Oct 1, 2019

ஊரும் உணவும்

ஈரானியர்கள் படையெடுத்து வரும் போது பாசுமதி அரிசியை மூட்டையாக ஆடுகளின் மீது ஏற்றி ஓட்டிக் கொண்டுதான் போருக்குச் செல்வார்களாம். போகிற வழியில் ஆட்டை அடித்து கறியை அரிசியுடன் போட்டுக் கொதிக்க வைத்து தம் போட்டு பிரியாணியாக விழுங்கிவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்வார்களாம். அப்படி அவர்கள் அவசரத்துக்கு செய்த உணவுப்பண்டம்தான் இன்றைக்கு ஹைதராபாத் பிரியாணியாக கொடி கட்டிக் கொண்டிருக்கிறது. 

ஒவ்வொரு உணவுக்கும் ஒரு வரலாறு இருக்குமல்லவா? மறந்து போன வரலாறுகள் அவை.

மன்னா மெஸ் ஜெயராஜூடன் பேசிக் கொண்டிருந்த போது அச்சரப்பாக்கத்தின் சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் சில பொருட்களை வைத்தே தாம் செய்த ரெசிப்பிகளை ஒரு பாட்டி சொல்லித் தந்ததாகச் சொன்னார். அச்சரபாக்கத்தின் அந்த உணவுப்பொருட்கள்தான் தங்கள் கடையின் ‘ஹாட் விற்பனை’என்றார். கவனித்துப் பார்த்தால் நிலத்தோடு சம்பந்தப்பட்ட பெரும்பாலான உணவுப்பண்டங்கள் சக்கைப் போடு போடுகின்றன. அதாவது ஊருடன் சம்பந்தப்பட்டவை. அந்த ஊருக்குச் சென்றால் அந்த உணவுதான் சிறப்பு என்று பெயர் வாங்கிய உணவுகளின் பட்டியல் அநேகமாக முடிவிலியாக இருக்கக் கூடும். 

பொதுவாகவே, தனித்துவமில்லாத அல்லது பிற உணவகங்களிலும் சாதாரணமாகக் கிடைக்கும் உணவை நம் தட்டுகளில் பரிமாறும் ரெஸ்டாரண்ட்கள், உணவகங்களின் ஆயுட்காலம் வெகு குறைவு. ஒரு கட்டம் வரைக்கும் சம்பாதித்துவிட்டு ஓய்ந்துவிடுவார்கள். அதுவே தமது ஊரோடு சம்பந்தப்பட்ட பண்டத்தை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் உணவகங்கள் காலங்காலமாக நிலைத்திருக்கின்றன. 

யாருக்குமே கடைப் பெயரை விடவும் ஊர்ப்பெயர்தான் மனதில் நிற்கும். ‘அந்த ஊர்லயா இருக்கீங்க? அப்படின்னா அதை சாப்பிட்டு பார்த்துடுங்க’ என்று சொல்லிவிட்டு அதன் பிறகுதான் கடையைச் சொல்வார்கள். திருநெல்வேலிக்கு அல்வா என்பார்கள். அடுத்ததாகத்தான் கடையின் பெயரைக் கேட்போம். ‘இருட்டுக்கடை இல்லைன்னா சாந்தி ஸ்வீட்ஸ்’ என்று பதில் வரும். நெல்லை பேருந்து நிலையத்தில் இருக்கும் அத்தனை கடைகளுக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் என்றுதான் பெயர்.  அத்தனையும் டூப்ளிக்கேட்டாம். ரயில் நிலையத்துக்கு அருகில், நூறு சாந்தி ஸ்வீட்ஸ் கடைகளில் ஒரிஜினலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். 

எல்லோரும்தான் அல்வா தயாரிக்கிறார்கள். ஆனால் யாரோ ஒன்றிரண்டு பேர் மட்டும்தான் ஜொலிக்கிறார்கள். வீதிக்கு வீதி பரோட்டா கடைகள் இருக்கின்றன. ஆனால் பார்டர் கடை என்றால்தான் ஈர்ப்பு. ஏதோவொரு காரணமிருக்கும். பின்னணியில் ஒரு வரலாறு இருக்கும். பலருடைய உழைப்பு இருக்கும். தமிழகத்தில் தனித்துவமான, குறிப்பிட்ட ஊருக்கு மட்டுமே உரித்தான உணவுப் பொருட்கள் என பட்டியல் தயாரித்தால் எவ்வளவு தேறும்?

ஆம்பூர் என்றால் பிரியாணி - அது ஸ்டார் பிரியாணி கடையில் கிடைக்கும், செஞ்சி என்றால் முட்டை மிட்டாய் அது சையது மிட்டாய் கடையில் கிடைக்கும்.  இப்படி வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் அப்படியொன்றும் உணவுப்பிரியன் இல்லை. சில நண்பர்கள் மிக நுணுக்கமாக உணவின் வேறுபாடுகளைச் சொல்கிறார்கள். கிராம்பு அதிகம்; பட்டை சேர்க்கவில்லை என்பது வரைக்கும் எப்படி துல்லியமாகக் கணிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். பெண்கள் சமர்த்தர்கள். எனக்கு வாப்பாடு போதாது. மொத்தச் சோத்தான். பெரு மொத்தமாக கொறித்துவிட்டு ‘நல்லா இருக்கு; நல்லா இல்ல’ என்று மட்டுமே சொல்லத் தெரியும்.  நிறைய ஊர்களுக்குச் சுற்றுவதால் அந்தந்த ஊர்களில் இருந்து நண்பர்களுக்கு அழைக்கும் போதெல்லாம் உணவைச் சொல்கிறார்கள். 

காலங்காலமாக மெருகேற்றித்தானே இன்றைய சுவைக்கு வந்து சேர்ந்திருப்போம்? எத்தனை ஆயிரம் உணவுப்பண்டங்களை கைவிட்டிருப்போம்? ‘ஏதாச்சும் நோம்பின்னா அரிசி சோறாக்குவோம்’ என்று கடந்த தலைமுறைக்காரர்கள் சொல்வார்கள். இன்றைக்கு அரிசிச்சோறு இல்லாத தினம் என்று ஏதாவது உண்டா? நாம் இப்பொழுது உண்ணும் எதையாவது கீழடிக்காரர்கள் உண்டிருப்பார்களா? அவர்களுக்கு என சிறப்பு உணவு இருந்திருக்கும் அல்லவா? 

உணவுக்கும் நிலத்துக்குமான பிணைப்பு வெகு ஆச்சரியமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் ‘எந்த ஊரில் எந்த உணவுப்பொருள் சிறப்பு’ எனக் கேட்டிருந்தேன். நிறையப் பேர்கள் பதில் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வந்த பதில்களையெல்லாம் தொகுத்து வைத்தால் பலருக்கும் பயன்படக் கூடும். இது மிகச் சிறிய பட்டியல். பரவலாக எல்லா ஊர்களிலும் கிடைக்கும் பொருட்களைத் தவிர்த்து, அந்தந்த ஊர்களில் மட்டுமே கிடைக்கும் பண்டங்களை மட்டுமே தொகுக்க வேண்டும் என்கிற முயற்சி இது.

வாய்ப்பு அமையுமானால் இந்தப் பட்டியலைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கலாம்.

1. திருநெல்வேலி- அல்வா- இருட்டுக்கடை, ரயில்வே நிலையம் சாந்தி ஸ்வீட்ஸ், சந்திரா ஸ்வீட்ஸ்
2. திருநெல்வேலி- பொறித்த நாட்டுக்கோழி- வைரமாளிகை
3. சேலம் - தட்டுவடை- பட்டைகோயில்
4. சென்னை - வடகறி - சைதை மாரி ஹோட்டல்/ கீழ்பாக்கம் கிருஷ்ணா      பவன்
5. சாத்தூர் - இனிப்பு சேவு
6. கோவில்பட்டி - கடலை மிட்டாய்
7. தூத்துக்குடி - மக்ரூன் - கணேஷ் பேக்கரி
8. கடம்பூர் - போளி
9. மதுரை - ஜிகிர்தண்டா- விளக்குத்தூண் ஹனீபா
10. ஆற்காடு-  மக்கன் பேடா- செட்டியார் மிட்டாய் கடை/கண்ணன் ஸ்வீட்ஸ் - பஜார்
11. அருப்புக் கோட்டை- கருப்பு சீரணி
12. ஸ்ரீவில்லிப்புத்தூர்- பால்கோவா- ஆண்டாள் கோவில் வாசல் வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ்
13. மணப்பாறை - முறுக்கு
14. ஆம்பூர் - பிரியாணி - ஸ்டார் பிரியாணி
15. கோபி - வெள்ளாங்கோயில் - முறுக்கு
16. முதலூர்- மஸ்கொத் அல்வா- AJJ ஸ்வீட்ஸ், SJJ ஸ்வீட்ஸ்
17. செஞ்சி- முட்டை மிட்டாய்- சையத் மிட்டாய் கடை
18.மதுரை - உருளைக்கிழங்கு காரக்கறி- மேல சித்திர வீதி நாகப்பட்டினம் நெய் மிட்டாய் கடை
19. செங்கோட்டை- பரோட்டா- ரஹமத் பார்டர் பரோட்டா கடை
20. சிதம்பரம் - கொஸ்து - உடுப்பி கிருஷ்ணவிலாஸ்
21. காவேரிபட்டணம் - நிப்புட்- பி.டி.எஸ்
22. திண்டுக்கல்- கறி பரோட்டா- கோழி நாடார் கடை
23. பரங்கிபேட்டை- நெய் பரோட்டா
24. பரங்கிபேட்டை- அல்வா- பாத்திமுத்து கடை
25. கீழக்கரை- தொதல் - ராவியத் ஸ்வீட்ஸ்
26. ஊட்டி- வர்க்கி - இம்பாலா பேக்கரி, வெஸ்ட் கோஸ்ட் பேக்கரி
27. காயல்பட்டினம் - தம்மடை, சீர்ப்பணியம், போணவம், வெங்காய பணியம். உப்பு வட்டிலாப்பம், மாசி வடை, பாச்சோறு, சோற்று வடை, புட்டு, பாகு, காயம், உழுவா கஞ்சி
28. திருச்சி- அக்காரவடிசல் - ஆதிகுடி காபி க்ளப்
29. கூத்தாநல்லூர்- தம்ரூட்- மவுலானா பேக்கரி
30. உடன்குடி- கருப்பட்டி மிட்டாய்
31. உத்திரமேரூர்- காராசேவு- அய்யர்கடை

8 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

ஊரும் உணவும் என்றிருந்தால் நல்லாயிருக்குமே. இல்லை தலைப்புக்கு வேறு அர்த்தம் இருக்கலாமோ? இருந்தால் சொல்லுங்க.

பட்டியல் அருமை.

சுப்பிரமணியன் said...

Taste Gnanam Bakery Macroon also.

நாகபிரகாஷ் said...

சேலத்தில் தட்டுவடை செட் மட்டுமல்ல. ஒப்பிட்டு, இளபாலிட்டு போன்ற இனிப்புகளும் வேறு உணவுகளும் எங்கள் பகுதியில் (கடைகளிலும்) உண்டு. ஒரு மாவட்டத்துக்கு என்றில்லாமல் அதன் வட்டாரங்களில் மரபான உணவு வகைகள் பல கிடைக்கின்றன. அத்தனையும் தொகுக்க முடிந்தாலே எத்தனை பண்பாட்டுத் தொடர்ச்சகளை நாம் தொகுத்துக் கொண்டு வாழ்கிறோம் என்று புரியும்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

ஊரும் உணவும் என்றிருந்தால் நல்லாயிருக்குமே. இல்லை தலைப்புக்கு வேறு அர்த்தம் இருக்கலாமோ
----அப்படி தானே இருக்கிறது..

நெல்லைத்தமிழன் said...

திருநெல்வேலி பழைய பஸ் ஸ்டாண்டில் (இரயில் நிலையத்துக்கு எதிரில் இருப்பது), செயிண்ட் மேரீஸ் மெடிக்கல் ஷாப் உண்டு. அதற்கு அடுத்த சாந்தி ஸ்வீட்ஸ்தான் ஒரிஜினல். இன்னொரு முறையும் இருக்கு. கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு பார்த்தீங்கன்னா, இந்தக் கடையில்தான் ஏராளமாக கூட்டம் இருக்கும்.

மனோகரம் என்று சொல்லக்கூடிய இனிப்பு, பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள ஸ்ரீராம் லாலா கடையில் ரொம்ப நல்லா இருக்கும். அங்குள்ள அல்வாவும் சந்திரா, இருட்டுக்கடை, சாந்தி ஸ்வீட்ஸுக்கு இணையானது (பாரம்பர்ய கடைகள் இந்த நாலுதான்)

கல்லிடைக்குறிச்சி ஆஞ்சநேயர் ஸ்வீட்ஸ் ஸ்டாலிலும் (அதன் பிராஞ்ச் மதுரையில் உள்ளது) பாரம்பர்ய இனிப்புகள் ரொம்ப நல்லா இருக்கும்

BUHARY S.I. said...

ஒரு மனிதனின் உடலோடும் உணர்வோடும் ஒன்றிப்போன உணவையும் ஊரையும் பிரிக்க முடியாது. அதனால் தான் என்னவோ கடல் கடந்து வாழ்ந்தாலும் தன் மண்ணைத் தேடும் மனிதன் நாடு கடந்து மணந்தாலும் தான் உண்டு மகிழ்ந்த தன் மனம் கவர்ந்த உணவுக்காக ஏங்குகிறான்.

NAGARATHAN said...

என்னாச்சு? ஒரு வாரமா சத்தமேயில்ல. அனைவரும் நலம்தானே

Unknown said...

திருநெல்வேலியில் லட்சுமி விலாஸ் புராதன லாலா கடை என்று ஒரு இனிப்பகம் உள்ளது. திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் செல்லும் ரோட்டின் இடது பக்கம் உள்ளது. இதுவும் புகழ்பெற்ற தனித்துவமான அல்வா கடை தான். இது பேருந்து நிலையத்திலிருந்து அல்லது சுலோச்சன முதலியார் பாலம் பக்கத்தில் இருந்து இரயில் நிலையம் செல்லும்போது இடது பக்கம் முதல் கடை.