எங்கள் மேலாளராக இருந்தவர் ராஜினாமா செய்து விட்டுக் கிளம்பிவிட்டார். கன்னடர். ராஜினாமாக் கடிதம் கொடுத்த பிறகு கடைசி இரண்டு மாதங்களில் நீங்களும் நானும் என்ன செய்வோம்? இருக்கிற நேரத்தையெல்லாம் யூடியூபில் படம் பார்த்து அல்லது ஃபேஸ்புக்கில் வேடிக்கை பார்த்துக் கழிக்கலாம். பையை வைத்துவிட்டு வெளியில் சுற்றலாம். சைட் அடிக்கலாம். கடலை போடலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஆனால் அந்த மனுஷன் அரசியல் செய்தார். கப்பித்தனமான, அதே சமயம் எதிராளி எந்திரிக்கவே முடியாமல் அடிக்கும் அரசியல்.
அவரும் இன்னொருவரும் ஒரே கால கட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். சேர்ந்த போது இவர் ஒரு அணிக்கு தலைவர்(லீடர்). அவர் இன்னொரு அணிக்குத் தலைவர். இருவருக்குமிடையில் முறைப்பும் விறைப்புமாகக் கிடந்த சமயத்தில் வந்து சேர்ந்தேன். அப்பொழுது இருவருக்குமே வேறொரு கன்னடர் மேலாளராக இருந்தார். ஆனால் இந்த ஆள் சோப் போட்டு விடும் அளவுக்கு அவரது எதிராளியால் சோப் போட்டுவிட முடியவில்லை. கார்பொரேட் நிறுவனங்களில் சோப்புக்குத் தனி மரியாதை உண்டு. மேலாளராக இருந்த கன்னடர் வேறொரு அணிக்குச் செல்லும் போது தனக்கு சோப் பூசிய கன்னடரை மேலாளராக்கிவிட்டுச் சென்றார்.
கன்னடன் சரியான 'கன்னிங்கன்' (cunning-gun). சிரித்துக் கொண்டே சூடு வைத்துவிடுவதில் படு கில்லாடி. எதிராளிக்கு அதெல்லாம் தெரியாது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் காட்டிவிடுவார். அதுதான் எதிராளியின் மிகப்பெரிய பலவீனமாக இருந்தது. கன்னடன் மேலாளர் ஆன பிறகும் இருவரும் முறைத்துக் கொண்டுதான் திரிந்தார்கள். அவர் மீட்டிங் வைக்கும் போதெல்லாம் இவர் வர மாட்டார். வந்தாலும் செல்போனை பார்த்துக் கொண்டு இருப்பார். இப்படி ஒரே கசகசாவாக இருந்த போதுதான் இரண்டு மாதங்களுக்கு முன்பாக கன்னடர் ராஜினாமா செய்துவிட்டார்.
அதன் பிறகுதான் ஒரே அக்கப்போர். 'போறதே போறோம்..எதிரியை முடித்துவிட்டு போகலாம்' என்று திட்டமிட்டுவிட்டான். எதிராளியை தொலைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? 'இவன் சரியில்லை சார்' என்று நேரடியாகப் போட்டுக் கொடுக்கலாம். ஆனால் அதை மேலே இருப்பவர்கள் நம்புவதற்கான வாய்ப்பு வெகு குறைவு. 'இவனுக ரெண்டு பெரும் ஒரே செட்...ஏற்கனவே இவனுகளுக்குள்ள பிரச்சினை இருக்கு' என்று மேலிடம் கருத வாய்ப்பு இருக்கிறது. கன்னிங்கன் இன்னொரு வேலையைச் செய்தான். தன்னுடைய எதிரியிடம் இரண்டு அணித்தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு புல்லட் தயார் செய்தான்.
முதல் புல்லட் ஒரு அணியின் தலைவனுக்கு. 'சார் இவன் ஒழுங்காவே ஆபிஸ் வருவதில்லை' என்று சொல்லியபடியே சுட்டான். எங்கள் அலுவலத்தில் ஒரு விதிமுறை உண்டு. ஒரு நாளைக்கு ஏழரை மணி நேரமாவது உள்ளே இருக்க வேண்டும். இல்லையென்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்வார்கள். முதல் புல்லட்டுக்கு பலியான அணித்தலைவர் நல்ல உழைப்பாளி. கடுமையாக வேலை செய்வார். ஆனால் அவருக்குப் பிரச்சினை அவரது வீடு. ஓசூரிலிருந்து தினசரி வந்து போகிறார். சில மாதங்களுக்கு முன்பாக அவரிடம் பேசிய கன்னிங்கன் 'நீ வேலையை மட்டும் பார்த்துக்க..நேரம் பத்தியெல்லாம் கவலைப்படாத' என்று சொன்னதை நம்பிவிட்டார். கடைசியில் ஓசூர்க்காரரின் வருகைப் பதிவை அப்படியே அச்சு எடுத்துக் கொடுத்துவிட்டான். 'இதைக் கூட எதிராளி சரியான கண்காணிக்கவில்லை..' என்று கோர்த்துவிடுவதுதான் அவன் நோக்கம். அது மிகச் சரியாக நடைபெற்றது. 'இதெல்லாம் நீங்க பார்த்துக்கிறதில்லையா?' என்று எதிராளியை தாளித்து எடுத்துவிட்டார்கள். முதல் புல்லட் ஓசூர்காரர் நெஞ்சு வழியாக புகுந்து கன்னிங்கனின் எதிராளியின் நெஞ்சில் பாய்ந்தது. ஒரே புல்லட்டோடு விட்டால் உயிர் போகவில்லை என்றால் என்ன செய்வது?
அடுத்த புல்லட் தயாரானது.
இந்த புல்லட் தெலுங்குவாலாவுக்கு. அவரும் தனது எதிராளியின் நேரடி கட்டுப்பாட்டில் வருபவர்தான். அவருக்கும் ஒரு வடக்கத்தியானுக்கும் ஒரு பிரச்சினை. வடக்கத்தியானை அழைத்து 'உனக்கு என்ன பிரச்சினை' என்று கன்னிங்கன் தானாகவே கிளறிவிட அவன் புலம்பியிருக்கிறான். அவன் ஒரு கப்ஸா மன்னன் போலிருக்கிறது. 'என்னை அடித்துவிட்டான்' என்று சொல்லியிருக்கிறான். அது கன்னிங்கனுக்கு அல்வா சாப்பிட்டது போல ஆகிவிட்டது. 'எப்போ அடிச்சான்? எப்படி அடிச்சான்?' என்று கேட்டால் எட்டு மாதங்களுக்கு முன்பு வடக்கதியானின் பக்கத்தில் நின்று காதைப் பிடித்தாராம் தெலுங்குவாலா. 'இது போதும்..எனக்கு மெயில் அனுப்பு' என்று இதை மின்னஞ்சலில் எழுதி வாங்கி அதை மேலிடத்துக்கு அனுப்பிவிட்டான். இரண்டாவது புல்லட் முதல் புல்லட்டை விட வேகமாகப் பாய்ந்தது. 'போலீஸ் வந்தா என்ன பண்ணுறது' என்கிற அளவில் லோலாயமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
'டேய்..காதை புடிச்சதுக்கெல்லாம் போலீஸ் வருமா?' என்று கேட்கலாம்தான். ஆனால் அடுத்த புல்லட்டை நம் மீது செலுத்திவிடுவார்கள். நெஞ்சில் சுடுவார்களோ அல்லது...வேண்டாம் விடுங்கள்.
நேரடியாக எதிராளியை தங்கியிருந்தால் அவர் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது. இப்பொழுது கஷ்டம். 'இந்த ஆளை எல்லாம் மேனேஜர் ஆக்கினீங்கன்னா அவ்வளவுதான்' என்கிற மாதிரி காட்டிவிட்டுச் சென்றுவிட்டான். எடியூரப்பாவிடம் சேரப் போகிறானோ அல்லது குமாரசாமியிடமோ தெரியவில்லை.
அலுவலகமே கிசுகிசுத்துக் கிடக்கிறது. ஆளாளுக்கு வாய் மீது கையை வைத்து பொத்திக் கொண்டு 'இப்படியெல்லாமா அரசியல் செய்வாங்க' என்று பேசிக் கொள்கிறார்கள். கன்னிங்கன் இப்படியெல்லாம் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் கார்பொரேட் அரசியல் என்பது இதுதான். நேரடியாக புல்லட் பாயாது. ஆனால் பாய வேண்டியவனின் இருதயத்தில் சரியாக பாயும். இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் அடுத்தவனைச் சுட வேண்டியதில்லை. ஆனால் எவனாவது நம்மை நோக்கிச் சுட்டால் விஜயகாந்த் மாதிரி பாய்ந்து வரும் தோட்டாவை வாயில் பிடித்துச் சுட்டவன் மீதே திருப்பி துப்பிவிடலாம்.
மேலிடம் மண்டை காய்ந்தது. 'என்னதான் செய்வது?..நீ போயிட்டா இந்த டீம் காலியாகிடும் போலிருக்கே' என்று அவர்கள் பேச, 'இவனை மேனேஜர் ஆக்குங்க' என்று தனக்குப் பிடித்த இன்னொருவனைக் கை காட்டியிருக்கிறான். இப்பொழுது அவன் தான் மேலாளர் ஆவான் போலிருக்கிறது.
எவனோ மேலாளர் ஆகிவிட்டு போகட்டும். நமக்கு என்ன வந்தது? நமக்கு நெஞ்சு முக்கியம்.
8 எதிர் சப்தங்கள்:
ஒருவேளை இது தான் அருணாசலமே அதிக நாட்கள் இருந்தமைக்கும் உங்கள் மதுரை பயணத்திற்கும் காரணமோ..ஒருவேளை இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு இடுவதாக கூட நீங்கள் நினைக்கலாம். வாழ்க வளமுடன்
Your are written company(corporate) political to public place. Most of corporate think that violate company ethics... If someone against you.. They have the chance to tell about written in blog company issue... What you think about it Mr.Mani?
அருமையான நடை. மிகவும் ரசித்து படித்தேன்.
எங்கேயாவது நிறுவனத்தின் பெயர், ஆட்களின் பெயர் குறிப்பிட்டிருக்கிறேனா? இப்படித்தான் வெகு காலமாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். மீறி ஏதாவது பிரச்சினை என்றால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
//.If someone against you..They have the chance to tell about written in blog company issue.//
நேத்து வந்த ரெண்டு பதிவுல மொத பதிவ படிக்கல் போல.
"நடந்துட்டே இருந்தா போதாதா?" ன்னு ஒரு சந்தேகத்த தான் கேட்டேன்.
அதுக்கே, "குச்சு ஐச கூ ந்தலுல சொருகிட்டு நனையுதே நடுங்குதே குளுருதே" ன்ன கதையாகி போச்சு.
அதனால "தயவு செய்து சலங்கை ய கட்டாதீங்க".
சேக்காளி., பின்றீங்க
நெஞ்சும் பத்திரம்.... க்,க்கு,க்கூட இருப்பவரும்! பத்திரம் 'மணி'😊.
Why do you need Helihopter? Use real life iron man suit jet suit to commute office.
Post a Comment