மிதுனுக்கு இருபத்தைத் தாண்டிய வயது. இருபத்தைந்தை தாண்டியிருக்க வாய்ப்பில்லை. நேற்று முத்தூரில் சந்தித்தேன். உத்தர பிரதேசத்தைச் சார்ந்தவன். இங்கே ஒரு வேளையில் இருக்கிறான். பஞ்சுமிட்டாய் வியாபாரி. சிவகிரி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஈரோடு மாவட்டத்தில் சற்றே பெரிய சிற்றூர் ஊர் அது. அங்கேயிருந்து மிதிவண்டியில் பஞ்சுமிட்டாய் கொண்டு வந்திருந்தான். லொடக்கு சைக்கிள் அது. மிதுனின் முதலாளி பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்கிறார். காலையில் தன்னுடைய பணியாளர்களிடம் ஆளுக்கொரு மிதிவண்டியைக் கொடுத்து அனுப்பி வைத்துவிடுகிறார்.
ஒவ்வொருவரிடமும் இருநூறு பொட்டலம் பஞ்சுமிட்டாய்கள் இருக்கும். ஒரு பொட்டலம் பத்து ரூபாய். கையில் ஒரு மணியை ஒலித்துக் கொண்டே அவன் மிதிவண்டியை ஓட்டி வந்து நிறுத்திய மரத்துக்கடியில் நானும் அவனும் அமர்ந்து கொண்டோம். ஒரு நாளைக்கு நூற்றைம்பது பொட்டலங்களை விற்கிறானாம். ஆயிரத்து ஐநூறு ரூபாய். எப்படியும் முதலாளிக்கு ஒரு பொட்டலத்துக்கு ஆறேழு ரூபாயாவது இலாபம் நிற்கும்.
'உனக்கு எவ்வளவு சம்பளம்?'
'ஆறாயிரம்'. மாதத்துக்கு.
'போதுமா?' - சிரித்தான்.
'கானா கால்யே?' எனக்குத் தெரிந்த இந்தி வாக்கியங்களில் இதுவும் ஒன்று. கடையில் சாப்பிட்டிருந்தான்.
'எப்போ ஊருக்கு போவ?'
'எப்பவாச்சும்' - என்ன நினைத்தானோ தெரியவில்லை. அவனே கை விரல்களை எண்ணி இன்னமும் மூன்று மாதங்களில் போவதாகச் சொன்னான்.
'திரும்ப வருவியா?'
வருவதாகத் தலையாட்டினான். ஆறாயிரம் ரூபாய்க்காக குடும்பத்தை விட்டு வெகு தூரம் வந்து வேகாத வெயிலில் அலைவதை நினைத்துப் பார்க்க சங்கடமாக இருந்தது. கொஞ்சம் ஏமாந்தாலும் வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டுவிடக் கூடும். 'ஒரு பூவை ஏறி மிதிச்சுட்டோம்' என்று அம்மா சொல்வதுண்டு. நமக்கு கூடுதலாக அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது என்று அர்த்தம். எப்படி மறுக்க முடியும்?
இத்தகைய மனிதர்களை பார்த்துவிட்டுக் கோவிலுக்குள் செல்லும் போது 'எந்தக் காலத்திலும் இருக்கிற நிலைமையை விட்டு கீழ போகாம பார்த்துக்க ஆண்டவா' என்றுதான் வேண்டத் தோன்றுகிறது. பொருளாதாரத்தில் மட்டுமில்லை. எல்லாவற்றிலும் அப்படிதான். இப்படியே 'கீழே விழாம புடிச்சுக்க' என்று மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் எப்பொழுது உயர வேண்டும் என்று அவனிடம் கேட்டு, அவன் எப்பொழுது அருளி, பிறகு எப்பொழுது உயர்வது என்று தெரியவில்லை.
'நீயே ஒரு சைக்கிள் வாங்கிக்கலாம்ல?' என்று கேட்டதற்கு ஐடியா இருப்பதாகச் சொன்னான். தலையைப் படிய வாரியிருந்தான் மிதுன். ஜீன்ஸ் பேண்ட்டுக்குள் சட்டையை நுழைத்து இன் செய்து பெல்ட் அணிந்திருந்தான். அடிக்கடி மணி அடித்தான். ஒன்றிரண்டு பொட்டலங்கள் விற்றன.
'சைக்கிள் மட்டும் வாங்கிக்க...ஒவ்வொரு நாளைக்கும் பஞ்சுமிட்டாய் பொட்டலங்களை நானே காசு கொடுத்து வாங்கிக்குறேன் என்று முதலாளிகிட்ட சொல்லு. விற்று ஒரு பொட்டலத்துக்கு இரண்டு ரூபாய் என்றாலும் கூட ஒரு நாளைக்கு முன்னூறு கிடைக்குமுல்ல' என்றேன். இத்தகைய பையன்களைக் கண்டால் அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று சில கட்டைகள் கிளம்புவது வாஸ்தவம்தானே?
மிதுனுக்கு அப்பா இல்லை. அம்மாவும் உடன் பிறந்தவர்களும் இருக்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை ஊருக்கு அனுப்ப வேண்டும் என்கிற அழுத்தம் அவனுக்கு. இதையெல்லாம் அவன் கணக்கு போடமாலா இருந்திருப்பான்? ஆனால் ஒருவேளை விட்டு வைத்திருந்தால் இனியாவது கணக்கு போடட்டும் என்கிற நப்பாசைதான்.
'ஈஸி இல்ல சார்' என்றான்.அவரவர் பிரச்சினை அவரவருக்குத்தான் தெரியும்.
'உங்க ஊர்ல இந்த பணத்தைச் சம்பாதிக்க முடியாதா?' - கேட்க எளிதான கேள்வி. அமெரிக்காவில் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவரிடம் 'உங்க ஊர்ல சம்பாதிக்க முடியாதா' என்று கேட்டால் என்ன சொல்வார்?
மிதுன் சிரித்தான்.
சில வருடங்களுக்கு முன்பாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்த போது அதில் அப்பா அம்மாவை கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். அப்பொழுது அப்பாவுக்கு போதை. அம்மாவுக்கு கால் உடைந்துவிட, அம்மாவின் உறவினர்களில் யாரோ ஒருவர் அப்பாவை வெட்டிக் கொன்று விட்டார்கள். அது வெறும் ஈகோ கொலை. இப்பொழுது குடும்பத்துக்கு அவர்கள் யாரும் உதவுவதில்லை. அம்மாவுக்கு இப்பொழுது நடக்கக் கூட முடிவதில்லை. அதனால் அவர் வேலைக்கும் செல்வதில்லை. மிதுன் ஊரைச் சார்ந்தவன் அழைத்துவந்துவிட்டான். இங்கே வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அம்மாவுக்கு எப்படி இருக்கிறது என்று கூடத் தெரியாது. செல்போனில் கேட்கும் போதெல்லாம் பரவாயில்லை என்கிறார்கள். அம்மாவின் கால் பற்றி பிரச்சினையில்லை. அங்கே அவர்கள் சாப்பிட ஏதாவது கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றது பற்றியெல்லாம் தனக்கு பெரிய காணவில்லை என்றான்.
இதைக் கேட்ட பிறகு அவனிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? எளிய மனிதனாகத் தெரிந்தான். பெரும் சுமை அவன் முதுகு மீது. மனிதர்கள் பார்வைக்கு எல்லோரும் ஒரே மாதிரிதான். யாருக்கு எந்த பாரம் என்று அடுத்தவர்களுக்கு எப்படித் தெரியும்?
'நேரமாச்சு... நான் கிளம்பறேன்' என்று அரை குறைத் தமிழில் சொல்லிவிட்டு கிளம்பினான். மூன்று வருடங்களாக இந்த ஊரில் அவன் கற்றுக் கொண்ட தமிழ்.
அவன் கிளம்பிய பிறகும் அந்த மரத்தடியில் கொஞ்ச நேரம் நின்றிருந்தேன். நிழல்தான். ஆனாலும் வெக்கையில் உடல் கசகசத்துப் போனது.
5 எதிர் சப்தங்கள்:
//அவரவர் பிரச்சினை அவரவருக்குத்தான் தெரியும்.//
பட்டறிவு
கீழ்தட்டு மக்களுக்கு மூன்று வேளை சோற்றை தவிர வேறு என்ன யோசிக்க தோன்றும்?
70 வருட்ங்கள் சென்றாலும் இன்னும் சுதந்திரம் வந்ததாய் எண்ணமுடியவில்லை. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று பாடிய முண்டாசுக்காரன் தனி ஒரு மனிதனுக்கு உண்வில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவேன் என்றும் பாடினான். இப்படி வயிற்றுக்காக
பரிதவிக்கும் நாம் இன்னும் அடிமை நாட்டில் தான் உள்ளோம்
மிதுன் போல ஓராயிரம் கதைகள் உண்டு. மிதுனாவது குறைந்த பட்சம் சம்பாதிக்கிறான். தன் மீது சுய பச்சாபத்துடன், யாருமே தனக்கு உதவுவதில்லை எனக் கூறிக் கொண்டு பொழுது போக்கும் கயவர்களைப் பார்த்திருக்கிறேன். ஓசியில் கொடுத்தால் உண்டு உறங்கி பழகிவிட்ட உடலோடு இன்னும் கூட ஊரில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
/'ஒரு பூவை ஏறி மிதிச்சுட்டோம்' என்று அம்மா சொல்வதுண்டு./ எளிய வாக்கியம்தான். அரைமணி நேரத்துக்கு என்னை நிலைகுலைய வைத்துவிட்டது.
தப்பையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனிதர்களானோம்.
Post a Comment