May 2, 2018

நம்மைச் சுற்றி..

'நம் வாழ்க்கை நம் கையில்' - திரும்பத் திரும்பக் கேட்டு சலித்துப் போன வாக்கியம். 

நிஜமாகவே அப்படித்தானா? 

தொண்ணூறுகளின் தாராளமயமாக்கல் கொள்கைகளுக்குப் பிறகு இந்தியாவில் நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. வெறுமனே ஏற்றுமதி மட்டும் அவர்கள் பிழைக்க போதுமானதாக இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய வாகனச் சந்தையை பிடிக்க வேண்டுமானால் சாலை வசதிகள் தேவை. லாபிகளைச் செய்கிறார்கள். வளர்ச்சி என்ற பெயரில் சாலைகளுக்கான திட்டங்கள் வெகு வேகமாகத் தீட்டப்படுகின்றன. உலக வங்கி  உட்பட பணம் கொடுக்க ஆட்கள் தயாராகிறார்கள். பப்ளிக்- பிரைவேட் - பார்ட்னெர்ஷிப் என்ற பெயரில் பெரு முதலாளிகள் களமிறங்குகிறார்கள். மரங்கள் வெட்டப்படுகின்றன.டெண்டர்கள், காண்ட்ராக்ட் என்று பணம் புரள்கிறது. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் கருங்கோடு நீள்கிறது. வாகனங்களுக்கு என தாராளமாக கடன் வசதி வழங்க வங்கிகள்  அறிவுறுத்தப்படுகின்றன. இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் பெருகுகிற வாகனங்களின் எண்ணிக்கை தெரியுமல்லவா? ஒவ்வொரு பெருநகரத்திலும் ஐந்து லட்ச வாகனங்களுக்கு குறையாமல் பெருகுகின்றன.

இதற்கு வளர்ச்சி என்று பெயர் வைத்திருக்கிறோம். அப்படியே இருக்கட்டும். 

ஒவ்வொரு பயணத்திலும் சுங்கக் கட்டணம் என்று எவ்வளவு கட்டுகிறோம்? யாருக்குச் செல்கிறது? கச்சா விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை என்றார்கள். எத்தனை முறை விலை குறைந்தது? 'லட்சக்கணக்குல கொடுத்து வண்டி வாங்கிட்டு அஞ்சு பத்து பார்த்தா ஆகுமா?' என்றுதான் பேசுகிறோம். இலாபம் முழுக்கவும் எங்கே செல்கிறது? போட்ட சாலைகளையே திரும்பத் திரும்ப போடுகிறார்கள். அகலப்படுத்துகிறார்கள். அதில்தான் கமிஷன் அதிகம். சாலைகள் என்பவை வெறும் சாலைகள் மட்டுமில்லை. மிகப்பெரிய வணிகம். 

சாலைகள், விரைவுபடுத்தப்பட்ட போக்குவரத்து, பெரிய வருமானம் என்பதெல்லாம் நம்மை ஓட வைக்கும் நுட்பங்கள். மனிதர்களை எந்திரங்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிலும் ஒரு மிகப்பெரிய வலையமைவு இருக்கிறது. நுண்ணரசியல் பின்னப்படுகிறது. குழந்தையிடம் பொம்மையைக் காட்டி கையில் இருப்பதை பறிப்பது போல நம்மிடம் ஒன்றைச் சொல்லி இன்னொன்றை சத்தமில்லாமல் செய்கிறார்கள். 

பெங்களூரிலும் சென்னையிலும் ஐடி உள்ளிட்ட கார்பொரேட் நிறுவனங்கள் உருவாகின. அவர்களுக்கு பெரிய அறிவாளிகள் தேவையில்லை. ஆனால் ஆங்கிலம் பேசத் தெரிந்த ஆட்கள் அவசியம். தனியார் பொறியியல் கல்லூரிகள் தொண்ணூறுகளுக்குப் பிறகு புற்றீசல் போல பெருகின. பெருக்கப்பட்டன. ஆனால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டுமல்லவா? அதற்கான லாபிகள் தொடங்கின. பத்தாம் வகுப்பில் மதிப்பெண்கள் அள்ளி வீசப்பட்டன. நானூற்றைம்பதைத் தாண்டிய மாணவர்கள் கலையும் வரலாறும் படிப்பார்களா? இல்லை வீட்டில்தான் விடுவார்களா? 'எம்பையன் அறிவாளி' என்று ஒவ்வொரு பெற்றோரும் நம்பினார்கள். பத்தாம் வகுப்பு முடித்தாலே முதல் பிரிவுதான். இன்றைக்கு பல அரசுப் பள்ளிகளில் மூன்றாவது பாடப்பிரிவுகள் மூடப்பட்டுவிட்டன. தெரியுமா? 

முதல் பிரிவில் சேர்ந்து 'பாஸ் செஞ்சாவே பொறியியல்' என்ற சூழல் உருவாக்கப்பட்டது. வங்கிக் கடன் வழங்கப்பட்டது. 'இதை படித்தால் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ன வளர்ச்சி இருக்கும்?' என்றெல்லாம் யாரும் எதையும் யோசிக்கவில்லை. லட்சத்தில் சம்பளம் வரும். கார் வாங்கலாம். வீடு கட்டலாம் என்பதைத் தாண்டி எதுவுமில்லை. 

இதுதான் சொகுசு. இதுதான் வளர்ச்சி. இல்லையா?

அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. மிக எளிமையான விஷயம். சில ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூரிலிருந்து சேலம் செல்ல ஏகப்பட்ட பேருந்துகள் இருக்கும். இப்பொழுது வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பதும் டப்பா வண்டிகள். விசாரித்துப் பார்த்தல் லாபி. நான்கு முறை நின்றபடியே பயணித்தால் ஐந்தாவது முறை தானாக தனியார் பேருந்தில் செல்லத்தான் மனம் தோன்றும். அதுவும் ஐடிவாலாக்கள் வாழும் ஊர். கேட்கவா வேண்டும்? எங்கே என்ன நடந்திருக்கும் என்ன யூகித்துக் கொள்ளலாம். 

இதையெல்லாம் பேசினால் 'எவ்வளவு வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம்?' என்று சண்டைக்கு வருவார்கள். உருவாக்கி என்ன பலன் கண்டோம்? என்றைக்குமில்லாத வேகத்தில் அல்லவா இயற்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறோம். புது புதுத் திட்டங்களாக அமுல்படுத்தி நிலமும் நீரும் ஆகாயமும் சிதைந்து கொண்டிருக்கின்றன. எதையாவது யோசிக்க வாய்ப்பிருக்கிறதா? வெறுமனே பணம் சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரங்களாக இந்தத் தலைமுறை மாறியிருக்கிறது. இதையெல்லாம் பேசுவது கம்யூனிசம் இல்லை. வளர்ச்சி என்ற பெயரில் கார்பொரேட் முதலாளித்துவம் எதை உருவாக்கியிருக்கிறது என்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.  

சாலை விரிவாக்கத்தில் காட்டும் அக்கறையை ஏன் அரசாங்கம் பசுமை விரிவாக்கத்தில் காட்டுவதில்லை? இரண்டுமே வளர்ச்சிதானே? நீர் மேலாண்மையில் என் இவ்வளவு அசமஞ்சமாக அரசு செயல்படுகிறது? அது வளர்ச்சி இல்லையா? நிறைய கேட்கலாம். எல்லாவற்றிலும் பின்னணி இருக்கிறது. 

மருந்து வணிகத்தில் தொடங்கி, ரேஷன் கடை விநியோகம் வரைக்கும் எல்லாவற்றிலும் நம் கண்களுக்குத் தெரியாத வலைப்பின்னல் இருக்கிறது. மருத்துவம் தொடங்கி கல்வி வரையிலும் சகலத்திலும் பெருமுதலாளிகளின் நலன் பிரதானமாகிறது. பார்ப்பதற்கு மேல்பூச்சு ஒன்றாகவும் அடியில் இன்னொன்றாகவும் இருக்கும். நம்மை யோசிக்கவே அனுமதிப்பதில்லை. தொழில்நுட்பம் என்ற பெயரில் நாம் விதவிதமாக திசை மாறுகிறோம். நாம் எந்தக் காலத்திலும் திரும்பவே இயலாத ஒரு வழிப்பாதையில் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய துக்கம்.

நம்மால் மாறுதலை உருவாக்க முடிகிறதோ இல்லையோ புரிந்து வைத்திருக்க வேண்டும். பத்து பதினைந்து வருடங்களில் ஏன் இவ்வளவு பெரிய மாறுதல்கள் நடக்கின்றன என்பதை யோசித்தால் போதும். நானூறு என்பதே நல்ல மதிப்பெண்கள் என்ற சூழல் ஏன் திடீரென மாறியது? ஏன் இவ்வளவு வெறித்தனமாக சாலைகளை பெருக்குகிறார்கள்? ஏன் ஒவ்வொரு பெரு மருத்துவமனையும் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகளை கட்டிக் கொண்டிருக்கின்றன என எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்கலாம். 

சமுகம் உருவாக்கும் அழுத்தம், அடுத்தவன் சம்பாதித்துவிட்டான் என்கிற பதற்றம் என எல்லாமும் சேர்ந்து ஒரு சாமானியனை வழியாக்கிவிடுகின்றன. இவையெல்லாம் எப்படி உருவாகின்றன? ஒவ்வொரு கண்ணிலும் நுண்ணிய ஊசிகள் இறங்கி கொண்டிருக்கின்றன. யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கை வெறும் அல்பம். இது இலுமினாட்டி கதையெல்லாம் இல்லை. இதுதான் நிதர்சனம் ஒருவன் என்ன படிக்க வேண்டும், என்ன வேலைக்கு செல்ல வேண்டும், சம்பாத்தியத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது தொடங்கி நம்முடைய பயணம் எப்படி அமைய வேண்டும் என்பது வரைக்கும் எல்லாவற்றையும் அடுத்தவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். ஆனால் அதை நாம் உணர்வதே இல்லை. இப்படி அடுத்தவர்கள் முடிவு செய்வதற்கேற்ப வாழ்ந்துவிட்டு 'என் வாழ்க்கை என் கையில்' என்று பந்தாவாகச் சொல்லிக் கொள்கிறோம். 

நம்மில் பெரும்பாலானவர்கள் வெறுமனே ஒரு பக்கமிருந்து பணத்தை வாங்கி இன்னொரு பக்கம் கொடுக்கிறோம். அதில் உதிர்கின்ற பிசிறுகள் நமக்கானவை. அதைத் தாண்டி எதுவுமில்லை.  அதற்குத்தான் நம் வாழ்க்கையின் ரசத்தைக் கரும்பு அரைக்கும் இயந்திரத்துக்கு கொடுத்துவிட்டு சக்கையாகிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். அர்த்தமில்லா பெருவாழ்வு. 

10 எதிர் சப்தங்கள்:

Suresh said...

உண்மை. சிறந்த பதிவு.

Unknown said...

அருமையான பதிவு....

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

சாற்றைக் கீழே விட்டு விட்டு சக்கையை சாப்பிட்டு ஏமாந்து கொண்டு உள்ளோமே..வாழ்க வளமுடன்

Prabu Oneness said...

மிக அருமையான பதிவு அண்ணா.

காலம் செல்ல செல்ல.. உங்கள் பதிவில் உலகம் பற்றியதான புரிதல் விரிவாக்கம் மிக தெளிவாக.. அதே சமயம்.. மிக ஆழமாக இருக்கின்றது..

Illuminati கூட இந்த வலையில் ஒரு பொறிதான்.

அதுவும் ஒரு மாயையை.

There is one great saying...

We are not living. We are merely existing.

நாம் வாழ்க்கையை வாழ்வதில்லை... நாம் இங்கு ஒரு காரணியாக இருக்கிறோம்.. அவ்வளவு தான்.


இருத்தலில் இருந்து... வாழ்வதற்கு மாற வேண்டும் என்றால்... நீங்கள் குறிப்பிட்ட பல விஷயங்களை தியாகம் செய்ய வேண்டும்.

ஆசை தான்... இதுவும் மதில் மேல் பூனை போல

சேக்காளி said...

மிக சிறப்பான ,அதே நேரம் முக்கியமான பதிவு சின்னையா.
ஆனாலும் ஒன்றும் கெட்டு விட வில்லை.
நாற்கர சாலைகளும்,தகவல் தொழில்நுட்பங்களும் அத்தியாவசியமானவை தானே.
வேகமெடுத்து வரும் பந்தை சிரமமின்றி தொட்டு திருப்பி எல்லைக் கோட்டுக்கு மேலாய் பறக்க செய்வதை போல் இந்த தாராளமய வளர்ச்சியை நமக்கானதாய் மாற்றிக் கொள்ளலாம்.அதற்கு (ஜப்பானியனின்) மனக்கட்டுப்பாடு அவசியம்.
பணத்தாள்கள் மதிப்பிழந்த போது ஏற்பட்ட பதட்டம் போல் இல்லாமல்
ஏர்செல் இல்லாமல் போன போது,திரைப்பட போராட்டத்தினால் புதிய படங்கள் வெளியாகாமல் இருந்த போது,ஐபிஎல் சென்னையில் நடக்காமால் இருக்கும் போது எப்படி எதிர்கொள்கிறோமோ அதே போல் தவிர்த்து வாழப் பழகினால்
என் வாழ்க்கை என் கையில் இல்லாமல் போனாலும் "நம் வாழ்வு நம் எண்ணங்களால்" தீர்மானிக்கப் படும்.

Anonymous said...


நம்மைச் சுற்றி.. படித்தவுடன் திரு. ஜெயமோகன் அவர்களின் இந்த கட்டுரை எனக்கு நினைவில் வந்தது

https://www.jeyamohan.in/26467#.WulS5ogiPIU

அதிலும் இந்த வரிகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தவை
-----
“ஆனால் காந்தி தொழில்நுட்பம் வெறும் கருவிதான் என்று நினைத்தார். அந்தக்கருவி யாரால் எதற்குப் பயன்படுத்தப்படுகிறதென்பதே முக்கியமானது. அந்த உயர்தொழில்நுட்பம் தொழிலாளர்களை மிருகங்களிலும் கீழான அடிமைவாழ்க்கை வாழ்வதற்கே கொண்டு செல்கிறது என்பதை அவர் கவனித்தார். நவீனத்தொழில்நுட்பம் உலகிலுள்ள ஆதிக்கசக்திகளுக்கு இன்னும் அதிகமான ஆயுதவலிமையை அளிக்கும் என்றும் உலகளாவிய சுரண்டலை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்தார்.
தொழில்நுட்பம் பெருந்தொழில்களை உருவாக்குகிறது. பெருந்தொழில் பெரும் லாபவெறியை உருவாக்குகிறது. லாபவெறி மிதமிஞ்சிய நுகர்வை கட்டி எழுப்புகிறது. மிதமிஞ்சிய நுகர்வு இயற்கையை அழித்து மனிதனை அழிவுக்குக் கொண்டு செல்கிறது என்று காந்தி வாதாடினார்.”
-------

In whatever way, however small it is we should contribute to the natural resources in our own way, We should also educate our children on this hyped consumerism and resources exploitation

Anonymous said...

Today's education system and education is the base point for all these chaos. Who ever is good in education only they should be encouraged, other should be encouraged according to their talent. Finding out talents and nurturing them is very essential for next generation.

Anonymous said...

தவிர்த்து வாழப் பழகினால்
என் வாழ்க்கை என் கையில் ! Excellent Sekkali!

Anonymous said...

There is another way to look at it.. To what extent technology can be allowed and who will decide it. When mani speaks there is percentage that say "yes" and few "no". Which way to sail is again depends on the public preferences. It is true that even educated are fooled by chips, h although drink and jewellers through their ads. On the intellectual front there is systematic execution of strategies to earn money by capitalist masters, however, pure economic theory, even keneyisan, we need to feed not just food also happiness. Think about it. No one comes with a plan to loot .. But everyone adopts a strategy and ways to become rich. There is no exception, including mani... But, your rich stops modestly to needs, others goes behind their wants.

Sandron said...

ஸ்டீவென் பின்கர் எழுதிய Enlightenment Now என்ற புத்தகம் மனித வாழ்க்கை தர வளர்ச்சியை பற்றி தரவுகளின் அடிப்படையில் விபரிக்கிறது.

மனிதர்கள் எல்லா வகையான வாழ்க்கை தர அளவீடுகளிலும் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அந்த புத்தகத்தை வாசிக்கும் பொது மறுக்க முடியாமல் இருக்கிறது.

Life expectancy தொட்டு வீட்டு வேலை செய்வதற்கு தேவைப்படும் நேரம் வரை பல அளவீடுகளை ஆசிரியர் பல ஆண்டுகால தரவுகளுடன் ஒப்பீடு செய்கிறார்.

Technological/Medical/Scientific innovation lifted millions of people out of poverty. People live longer, live happier, live healthier and eat healthier these days.

Number of people who cannot afford three meals has been going down continuously.

Even in poor country like Bangladesh women have few children and it steadily going down.

That doesn't mean everything is perfect but we are going in the right direction.