Apr 30, 2018

ஆசிர்வாதம்

அம்மா பெங்களூரில் இருந்தார். வெள்ளிக்கிழமை அலுவலகம் முடிந்து வந்து கிளம்பி அவரைக் கொண்டு போய் ஊரில் விடும் போது மணி மூன்றாகியிருந்தது. ஒட்டன் சத்திரம் போக முதல் பேருந்து எத்தனை மணிக்கு என்று போக்குவரத்துத் துறை நண்பரிடம் கேட்டு வைத்திருந்தேன். மூன்றரை மணி. அதை விட்டால் நான்கரை மணிக்கு . மூன்றரை மணி பேருந்தை பிடிப்பது சாத்தியமில்லை. அரை மணி நேரம் அலாரம் வைத்துக் கொண்டு படுத்து எழுந்த போது அம்மா திட்டினார்.

'ஏண்டா எந்நேரமும் ஓடிட்டே இருக்க?' என்ற அவரது வழக்கமான குற்றச்சாட்டு. எதையோ சொல்லி சமாளித்துவிட்டு பேருந்தில் ஏறினால் எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. எட்டரை மணிக்கு ஓட்டன்சத்திரம் நிலையத்தில் நின்ற போதுதான் விழிப்பு வந்தது.நல்லவேளையாக விழித்தேன். இல்லையென்றால் மதுரைதான் போயிருக்க வேண்டும். 

சந்திரசேகரை பேருந்து நிலையத்திலேயே சந்தித்தேன். அவர் திண்டுக்கல்லிருந்து நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் வரைக்கும் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்தார். பேருந்து நிலையத்துக்கு வந்து விக்னேஸ்வரன் அழைத்துச் சென்றார். நம்பியூரில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகளுக்கு வாகனம் ஏற்பாடு செய்திருந்தோம். இங்கு அவர்களாகவே வருவதாகச் சொல்லிவிட்டார்கள். அதுதான் ஒரேயொரு குறை. ஒவ்வொரு குழந்தையாக வந்து சேர்வதற்கு தாமதாகிவிட்டது.

உணவுக்கு ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார்கள். சாப்பாட்டு தட்டிலிருந்து, தண்ணீர் குடிக்க காகித கப் வரைக்கும் எல்லாவற்றையும் வாங்கித் தயாராக வைத்திருந்தார்கள். ராஜா ஸ்டோர்ஸ் என்ற கடைக்காரர் குழந்தைகளுக்கான அன்பளிப்பு பொருட்களை இலாபமில்லாமல் கொடுத்திருந்தார். விக்னேஸ்வரனின் அணி கடந்த ஒரு வாரமாக வேலை செய்து கொண்டிருந்தது. 

பேராசிரியர் ராம்ராஜும் அவரது மாணவர் பிறை சூடனும் கோவையிலிருந்து வந்திருந்தார்கள். பி.எஸ்.ஜி கல்லூரியைச் சார்ந்தவர்கள். ஒரு பேராசிரியர் எந்தவிதமான தயக்கமுமில்லாமல் குழந்தைகளோடு குழந்தைகளாக இணைவதை பார்க்க வெகு சந்தோஷமாக இருந்தது. பூபதிராஜா புதுச்சேரியில் ஆராய்ச்சித் துறை மாணவர். அவர் எனக்கு முன்பாகவே பேருந்தில் வந்து மண்டபத்தில் தரையில் அமர்ந்தபடியே தூங்கி கொண்டிருந்தார். எவ்வளவு சிரமப்படுகிறார்கள்? ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இத்தகைய காரியங்களில் யாரோ ஒருவர் மட்டும் சிரமப்பட்டால் இத்தகைய செயல்பாடுகளை சாத்தியப்படுத்தவே முடியாது. பாண்டீஸ்வரி என்னும் ஆசிரியை தமது குழந்தைகளோடு வந்திருந்தார். வரும் குழந்தைகளை அமர வைப்பதில் ஆரம்பித்து உணவு வரைக்கும் அவர்தான் ஒழுங்கு செய்தார். என்னதான் ஆண்கள் இருந்தாலும் குழந்தைகளை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு பெண் அவசியம். ஆசிரியர் கணேஷ், பூபதி பெங்களூரிலிருந்து வந்திருந்த மணிகண்டன்- இது நான் இல்லை, கருணாநிதி, செல்லாயி டீச்சர் என இன்னும் ஏகப்பட்ட பேர்களின் ஆத்மார்த்தமான உழைப்பு இருந்தது. கல்வித்துறையிலிருந்து (எஸ்.எஸ்.ஏ) ஒரு அதிகாரி வந்து முழுமையாக கவனித்தார்.

பெரும்பாலான குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியவர்கள். அவர்களை சிரிக்க வைத்து, விளையாட வைத்து, சாக்லேட் கொடுத்து, அன்பளிப்பு கொடுத்து, வயிறார உணவு கொடுத்து அனுப்பி வைத்தோம். விக்னேஸ்வரனின் உழைப்பு அசாத்தியமானது. பெற்றோர்கள் ஆரம்பத்தில் 'என்னவோ நிகழ்ச்சி' என்றுதான் அமர்ந்திருந்தார்கள். பெரிய உற்சாகமில்லை. ஆனால் ராமராஜும், பிறையும், பூபதியும் உள்ளே இறங்கிய போது மொத்தக் காட்சியும் மாறிப் போனது. அந்தக் குழந்தைகளின் கவனத்தை ஈரப்பதே மிகக் கடினம். 

'எனக்கு ஒரு குத்துவிடு' என்றார். ஒரு குழந்தை அவர்களைக் குத்தியது. குத்தும் போதெல்லாம் மைக்கில் விரல் வைத்து 'லொட்' என்று தட்டினார்கள். தான் குத்துவதால்தான் சத்தம் கேட்கிறது என்று நினைத்து அரங்கிலிருந்து ஒவ்வொருவரையும் அந்தக் குழந்தை குத்திக் கொண்டேயிருந்தது. யாரைக் குத்தினாலும் சத்தம் வரவில்லை. 'இந்த மூணு பேருதான் சரி' என்று அவர்களை மட்டும் துரத்தித் துரத்தி குத்திக் கொண்டேயிருந்தது.  

இப்படி நிறைய கவித்துவமான காட்சிகள். 

ஒரு பெண்குழந்தையால் சரியாக நடக்க முடியாது. பார்வையும் குறைபாடு. அதுபாட்டுக்கு உள்ளே புகுந்து எல்லோரிடமும் லோலயம் செய்து கொண்டிருந்தது. 'ஃபேஸ்புக்கில் லைவ் போடுங்க' என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள். படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் அருகில் ஓடி வந்துவிடும். 'என்னப்பா வேணும்' என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது.


ஒரு குழந்தையின் அப்பா வந்து பேசினார். அவரது மூத்த மகள் கோபியில்தான் படிக்கிறாளாம். 'இதுக்குதான் இப்படி ஆகிடுச்சுங்க' என்றார். அவருக்கு பேச வார்த்தைகள் எதுவுமில்லை. 'ஏனோ பேசணும்ன்னு தோணுச்சு' என்றார். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. என் எண்னை அவருக்கு கொடுத்து 'எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க' என்றேன். அழுதுவிடுவார் போலிருந்தது. அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன். 

மூன்று பேரும் கதை சொன்னார்கள். கீழே விழுந்தார்கள். உருண்டு புரண்டார்கள். குழந்தைகள் அப்படியே ஒன்றிப் போனார்கள்.பெற்றோர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனக்கு கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. வேறு எதை வேண்டுமானாலும் செய்யலாம்- எளிய மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவத்தைப் போன்ற சந்தோஷமும் திருப்தியும் வேறு எதிலும் கிடைக்காது.

இருபத்தொன்பதாயிரம் ரூபாய் செலவு பிடித்தது. எல்லாவற்றையும் உள்ளூர்வாசிகளே கொடுத்துவிட்டார்கள். 

இரவில் தாராபுரத்திலிருந்து பேருந்து ஏறினேன். தூக்கம் வந்தது. ஆனால் தூங்கவேயில்லை. அந்தக் குழந்தைகளின் முகமும் சலனமில்லாமல் கிடந்த பெற்றோரின் முகங்களும் நினைவில் வந்து போயின. உடைந்து அழுது விட வேண்டும் எனத் தோன்றியது.

இவ்வளவு அற்புதமான செயலை சாத்தியப்படுத்திய ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றி. அந்தக் குழந்தைகளின் உற்சாகமும் மகிழ்ச்சியும், பெற்றோரின் கண்ணீரும் உங்களை எல்லாக் காலத்திலும் ஆசிர்வதிக்கட்டும். அதை மட்டும்தானே நாம் ஒவ்வொருவரும் எதிர்பார்த்தோம். 

7 எதிர் சப்தங்கள்:

Muthu P.E said...

வணக்கம் ஐயா. படிக்கும்போதே கண்ணீரை கட்டுப்படுத்த முடியலை. உங்களுக்கும் உங்களோடு பணியாற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் கோடி வணக்கங்கள்.

"எளிய மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவத்தைப் போன்ற சந்தோஷமும் திருப்தியும் வேறு எதிலும் கிடைக்காது". சத்தியமான வார்த்தைகள். வளரட்டும் உங்கள் தொண்டு இதுபோன்ற எளியோரை நோக்கி. வாழ்த்துக்கள்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

உடைந்து அழுது விட வேண்டும் எனத் தோன்றியது...
வாழ்க வளமுடன்

Murugan R.D. said...

பங்கெடுத்துக் கொண்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனபூர்வமான வாழ்த்துக்கள்,,,

சேக்காளி said...

//இருபத்தொன்பதாயிரம் ரூபாய் செலவு பிடித்தது. எல்லாவற்றையும் உள்ளூர்வாசிகளே கொடுத்துவிட்டார்கள்//
ஆகையால் பணம் ஒரு பெரிய விசயமே இல்லை.
வழி நடத்தி செல்ல நம்பக் கூடிய சரியான தலைமை தான் தேவை.
வாழ்த்துக்கள் "....".

Unknown said...

God bless you all with tremendous health and wealth.Thanks to all.

Reg
Sathish Shantha kumar

Kasi said...

மணி

எப்படி ஐயா வாழ்வின் முறையை இப்படி வகுத்து வாழ்கிறாய்

என்னால் படிக்கவும் பாராட்டவும் மட்டுமே முடிகின்றது

செயல் பூஜ்யம்

என் வயது 63
உன் கால் தொட்டு வணங்குவதில் சிறிய சம நிலை கொள்கிறேன்

Anonymous said...

"அந்தக் குழந்தைகளின் உற்சாகமும் மகிழ்ச்சியும், பெற்றோரின் கண்ணீரும் உங்களை எல்லாக் காலத்திலும் ஆசிர்வதிக்கட்டும்."
Dear Mani anna according to me there is no such blessings, the only thing is our satisfaction. If we give our heart and soul to something then we get a new form of energy that is absolute pure.