பீட்டர் வான் கெய்ட் பற்றி சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது கேள்விப்பட்டிருந்தேன். வெளிநாட்டுக்காரர் என்றால் அவர்களது உடல், மொழி, பாவனை குறித்ததான பொதுப் புத்தி இருக்குமல்லவா? அப்படியான ஒரு பிம்பம்தான் அவர் மீதும் எனக்கும். 'நீங்க அவர் கூட பேசுங்க' என்று சொல்லி தொடர்பை ஏற்படுத்தித் தந்தார்கள். அற்புதமான மனிதர். 'நீங்க சென்னை வாங்க' என்றார். ஒரு வார இறுதி நாளில் அவருடன் சேர்ந்து கோட்டூர்புரத்தில் ஒரு சேரியைச் சுத்தம் செய்திருக்கிறோம். மனிதர் ஆச்சரியப்படுத்தினார். எந்த அருவெறுப்புமில்லாமல் மிக இயல்பாக சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தார். 'அவரே இறங்குறாரு..நமக்கு என்ன' என்று நாமும் யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்வுக்கு முன்பாக யாருமே தூசிதான்.
(பீட்டர் பற்றிய கட்டுரை இணைப்பில்)
பீட்டர் வான் கெய்ட் பற்றித் தெரியாதவர்களுக்காக - அவர்தான் சென்னை ட்ரெக்கிங் க்ளப்பின் தூண். குரங்கணி தீ விபத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பெயர். இன்றைய தேதிக்கு அந்தக் குழுவில் நாற்பதாயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வார இறுதிகளில் மலையேற்றம், இயற்கை சார்ந்த பயணம், சேரிகளைச் சுத்தம் செய்தல் என எதையாவது இழுத்துப் போட்டு செய்து கொண்டிருப்பார்கள். எந்தக் காரியத்திலும் அவர்கள் லாபம் பார்ப்பதில்லை. நம்மைப் போன்ற தேசத்துக்கு உண்மையிலேயே பீட்டர் மாதிரியான ஆட்களுக்கான தேவை மிக அதிகம்.
பிரச்சினை என்னவென்றால் 'சி.டி.சி' மாதிரியே செயல்படுகிறோம் என்ற பெயரில் புற்றீசல் போல குழுக்கள் பெருகிக் கிடக்கின்றன. சமீப காலமாக வணிக நோக்கில் ஏகப்பட்ட குழுக்கள் உருவாக்கியிருக்கின்றன. கார்பொரேட்களில் வேலை செய்கிறவர்கள்தான் இவர்களது இலக்கு. ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுதெல்லாம் 'ஆர்வலர்கள்' என்ற சொல்லுக்கு 'ஆர்வக் கோளாறுகள்' என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு கேமிரா வாங்கினால் 'நான் ஃபோட்டோகிராபி ஆர்வலர்' என்கிறார்கள். வனத்துறையினரின் சீருடையில் ஒரு டி-ஷர்ட் கிடைத்தால் அணிந்து கொண்டு மலைப்பக்கமாக ஒரு நிழற்படத்தை எடுத்து 'நான் இயற்கை ஆர்வலர்' என்கிறார்கள். பைக் ஒன்றை வாங்கி கொண்டு 'நான் பயண ஆர்வலர்' என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு இதெல்லாம் க்யூரியாசிட்டி மட்டும்தான். அடுத்தவர்களை பார்த்து 'நாமும் அப்படி ஆக வேண்டும்' என்கிற ஆர்வம். அதைத் தாண்டி எதுவுமிருக்காது.
பெயர் குறிப்பிட விரும்பவில்லை- உணர்வுப் பூர்வமாக செயல்படுகிற சில தன்னார்வ அமைப்புகள் இருக்கின்றன. தன்னார்வலர்களாகச் சேர்கிறவர்களை அழைத்துச் சென்று கிராமப்புற மாணவர்களுக்கு கற்பித்தல் முதலிய பணிகளைச் செய்கிற குழுக்கள். அவர்களிடம் பேசிப் பாருங்கள். 'ஒரு வருஷம்தான் வாலண்டியர்ஸ் வர்றாங்க' என்பார்கள். இந்த வருடம் தன்னார்வலராகச் சேர்ந்தவர் அடுத்த வருடம் வர மாட்டார். ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் அப்படியே வடிந்து போய்விடும். எந்த ஒரு செயலிலும் தொடர்ச்சியான ஆர்வம் இருந்தால் மட்டும்தான் ஆர்வலர் என்று சொல்ல வேண்டும். ஆசை அறுபது நாள் கணக்கெல்லாம் ஆர்வக் கோளாறுகள்தான். பணப் புழக்கம் அதிகமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் ஆர்வக் கோளாறுகள் அத்தனை பக்கமும் நிறைந்து கிடக்கிறார்கள்.
இந்த ஆர்வக் கோளாறுகளை உசுப்பேற்றி, காசு வாங்கி கொண்டு ஏகப்பட்ட பேர்கள் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'ட்ரெக்கிங்' 'பைக்கிங்' என்று விதவிதமான பெயர்களைச் சூட்டுகிறார்கள். 'கேம்ப் ஃபயர்' 'இரவு தங்கல்' என்று விதவிதமான பெயர்களில் கார்பொரேட் ஆட்களை வனத்துக்குள் அழைத்துச் செல்வதும் இவர்கள்தான். ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்ட்டாகிராமிலும் பதிவேற்றுவதற்காக நிழற்படங்களை எடுப்பதற்காகவே சென்று வருகிற ஆட்கள் இருக்கிறார்கள். வனம் பற்றிய இந்தப் புரிதலுமில்லாத இத்தகையவர்களை உள்ளேயே அனுமதிக்க கூடாது. ஆனால் நம்மிடம் எந்த வழிகாட்டு நெறிமுறையும் இல்லை.
வனங்களில் குப்பைகளை நிரப்புதல், பிளாஸ்டிக் பொருட்களை வீசிச் செல்லுதல், சைலன்சர் மாற்றப்பட்ட பைக்குகளில் கிளம்பும் ஓசை என்று எல்லாவிதத்திலும் வனத்தை வன்புணர்வு செய்துவிட்டு அடுத்த நாள் மனசாட்சியே இல்லாமல் நிழற்படத்தை சமூக ஊடங்களில் பிரசுரிப்பார்கள். நினைத்தவர்கள் எல்லாம் வனத்துக்குள் செல்வதைத் தடுக்க அரசாங்கமும் வனத்துறையும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். காட்டுத் தீயைப் பொறுத்தவரைக்கும் எண்பது சதவீதம் மனிதர்களால் உருவாக்கப்படுவதுதான். எவன் கொளுத்திப் போட்ட குச்சியோ தெரியவில்லை- இன்றைக்கு பத்துப் பேரை காவு வாங்கியிருக்கிறது.
குரங்கணி வனப்பயணத்துக்கான ஏற்பாடுகளை சி.டி.சி செய்திருக்கிறது என்கிறார்கள். ஊடகத்தின் மொத்தப் பார்வையும் சி.டி.சி மீது குவிந்திருக்கிறது. இதுவொரு கோரமான விபத்து என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சி.டி.சி பற்றியும், பீட்டர் பற்றியும், இந்த அமைப்பின் முந்தைய செயல்பாடுகள் குறித்தும் ஓரளவுக்கேனும் புரிதலை உருவாக்கிக் கொண்டு செய்திகளை எழுதலாம். பீட்டர் பணத்துக்காக எதையும் செய்வதில்லை, தமது பெயர் ஊடகங்களில் வெளியாவதைக் கூடவும் அவர் விரும்புகிற மனிதர் இல்லை. 'அப்படியா' என்ற புன்னகையுடன் தாண்டிச் செல்கிறவர். அவரது செயல்பாடுகளுக்காக நிறைய விருதுகள் வழங்கப்பட்டன. எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். சுயநலமிலாமல் செயல்படும் அவர் மீது அத்தனை பழியும் விழுந்திருக்கிறது.
பொதுக் காரியங்களில் சற்று அசிரத்தையாக இருந்தாலும் இப்படித்தான் பெரும்பழி வந்து சேரும். நல்ல காரியங்களைச் செய்யும் போது கண்டு கொள்ளாதவர்கள் எல்லாம் கெட்டது ஒன்று நடக்கும் போது 'தெரியும்டா இப்படியெல்லாம் ஆகும்ன்னு' என்று கிளம்புவார்கள். தார்மீக அடிப்படையில் சி.டி.சி இந்த வலியை வாங்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அரசாங்கம் இனி விழித்துக் கொள்ளக் கூடும். கும்பகோணம் பள்ளி தீ விபத்து வரைக்கும் பள்ளிகள் மீது பெரிய கட்டுப்பாடுகள் இல்லை. இப்பொழுது ஏகப்பட்ட விதிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். அதே போல குரங்கணி தீ விபத்தை முன்வைத்து புற்றீசல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செயல்பட வேண்டிய தருணமிது.
பீட்டரை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது. நல்ல நோக்கத்துக்காக செயல்படுகிற ஒருவர் மீது பழி விழும் போது அது எப்படி வலியை உண்டாக்கும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் மீதுதான் கடைசியில் சுமையை இறக்கி வைப்பார்கள். இந்தச் சிக்கல்களிருந்து அவர் வெளி வர வேண்டும் என மனம் விரும்புகிறது. சி.டி.சி பற்றி முழுமையாகத் தெரிந்த ஊடகவியலாளர்களும், அதிகாரிகளும் பீட்டருக்கு இந்தக் கடினமான தருணத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும். இறந்தவர்களின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.
7 எதிர் சப்தங்கள்:
தங்கள் வாயிலாகவே அவரை யறிந்தேன். உலகை நேசிக்கு முன்னத மனிதருக்கு இதுவு மோர் சோதனையே. இதையும் கடப்பார் தன் இனிய முறுவல் கொண்டு.
He should approach Belgium consulate. As per newspapers, he is not trackable.
//நல்ல காரியங்களைச் செய்யும் போது கண்டு கொள்ளாதவர்கள் எல்லாம் கெட்டது ஒன்று நடக்கும் போது 'தெரியும்டா இப்படியெல்லாம் ஆகும்ன்னு' என்று கிளம்புவார்கள்//
ஆர்வக்கோளாறெனில் சிதறி விடுவார்கள். ஆர்வலர்களெனில் உதறி எழுவார்கள்.
பீட்டர் இதிலிருந்து மீண்டுவிடுவார். ஏதாவதொரு ரூபத்தில் உங்கள் மீதும் புளுதிவாரி எறிய நிச்சயம் ஒருக்கூட்டம் காத்துக்கொண்டிருக்கும். கவனம்
நல்ல மனிதர்களை கவிழ்ப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள்! அது போன்ற ஒரு நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பீட்டர் இதிலிருந்து மீண்டு அவரது சமூக சேவைகளை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்!
ஊடக பிம்பங்களுக்கிடையே பார்வையின் கோணத்தை மாற்றுங்கள். சத்தியம் வெளிப்படும் என்பது உங்கள் கட்டுரையில் கிடைத்தது.
நல்லதைப் பொருட்படுத்திப் பாராட்ட இயலாத சிலர், சிறிய தவறுகளைக் கூடப் பெரிதாக்கிக் கெட்ட பெயர் சூட்ட முன்நிற்பர்!
Post a Comment