Jan 8, 2019

ஆளுமைகள்..

ஞாயிற்றுக்கிழமை எம்.ஜி.ஆர் காலனிக்குச் சென்றிருந்தோம். வழக்கமாக மாலை நேரங்களில் சந்தித்து அவர்களுடன் உரையாடுவது வழக்கம். இந்த முறை வேறு சிலரையும் அழைக்கலாம் எனப் பேசினோம். இரண்டு காரணங்கள்- நாடோடி மக்களுக்காக ஒரு காலனி இருக்கிறது என நிறையப் பேருக்குத் தெரியும். ஆனால் அவர்கள் எந்தவிதமான வாழ்க்கை முறையை வாழ்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. இப்படியொரு நிகழ்வுக்கு அழைத்து வந்தால் அம்மக்களைப் பற்றி வெளியில் பரவலாகத் தெரியும். இன்னொரு காரணம், தமது குடியிருப்புக்கு இப்படியான சில மனிதர்கள் வந்து போகிறார்கள் என்ற மகிழ்ச்சியும், அவர்களுடனான உரையாடலும் வேறு சில திறப்புகளை அந்த மக்களுக்கும் இளைஞர்களுக்கும் உண்டாக்கும்.

இதற்கு முன்பாக அக்குடியிருப்புக்கு மருத்துவர்களை அழைத்துச் சென்றிருக்கிறோம்; பிறிதொரு சமயம் கவிஞர் அறிவுமதியுடன் சென்றிருக்கிறோம். தவிர, அரசு தாமஸ், கார்த்தியுடன் சேர்ந்து மூன்று பேரும் பல முறை சென்றிருக்கிறோம். இந்த முறை உள்ளூர் ரோட்டரி சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துச் சென்றோம். திரு.சண்முக சுந்தரம், திரு. சீனு, திரு.ஜோதி, திரு.ஆடிட்டர் பாலு உள்ளிட்ட அந்தக் குழுவினருக்கு ஆச்சரியம். அவர்கள் அதிகம் பேசவில்லை என்றாலும் அவர்களது மகிழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மக்களின் கட்டுக்கோப்பும், வாழ்க்கை முறையும் நிச்சயமாக மகிழ்ச்சியைத் தரும். ஆளுக்குக் கொஞ்ச நேரம் பேசினார்கள். நிறைவாகப் பேசினார்கள்.

கடந்த ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய குடியிருப்பு மாணவர்கள் சுமாரான மதிப்பெண்களைத்தான் பெற்றிருந்தார்கள். கல்லூரியின் தாளாளர் தரணியிடம் அம்மாணவர்களின் பெயரை ஒரு சிறு தாளில் எழுதிக் கொடுத்தேன். சீட்டில் இருந்த மாணவர்களுக்கெல்லாம் சேர்க்கையை உறுதி செய்து கொடுத்தார். அந்தக் கல்லூரியில் இடம் கிடைப்பது எளிதில்லை. ஆனால் காலனிக்காகச் செய்து கொடுத்தார். கல்லூரியின் தாளாளரும், கல்லூரி பேராசிரியை கலைச்செல்வியும் வந்திருந்தார்கள் என்பதால் மாணவர்களுக்கு சந்தோஷம். அவர்களோடு சேர்த்து ஆசிரியர் ஸ்ரீனிவாசன். அவரைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்.

குடியிருப்புக்குச் செய்வதற்கு நிறைய இருக்கிறது. 

சிறப்பு விருந்தினர்கள் சென்ற பிறகு வழக்கம் போல நாங்கள் கொஞ்ச நேரம் பேச வேண்டியிருந்தது.  பேச்சுவாக்கில் ‘அம்பேத்கர் பற்றித் தெரியுமா?’ என்ற போது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. கல்லூரி மாணவர்களும் அந்தக் கூட்டத்தில் உண்டு. ஆனால் அந்தக் கூட்டத்தில் நான் பேசியதை கவனமாகக் கேட்டார்கள். ‘போரடிச்சிருந்தா எந்திரிச்சு போயிருப்பாங்க’ என்று கூட்டம் முடிந்த போது சொன்னார்கள். 

பொதுவாகவே அம்பேத்கரையும், காந்தியையும், வள்ளலாரையும், பெரியாரையும் எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என உறுதியாகச் சொல்வேன். பின்பற்றுகிறோம் அல்லது விமர்சிக்கிறோம் என்பது இரண்டாம்பட்சம். குறைந்தபட்சமான புரிதலாவது நமக்கு இருக்க வேண்டும்.  ‘இவர்களுக்கு ஏன் அம்பேத்கரைத் தெரியவில்லை?’ என்ற கேள்வி மனதுக்குள் இருந்து கொண்டேயிருந்தது.

அந்த மக்கள் என்றில்லை- பரவலாகவே, ஆளுமைகளைத் தெரிந்து வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இன்றைக்கு அம்பேத்கரைத் தலித்தாகவும், காமராஜரை நாடாராகவும் மட்டும்தான் பார்க்கிறார்க்ள். சாதிய சங்கங்களில் பேசுகிறவர்கள் பெயரளவில் தம் சாதியைச் சார்ந்த தலைவர்களின் படத்தைப் பயன்படுத்துகிறார்களே தவிர அறிவார்ந்த விவாதத்தைப் பரவலாக முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.

அந்த இளைஞர்களில் சிலரிடம் ‘ஏன் அம்பேத்கரைத் தெரியவில்லை’ என்று கேட்ட போது ‘நீங்களே பேசுங்க’ என்றார்கள். அம்பேத்கரைப் பற்றி மட்டுமே பேசச் சொல்கிறார்கள். மறுநாள் சில  நண்பர்களிடமும் பேசினேன். நிறைய ஆலோசனைகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக முக்கியமான ஆளுமைகளைப் பற்றியை உரையை உள்ளூரில் நிகழ்த்த வேண்டும் என முடிவுக்கு வர முடிந்திருக்கிறது. முதல் உரையை அம்பேத்கர் குறித்து நிகழ்த்தலாம். எம்.ஜி.ஆர் காலனியிலேயே ஆரம்பித்துவிடலாம். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, அவரது சிந்தனைகள், எழுதிய புத்தகங்கள் குறித்து முக்கால் மணி நேரமாவது பேச முடியும். எளிய மொழியில், அந்த மக்களுக்கு புரியும்படியாகப் பேசி உரையாட வேண்டும். அந்தக் கூட்டத்திலிருந்து யாராவது ஒரு மாணவன் பற்றிக் கொண்டால் போதும். அவன் தேடத் தொடங்கிவிடுவான். நம்மை மிஞ்சி அவன் மேலே செல்லட்டும்.

அதற்கடுத்த மாதம், தக்கர்பாபா பள்ளியில் காந்தியைப் பற்றியும், அதற்கடுத்த மாதம் பெரியார் குறித்தும் எனத் தொடர்ச்சியாகப் பேசலாம் என்றிருக்கிறேன். ஓர் ஆளுமை குறித்து ஒரு மணி நேரம் பேச வேண்டுமானால் நிறையத் தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். ஆனால் மாதம் ஓர் ஆளுமை என்பது சாத்தியமானதுதான். மைக் இல்லாமல், பெரிய கூட்டமில்லாமல் சிறு குழுவினரிடம் பேசி, பிறகு கேள்வி-பதில் எனக் கலந்துரையாடலைச் செய்யலாம். பத்துப் பேர் என்றாலும் கூடப் போதும். இந்த வருடம் பத்து முதல் பனிரெண்டு ஆளுமைகள் என்பது இலக்கு.

இன்றைக்கு சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அம்பேத்கர் குறித்தான புத்தகங்களை மட்டும் வாங்கி வந்திருக்கிறேன். நாளைக்குச் சென்று காந்தி, பெரியார், மார்க்ஸ் குறித்த புத்தகங்களையெல்லாம் வாங்க வேண்டும். 

9 எதிர் சப்தங்கள்:

நாடோடிப் பையன் said...

Mani

Your commitment to improve the life of next generation of underprivileged people is truly inspirational.

நிவாஸ் திவிக said...

அய்யா உங்கள் பணி அருமை. உங்கள் பணிக்கு எங்களது ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும். நிவாஸ் திராவிடர் விடுதலைக் கழகம், கோபி. நன்றி.

Murugan R.D. said...

சில ஆளுமைகளை பற்றி பேசணும்ங்கிற வார்த்தை சரிதான் என்றாலும்
அவ்வாளுமைகளில் ஒரு சில பெயர்கள் தேவையாங்கிற ஆயாசமும், விரக்தி சிரிப்பும் மனதிற்குள் தோன்றினாலும் களப்பணியாற்ற இறங்கிவிட்ட இந்த நேரத்தில் விமர்சிப்பது பொருத்தமாக இருக்காது என்பதால் விட்ருவோம்,

ஆனாலும் தமிழர்களிலேயே எத்தனையோ பேர் முன்மாதிரியாக உள்ளனர், அவர்களைப்பற்றி அதிகம் உரையாடுங்கள் என்பதே என் வேண்டுகோள்,,,

இன்னும் தெளிவாக எழுதினால் குறைசொல்வதற்கு மட்டும் ஆளுங்க கிளம்பிடறாங்கன்னு இதை படிப்பவர்களுக்கும் சரி உங்களுக்கும் சரி மனதில் ஒரு சலிப்பு தோன்றிவிடும் என்பதால் உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்கிறேன்,

Siva said...

Pls upload those videos of Gandhi, Ambedkar, Periyar speech which Ur going to give to them

Vaa.Manikandan said...

பெரியார், அம்பேத்கரை விட்டுவிட்டு பேச முடியாது அய்யா! கட்டுரையில் ஒரு வரியில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். மற்றபடி, நீங்கள் விரக்தியில் சிரித்தாலும் சரி; வன்மத்தில் வெந்தாலும் சரி.

சேக்காளி said...

//பின்பற்றுகிறோம் அல்லது விமர்சிக்கிறோம் என்பது இரண்டாம்பட்சம். குறைந்தபட்சமான புரிதலாவது நமக்கு இருக்க வேண்டும்//

சேக்காளி said...

//ஆனாலும் தமிழர்களிலேயே எத்தனையோ பேர் முன்மாதிரியாக உள்ளனர்//
நம்ம எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் எல்லாம் தெரியலியா உமக்கு.

Murugan R.D. said...

வா,ம, ட்ட இருநது இப்படிதான் பதில் வரும் என்று தெரியும், நோ பீலிங்

சேக்காளி நண்பரே அந்தபக்கம் பெரியார தவிர யாரும் கண்ணுக்கு தெரியல
இந்தபக்கம் எடப்பாடி ஓபிஎஸ்ச தவிர வேற யாரும் உங்க கண்ணுக்கு தெரியல இல்லியா,

இப்படிப்பட்ட தொலை நோக்கு பார்வை என்னை போல சாதாரணமானவர்களுக்கு கிடையாது தான்,, வருந்துகிறேன்,, நான் ஒரு பிறவி குருடு

selvaraj said...

பெரியார் மற்றும் அம்பேத்கரை பற்றி இதுவரை பெரிதாக எதுவும் வாசித்ததில்லை. இனி வாசிக்க வேண்டும்.