Jan 9, 2019

சொல்லிட்டுச் செய்யுங்க

ஒரு காரியத்தைச் செய்யும் போது- குறிப்பாக நல்ல காரியமாக இருந்தால் வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும்.  ‘வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது’ என்றெல்லாம் சொல்லிப் புனிதப்படுத்தி வைத்திருக்கிறார்கள் அல்லவா? அப்படியெல்லாம் இருந்தால் இந்தக் காலத்தில் கண்டபடி திட்டுதான் வாங்க வேண்டும். நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றி வேறொரு கதையைக் கட்டிவிடுவார்கள்.

ஒரு கதையைச் சொல்கிறேன்.

இன்று காலை ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினேன். தி.நகரிலிருந்து கிளம்பிய வண்டி அது. பாண்டிபஜார் பக்கமாக வந்தவுடன் வண்டி நின்றுவிட்டது. பெரும்பாலும் வெள்ளை ஆட்டோக்காரர்கள் வண்டியின் எந்திரத்தை அணைப்பதே இல்லை. ஆட்கள் ஏறும் போதும் இறங்கும் போதும் முறுக்கியபடியேதான் இருக்கிறார்கள். இந்த மனிதர் தெரியாத்தனமாக அணைய விட்டுவிட்டார். வண்டிக்குள் எட்டு பேர். ஓட்டுநரையும் சேர்த்தால் மொத்தம் ஒன்பது பேர். வண்டி கிளம்புவதாக இல்லை. பின்னாடி வந்த ஒரு சக வெள்ளை ஆட்டோக்காரனை இடிக்கச் சொன்னார். இடித்தால் முன்னால் நகரும் போது வண்டியை கிளப்பிவிடலாம் என்பது அவர் திட்டம். 

ஆனால் பாருங்கள்- அந்த வண்டிக்காரன் ஓரங்கட்ட பின்னால் வந்த இருசக்கர வாகனத்துக்காரன் ஒருவனுக்குத் தலைக்கு மேல் கோபம் ஏறி, அவன் வண்டியை நிறுத்திவிட்டு வந்து ‘லவடா டேய்...இப்படி நிறுத்துனா நாங்க எப்படிடா வேலைக்கு போறது..த்தா’ என்று சில பல வசைகளை உதிர்த்தான். அவன் நமக்கு நல்லது செய்ய வந்து மாட்டிக் கொண்டான் என்று இந்த வண்டிக்காரன் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். ம்ஹூம். சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். வண்டிக்குள் இருந்த நாங்களும்தான்.

ஓரங்கட்டிய ஆட்டோக்காரனுக்கு முடியெல்லாம் சிலிர்த்துக் கொண்டது.  ‘யேய்...ங்கொம்மால...நீ நவுந்து போடா...என்னை நீ லவடான்னு சொல்லுவியா’ என்று வண்டியை விட்டு இறங்கிவிட்டான். அவர்கள் சண்டையை வேடிக்கை பார்ப்பதா அல்லது நம் வண்டிக்காரனுக்கு உதவுவதா என்று தெரியவில்லை. இருவரும் கை வைக்கிற அளவுக்குச் சென்றுவிட்டார்கள். இனி அடுத்து வரும் வார்த்தைகளையெல்லாம் பிடித்துக் கொண்டு வந்து ஒரு பதிவை எழுதிவிட என்று ஆழ்மனது விழித்துக் கொண்டது. ஆனால் அவர்கள் பெரிய அளவில் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. பின்னால் வந்து நின்ற ஒரு மாமா - ஆள் நவநாகரிகமாக இருந்தார் - ஆனால்  “டேய்‘பீப்’ வண்டியை எடுங்கடா ‘பீப்’பசங்களா..சண்டை ‘பீப்’ இருந்தா ஓரப் ‘பீப்’ நின்னு...’ என்று ஏழெட்டு வார்த்தைகளுள்ளாக நான்கைந்து பீப் ஒலிக்க வேறு சில வண்டிக்காரர்களும் அவருக்கு ஒத்தாசையாக சேர்ந்து கொள்ள ஒலிப்பான்கள் காதைக் கிழிக்க ஆட்டோவும், பைக்காரனும் கிளம்பிவிட்டார்கள்.

இப்பொழுது நாங்கள் அமர்ந்திருந்த வண்டி. 

வண்டிக்குப் பின்னால் ஒருவர் தள்ள முயற்சித்தார். ஆளுக்கு அறுபது கிலோ என்றாலும் கூட- ஐநூற்று நாற்பது கிலோ. வண்டியின் எடை தனிக்கணக்கு. ஓராள் தள்ள முடியுமா? அப்பொழுதுதான் எனக்குள் ஒளிந்திருக்கும் நல்ல மனிதன் எட்டிப்பார்த்தான். மனிதருக்கு ஒரு கை கொடுப்போம் என்று அவன் என் காதில் கிசுகிசுத்தான். நல்லதைத்தானே சொல்கிறான்? கையில் இருந்த செல்போனை பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டு இறங்கினேன். இன்றைய ராசிபலனுக்கு எல்லாக் கட்டத்திலும் சனி குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் இறங்கிய சமயம் வண்டி பின்பக்கமாக நகர்ந்தது. அது கொஞ்சம் பள்ளம். பள்ளத்தில் வண்டியை விட்டு கியரை மாற்றினால் வண்டி கிளம்பிவிடும். அதற்கான முஸ்தீபுகளில் ஓட்டுநர் இறங்கியிருக்கிறார் போலிருக்கிறது.

ஏற்கனவே பள்ளம். அந்த மனிதர் பின்னாலிருந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். அவர் கையை எடுத்தால் போதும். நமக்கான தேவை எதுவுமில்லை. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பேசாமல் நின்றிருக்கலாம். இருவருக்காகவும் கடவுளைக் கூட வேண்டிக் கொண்டேன். வண்டி பின்பக்கமாக மூன்றடி தூரம் நகர்ந்ததும் வண்டிக்காரர் கியரை மாற்றினார். கிளம்பவில்லை. இன்னும் இரண்டடி தூரம். இப்பொழுது கியரை மாற்ற அது தயாராகிவிட்டது. அப்பாடா. தள்ளிவிட்டவரைப் பார்த்தபடியே வண்டிக்குள் ஏற முயற்சித்தேன். 

கதவைத் திறக்கச் செல்லும் போது ‘ஏய்’ என்று சத்தம்.

ஓட்டுநர்தான் கத்துகிறார். முரட்டுச் சத்தத்தில் ‘ஓத்தா’ என்றார்.

‘என்ன எதுக்குய்யா திட்டுற’ என்று நினைக்கும் போதே ‘ஏறாத..சாவுகிராக்கி’ என்று சொல்லிவிட்டு வேகமெடுத்துவிட்டான் வண்டிக்காரன். 

தள்ளிவிட்டவரைப் பரிதாபமாகப் பார்த்தேன். ‘வண்டி ஓடாதப்போ அடுத்த வண்டிக்கு போலாம்ன்னு கீழ எறங்குன இல்ல...இப்போ ஏறாத’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

‘அடப்பாவி..உனக்கு வேண்டித்தானய்யா இறங்கினேன்’ என்று சொல்ல எத்தனித்தேன். ஆனால் அதற்குள் கிளம்பிச் சென்ற வண்டியில் நடுவில் அமர்ந்திருந்த பெண்மணி திரும்பிப்பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தாள். ஓட்டுநர், சாவுகிராக்கிக்குப் பிறகு ஏதோ சொல்லியிருக்க வேண்டும். அதை எனக்குச் சொல்லிச் சிரிக்கிறாளாம். சிறுக்கி. நல்லதைச் சொல்கிறார்களோ இல்லையோ இப்படியான கெட்டதுகளைச் சொல்லிவிடுவார்கள். இல்லையென்றால் சிலருக்கு மண்டையே வெடித்துவிடும்.

தள்ளிவிட்டவனிடம் சொல்ல வந்தது கூட தொண்டைக்குள் உருவமில்லாத ஒரு உருண்டையாக மாறி உருளத் தொடங்கிவிட்டது. இப்பொழுதெல்லாம் கவனத்தை திசை மாற்றுவதற்கு செல்போன்தான் உற்ற தோழன். பேண்ட்டுக்குள் வைத்ததை எடுத்து எதையோ நோண்டினேன். அடுத்த சில நொடிகளில் இன்னொரு ஆட்டோ வந்துவிட்டது. அது பிரச்சினையில்லை. ஆனால் முதல் வரிதான் திரும்பத் திரும்ப நினைவில் வந்து போனது. எது எப்பொழுது வினையாகப் போகும் என்று யாருக்குத் தெரியும்?

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

என்ன இது ஒரே நாளுல ரெண்டு பதிவு.
ரொம்ப நாளுக்கு பிறகு
ரெண்டாம் பதிவு எழுத வைத்த அந்த ஆட்டோகாரருக்கு ஜெ.