Jan 10, 2019

யாவரும்

ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்பாக ஜீவகரிகாலன் அறிமுகம். நிசப்தம் வழியாகத்தான் தெரியும். சாத்தப்பன், வேல்கண்ணன், பாலா இளம்பிறை, கண்ணதாசன் உள்ளிட்ட நண்பர்களுடனும் அறிமுகமுகமாகியிருந்தேன். தூரமாக நின்று சிரித்துக் கொள்கிற அளவுக்கான அறிமுகம். ஐந்து வருடங்களுக்கு முன்பாக பதிப்பகம் ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆளுக்கொரு தொகையை முதலீடு செய்திருந்தார்கள். சிறு தொகை. துல்லியமான தொகையை அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். பதிப்பகத்தின் முதல் புத்தகம் என்னுடையது. 


லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன். 

அதுவரைக்கும் எழுதியிருந்த மின்னல் கதைகளின் தொகுப்பு அது. அது எனக்கு நான்காவது புத்தகம். ஆனால் இந்தப் புத்தகத்துக்காகக் கடுமையான விளம்பரங்களைச் செய்தேன். நான்கைந்து பேர் நம் எழுத்தை நம்பி முதலீடு செய்யும் போது, அதுவும் மிகச் சாதாரண வருமானமுடைய இளைஞர்கள் இணைந்து செயல்படும் போது நம்மால் நட்டமடைந்துவிடக் கூடாது என்ற பயமும் படபடப்பும் இருந்து கொண்டேயிருந்தது. சென்னைப் புத்தகக் காட்சிக்கு விற்பனைக்கு வந்தது. அப்புத்தகம் கைவிடவில்லை. நன்கு விற்பனையானது. அதுதான் யாவரும் பதிப்பகத்தின் வெற்றிக்குக் காரணமில்லை- ஆனால் அதுவும் ஒரு காரணம்.

இன்றைக்கு யாவரும் பதிப்பகத்தின் ஆறாவது பிறந்தநாள். ஐந்தாண்டுகளில் தொண்ணூற்று ஏழு புத்தகங்களை வெளியிட்டுவிட்டார்கள். தமிழ் பதிப்புத் துறையில் தமக்கான ஓரிடத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள் என்றுதான் புரிந்து கொள்கிறேன். கடந்த வருடங்களில் யாவரும் நடத்திய மூன்று அல்லது நான்கு நிகழ்ச்சிகளுக்குத்தான் சென்றிருக்கிறேன். அவர்களும் அழைப்பதில்லை. அவர்கள் என்னை அழைக்காமல் விட என்ன காரணம் என்று சரியாகத் தெரியாது. ஆனால் நான் தவிர்த்துவிட இரண்டு காரணங்கள் இருக்கின்றன. 

யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை- யாவரும் பதிப்பகத்தில் என்னுடைய முதலீடு இருக்கிறது என்றார்கள். என் தம்பிக்கு மட்டும் தெரிந்தால் ரத்தக் கண்ணீர் விட்டுவிடுவான். சம்பளத்தை வாங்கி வீட்டில் தந்துவிடுவதைத் தவிர எந்த முதலீட்டையும் நான் செய்ததில்லை.; திட்டமிடலையும் செய்ததில்லை என்பதுதான் எங்கள் அம்மாவுக்கு என் மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு.

இலக்கிய உலகம் மாதிரியான அபாண்டமான உலகம் வேறு இருக்குமா என்று தெரியவில்லை. நல்ல மனிதர்கள் நான்கைந்து பேர் இருக்குமிடத்தில் நாக்கு அரித்தவர்கள்தான் மிச்சம் மீதியெல்லாம். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதையாவது பேசிக் கொண்டிருப்பார்கள். லாபி செய்து கொண்டேயிருக்க வேண்டும். நிறைய சூட்சமங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் செய்யவில்லை என்றாலும் தூற்றுவார்கள். செய்தாலும் கூட அந்தப் பக்கமாக நகர்ந்த பிறகு எதையாவது சொல்வார்கள். தற்காலிகமாகவாவது ஒதுங்கி இருந்து கொள்வதுதான் சரியெனப்பட்டது. இளைஞர்களின் உழைப்பையும், உயர்வையும் சிறுமைப்படுத்த நாம் எந்த எந்தவிதத்திலும் காரணமாக இருந்துவிடக் கூடாது என்று ஒதுங்கிக் கொண்டேன். 

கரிகாலனிடம் இதுவரை இதை நேரடியாகச் சொன்னதில்லை. எதைச் சொல்வதற்கும் ஒரு சரியான தருணம் வர வேண்டுமல்லவா? இது சரியான தருணம்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாகக் கரிகாலன் ‘இந்த வருடப் புத்தகக் காட்சிக்குப் புத்தகம் எழுதிக் கொடுங்க’ என்பார். ‘தர்றேன்’ என்று சொல்வேன். ஆனால் தரவில்லை. எழுதுவதற்காக தினசரி ஒரு மணி நேரமாவது ஒதுக்குகிறேன். புத்தகத்தை எழுதித் தந்திருக்கலாம். ஆனால் இதுதான் முக்கியமான காரணம். வேறு பதிப்பகங்களை அணுகியிருக்கலாம்தான். ஆனால் ‘யாவரும் நண்பர்கள் பதிப்புத் துறையில் இருக்கும் வரையில் வேறு பதிப்பகங்களுக்கு புத்தகம் தரும் எண்ணமில்லை’ என்று இரண்டு வருடங்களுக்கு முன்பாக அவரிடம் சொல்லியிருந்தேன். இதெல்லாம்தான் காரணம்- ஒன்றிரண்டு வருடங்களாக புத்தகம் எதுவும் வெளி வரவில்லை. ஆனால், அதனால் எல்லாம் ஒன்றும் குறைந்துவிடவில்லை. 

கடந்த ஐந்தாண்டுகளில் யாவரும் கொண்டு வந்திருக்கும் தொண்ணூற்று ஏழு புத்தகங்களில் நிறைய புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இளவயது எழுத்தாளர்கள் நிறைய. பிரம்மராஜன் உள்ளிட்ட மிக மூத்த எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் என்றாலும் கூட இளங்கூட்டம் ஒன்றை யாவரும் தமக்காக உருவாக்கியிருக்கிறது. கரிகாலன் முழு நேரப் பணியாக இதைச் செய்கிறார். சில நண்பர்கள் வெளியேறிவிட்டார்கள். கண்ணதாசன் அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார். கவிதைக்காரன் இளங்கோ, அகிலா, கணேஷ் என இன்னமும் நிறைய நண்பர்கள் அவர்களுடன் பயணிக்கிறார்கள். இலக்கியம், அறிவியல், தொகுப்பு நூல்கள் என பலதரப்பட்ட எழுத்துக்களையும் அரவணைக்கிறார்கள்.  கவனிக்கத் தக்க வெற்றி அவர்களுடையது.

எந்தப் பின்புலமுமில்லாத நான்கைந்து இளைஞர்கள் பகுதி நேரமாக பதிப்பகத்தைத் தொடங்கி அதை பெரிய பதிப்பகமாக மாற்றுவதில் இருக்கும் சவால்களையெல்லாம் உடைத்திருக்கிறார்கள். யாவரும் இன்னமும் பெரிய பெரிய வெற்றிகளையடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். நண்பர்கள் உச்சியில் ஏறுவதைப் பார்ப்பதுதான் உண்மையான உற்சாகம்.

2 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

Love u mani

சேக்காளி said...

//Love u mani//
வட போச்சே.
நேத்தே பதிவை படிச்சிட்டு பூ குடுக்காம விட்டுட்டேனே.
ஜீவ கரிகாலன் சார் பின் வாங்குற யோசனை ஏதும் இருக்கா?