Jul 25, 2018

கதைகள்

ஊட்டியில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின் ஒன்றைக் குறிப்பிட்டார். 'ஒவ்வொரு நாளும் புதிய சிறுகதைகளை வாசிக்க வேண்டும். அப்படி வாசிக்காதவன் _________ ' என்றார். குறிப்பாக உதவி இயக்குநர்களுக்கானது அந்த அறிவுரை. அந்த ______ என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் சொன்னது முக்கியமான விஷயமாகப் பட்டது. தினசரி ஒரு கதையை வாசித்துவிட வேண்டும் என்பதை வெகு நாள் பழக்கமாக வைத்திருக்கிறேன். தினசரி பிரச்சினைகள், நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாக சிறுகதைகளும் புனைவுகளும் அமைவதை உணரக் கூடும்.

ஒரு  சிறுகதையை  வாசிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்? அதிகபட்சம் ஏழு முதல் பத்து நிமிடங்கள். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக வாசித்துவிட்டால் அலுவலகம் வந்து சேரும் வரைக்கும் அதுதான் மண்டைக்குள் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருக்கும். சற்று யோசித்துப் பார்த்தால் இப்பொழுதெல்லாம் நமக்கான திறப்புகள் என்று எதுவுமே இல்லை. யாரிடமாவது மனம் விட்டு பேசுகிறோமா? சுற்றிலும் நடப்பதை கவனிக்கிறோமா? எந்நேரமும் செல்போன் அல்லது கணினிதான் நம்முடைய உலகமாக இருக்கிறது. திண்ணைகள் இல்லை. அரட்டைகள் இல்லை. சக மனிதனைப் பற்றிய கவனிப்பு சுத்தமாக இல்லை. நாமாகவே நம்மைச் சுற்றி ஒரு பெரிய சுவரை எழுப்பி வைத்திருக்கிறோம். தேங்குவதையெல்லாம் எங்கேதான் கொட்டுவது? பொதுவாகவே கதைகள் நல்ல திறப்பு. 'எதற்காக ஒருவர் வாசிக்க வேண்டும்' என்று கேட்டால் நமக்குள் நாமாகவே ஓர் உரையாடலை நிகழ்த்திக் கொள்ள கதைகள் அற்புதமான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றன என்று சொல்லலாம். எவ்வளவு பாத்திரங்கள், எவ்வளவு விசித்திரமான மனிதர்கள், அவர்களின் மனநிலை, இந்த உலகம் குறித்தான நுட்பமான சித்திரங்கள் என எல்லாவற்றையும் நமக்குச் சொல்லித் தருபவை கதைகள்.

நேற்று அசோகமித்திரனின் புலிக் கலைஞனை வாசித்தேன். அவர் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்கு இருந்த அனுபவத்திலிருந்து பிறந்த கதை. மதிய உணவு இடைவேளையின் போது சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் காதர், அவரது புலி வேஷம், அதன் வழியாக அவரது வாழ்வின்  வலி, வாய்ப்பு கேட்டு இரந்து நிற்கும் அவரது உடல், முக பாவனைகள் என கதை நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். சினிமாவில் ஏதாவது வாய்ப்பு கிடைத்துவிடாதா என்று இயக்குனர்களின் அலுவகத்துக்கு வந்து போகும் பல நூறு எளிய கலைஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள். எப்பொழுதும் இருப்பார்கள். கலைஞனின் உலகம் வேறுதான். ஆனால் அங்கு பஞ்சமும் பட்டினியும் பசியும் அவனை எவ்வளவு கூனிக் குறுக வைக்கின்றன? 

கதையை இதுவரை வாசித்திராதவர்கள் ஒரு முறை வாசித்துவிடவும். 

எங்கள் அலுவகத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கதை சொல்லச் சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் ஒருவர் சொல்ல வேண்டும். ஆளாளுக்கு அவரது வாழ்க்கையில் நடந்த கதைகளைச் சொல்வது வழக்கம். கதை என்பது சம்பவமில்லை என்று உறுதியாக நம்புகிறவன் நான். எங்கே தொடங்க வேண்டும், எந்த இடத்தில் நகைச்சுவை வர வேண்டும், எந்த இடத்தில வாசிக்கிறவனைக் கரைக்க வேண்டும், எப்படி முடிய வேண்டும் என யோசித்து யோசித்துச் செதுக்குவதற்கும் போகிற போக்கில் சொல்லிச் செல்வதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு. 

ல.ச.ராவின் ஒரு கதையை வாசித்து அதன் சாறு வடிந்துவிடாமல் இன்னொருவருக்குச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. சு.ராவின் கதைகளில் வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் வாசிப்பின்பத்தை இன்னொருவருக்கு கதை சொல்லலில் கடத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் வாசித்ததை உள்வாங்கி கதை குறித்தான அபிப்பிராயத்தைச் சொல்லாமல் கேட்கிறவர்களுக்குக் கதையாகச் சொல்வதில் ஒரு மிகப்பெரிய திருப்தியும் பலமும் கிடைக்கும். முயற்சித்துப் பார்க்கலாம். அலுவலகத்தில் என்னுடைய முறையின் போது ஒரு நல்ல கதையைச் சொல்ல வேண்டும் என்று அ.மியின் புலிக்கலைஞனைச் சொன்னேன். இருபது நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆனால் யாருடைய கவனமும் சிதறவில்லை. நான் நன்றாகச் சொன்னேன் என்று அர்த்தமில்லை. கதை அப்படி. நல்ல கதைகள் அப்படித்தான். நம்மை ஒரு கொக்கியில் மாட்டி எங்கேயெல்லாமோ இழுத்துச் சென்றுவிடுகிறது.

இதைவிடவும் வேறு என்ன வடிகால்களை நாம் கண்டுபிடித்துவிடப் போகிறோம்? 

அசோகமித்திரனின் எழுத்துக்கள் அவரது வாழ்வியல் அனுபவங்களின் திரட்சியாகத்தான் இருக்கின்றன. செவ்வாய் கிரகத்திலிருந்து எதையும் எடுத்து வந்து அவர் எழுதவில்லை. அலுவலகத்தில் நடக்கும் பிரச்சினைகளை எழுதினால் 'இதையெல்லாம் எழுதினால் அலுவலகத்தில் எதுவும் பிரச்சினை ஆகாதா?' என்று யாரோ கேட்ட கேள்வியும் நினைவில் வந்து போனது. ஜெமினி ஸ்டுடியோஸ் அனுபவங்களை அசோகமித்திரனின் எழுத்துக்களில் பல இடங்களில் பார்க்க முடியும். கரைந்த நிழல்களில் தொடங்கி எங்கேயாவது அவரது சினிமா கம்பெனி அனுபவங்கள் எட்டிப் பார்த்த படியே இருக்கின்றன. அசோகமித்திரன் என்றில்லை- பெரும்பாலும்,  எழுதுகிறவன் தமக்கான கச்சாவை தன்னைச் சுற்றி இயங்கும் உலகத்திலிருந்துதான் எடுக்க முடியும். எவையெல்லாம் இந்த உலகத்திலிருந்து ரத்தம் சதையுமாக எடுக்கப்பட்டு எழுத்தாக மார்றப்படுகிறதோ அவையெல்லாம் உயிர்த்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. கற்பனை பற்றியும் படைப்பறிவு பற்றியும் அதீத நம்பிக்கை கொண்டு உடான்ஸ் விட்டால் தட்டையாகிப் போவதற்கான சாத்தியங்கள் வெகு அதிகம்.

8 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இதைவிடவும் வேறு என்ன வடிகால்களை நாம் கண்டுபிடித்துவிடப் போகிறோம்? //
அதுக்கு தான இங்குன வந்து என்ன த்தையாவது சொல்லிட்டு கெடக்கேன்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

இதற்காக தான் நிசப்தம் பதிவை அனுதினமும் எதிர் பார்த்து கொண்டே இருக்கிறேன்.வாழ்க வளமுடன்

Unknown said...

I read the story after that i was reading the comments. I found the below link which is worth reading too.

http://agapuram.blogspot.com/2015/11/blog-post_15.html

Unknown said...

அசோகமித்திரன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர்!! நோபல் பரிசுக்கு தகுதியான எழுத்தாளர். அவரின் கட்டுரையோ, நாவலோ படித்து முடிக்கும் போது, பெருங் கூட்டத்திலும் ஒரு ஏகாந்தமான, தனிமையான மன நிலையை உணருவது போல் இருக்கும். அவரின் விடுதலை நாவலில் வரும் பரசுராமய்யர், தலைமுறைகள் நாயகன் சங்கரன், இன்னும் சில நாட்கள் சுவாமி நாதன் என் நினைவில் இன்றும் வந்து கொண்டே இருக்கிறார்கள். சொல்ல போனால், எதையும் சாதிக்காமல், லட்சிய வெறி இல்லாமல் ஒருவர் அமைதியாக, சந்தோஷமாக தனக்கு உண்மையில் என்ன வருமோ அதை செய்து கொண்டு ஏக்கமன்றி வாழலாம் என்று நான் உணர்ந்ததற்கு அசோகமித்திரன் படைப்புகளே காரணம். நான் மிகைப்படுத்தி சொல்ல வில்லை. அசோகமித்திரன் எழுதிய நிலமும், மக்களும் முழுமையாகவே பூமியில் இருந்து மறைந்துவிட்டார்கள். ஆனால் அவரின் எழுத்துக்கள் மூலம் என்றும் இருப்பார்கள்.

அவரை பற்றி ஜெயமோகனின் பதிவு ஒன்றை இங்கு ஷேர் செய்துள்ளேன்.

https://www.jeyamohan.in/712#.W1h4mFAzY2x

Anonymous said...

S I. L. E. N. C. E

Murugan R.D. said...

'ஒவ்வொரு நாளும் புதிய சிறுகதைகளை வாசிக்க வேண்டும். அப்படி வாசிக்காதவன் _________ ' என்றார். குறிப்பாக உதவி இயக்குநர்களுக்கானது அந்த அறிவுரை. அந்த ______ என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் சொன்னது முக்கியமான விஷயமாகப் பட்டது./////////////////

இ‌தென்னங்க கொடுமை,,,, அலுவல் விசயம் தவிர்த்த ரசனைகள் பழக்க வழக்கங்கள் ஆளாளுக்கு வேறுபடும்,,, அது இசை கேட்பது, சுற்றுலா செல்வது, கோயில்களுக்கு செல்வது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது அல்லது அரட்டையடிப்பது, குடும்பத்துடன் எங்காவது சென்று வருவது, சிலருக்கு பொதுசேவை, சிலருக்கு பார்ட் டைம் வேலை என்று ஒவ்வொருவரும் ஒரு விதமாக செயல்படுவார்கள்,, அப்படியிருக்க கதை படிக்கணும், கவிதை படிக்கணும், எலக்கியம் படிக்கணும், ஏதாவது முற்போக்கு நாவல் படிக்கணும், வெளிநாட்டு எலக்கிய பொஸ்தகத்த படிக்கணும்னு அறிவுரை சொல்றது எல்லாம் என்னமாதிரியான குணம்னு தெரியல,, உங்களின் இந்த பதிவை வைத்து மட்டும் நான் இதை எழுதவில்லை,,,

பல வலைதளங்களில் எழுத்தாளர்கள் என்று பெயர் பெற்ற அல்லது போட்டுக்கொண்ட பலர் இப்படி தான் கதைக்கிறார்கள்,, இங்க நீங்க குறிப்பிட்ட பல எழுத்தாளர்களின் பெயர்களை போல அவர்களும் ஆளாளுக்கு அவ்வப்போது நாலைஞ்சி வெளிநாட்டுகார எழுத்தாளர்கள் பெயரையும் அந்த பொஸ்தகத்தின் பெயரையும் போட்டு பாத்தியா அதுல அப்படி இருந்திச்சி,,, இத மாதிரி எழுத இங்க என்ன விட்டா யார் இருக்கா?ங்கிற ரேஞ்சிக்கு அலம்பல் பண்றதும்,,, என்னவோ கீழடி அகழ்வாராய்ச்சியல பொன்னும் புதையலும் கண்டுபடிச்சிட்ட மாதிரி சராசரி வாசகனுக்கு தெரியாத ஒரு சில பெயர்களை குறிப்பிட்டும் அந்த நாட்டு எலக்கியம் இந்த நாட்டு எலக்கியவாதின்னு சிலரை குறிப்பிட்டும் தன்னைதானே பெருமைபடுத்திக்கொள்வதுமாக திரிகிறார்கள், (விவேக் காமடில வர்ற தானே உக்காந்த தானைதலைவன் வாழ்க டயலாக் போல)

மத்த எந்த துறைகளிலும், கலைகளிலும் (அரசியல், சினிமா தவிர்த்த), இல்லாத தம்பட்ட டமாரம் இந்த எழுத்துதுறையில் மட்டும் ரொம்ப ஓவராவே இருக்கு,,, பொஸ்தகங்கள் வாசிப்பது எல்லாம் டிவி, கணினி, கைபேசி, டாஸ்மாக் புரட்சிகாலத்திற்கு முன்புவரை இருந்த மாற்றுபொழுதுபோக்குகளில் தவிர்க்க முடியாததாக இருந்தது,,, வேறு ஆப்சன் கம்மியாகவும் இது கொஞ்சம் கைய கடிக்காத எக்கனாமிக் என்பதாலும் அக்காலத்தில் எல்லோரிடத்திலும் பரவலான பழக்கமாக இருந்தது,, இப்பவும் அப்படியே இருக்க எல்லோராலும் முடியுமா?

எழுத்துதுறையில் சாதாரண வாசகனுக்கு புரியவே புரியாத நடையிலும், ‌வெளிநாட்டு எலக்கியம்னு சொல்லி அதை மொழிபெயர்த்தோ காப்பி அடித்தோ என்னத்தையாவது எழுதிட்டு அத படிக்கிறதுக்குன்னே இருக்கிற நாலு பேர் சொல்ற ஆகா ஓஹோ ஜால்ரா சத்தத்தை தங்கள் வலைதளங்களில் பதிந்துவிட்டு இந்த அற்ப உலகில் இவர்கள் என்னவோ தேவதூதர்கள் மாதிரியும் நாசாவுக்கு ராக்கெட் வுட்ட சயின்ட்ஸ் ரேஞ்சுக்கும் புலம்புவது ரொம்பவும் டெர்ரர் காமடியா இருக்கு,,,,

பத்து இருபது பொஸ்தகம் எழுதினா கூட பரவாயில் நாலைஞ்சு எழுதிட்டி எழுத்தாளர்ன்னு தனக்கு பின்னால கூட்டம் சேத்துகிட்டு தங்களுக்கு தாங்களே கூட்டம் போட்டுகிட்டும் எம்எல்எம் பாணியில் ஒவ்வொருத்தருக்கு ஒருத்தர் பாராட்டு பத்திரம் வாசிக்கிறதும் அவார்ட் சால்வை கொடுத்துகிறதுமாக ரொம்ப ஓவர் அலும்பு பண்றாங்க,, அந்தக்காலத்துல வார நாவல்களில் எழுதி தள்ளிய ராஜேஸ்குமார் போன்றவர்கள் எல்லாம் இன்று இருந்த இடம் தெரியாமல் இருக்க இங்கு திடீரென்று பிரபலமாகும் எழுத்தாளர்கள் வடிவேலு முத்து படத்துல ராஜா வேசம் போட்டுட்டு பேசுற மாதிரி தங்களை பற்றி தாங்களே பேசிக்கொள்வது அவர்கள் எழுதிய பொஸ்தகத்த விடவும் ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கு,

எழுத்துலகை தங்கள் ஓய்வு நேர பொழுதுபோக்க மாற்றிக்கொண்டவர்கள் என்று எப்பவுமே மக்களில் சிலர் இருக்க கூடும், மற்ற ஓய்வு நேர ரிலாக்ஸான மூடிற்கு ஏற்ற பொழுதுபோக்குகளில் அதுவும் ஒன்று,, ஆனா அதுக்கு நீங்க மேலே சொன்ன மாதிரி எழுதுவதெல்லாம் பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்,, பொஸ்தகம் படிப்பது என்பது மனதை ரிலாக்ஸாக்கும் ஒரு எளிய விசயம் அது டென்சனை குறைக்கும் என்பது போன்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம், ஆனா அவர் சொன்னது போல சொன்னது ரொம்ப ஓவர்,,

((ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சிகிட்டிருந்த விசயம்,,,,, அதை கிளறிவிடும் விசயமாக இந்த பதிவு அமைந்துவிட்டது,, மற்றபடி இதில் உங்கள் மேல் எனக்கு எதுவும் குறை தோன்றவில்லை,,,))

Anonymous said...

புலிக்கலைஞன் 80 களின் இறுதியில் 12 வகுப்பில் துணைப்பாடமாக இருந்தது.

Selvaraj said...

அவன்தான் சிலநிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்