தெய்வம் வந்திருந்தார். பெயரே தெய்வம்தான்.
அஜந்தாவில் வண்டியை நிறுத்திவிட்டு 'உங்க அலுவலகத்துக்கு பக்கத்தில் நிற்கிறேன்' என்கிறார். எங்கள் அலுவலகம் எம்.ஜி சாலையில் இருக்கிறது. பழைய பாஸ்போர்ட் அலுவலகக் கட்டிடத்தில் இயங்குகிறது என்பதையெல்லாம் எப்பொழுதோ எழுதியதை மண்டைக்குள் வைத்திருக்கிறார். என்னைப் பற்றிய தகவல்கள் பரம ரகசியமாக இருப்பதாக நான்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன். மைண்ட் வாய்ஸில் பேசுவதாக நினைத்து அவ்வப்பொழுது சத்தம் போட்டு எழுதி வைத்திருக்கிறேன் போலிருக்கிறது.
தெய்வம் பெங்களூரில் பெரிய நிறுவனத்தில் பெரும் பதவியில் இருந்தவர். இப்பொழுது சொந்தமாக நிறுவனமொன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். நிறையத் தடைகள். 'பத்து கோடி ரூபாயை ஏமாத்திட்டாங்க' என்றார். பஞ்சு மிட்டாயைக் காணவில்லை என்பது போலச் சொன்னார். அமெரிக்காவில், 'இதெல்லாம் செஞ்சு தரேன்' என்று சொல்லி வாங்கி ஏப்பம் போட்டுவிட்டதாகச் சொன்னார். வழக்கு நடந்து கொண்டிருக்கிறதாம். எங்கள் சொந்தக்காரர் ஒருவர் இப்படி ஏமாந்திருக்கிறார். இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிமணிகளை அனுப்பி வைத்த பிறகு துணியைப் பெற்றுக் கொண்டவன் பணத்தைத் தராமல் கம்பி நீட்டி விட்டான். வழக்கு நடத்தியதாகச் சொல்வார்கள். அதன் பிறகு அதைவிடப் பெரிய தொகையை இழந்தவரை இப்பொழுது சந்திக்கிறேன்.
'அது போனா போகட்டுங்க...இப்போ நல்லா போய்ட்டு இருக்கு' என்று உற்சாகமாகப் பேசினார். தெய்வம் இப்பொழுது பத்திருபது பேரை ஆப்ரிக்கா அனுப்பி வைத்திருக்கிறார். அங்கயிருக்கும் நிறுவனங்களுக்கு மென்பொருள் வேலை செய்து கொடுக்கிறார்கள். அதில் நல்ல வருமானம். நிறைய தொடர்புகளை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்படியான உற்சாகம் கொண்ட மனிதர்களை சந்திப்பதுதான் நமக்கும் பலம்.
பேசும் போது 'இந்தக் காலத்துல தொடர்புதாங்க முக்கியம் ..அது இருந்தா போதும்..எதையும் சமாளிக்கலாம்' என்றார். அதுதான் நிதர்சனம்.
ஆசாத் என்றொரு நண்பன். கல்லூரியில் அறைத்தோழன். அன்றொருநாள் சாயந்திரமாக பொம்மனஹள்ளி வழியாக நடந்து கொண்டிருந்த போது பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டோம். அந்த நாள் நினைவுகள் நெஞ்சில் வந்து போக அலைபேசி எண்களை மட்டும் மாற்றிக் கொண்டோம்.
வெகு நாட்கள் கழித்து தனக்கு வேலை போய்விட்டதாகச் சொன்னான். ஐ.டி துறை பற்றித்தான் தெரியுமே. நிசப்தத்தில் எழுதியிருந்தேன். குணா அழைத்து 'அவரோட ப்ரோபைலை அனுப்பி வைக்க முடியுமா?' என்று கேட்டிருந்தார். யாரோ ஒருவர் கேட்கிறார் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர் நிறுவனத்தின் துணைத் தலைவராம். ஆசாத் அழைத்து 'உனக்கு எப்படிடா அப்படியெல்லாம் காண்டாக்ட்?' என்றான். எனக்கு எப்படித் தெரியும்? குணாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மூன்று வார்த்தைகளுக்கு மேல் அவர் எப்பொழுதும் பேசியதாக நினைவில் இல்லை.
மனிதர்களுக்கு தொடர்புகள் பெரும் பலம். ஒருவருடன் பேச ஆரம்பிக்கும் போதே 'இவரால் இந்தக் காரியம் நடக்கும்' என்று நினைத்துப் பேசத் தொடங்கினால் அது அப்பொழுதே பொசுங்கிவிடும். எதைப் பற்றியும் யோசிக்காமல் பழக ஆரம்பித்து அலைவரிசை ஒத்துப் போனால் அது கால காலத்துக்கும் தொடரும். பேருந்தில் பழகுகிற சக மனிதர்களை போலவே எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கருதலாம். தவறேதுமில்லை.
அலுவலகத்துக்கு சந்திக்க வருகிறவர்களுக்கு வாசுதேவ் அடிகாஸில் ஒரு காபி வாங்கி கொடுத்து அரசமரத்தடிக்கு அழைத்துச் சென்றுவிடுவது வழக்கம். எவ்வளவு கதைகளுடன் மனிதர்கள் வருகிறார்கள்? எப்பொழுதுமே ஆச்சரியம்தான். அந்த மரம் என்னால் மட்டும் நூறு கதைகளையாவது கேட்டிருக்கும். நவரசக் கதைகள். கில்மா கதைகள் கூட அடக்கம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பையன் வந்திருந்தான். அவனுக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள். அதற்கு முன்பாக இவன் சில பல கெட்ட காரியங்களைச் செய்துவிட்டான்.
'நெஜமாவே இதெல்லாம் செஞ்சியா? இல்ல என்னை பொறாமைப் பட வைக்கலாம்னு சொல்லுறியா?' என்றேன்.
'இல்லண்ணா..சாத்தியமா' என்றான். மூச்சடைத்துப் போனது.
நிறையப் பேசி அனுப்பி வைத்தேன். 'விவரம் சொல்லு' என்றெல்லாம் கேட்கக் கூடாது. இப்பொழுது அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது போலிருக்கிறது. சத்தமே காணோம்.
நிறையப் பேசி அனுப்பி வைத்தேன். 'விவரம் சொல்லு' என்றெல்லாம் கேட்கக் கூடாது. இப்பொழுது அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது போலிருக்கிறது. சத்தமே காணோம்.
தெய்வத்துடன் ஒரு மணி நேரமாவது பேசியிருப்போம். சுவாரசியமான மனிதர். நேரமாகிக் கொண்டிருந்தது.
'கொஞ்சம்தான் சொல்லியிருக்கேன்..மிச்சத்தை இன்னொரு நாள் வந்து சொல்லுறேன்' என்றார்.
'வாங்க வாங்க' என்று அனுப்பி வைத்திருக்கிறேன்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம். வாசிக்க வாசிக்க தீராத புத்தகம். சந்திக்கிற எல்லோர் குறித்தும் எழுதுவதில்லை. ஆனால் எழுத சரக்கிருக்கும் ஆட்களை பற்றிப் எழுதாமல் விடுவதில்லை.
ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம். வாசிக்க வாசிக்க தீராத புத்தகம். சந்திக்கிற எல்லோர் குறித்தும் எழுதுவதில்லை. ஆனால் எழுத சரக்கிருக்கும் ஆட்களை பற்றிப் எழுதாமல் விடுவதில்லை.
புதிதாகத் தொழில் தொடங்கி இருக்கும் வேறொரு நண்பர் அழைத்த போது ஒன்றைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. வீடு கட்டும் போதும் தொழில் தொடங்கும் போது 'இதை செஞ்சுடலாம்..அதை செஞ்சுடலாம்' என்று மனம் அலை பாயும். 'இதை செஞ்சா நல்லா இருக்குமே' என்று செய்தால் செலவு இழுத்துவிடும். மூக்கு நுனிக்கு கீழாக தண்ணீர் ஓடுகிறது என்று தெரியும் வரைக்கும் துணியலாம். நாசியைத் தாண்டிவிடும் என்று நினைத்தால் காலை உள்ளே இழுத்துக் கொள்வதுதான் உசிதம். தெய்வத்துடன் பேசியதன் புரிதல் இது என நினைக்கிறேன். அந்த அலைபேசி நண்பருக்கும் இதைச் சொல்லிவிட்டேன்.
7 எதிர் சப்தங்கள்:
//"அவனுக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள். அதற்கு முன்பாக இவன் சில பல கெட்ட காரியங்களைச் செய்துவிட்டான். "//
சோகமான உண்மை என்னன்னா, இந்த மாதிரி இருக்கிறவனுக்குத்தான் முதல்ல கல்யாணம் ஆகுது. படிச்ச பொண்ணுங்க தான் முதல்ல ஏமாறுதுங்க. கல்யாணத்துக்கு அப்புறம் உண்மை தெரிஞ்சதும், கல்யாண வாழ்க்கை மேல ஒட்டுதல் போயிடுது.. உடனே பாத்திட்டு இருக்குற வேலையை கெட்டியா புடிச்சுக்குதுங்க... வெளியிலேர்ந்து பாக்கூறதுக்கு பொண்ணுங்க வேலை பாக்குறதுல குறியா இருக்கா மாதிரி தோற்றம் தெரியிது... உண்மை வேற...
Theivam Iyya Neer.
//நாசியைத் தாண்டிவிடும் என்று நினைத்தால் காலை உள்ளே இழுத்துக் கொள்வதுதான் உசிதம்//
இதை வாசிக்கும் போது என்னவோ கொசறு கேள்வி தோணுச்சு.இப்ப மறந்துடுச்சு.
தொடர்புகள் தான் முக்கியம்! சத்தியமான வார்த்தை!
You are doing many good things silently, proud of you!!
எல்லாம் முடிந்து விட்டது என்று கீழே விழுந்து கிடக்கும் போது ஜஸ்ட் ஒரு வார்த்தை அல்லது போகிற போக்கில் ஒரு செயல், ஒரு வியாபார தொடர்போ அல்லது ஆலோசனையோ.. நண்பராகவோ, உறவினராகவோ, யாரோ ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். அந்த அக்கறை உங்களின் அன்றைய நாளையோ அல்லது வாழ்க்கையையோ மாற்ற விளையும் ஒரு ஒளி கற்றையாக தோன்றியிருக்கும். உலகம் இந்த அன்பில் தான் சுற்றுகிறது.
அப்படி மற்றவர் மீது அக்கறையுள்ள ஒருவர் தான் Vaa Manikandan . வாழ்த்தும் ஆயிரகணக்கானவர்களில் ஒருவனாக என்றென்றும்...
தெய்வம் அ.
ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம்....நிதர்சனமான உண்மை....உங்கள் பணி சிறக்க வாழ்த்தும் ஆயிரகணக்கானவர்களில் ஒருவனாக என்றென்றும்...!
Post a Comment