Apr 26, 2018

சிரிக்காம சாமியை வேண்டிக்குங்கய்யா

விடிந்தும் விடியாமலும்  அச்சிறுப்பாக்கத்தில் இறங்குகிறேன். மசமசவென இருக்கிறது. மணி ஐந்து கூட ஆகியிருக்கவில்லை. எந்த ஊருக்குப் போனாலும் ஆறு மணிக்கு முன்பாக யாரையும் அழைக்கமாட்டேன். அது பொல்லாத பாவம். பேருந்து நிலையத்திலோ அல்லது கோவிலிலோ என ஏதாவதொரு இடத்தில் அமர்ந்து கொள்வேன். நேற்றும் அப்படித்தான். கரூர் வைஸ்யா வங்கியின் முன்பாக அமர்ந்திருந்தேன்.  

வெளிச்சம் வந்தவுடன் லியோவின் எண்ணுக்கு அழைத்தேன். லியோ ஜெயராஜின் உதவியாளர். தம்பி மாதிரி. வந்தவர் அவர்களது அலுவலகத்தில் இறக்கிவிட்டு 'சார் நீங்க தூங்குங்க' என்று பாயை விரித்துக் கொடுத்தார். ஏ.சி. அறை. குளுகுளுவென்று காற்று வீசுகிறது.  இதுவரைக்கும் படித்ததை வைத்துப் பார்த்தால் பந்தா விடுவது போலத் தெரியுமே.

நீங்க வேற. மேலே படியுங்கள். ஆனால் ஒரு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு - 'இதை வைத்து இவன் மானத்தை எப்பவும் வாங்க மாட்டேன்' என்று மாரியாத்தா மீது சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வாசியுங்கள். 

லியோ கிளம்பியவுடன் உட்புறமாகப் பூட்டிக் கொண்டேன். இரவு அரசுப் பேருந்தில் பயணம். வெக்கையில் கசகசவென இருந்தது. ஏ.ஸி காற்று சிலுசிலுவென்று வீசியதால் சட்டை பேண்ட்டை- ஆமாம் பேண்ட்டும்தான் கழற்றி போட்டுவிட்டு பைக்குள் இருந்த பிரஷை எடுத்து சாவகாசமாக வாய்க்குள் திணித்துக் கொண்டு வரவேற்பறை முழுக்கவும் சுற்றி அங்கேயிருந்ததையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய புத்தகங்களை வைத்திருந்தார்கள். கோக்கா-கோலாவின் வெற்றிக் கதையில் ஆரம்பித்து 'லூஸிங் மை வெர்ஜினிட்டி' என்ற ரிச்சர்ட் பிரான்சன் புத்தகம் வரை நிறைய. அரை மணி நேரமாவது இருக்கும். 

பொறுமையாக மேய்ந்துவிட்டு இனி குளித்துவிட்டு வந்தால் ஒரு தூக்கம் போடலாம் என்ற நினைப்பும் வந்திருந்தது. என் தலையெழுத்து பாருங்கள்- எப்பொழுதுமே பையில் ஒரு துண்டு இருக்கும். அன்றைய தினம் துண்டும் இல்லை. மறந்து தொலைத்திருந்தேன். குளித்துவிட்டு வந்து சொட்டச் சொட்டப் பார்க்கிறேன் சிசிடிவி கேமிரா கொட்டக் கொட்டப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

'அடப்பாவிகளா குளியலறைக்குள் இருந்து வருவதையெல்லாம் படம் எடுத்து என்னய்யா செய்வீங்க' என்று அவசர அவசரமாக ஆடையை அணிந்து கொண்டு- அந்த பரபரப்பை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அவசரத்துக்கு அண்டாவுக்குள் கூட கை நுழையாது என்பார்கள். பேண்ட்டுக்குள்  கால் நுழையுமா? பாத்ரூமுக்கு முன்னாடியே கேமிரா என்றால் வரவேற்பறையில் இல்லாமல் இருக்குமா? ஓடிச்சென்று பார்த்தால் அங்கொரு கேமிரா. 

போச்சா? எல்லாவற்றையும் படம் எடுத்துவிட்டார்கள்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதற்றத்தில் நடுங்குகிறது. கண்டதையும் கற்பனை செய்யாதீர்கள். உடல் நடுங்குகிறது என்றேன். அப்படியே அவர்களிடம் ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு முன்பாக இன்னொரு வழி தென்பட்டது. மேல்மருவத்தூர் அங்கேயிருந்து பக்கம்தான். மூன்று கிலோமீட்டர். ஆதிபராசக்தியிடம் ஒரு வேண்டுதலைப் போட்டு விட்டு வந்துவிடலாம் என்று கிளம்பினேன். தூக்கமாவது ஒன்றாவது. மானம் முக்கியம். இதற்கு முன்பாகவும் அச்சிறுபாக்கம் வந்திருக்கிறேன். தங்கியிருக்கிறேன். ஆனால் கோவிலுக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றியதில்லை. கண்டக்டர் ஏழு ரூபாயை வாங்கி பையில் போட்டுக் கொண்டு சீட்டு தரவில்லை. வேறொரு நாளாக இருந்திருந்தால் புரட்சி பேசியிருப்பேன். அப்பொழுது கேமிரா தவிர எதுவும் நினைவில் இல்லை. 

அந்நேரத்தில் கோவிலில் கூட்டமில்லை. வரிசை மடமடவென நகர்ந்தது. ஓம் சக்தி பராசக்தி என்று உச்சரித்தபடியே நடந்தார்கள். நான் மட்டும் 'ஓம் சக்தி..மானத்தை காப்பாத்து சக்தி' என்றபடியே நடந்தேன். பராசக்தியின் சிலை சற்று பெரிதாக இருந்தது. 'நான் பார்த்துக்கிறேன் போ' என்று சொல்வது போலத் தோன்றியது. 'நீ மட்டும் பார்த்துக்கலைனா ஊரே பார்த்துடும்' என்று நினைத்துக் கொண்டேன். 

கோவிலை விட்டு வெளியே வரும்போது ஜெயராஜ் அழைத்தார். 'கோவில்ல இருக்கேன்' என்றேன் சுரத்தேயில்லாமல். அவர் அங்கேயே வந்துவிட்டார். 

'கேமிரா இருக்குதுன்னு சொல்லுறதில்லையா' என்று கேட்டேன். 

'எந்தக் கேமிரா?' என்றார். விலாவாரியாகச் சொன்னேன். 

'ஜட்டியோட வந்தீங்களா' என்று கேட்டார். போட்டு வாங்குகிறாராம். 'ஏங்க வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுறீங்க?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். 

சிரித்துவிட்டு 'நான் பார்த்துக்கிறேன் விடுங்க' என்றார். 

'யோவ்..நீங்க பார்க்கக் கூடாதுன்னுதானே சொல்லுறேன்' என்றேன். அதற்கும் சிரித்தார்.

'பாத்ரூம்க்கு முன்னாடி கூட கேமிரா இருக்கு...அப்படி என்னய்யா ஆபிஸ்..பெரிய மொஸாட்' என்று  கேட்டுவிட்டு  'ஆபிஸ்ல பொண்ணுங்க இருக்காங்களா' என்றேன். ஒரு பெண் பணியில் இருக்கிறாராம். கடவுளே. கடவுளே. 

பேருந்து நிலையத்திலேயே தங்கி கொள்வது எவ்வளவு பெரிய வசதி பார்த்தீர்களா? கொசுக்கடியைத் தவிர எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. இனிமேல் யாராச்சும் 'எங்க ஆபிஸ்ல தங்கிக்கலாம் வாங்க' என்று சொல்லிப் பாருங்கள். ஒரே வெட்டாக வெட்டுகிறேன். இதற்கு முன்பாக ஜீவகரிகாலன் அலுவலத்தில் வேறு பல நாட்கள் தங்கியிருக்கிறேன். எங்கே எதையெல்லாம் பதிவு செய்து வைத்திருக்கிறார்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

மேல்மருவத்தூர் பராசக்தியையும் மீறி அச்சிறுப்பாக்கத்துக்காரர்கள் இதையெல்லாம் லீக் செய்யாமல் இருக்கக் கடவது. நாம் ஒன்றும் நடிகனா நடிகையோ இல்லைதான் என்றாலும்- யோவ்! சிரிக்காம சாமியை வேண்டிக்குங்கய்யா. 

12 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அச்சிறுப்பாக்கத்துக்காரர்கள் இதையெல்லாம் லீக் செய்யாமல் இருக்கக் கடவது//
அடுத்தால ஏதும் பெரும் பிரச்னை வந்தா அதை திசை திருப்ப இந்த வீடியோ வ தான் வெளியிடப் போறாங்களாம்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

சிரிக்காம சாமியை வேண்டிக்குங்கய்யா.
--வேண்டிக் கொண்டேன்.

Anonymous said...

🤣🤣🤣

Vinoth Subramanian said...

Please check whether any camera located inside the bathroom.

Anonymous said...

ஏதாவது ராயல்டி கிடைச்சா சரி.

சன்னி லியோன் said...

மணிகண்டன்
"மணி" கண்டான்
யாரோ?

டிங் டாங் டிங்

kamalakkannan said...

எடப்பாடி பழனிச்சாமி கிட்ட வேண்டிக்கிறேன்

Ram said...

நித்திக்கு ஒரே போட்டி, நம்ம மணி காணொளிக்காட்சிதான்! சூப்பர் நகைச்சுவைப் பதிவு, மணி. :-)

மதன் said...

#manileaks hashtag ரெடி பாஸ்.. இனி டிவிட்டர்ல டிரெண்ட் ஆகும் பாருங்க!!!

அன்பே சிவம் said...

ஏதோ என்னால முடிஞ்சது google+ ல ஏத்தி விட்டுருக்can. எல்லாப்பய புள்ளைங்களும் பாத்து தெரிஞ்சி பத்திரமா இருந்து கிடட்டும்


பெரிய்ய்ய்ய GOVERNORனு நெனப்பு.

Rajesh said...

அச்சு லீக்ஸ், google link https://www.google.com/search?ei=S-DlWuuLGYnFvQSP6Y3oCg&q=nisaptham+manikandan&oq=nisaptham+mani&gs_l=mobile-gws-wiz-serp.1.0.0j33i160l2.5973.6906..7976...0....621.2172.4-1j3......0....1.........0i71j0i67.nJGMeOx0JJk%3D

சேக்காளி said...

அன்பே சிவம் said
//ஏதோ என்னால முடிஞ்சது google+ ல ஏத்தி விட்டுருக்can//
கெடைக்கல . தொடுப்பு குடுக்கவும்.