந்தது. அந்த வேலையைத் தொடங்கியிருக்கிறேன். முரளி சொன்னார் ‘உயிர் மட்டும் போகாம இருந்துட்டா எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொண்டுவிடலாம்’ என்றார். அதுதான் பேருண்மையும் கூட. பிரச்சினைகள் தற்காலிகமானவை. அந்தப் பிரச்சினைகள் நமக்குத் தந்துவிட்டுப் போகும் அனுபவமும், அவை நமக்கு நேர்ந்த பின்னணியும் பின்புலமும்தான் நிரந்தரமானவை. பிரம்மாண்டமானவை.
இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நாவலை கொண்டு வந்துவிடலாம்.
7 எதிர் சப்தங்கள்:
அருமை அண்ணா...
எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்...
// புலிகள் நிறைந்த வனம்//
புலி வனத்தில் மணி
Fantastic teaser... இப்போ சொல்லிடுவீங்க அப்புறம் சொல்லிடுவீங்க னு பார்த்தா தேதி சொல்லி காத்திருக்க சொல்றிங்க....
ஒன்னுமே புரில.. நோலன் படம் கணக்கா இருக்கு... என்ன சொல்ல வர்றீங்க??
ENNAVO NADANTHICHUNU PATHATRATHODU VASICHITTU VANTHA NOVEL KATHAIYAA HMM OK OK
பயபுள்ள கடைசிவரைக்கும் அது ஏனென்னு சொல்லவே இல்லையே ??!!
#கடுமையான மன உளைச்சல். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்தவர்களிடம் சொல்லிவிட அவர்களும் பதறிவிட்டார்கள்.#....இறுதி வரை என்ன/எதனால் பதட்டம் என்று சொல்லவேயில்லை..மணி, மன்னிக்க வேண்டும்.இது வரையிலான உங்கள் பதிவுகளில் எனக்கு ஏமாற்றம் அழிக்கும் பதிவு இது.வாழ்க வளமுடன்
Post a Comment